முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்



 

முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இயலும். பாராளுமன்ற தேர்தலிலும் இது அவர்களுக்கு இங்கிருந்து கூடுதல் இடங்களாகப் போகக் கூடும்.

அதேநேரம் ஸ்டாலின் சொல்லாமல் விட்ட ஒரு பிரச்சினை உண்டு - நமது பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் சமூகம் முழுக்க சமமாகப் பரவவில்லை. அது இங்கே ஒரு திடீர் உயர்வர்க்கத்தினரை உருவாக்கியுள்ளது. உயர்மத்திய வர்க்கத்திற்கு சிறிது உதவியுள்ளது. இந்த வளர்ச்சி சில நகரங்களைத் தாண்டி பிற இடங்களுக்குப் பரவவும் இல்லை. இது என் கருத்து அல்ல. மேற்சொன்ன ஊடகங்களில் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே வந்த அலசல்தான்.

அதாவது தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; ஆனால் அது வர்க்கரீதியானது. அது சமத்துவத்துக்கு வழிவகுக்கவில்லை. ஏழ்மையை ஒழிக்கவில்லை. மத்திய வர்க்கமும் கீழ்மத்திய வர்க்கமும் கடும் நெருக்கடியில் உள்ளது. வளர்ச்சி அவர்களின் சட்டைப் பையில் பணமாகச் சென்று சேரவில்லை. அவர்களே திமுக மீது அதிருப்தியில் உள்ளார்கள். திமுக அரசின் நலத்திட்டங்களும் ஒருபக்க சார்பாகவே உள்ளன (கர்நாடகாவில் நிகழ்வதைப் போல). கடந்த பத்தாண்டுகளில் வேலைக்குப் போகிற, படித்து முடிக்கிற மக்களில் பெண்களே ஆண்களை விட அதிகம். இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையில் பெண்களே ஆண்களைவிட அதிகமாக உள்ளனர் - 1020 பெண்களுக்கு 1000 ஆண்கள் விதம் உள்ளனர் (2019-21 National Family Health Surveyபடி). ஆகையால் மாநில, ஒன்றிய அரசுகள் மகளிருக்கான திட்டங்களாக அள்ளி வீசுகிறார்கள். மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரிடையே ஒருவித கசப்பை இது ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டம் உள்ளதால் தனக்கு வருமானம் குறைந்துவிட்டது என ஒரு ஆட்டோக்காரர் பேசும் காணொளியைப் பார்த்தேன். இது ஏற்கத்தக்க வாதமாகத் தோன்றவில்லை என்றாலும் அவர் தன் வருமானம் செலவுக்குப் போதவில்லை எனும் வருத்தத்தில் பேசுகிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இத்தகைய கோபத்தை நான் கர்நாடகாவிலும் ஆட்டோக்காரர்கள் மத்தியில் காண்கிறேன்.

இதற்குத் தீர்வு நலத்திட்டங்களை வயது (மாணவர்கள்), பாலின (பெண்கள்) அடிப்படையில் உருவாக்காமல் வர்க்க அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதே. மாநிலத்தின் வருமானத்தை கீழ்நோக்கித் திருப்புவது அவசியம். இல்லாவிட்டால் ஒரு வர்க்கத்திடம் மட்டும் நிறைய பணம் சேரும். மக்கள் அதிருப்தியாக எரிச்சலாக இருப்பார்கள். இதனால் குற்றங்கள் பெருகும்; அநீதிகள் வலுக்கும். மதவாதம் தலைவிரித்தாடும். ஏழைச் சமூகத்தை விட ஏற்றத்தாழ்வான சமூகம் ஆபத்தானது.

ஆனால் இந்தப் பேச்செல்லாம் திமுக ஆட்சியில் இருக்கும் வரையில் மட்டுமே எடுபடும். அதிமுக வந்தால் இப்போது கிடைத்துள்ள வளர்ச்சியில் இருந்து 3 சதவீதமாவது குறைத்து விடுவார்கள். கோமாளிகள் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் மாநிலம் ஒரு மனநல விடுதியாகும். அதனால் திமுக வரவேண்டும், வந்தபின் அவர்களுடைய பொருளாதார முடிவுகளை, நலத்திட்டங்களை சற்றே மாற்ற வேண்டும் என்றே விரும்புகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...