விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல, அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார். கூடவே மோடியும். பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள், உணர்ச்சிகரமான பேச்சு, பாடல்கள் இயல்புதானே. ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம். ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது. இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும். இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது.
வெறுப்பு:
வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல. இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு. இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும். எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும். தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது 'ரசிகத் திரளுக்கு' இது தத்தம் வாழ்க்கையின் எத்தனையோ இடர்களை நினைவுபடுத்தும். அவர் ஸ்டாலினைக் குறிப்பிட்டுத் தாக்கும்போது ஸ்டாலின் ஒரு வெற்றுக் குறிப்பான் ஆகிறார். மோடி தேசவிரோதிகளை, காங்கிரஸ் மன்னர் பரம்பரையினரைத் தாக்கும்போதும் அவரது ஆதரவாளர்களுக்கு அவர்கள் தம்மால் உடைக்க முடியாத மதிற்சுவர்களாகவும், மோடியால் அவை உடைக்கப்பட முடியும் என்றும் தோன்றியது. இதில் இருந்தே 'அரசியல் பொறுப்பின்மை' தோன்றுகிறது. அரசியல் பொறுப்பின்மையே பாசிசத்தின் அடிப்படைகளில் ஒன்று. அது முழுக்க முழுக்க அரசியல் எதிர்ப்பை ஒரு உணர்ச்சிப் பிரவாக நிகழ்த்துதலாக மாற்றுகிறது. மோடிக்கு யூதர்களும் கம்யூனிஸ்டுகளும், மோடிக்கு தேசவிரோதிகள், அர்பன் நக்சல்கள், இஸ்லாமியர், காங்கிரஸ் குடும்பத்தார் என்றால் விஜய்க்கு அது ஸ்டாலின் அங்கிள், மன்னர் பரம்பரையினர், ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர். இதைத் தாண்டி அவர் எதைக் குறித்தும் பேசாததன் காரணம் பேசினால் அது ஒரு உரையாடலை நோக்கித் தன் உரையைக் கொண்டு போய்விடும் என்பதே. மோடியும் அப்படியே, ஹிட்லரும் அப்படியே. உரையாடல் என்றால் அங்கு அதிகாரம் பரவலாகும், அங்கு முரண்படும் தரப்புகளின் சமரசம் தேவைப்படும், அங்கு மக்களாட்சி தேவைப்படும், அங்கு உணர்ச்சிகரமான கூச்சல்கள், பெருமிதம், ஆவேசமான சூளுரைகளுக்கு இடமின்றிப் போய் விடும். இத்தகையோர் ஆட்சியை முழுக்க சூளுரைகளாலும் முழக்கங்களாலும் நிறைத்து மக்களை ஒருவித அதி உணர்ச்சிகர நிலையிலே வைத்திருப்பர்.
என்னோடு நீங்கள்:
ஒவ்வொரு முறையும் தம் செயலின்மையை, தோல்வியை மறைக்க மக்களிடம் தியாகம் செய்யும்படி, தன்னுடன் நிற்கும்படி, தன்னம்பிக்கையுடன் இருக்கும்படி கேட்பர். இன்று விஜய்யின் உரையில் இத்தகைய சில பொறுப்பை மக்களிடம் மடைமாட்டுகிற போக்குகளைக் கண்டோம். அதாவது இவர்கள் தாமும் பொறுப்பை எடுத்துக் கொள்ள மாட்டார்கள், மக்களையும் பொறுப்புடன் சிந்திக்கவோ முடிவெடுக்கவோ அனுமதிக்க மாட்டார்கள், சதா தம்மையும் மக்களையும் தியாகிகளாக மட்டும் சித்தரிப்பார்கள் (நான் இங்கு சொல்கிற ஒவ்வொன்றையும் நீங்கள் இதுவரை மோடி எப்படிச் செய்துள்ளார் என்று யோசியுங்கள்.)
எதிரிகளின் பூடகம்:
பாசிஸ்டுகளின் எதிரிகள் நிஜ எதிரிகள் அல்லர். அவர்களுக்குத் தெளிவான பெயர்களும் அடையாளங்களும் இருக்கும் என்றாலும் அவர்கள் ஒருவிதமான பொதுக்கோபத்தைத் திரட்ட மட்டுமே பயன்படுவர். சிலநேரங்களில் யூதர்களின் இனப்படுகொலையைப் போல பாசிஸ்டுகளுக்கு தம் எதிரிகளை ஒரு சடாங்காச்சாரமாகக் கொல்லத் தேவையிருக்கும். அப்போதும் கூட அது ஒரு தனிப்பட்ட பழிவாங்கலோ, தனிப்பட்ட உத்தேசமோ பயனோ அதற்கு இருக்காது. மோடியின் ஆட்சியில் பாகிஸ்தானுக்கு ஏவுகணை அனுப்புவது, அதை தொடர்ச்சியாக டிவியில் காட்ட பிம்ப அரசியல் செய்வது, தேர்தல்களில் எதிரிகளை முறியடித்ததாகக் கொக்கரிப்பது என்று இருக்கும். அதாவது மோடி அழிப்புச் சடங்குகளைப் பெரிதுபடுத்தாமல் வெற்றிவாகைச் சடங்குகளில் ஓய்வு கண்டார். அவரது ஆதரவாளர்களுக்கும் மக்களாகிய பார்வையாளர்களுக்கும் அது போதுமானதாக இருந்தது.
ஹிட்லர் என்னதான் தன் பிரச்சாரங்களில் யூதர்களை இலக்காக்கினாலும் அவரது நண்பர்களாகவே பணக்கார யூதர்கள் தொடர்ந்தனர் என்பது வரலாறு. மோடிக்கு கடந்த போரில் பாகிஸ்தானுடன் முழுமூச்சாக மோதுகிற வாய்ப்பு இருந்தது. ஆனால் சீனாவுடனான நல்லுறவைக் கெடுக்கவோ ஓரளவுக்கு மேல் அந்த போர் விளையாட்டை எடுத்துச் செல்லவோ அவருக்கு ஆர்வமில்லை. அது மட்டுமல்ல, காங்கிரஸை ஒழிப்போம் என்று கோரிக் கொண்டே அவர் முன்னாள் காங்கிரஸார், எதிர்க்கட்சியினருடன் நல்லுறவைப் பேணி அவர்களைத் தன் கட்சியில் இணைத்துக் கொண்டே போவார். விஜய்யும் திமுகவைத் தன் எதிரிகளாகத் தொடர்ந்து பேசி அவர்களை ஒழிப்பதே தன் நோக்கம் எனப் பிரச்சாரம் செய்தாலும் தன் கட்சியைத் திமுக / அதிமுகத்தனமாக்குவதில் அவருக்கு எந்த தடையும் இல்லை.
பொதுவாக பாசிஸ்டுகளின் நடவடிக்கைகள் கண்ணை மூடிக்கொண்டு சுடுவதைப் போலிருப்பதால் அவர்கள் "எதிரி எதிரி" என்று கத்திக் கொண்டே தாக்கினாலும் குண்டுகள் தம் ஆதரவாளர்கள் மீதே படும். ஹிட்லரின் ஆட்சியில் என்னதான் யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டாலும் கிட்டத்தட்ட அதற்கு ஈடாகவே அழிவை ஜெர்மானிய மக்களும் எதிர்கொண்டார்கள். போரினாலும் பொருளாதார நிலைகுலைவினாலும் சர்வதேச அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டதாலும். மோடியின் ஆட்சியில் இஸ்லாமியரை விட அதிக, பாகிஸ்தானிரை விட அதிக துன்பம் அனுபவித்தது இந்துக்கள்தாம்.
பாசிசத்தில் எதிரியை கோட்பாட்டு ரீதியாக, பகுத்தறிவைக் கொண்டு வரையறுக்காமல் ஒரு மீ-எதிரியாக மாற்றுவதால் பாசிஸ்ட் தலைவர் மட்டுமே பெரும் அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைவார், மக்கள் தமக்குத் தாமே எதிரிகளாக மாறுவர். அப்படித்தாம் வேரறுக்கப்படுவதை உணராமல் அவர்கள் எப்போதுமே ஒருவித உல்லாசத்தில் வைக்கப்படுவர்.
பாதிக்கப்பட்டவர் எனும் பிம்பம்:
பாசிஸ்டுகளின் பேச்சில் கீழ்வரும் உணர்ச்சிகளே பிரதானமாக இருக்கும்:
அவமான உணர்வு
கோபம்
பயம்
தேசத்தின் (இங்கு தமிழ்நாட்டின்) தலையெழுத்து
பாதிக்கப்பட்டவர் எனும் அடையாளம்
பழிவாங்குதல்
தூய்மைப்படுத்துதல் (தீய சக்தி vs தூய சக்தி கதையாடல்)
மறுபிறப்பு (எளிய ஏழைப் பிள்ளையில் இருந்து நடிகனாகி வெற்றி பெற்று அரசியல் நுழைந்து புதுப்பிறப்பெடுத்திருக்கிறேன். என்னுடன் நீங்களும் இந்த மாநிலமும் மறுபிறப்பெடுக்கப் போகிறீர்கள். இந்த கணம் இதோ அது துவங்குகிறது.)
ஹிட்லரின் உரைகளும் நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க இவ்வாறே இருந்தன. இவற்றை எல்லாம் நீங்கள் மோடியிடமும் பார்க்க முடியும். விஜய்யிடமும் தாராளமாக இவையே ஆதிக்கம் செலுத்துகின்றன.
மேற்சொன்ன உணர்ச்சிகளில் கவனிக்கத்தக்கது பாதிக்கப்பட்டவர் என்பதே. அதுவே அவர்களுடைய பழிவாங்கும் அரசியலின் அச்சாணி.
பாசிஸ்டுகள் தம்மைப் பாதிக்கப்பட்டவராகவும் (அடிமை) எதிரிகளை சிறப்புரிமை பெற்ற ஆண்டானாகவும் தொடர்ந்து சித்தரித்து மக்களின் இரக்கத்தைக் கோருவர். அதைச் சொல்லும்போது அவர்களின் குரல் கம்மும். கண்கள் தாழும். அடுத்து உடனே குரலை உயர்த்தி அதனால் தாம் அடங்கி இருக்கப் போவதில்லை எனச் சீறுவார்கள், சவால் விடுப்பார்கள், தன்னைப் போன்ற எத்தனையோ மக்களின் பிரதிந்திதான் என்று கூக்குரல் இடுவார்கள். இதை ஹிட்லர் செய்தார் (பணக்கார யூதர்கள் vs போரிலும் நடைமுறையிலும் யூதர்களால் வஞ்சிகப்பட்ட ஜெர்மானிய ஆரியன்), மோடி செய்தார் (தேநீர் விற்றவன், ஏழை, லிபரல்களால் ஏமாற்றப்பட்ட இந்து, காங்கிரஸ் மேதாவிகளின், அதிகார வர்க்கத்தின் எதிரி), இப்போதும் விஜய்யும் செய்கிறார் (உதவி இயக்குநரின் மகன், பசியை அறிந்து வளர்ந்தவர், ஏழைகளில், மத்திய வர்க்கத்தில் தானும் ஒருவர், திமுக மன்னர் பரம்பரையினரின் எதிரி). இப்படித் தம்மைப் பாதிக்கப்பட்ட இரங்கத்தக்க ஒருவராக முன்வைக்கும்போது தன் ஒவ்வொரு நகர்வையும் ஹீரோயிசமாகக் காட்டவும், தன் அசாதாரணக் குற்றங்களை (யூதர்கள் / குஜராத் இஸ்லாமியர் / கரூர் ரசிகர்கள்) சாதாரணமானதாகவும் இவர்களால் காட்ட முடியும். தம்மை இவர்கள் பெருவாரியான எளிய மக்களில் ஒருவராகச் சித்தரிப்பதால் தம் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் மீது அதிகார்வர்க்கத்தினர் வைக்கும் குற்றச்சாட்டாகத் திருப்பி விடுவர்.
பாசிசக் கதையாடல் டெம்பிளேட்:
இவர்களுடைய அரசியல் பிரச்சாரம் இந்த வடிவத்தையே கொண்டிருக்கும்:
1-2) முதலில் நாடே ஒரு பெரிய நெருக்கடியில் இருக்கிறது என்று பரபரப்புடன் பேசிவிட்டு எதிரிகளை அடையாளப்படுத்துவர் (மோடிக்கு இஸ்லாமியரும் காங்கிரஸின் மன்னர்களும், விஜய்க்கு திமுகவும், ஸ்டாலின் சாரும்). அவர்களுக்கு அடையாளப் பட்டியைப் பொருத்துவர் (மன்னர் பரம்பரை, தீய சக்தி).
3)அடுத்து, நாட்டின் இழிநிலைக்குக் காரணம் நாட்டை ஆதிக்கச் சதியினர் கைவிட்டதே, காட்டிக் கொடுத்ததே, துரோகம் செய்ததே என்பர் (மோடி அன்னா ஹசாரே ஏற்படுத்திய ஊழல் பரபரப்பையும் ஏற்கனவே இருந்த இந்துத்துவ அரசியலையும் கொண்டு காங்கிரஸைத் தாக்கினார். விஜய் திராவிடக் கட்சிகளால் அழிந்த தமிழ்நாடு எனும் கதையாடலை சீமானும் அண்ணாமலையும் ஏற்கனவே ஊதிப் பெருக்கி வைத்திருந்ததால் விஜய் அதை அப்படியே எடுத்து தன் சினிமா வசனங்களில் பொருத்தி ஹைஜேக் செய்தார்.)
4) தேசத்தைத் தானே புனரமைக்கப் போவதாக அறைகூவுவது (மோடி குஜராத்தைப் போல இந்தியாவையும் ஜொலிக்க வைக்கப் போவதாக சொல்ல, விஜய் தான் தமிழ்நாட்டைச் சுத்தமாக்கப் போவதாக அறைகூவினார்)
5) கடைசியாக இவர்கள் தாமே பாதுகாவலர் எனக் கோருவார்கள் (ஹிட்லர் தன்னை யூதர்களிடம் இருந்தும் யூதர்களை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்தும் காப்பாற்றப் போவதாகவும், மோடி இஸ்லாமியர், தேசவிரோதிகள், அர்பன் நக்ஸல்களிடம் இருந்தும் காப்பாற்றப் போவதாகவும் கோரினர். விஜய் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுகிற சூப்பர் ஹீரோ என்று தன்னைக் கோருகிறார்).
இதை நீங்கள் மற்ற தலைவர்களின் உரைகளுடன் ஒப்பிட்டாலே வித்தியாசம் புரியும்.
அரசியலை பிரம்மாண்ட நிகழ்த்துதலாக்குவது:
ஹிட்லர் தொழில்நுட்பத்தினால் ஊடகம் வளர்வதைத் தன் காலத்தில் உணர்ந்து அதைத் தன் அரசியல் ஆயுதமாக்க முயன்றார். அவரது துவக்கமே பலவிதமான போஸ்களில் தன்னைப் புகைப்படமெடுத்து அதைப் பிரச்சார சுவரொட்டிகளில் பயன்படுத்தியதுதான். அதன் பிறகு அவர் புகைப்படப் போஸ்களையே, தோரணையையே தன் கூட்டங்களில் நடித்திட முயன்றார். அவரது பேச்சில், தோரணையில் உள்ள அசாதாரணத்துவம், வசனங்களில் உள்ள மிகை, உணர்ச்சியை தர்க்கத்தை விட முன்னுலைப்படுத்தியது, மக்களிடம் உரையாடாமல் அவர்களைத் தன் நிகழ்த்துதலுக்குப் பார்வையாளர்களாகவும் ரசிகர்களாகவும் மாற்றியது அந்த கால ஜெர்மானிய மக்கள் திரளின் உளவியலை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தது - அவர்கள் ‘கேட்டு நடக்கிறவர்களாக’, ‘பார்த்துப் பின்பற்றுவோராக’ தம்மையறியாமலே மாறினர். சிந்திப்பதில் களைப்பை உணர்ந்து பார்க்கவும் கேட்கவும் மட்டுமே பழகி உடனடித் தூண்டுதல்களுக்கு தன்னியக்கமாகச் செயல்படும் பொம்மைகள் ஆயினர். அடுத்ததாக, இதைச் செய்ய மறுத்தோர் சமூகவிரோதிகளாக, தேசவிரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். தொடர்ந்து இடதுசாரிகள் ஹிட்லரின் படையினரால், குண்டர்களால் தாக்கிக் கொல்லப்பட்டனர். இதைக் கண்டு ஹிட்லரை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்களே அதிகம் பயந்து போயினர்.
‘ஹிட்லர் அடுத்து சினிமாவைத் தன் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தினார். ஜெர்மானியப் படையினர் உலகப் போரில் தோற்கும்போதும் மக்கள் பெருந்திரளாக திரையரங்குகளில் வரவழைக்கபட்டு தம் போர் வீரர்கள் வெல்வதாகப் போலியாகச் சித்தரிக்கும் படங்களைக் கண்டு புல்லரித்தனர். தம் அதிபரோ தம் படையினரோ துளியும் தவறிழைப்பதோ தோற்பதோ அசாத்தியம் என்று அவர்கள் இறுதி வரை நம்பினர். இன்று இந்தியாவில் மோடி அவ்வாறே ஆட்சி நடத்துகிறார். ஒட்டுமொத்தமாக ஊடகங்களை விலைக்கு வாங்கி, மேடையில் நாடகீயமாகப் பேசி, உணர்ச்சிவசப்பட வைத்து, இன்னொரு பக்கம் விர்ச்சுவலாக ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து அதைக் கொண்டே மக்களை நம்ப வைத்து ஏமாற்றி மூன்று முறை வெற்றியடைகிறார். விஜய்யின் அரசியலும் கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான் போகிறது. ராணுவத் துல்லியத்துடன் மிகப்பெரிய திரள்களைத் திரட்டிக் கூச்சலிட வைப்பது, சீருடை, கொடி, பதாகைகள், குறியீடுகள் (சின்னம்), நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படும் நுழைவு, மேடையில் தோன்றும் தோரணை, ஒளியமைப்பு, பிரம்மாண்டமான இசை, முழக்கம், தன் ரசிகர்களை மட்டும் திரட்டி அவர்களைத் தன் பெயரை மீளமீளச் சொல்ல வைப்பது, அவர்களில் சிலர் ஆர்ப்பரிக்கும்போது கூடுதல் சப்தம் சேர்த்து அதை மிகையாகக் காட்டுவது, ஏதோ தமிழ்நாடே திரண்டு உணர்ச்சிவயப்படுவதாக நிகழ்த்துவது என அவர் பயன்படுத்தும் உத்திகள் சினிமாவில் இருந்து கடன்வாங்கப்பட்டவை அல்ல - அது பாசிசத்திலிருந்து கடன்பெறப் பட்டவை (நமது சினிமாவும் மூன்று பத்தாண்டுகளாக அவ்வாறே இருக்கிறது என்பதால் அரசியல் மேடையில் அதை ஏற்றுவது சுலபமாகி இருக்கிறது.).
கல்ட் தலைமை:
கல்ட் தலைவர்கள் எந்த விதப் பகுத்தறிவும் இன்றி முழுமையாகத் தன்னை வணங்கும்படிக் கோருவார்கள். ஹிட்லர் ஒரு துணிச்சலான ராணுவ தலைவராகவும் பாதிக்கப்பட்ட பாவம் தலைவராகவும் ஒருசேரத் தன்னைக் கட்டமைத்தார்; மோடியும் கிட்டத்தட்ட அவ்வாறே சித்தரித்து அதனுடன் ஏழைப் பின்னணி, சாமான்யன் போன்ற விசயங்களையும் சேர்த்துக் கொண்டார். இருவருமே எந்தப் பரிசீலனையும் இன்றி மக்கள் தம்மை வழிபடுவதை சடங்குகள், கோஷங்கள், ஆவேசமான பேச்சுகளின் வழியாக ஏற்பாடு செய்தனர்.
விஜய் ஒரு பதின்வயதுப் பையனின் உடல்மொழியை ஆரம்பம் முதலே கைக்கொண்டதால், அது மக்களுக்கும் பிடித்ததால் அதையே பாதிக்கபட்ட இளைஞன் எனும் பிம்பத்துடன் பொருத்தி ஆக்ரோசமும் பணிவும் ஒருசேரப் பெற்ற ஒரு கல்ட் தலைவராக தன்னைக் காட்டுகிறார். அவர் வந்ததுமே மக்கள் உணர்ச்சி வசப்பட்டு துள்ளுவது அவர் நேரடியாகக் கோராமலே ஒரு கல்ட் தலைமை அவருக்கு உருவாகி விட்டதாக தோற்றமளிக்கிறது. சிலர் இதை கெரிஸ்மா (வசீகரம்) என்கிறார்கள். இது வசீகரம் அல்ல, தொடர்ச்சியாக பல்வேறு குறியீடுகள், மேடை அரங்கேற்றங்கள், திரைப் பிம்பங்கள் வழியாகவும், பேரணி சடங்குகள் வழியாகவும் இந்த கல்ட் தலைமை அவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மேற்சொன்ன பிம்பங்களையும் சடங்குகளையும் உதறிவிட்டால் அவரிடம் ஒன்றுமே இருக்காது. எல்லா கல்ட் தலைவர்களும் அப்படியே இருப்பர். அவருடைய ரசிகர்களும் பின் தொடர்வோரும் இப்படியே கண்மூடித்தனமாக இருக்கப் பழக்கப்படுவதால் கேள்வி கேட்பது, விமர்சிப்பது, பகுத்தறிவது அவர்களுக்கு சிறிது பழக்கமற்றதாக இருக்கும் (ஒரு சிறிய அளவில் பார்ப்பதானால் இலக்கியத்தில் ஜெயமோகனின் ரசிகர் படை இதற்கு இன்னொரு உதாரணம்).
கல்ட் தலைமையில் கவனம் நிறுவனங்கள், கட்டமைப்புகளில் இருந்தும், அரசியலமைப்பு விதிகளிலிருந்தும் வழுவி ஒரு ஆக்ரோசமான தலைவர் மீது திருப்பப்படும். அதாவது நான் இந்திந்த நடைமுறைகளை எதிர்க்கிறேன், கொள்கைகளை மறுக்கிறேன், இவைகளை மாற்றி புதிய கொள்கைகளைக் கொண்டு வருவேன் என்று பேச மாட்டார்கள். நான் எதிர்க்கிறேன், நான் வருகிறேன், நான் மாற்றுவேன் என்று எளிமையாக ஒரு தீர்வைச் சொல்வாரக்ள். நானே எல்லாம், சர்வம் தலைவர் மயம்.
உங்கள் விஜய், உங்கள் வீட்டுப் பிள்ளை விஜய், உங்கள் தம்பி விஜய், உங்கள் நண்பன் விஜய் இப்படியான கோஷங்களை கவனியுங்கள். சரி என் வீட்டுப் பிள்ளை தானே, என் நண்பன் தானே, என்னுடன் ஒரு உரையாடலுக்கு வா என்று கேட்டால் வர மாட்டார்கள். இப்போக்கை எல்லா பாசிச கல்ட் தலைவர்களிடமும் பார்க்கலாம். அவர்கள் நம்முடனே நாமாகவே இருப்பதாகக் கோருவார்கள், ஆனால் நமது குரல் அவர்களைப் போய் ஒருபோதும் அடையாது. ஹிட்லர் கடைசி வரை அப்படி ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள்ளே இருந்தார். மோடியும் அப்படியே. இந்த உங்க வீட்டுப் பிள்ளை விஜய்யும் அப்படியே. இது அவர்களின் அடிப்படைக் குணம்.
மீளச் சொல்லுதலும் எளிமையாக்கமும்:
ஹிட்லரின் முழக்கங்கள் -
நமது கடைசி நம்பிக்கை, ஹிட்லர்
ஒரே மக்கள், ஒரே ஆட்சி, ஒரே தலைவர்
யூதர்கள் நமது துரதிஷ்டம்
மோடியின் முழக்கங்கள் -
“காங்கிரஸ் இல்லாத பாரதம்
நானே உங்கள் காவலாளி
மேக் இன் இந்தியா
ஆச்சே தின்”
தவெகவின் முழக்கங்கள் -
திமுக எனும் தீய சக்தியை ஒழிப்போம்
‘ஓம் சக்தி, பராசக்தி திமுக ஒரு தீய சக்தி’
யோசித்துப் பார்த்தால் ஒரு தேசமோ மாநிலமோ எதிர்கொள்ளும் எந்த அடிப்படையான நெருக்கடிகளும் சிக்கல்களும் அவற்றின் தீர்வுகளும் இந்த முழக்கங்களில் இருக்காது. இதை எளிமையையும் உணர்ச்சிவயப்பட்ட நடத்தையையும் மட்டுமே முன்னிலைப்படுத்தும் முழக்கங்கள். நீங்கள் இவற்றை அண்ணாவின் முழக்கங்களுடன் ஒப்பிடுங்கள்:
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஒன்றே குலம், ஒருவனே தேவன்
இம்முழக்கங்களில் ஒற்றை எதிரிகள் இல்லை. எளிமைப்படுத்துதல் இல்லை. சுயாட்சி-கூட்டாட்சி எனும் அரசியல் கொள்கையைச் சிந்திக்க அவை கோருகின்றன, கடவுளை ஏற்றுக் கொண்டே சமத்துவத்தைப் பேணுவது எப்படி என்று யோசிக்கத் தூண்டுகின்றன. அவர் இந்தியை எதிர்த்தபோது கூட இந்தி பேசுவோரே நம் ஒரே எதிரி என்று கூறவில்லை. அவர் “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என்றார். “இந்தியை என்றும் எதிர்ப்போம்” என்று கோரவில்லை.
இந்த இரண்டு குணங்களையும் நாம் ராணுவத்தில் காண முடியும். அதாவது ரொம்பவெல்லாம் யோசிக்கக் கூடாது. ஒரே கோஷத்தைத் திரும்பத் திரும்பக் கூறு. முழக்கமிட்டபடியே நடைபழகு. முன்னேறு. இதிலுள்ள எளிமை மக்களை சட்டென ஈர்க்கும். இப்படித்தான் இவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள்.
திரள் = உண்மை:
ஹிட்லர் தான் பயணம் சென்ற இடங்களில் எல்லாம் மிகப்பெரிய திரளைத் திரட்டினார். அவர்களை ஒரு குறிப்பிட்ட விதமாக முழக்கமிட, எதிர்வினையாற்ற வைத்தார். ஒட்டுமொத்த ஜெர்மானிய சமூகமும் அவர் பக்கம் நிற்கவில்லை என்றாலும் கணிசமாகத் திரண்ட மக்கள் அவரது பேச்சுக்கும் வெறுப்புக் கருத்தியலுக்கும் ஒரு அங்கீகாரத்தை அளித்தது. எல்லாருமே ஹிட்லரை ஆதரிக்கிறார்கள், ஆகையால் அவர் செய்வது சரிதான் என மக்கள் நம்பினார்கள். அவரை எதிர்ப்போர் இவ்வாறு ஒன்று திரள இயலவில்லை என்பதை அவர் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டார். நம் நாட்டில் மோடியும் இதையே செய்தார். ஒட்டுமொத்த இந்தியாவும் எப்போதுமே அவருடன் இருக்கவில்லை. அவர் அப்படியான பிம்பத்தைக் கொண்டு அழுத்தத்தை உருவாக்கி அதைக் கொண்டு பிறரையும் பணியச் செய்தார். இப்போது விஜய்யின் சில ரசிகர்கள் திரண்டு எழுப்பும் முழக்கங்களும் செய்யும் ஆர்ப்பரிப்பும் ஊடகங்களால் பரப்பப்பட்டு ஒருவித அழுத்தம் உருவாக்கப்படுகிறது. விஜய்யை ஆதரித்தால் இந்த போக்குடன் இணையலாம், பிரபலமாகலாம் என்றே சம்மந்தமில்லாதோர் கூட அவரது ரசிகராகவும் ஆதரவாளராகவும் தம்மைக் காட்டிக் கொள்கின்றனர். இது அவர்களைச் சிந்திக்க விடாமல் பண்ணுகிறது. ஆதரவை விட, நகல் நடத்தையை விட சிந்தித்தல் துண்டிக்கப்படுவதே இங்கு பாசிச இலக்கு. அதை விஜய் சாதிக்கிறார். அவரது ஆதரவாளர்களை ஜோம்பிகள் என அழைத்த நிலையில் இருந்து ஜோம்பியாக இருப்பதே அழகு, அதுவே அதிகாரம் எனும் இடத்திற்கு சமூகத்தை நகர்த்திவிட்டார். எல்லா பாசிஸ்டுகளும் விதிவிலக்கின்றி இதைச் செய்வர்.
65% மக்கள் விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்று திமுகவினர் சொல்வது கவனிக்கத்தக்கது. இந்த 65% மக்களை காணாமல் அடிப்பதும், தன் ஆதரவாளர்களே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கட்டமைப்பதுமே தமிநாட்டு ஹிட்லரின் லட்சியம். எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் என் ஆட்சி என்று ஸ்டாலின் சொல்வதற்கும் விஜய்யின் பேச்சுகுமான வித்தியாசத்தை கவனியுங்கள் - விஜய் தன்னுடன் நின்றோரைத் தன் குடும்பம் என்றும், நண்பர்கள் என்றும் கூறும்போது பிறர் என்னவாகிறார்கள்?
காரணிகள்:
விஜய்யின் பாசிசம் இங்குப் தோன்றக் காரணிகள் மோடியின் பாசிச அரசியல் தோன்றுவதற்கான அதே காரணிகளே. ஹிட்லர் ஆட்சிக்கு வரும்போதும், இங்கு மோடி தேசிய அரசியலுக்கு வரும்போதும் நாடு ஒருவித பொருளாதார மந்தநிலையில் இருந்தது. ஜெரமனியில் வேலையின்மை, பாதுகாப்பின்மையுடம், சர்வதேச நாடுகள் ஜெர்மனியை ஒடுக்குவதாக தேசியவாதிகள் எழுப்பிய முழக்கங்களால் ஏற்பட்ட பதற்றமும் இருந்தன. கூடவே மக்கள் தமக்குள் உடைந்து, தனிமைப்பட்டு அணுக்களாக மாறியிருந்தனர் (அணுவாக்கம்). ஊழல் குற்றச்சாட்டுகள், பலாத்கார குற்றங்கள், தீவிரவாத தாக்குதல்கள் ஊடகங்களால் பெருக்கிப் பேசப்பட்டதால் ஒருவித பதற்றம் நிலவியது. விளைவாக, மக்கள் தனித்தனியாக உடைந்து போய் பரஸ்பரம் அங்கீகரிக்கிற நேசிக்கிற மனநிலையை இழந்திருந்தார்கள். இச்சூழல்கள் இருவரது பாசிச அரசியலுக்கும் வெகுபொருத்தமாக அமைந்தன. மக்களில் ஒரு பகுதியினர் தாம் தேடிக் கொண்டிருந்த மெஸைய்யாவைக் கண்டுகொண்டதாக, எதிர்ப்பரசியலின் நாயகன் வந்துவிட்டதாக உவகை கொண்டனர். தமிழ்நாட்டிலும் லாக் டவுனுக்கும், செய்யறிவின் வருகைக்கும் பின்பான சந்தைப் பொருளாதாரப் பின்னடைவும் மந்தநிலையும் வேலையின்மையும் விலைவாசி ஏற்றமும் மிதமிஞ்சிய சமூகவலைதளப் பயன்பாடு, நுண்பேசியில் விளையாடுவதும் போதைப்பழக்கமுமே கதியெனக் கிடக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கியது. இவர்களின் தனிமையும் சமூகக் கூச்சமும் வெர்ச்சுவல் உலகில் ஒரு விடுதலையை அளிக்கிறது. இந்த பிளவுபட்ட மனநிலையை விஜய் - பொருளாதார நிலையுடன் சேர்த்து - பயன்படுத்தி தன் பாசிச அரசியலை முன்னெடுக்கிறார். இச்சூழலில் மக்களுக்குத் தேவை தாம் ஒரு தீவிரமான அரசியல் மாற்றத்தில் பங்கு பெறுவதான உணர்வு, தாம் பாதுகாக்கப்படுவதான உத்தரவாதம், தாம் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதான நம்பிக்கை, ஒற்றை மைய இலக்கு. இதனாலே பாசிச அமைப்புகள் பெரும் திரளை முன்னிலைப்படுத்துவது, கூச்சலை, முழக்கங்களை அதிகரிப்பது, எதாவது குறியீடுகளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதை, காட்சிப் பிம்பங்களை உற்பத்தி செய்துப் பரப்புவதைச் சார்ந்துள்ளன.
பேரணி நடத்துவதாலோ முழக்கங்களைப் போடுவதாலோ மட்டும் நான் அவரை ஒரு பாசிஸ்ட் என்று கோரவில்லை. “நீங்களே நான்” என்று திரும்பத் திரும்பக் கோரி, தன் வெற்றியே மக்களின் வெற்றி என்று சித்தரித்து கேள்வி கேட்கவும் விவாதிக்கவும் தேவையில்லாத ஒரு பகுத்தறிவற்ற குடிமக்கள் கூட்டத்தை அவர் உருவாக்குவதாலே அவரை பாசிஸ்ட் என்கிறேன். ஒரு பாசிஸ்ட் இனப்படுகொலையைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் அடிப்படையில் ஒரு சமூகத்தின் பகுத்தறிவை ஒழித்து முன்னேற்றத்தைத் தடுத்து முதலீட்டியத்தின் எளிய அடிமைகளாக்கி விடுகிறார். பாசிஸ்டுகளின் ஆட்சியில் போராட்டத்திற்கோ அரசியல் செயல்பாட்டுக்கோ இடமிருக்காது. கண்மூடித்தனமாக மக்கள் ‘தனக்காக’ (தலைவருக்காக) உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும், சுயசிந்தனையோ தன்முனைப்போ அவர்களுக்கு இருக்கக் கூடாதென பாசிஸ்டுகள் நினைப்பர். ஒரு தனிமனிதனை எடுத்து அவரது தன்னிலையை, பகுத்தறிவுப் பண்பைப் பிடுங்கிவிடுவதே பாசிஸ்டுகளின் நோக்கம். விஜய் ஒரு சினிமா நடிகராக இருந்ததால் அவர் இவ்வாறு அரசியல் செய்கிறார் என நாம் மயங்கி விடுகிறோம். ஆம், சினிமாவும் பாசிசத் தன்மை கொண்டதே என்றாலும் சில அரசியல் தலைவர்களே பாசிச அணுகுமுறையை பிரச்சாரத்திலும் தம் அரசியலிலும் கொண்டு வருவார்கள். பொதுவாகவே பாசிசத் தலைவர்கள் தன்னொடுங்கிவர்களாகவும் (introverts), கூச்ச சுபாவிகளாகவும், பதற்றம் மிக்கவர்களாகவும் இருப்பர். ஹிட்லர், மோடி, விஜய் எல்லாமே அப்படித்தான். இவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் வரும்போது பாசிச அரசியலின் முகமாகி எளிதில் மாறி விடுவார்கள்.
சிந்திக்கவோ எதையும் மாற்றவோ முனையாத தலைமுறையினருக்கு விஜய்யின் எளிமைப்படுத்தப்பட்ட அரசியல், சினிமாத்தனமான அரசியல், கல்ட் தலைமை ரொம்பத் தேவையாக உள்ளது. அதாவது இது ஒரு சமூக நோய்மையின் நோய்க்கூறு மட்டுமே. விஜய் ஒரு தலைவர் அல்ல. ஒரு பாசிச நோய்மையின் முகம்.
Comments