Skip to main content

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?


 




"விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு.
ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள்.
துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது.
பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது.
மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது.
தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என.
நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன்றவற்றிலும் பார்க்கலாம். Aum Shinrikyo அமைப்பில் இருந்து வெளியேறியவர்களைப் பேட்டி கண்டு ஹருகி முராகாமி ஒரு நூலை எழுதியிருக்கிறார் (""Underground"). அதைப் படித்தால் சுலபத்தில் இத்தகைய அமைப்புகளைப் புரிந்துகொள்ள முடியும், விஷ்ணுபுரம் அமைப்புக்கும் இவற்றுக்கும் உள்ள பொதுப்பண்புகளும் புரியும்.
முராகாமி குறிப்பிடும் சில உளவியல் போக்குகளை இங்குச் சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்:
தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னால் எந்த அர்த்தத்தையும் கண்டடைய முடியவில்லை என உணர்கிறவர்கள், எதாவது தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பவர்கள் சுலபத்தில் ஆதிக்க சுபாவமும் வலுவான ஆளுமையும் கொண்ட தலைவரின் வழிகாட்டுதலை நாடுகிறார்கள், அவரிடம் அடிபணிகிறார்கள், அவரைப் போலச் செய்ய முயல்கிறார்கள்.
சிறிய புள்ளியில் இருந்து வெளியேறி பெரிய வட்டத்தில் நின்று சமூகத்துடன் உறவாட முயல்கிறவர்கள்.

தனிமையில், அந்நியமாதலில் சிக்கித் தவிக்கிறவர்கள் இம்மாதிரி அமைப்புகளில் முதலில் தாயைக் கண்டடைந்த குழந்தையின் பரவசத்தை உணர்கிறார்கள். ஆனால் போகப்போக அவர்கள் தம்மில் இருந்து மிக அதிகமாக தனிமையாகிறார்கள், தன் சிந்தனைக்கும் தன் செயலுக்கும் தொடர்பே இல்லாமல் போவதை, தன் சிந்தனைக்கும் தன் சுயத்துக்கும் உறவு இல்லாததைப் போல உள்-அந்நியமாகிறார்கள். சிலர் வெளியேறுகிறார்கள், ஆனால் வெளியே இருப்பதில் உள்ள 'சிரமங்களை' உணர்கிறார்கள் - தலைமையின் அங்கீகாரம், வழிகாட்டுதல், மையம், தன்னறிதல் இல்லாமல் தவிக்கிறார்கள். நீரில் இருந்து எடுத்து வீசப்பட்ட மீனைப் போல திரும்ப உள்ளே செல்வதற்காக அவர்களின் ஒரு பகுதி துடிக்கிறது. தலைமையின் அழைப்போ சமிக்ஞயோ போதும், உடனடியாக அமைப்புக்குள் மீள்வார்கள். தமக்கு ஆரம்பத்தில் இருந்த ஏற்பின்மை குறித்து அவர்கள் பரிசீலிக்க மாட்டார்கள். கேள்விகளுக்கு பதில் கண்டிருக்க மாட்டார்கள். குற்றவுணர்வும் பயமும் அவர்களைச் செலுத்துவதால் இரண்டாம் வருகையின்போது இன்னும் மோசமான நிலையில்தான் இருப்பார்கள். அவர்களுக்கு இப்போது கேள்வி எழுப்பும் ஆற்றல் கூட இருக்காது. விஷ்ணுபுரம் அமைப்புக்குள் இப்படி மனம் விலகிப் போகிறவர்கள், பாதி வெளியேறுகிறவர்கள், ‘கர் வாப்ஸி’ ஆகிறவர்கள் உண்டு. மாறாக, திறந்த நிலையில் செயல்படும் அமைப்புகளில் இது தேவையிருப்பதில்லை. அங்கு நீங்கள் இணைவதும் இல்லை, விலகுவதும் இல்லை. எந்த நிலையிலும் அங்கு பங்களிக்கவும் வளரவும் முடியும். அங்கு தலைமையின் அங்கீகாரத்தை யாரும் கோருவதோ எதிர்பார்ப்பதோ இல்லை. அங்கு கதவு மூடப்படுவதோ திறப்பதோ இல்லை.

கல்ட் மனிரர்களுக்கு சுயமாகச் சிந்தித்து வளர்கிற இயல்பு, திறன் இருப்பதில்லை என்பதால் இவர்கள் இத்தகைய அமைப்புகளில் இணையும்போது தம் சுயத்தை மொத்தமாக இழக்கிறார்கள். இதுதான் இத்தகைய அமைப்புகளின் மிகப்பெரிய பிரச்சினை - இவை ஒட்டுமொத்தமாக தனிமனிதர்களை உள்ளிருந்து பெயர்த்தெடுத்து காலியாக்குகிறது. அவர்களுக்குத் தாம் எதையாவது செய்வதாக, உருவாக்குவதாக, சமூகத்துக்குப் பங்களிப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அவை ‘அவர்களுடையது’ அல்ல. அவர்களுடைய தனிப்பட்ட அகவயமான தேடலின் அடிப்படையில் அவை உருவாகவில்லை. மாறாக அவை அவர்களுக்குப் புறமேயிருந்து அளிக்கப்படுகின்றன. அச்சட்டகத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் நிரப்புகிறார்கள்.

அடுத்து, இவர்களில் மாறுபட்ட கருத்துள்ளவர்களை தலைமை அவமதித்து அச்சுறுத்தும். வெளியே தம்முடன் உடன்படாதவர்களை இவர்கள் அதே மொழியில் அவமதித்து அடக்கிடப் பார்ப்பார்கள். ஜெயமோகன் தனிப்பட்ட முறையில் இதை ஒரு கலையாகவே மாற்றிவிட்டார். அவரைப் பின் தொடர்ந்து வருகிறவர்களும் தவறாமல் தம்மை விமர்சிப்பவர்களிடம் “பொருட்படுத்தத்தக்க ஒரு வார்த்தையாவது எழுதி உள்ளாயா?”, “உன் நேரத்தை வீணடிப்பது குறித்து லஜ்ஜை இல்லையா?” “எங்களைப் போல எதையாவது உருப்படியாகச் செய்” என்று வெவ்வேறு வார்த்தைகளில் சமூகவலைதளங்களில் எழுதுகிறார்கள். கடுமை மட்டுமே கூடும், குறையும், ஆனால் விசயம் மாறவே மாறாது. அவர்களுடைய அவமான உணர்வு அகங்காரமாக உருமாற்றம் பெறுவதால் அவர்கள் பிறரை அவமதிப்பதில் ஒருவித மகிழ்ச்சியை அடைவார்கள். அது அவர்களுடைய பதற்றத்தைத் தணிக்கும்.

இவர்கள் தம் சாதனையை அமைப்பின் சாதனையாகக் காண்பார்கள். தலைமையின் அங்கீகாரமே தம் வாழ்க்கையின் ஆகப்பெரும் வரம் எனக் கருதி உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இது அவர்களுக்கு சுயவளர்ச்சியைத் தராமல் அவர்களை உள்ளிருந்து காலியாக்குகிறது. ஒரு தேன்கூட்டைக் கற்பனை செய்யுங்கள். அதிலுள்ள அடிமைத் தேனீக்களாக இந்த எழுத்தாளர்களும் வாசகர்களும் மாற்றப்படுகிறார்கள், அவர்கள் அமைப்புசார் செயல்பாட்டாளர்கள் ஆகிறார்கள், இலக்குகள் முன்கூறாகத் தீர்மானிக்கப்பட்டு அளிக்கப்படும் செயல்பாட்டாளர்கள்.

இத்தகைய அமைப்பில் உள்ளவர்கள் தாம் இருப்பது கல்ட் அமைப்பா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள 10 கேள்விகளைக் கேட்டுக் கொண்டால் போதும். அவற்றை இதனுடன் இணைத்துள்ள படமொன்றில் காட்டியுள்ளேன். விஷ்ணுபுரத்தைப் பொறுத்தமட்டில் அக்கேள்விகளில் எல்லாவற்றுக்குமே "ஆம்" என்றே பதில் வரும்.

விஷ்ணுபுரம் அமைப்பில் மாறுபட்ட கருத்துக்கள் தீவிரமாக விவாதிக்கப்படுவதில்லை என்று நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதை முன்வைத்துத்தான் - ஜெயமோகன் தொடர்ந்து இத்தகைய விவாதங்கள் புதிய சிந்தனைகளை உருவாக்காமல் வெறுமனே சச்சரவைத் தோற்றுவிக்கின்றன என்கிறார். ஆனால் நம் வரலாறு வேறுவிதமாகச் சொல்கிறது. இவ்விவாதங்களின் வழியேதான் பல முக்கியமான படைப்புகளும் கட்டுரை நூல்களும் தமிழில் தோன்றியுள்ளன. நீங்கள் விஷ்ணுபுரம் அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டுச் சிந்திக்கக் கூடிய, எழுதக் கூடியவர்கள், பேசக் கூடியவர்கள் உருவாகிப் பார்க்கவே முடியாது. இது தனிமனிதர்களின் பிரச்சினை அல்ல. இது அந்த அமைப்பின் பிரச்சினைதான் - அவ்வமைப்பு எல்லாரையும் தம்மையறியாமலே ஒற்றைப் புள்ளியை நோக்கி நகர்த்துகிறது, முரண்பட்டு தனித்தனியாகச் சிந்திக்காமல் ஒரே ஸ்ருதியில் இணைந்து யோசிக்க வைக்கிறது. இதை நீங்கள் “நிறப்பிரிகையுடன்” ஒப்பிட்டுப் பாருங்கள் - நிறப்பிரிகையில் எழுதியவர்கள், அதில் செயல்பட்டுப் பிரிந்து வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சிந்தித்து கற்பனை செய்து நூல்களைப் படைத்தார்கள், செயல்பட்டார்கள். தனித்தனிச் சாதனையாளர்கள் ஆனார்கள். தமிழில் வேறு சில இயக்கங்களும் இவ்வாறே உள்ளன. அவை தனிமனிதப் படைப்பாளிகளை உருவாக்குகின்றன, ஆனால் விஷ்ணுபுரம் பொதுப்படையான தனித்துவமற்றவர்களை அச்செடுத்ததைப் போல உருவாக்குகிறது. ஓஷோவின் சீடர்களின், பின்தொடர்பவர்களின் பேச்சுக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. பாருங்கள். அவர்கள் ஓஷோவின் தொனியை, சொற்களை, கருத்துக்களைப் பிரதியெடுப்பதைப் பார்க்க முடியும். ஜக்கியியின் சீடர்களும் அப்படியே. அவர்கள் தாம் தமது மூளைக்கு வெளியே நின்று சிந்திக்கிறோம் என உணர்வதில்லை. ஓஷோ தோல்வியடைந்து கைதாகும் நிலை வந்தபின்னரும் கூட அவர்கள் ஓஷோவை ஆதரித்தார்கள். இப்போது நாம் விஷ்ணுபுரம் ஆதரவாளர்கள் சுயபரிசீலனை, சுய-கேள்விகளை அனுமதிக்க இயலாமல் சொன்ன சொற்களையே மீளமீளப் புனைவதைக் காண்கிறோம். இதெல்லாம் கல்ட் மனநிலையின் வெளிப்பாடே. சுயவிசாரணை அவர்களை நடுக்கமுற வைக்கிறது.

சொல்லப்போனால் விஷ்ணுபுரம் என்பது கூட ஒரு பெயரளவுக்குத்தான் - அதை ‘ஜெயமோகன்’ என்று சொல்வதே சரி. ஜெயமோகன் தன்னிடன் வருகிறவர்களை அவ்வாறு மாற வைக்கிறார். அவரது மகன், மனைவிக்குக் கூட தனியான சிந்தனைகளோ, படைப்பு மொழியோ இருப்பதில்லை. அதை அவர்கள் அவர் தமது வழிகாட்டி என்று கூறி நியாயப்படுத்தலாம். ஆனால் அது ஆரோக்கியமான போக்கு அல்ல. அது தன்னழிவுப் பாதையாகும். கல்ட் அமைப்புகளால் பொதுவாக தலைவருக்கும் அப்பால் சிந்திக்க இயலாது. அமைப்புதான் தலைவர், தலைவரே அமைப்பு. இதன் பொருள் உடலளவில் தலைவரே அமைப்பை பதிலீட்டுகிறார் என்றல்ல. தலைவரின் சொற்கள், பிம்பம், நம்பிக்கைகள் அமைப்பாக பின் தொடர்வோரின் உடலைக் கொண்டு உருக்கொள்கின்றன. அதனால்தான் இவர்களால் தம் தலைவரை ‘சாதாரண மனிதராகக்’ கருத முடியாமல் போகிறது. அவர் என்ன சொன்னாலும் செய்தாலும் அதை அவரது அரூபமான கட்டமைப்புக்குள் பொருத்தி அவரை மேலும் மேலும் அருவமாக்கிக் கொண்டே போவார்கள். ஆனால் அந்த அரூபமான நிலை நீடிக்க தலைவரின் உடலின் அண்மை அவர்களுக்குத் தேவை. இது ஒரு சிக்கலான சமூக உளவியல் அமைப்பு.

விஷ்ணுபுரம் அமைப்பு ஒரு குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. தனிமனித ஆற்றலை உறிஞ்சி தனிமனிதர்களின் இயலாற்றலை வீணாக்குகிறது. எனக்கு அவர்கள் கூட்டம் நடத்துவதில், பரிசு கொடுப்பதில் விமர்சனம் இல்லை. ஆனால் அவர்கள் பின்பற்றும் முறைமை, தத்துவம், நடைமுறைகள் மீது விமர்சனம் உள்ளது. எனக்குத் தனிப்பட்ட முறையில் ஜெயமோகனின் எழுத்து, இயல்பு மீது விமர்சனம் இல்லை. அவரது எழுத்தையோ குணத்தையோ என்னால் உதாசீனிக்க முடியும், மறுக்கவோ ஏற்கவோ முடியும். ஆனால் அவர் ஒரு கல்ட் தலைவராக இருப்பதில் விமர்சனம் உள்ளது.

இதனால் எனக்கு இம்மியளவும் இழப்போ பாதிப்போ இல்லை. நான் இம்மாதிரி அமைப்புகளுக்கு வெளியே இருக்கிறேன். சமூகப் பாதிப்பை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். கலாச்சார நோய்மையை வெளியே இருந்து யாராலும் தடுக்க இயலாது என அறிவேன். எந்த கல்ட் அமைப்பையும் யாரும் இதுவரைக்கும் விமர்சித்து தடுத்ததோ மறுபரிசீனைக்கு உள்ளாக்கியதோ இல்லை என உலக வரலாறு சொல்கிறது. ஏனென்றால் இவர்கள் ஒரு எதிரொலிக் கூடத்திற்குள் இருக்கிறார்கள். வெளியில் இருப்பவர்களிடமே நான் பேசுகிறேன். அவர்கள் நான் சொல்வதைக் கேட்டாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை. ஏற்கனவே சொல்லியதைப் போல இது என் தனிப்பட்ட பிரச்சினை அல்ல.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...