முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

 


விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான்.

இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இது அரசியல் இன்று நிகழ்த்து கலையாக மாறிப் போன அவலத்தினால் விளைவதுதான். ஆனால் வெளியே இருந்து கவனிப்பவர்கள் இதையெல்லாம் பகடி செய்யக் கூடாது, அவமதிக்கக்கூடாது என்று தோன்றுகிறது. நம்பிக்கை என்று வந்துவிட்டால் அது இன்னொருவருக்குப் புரியாது. நம்பிக்கையில் மற்றமைக்கு இடமே இல்லை. மொட்டையடித்து மலையேறுவோர், மாலையிட்டு விரதம் இருப்பவர்கள், மண்சோறு தின்பவர்கள் ஒருவிதத்தில் தாம் மற்றமையாக்கப்படக் கூடாது எனும் நோக்கத்திலேயே அதைச் செய்கிறார்கள். அப்படித்தான் அந்தரங்கமே அங்கு நிகழ்கிறது. இதை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புவோர் அடுத்த பத்திக்கு வாருங்கள்.

இந்த உலகில் நாம் இன்னொருவரால் பார்க்கப்பட்டு மதிப்பிடப்படுவதாலே 'இருக்க' முடிகிறது. அதாவது நாம் பார்வைக்குள்ளாகும் பொருளாக்கப்படுகிறோம் (objectification). நம்மைப் பார்க்கிறவர்கள் (subject) நம்மை ஒரு மற்றமையாக (other) மாற்றுகிறார்கள். இதை அவர்கள் தரப்பில் இருந்து நாமே பார்க்கும்போது நாம் நம்மையே பார்க்கப்படும் பொருளாக்கிறோம். இதையே சுய-அடையாளப்படுத்துதல் என்கிறோம். ஒரு பெண் தன்னைப் 'பெண்ணாகப்' பார்க்கையில் அவளுக்குள் ஒரு ஆண்-மையப் பார்வை தோன்றுகிறது. அவள் ஆணின் தரப்பில் இருந்து பெண்ணாகத் தன்னை தன்னடையாளப்படுத்துகிறாள். சாதியும் இப்படியே தோன்றுகிறது. வேலையிடத்திலும் நாம் இப்படியே தன்னடையாளப்படுத்தி தோன்ற்கிறோம். இந்த இருமுனைச் செயல்பாடு நம்மை சதா 'அம்மணமாக' உணர வைக்கிறது. எப்போதுமே கண்காணிக்கப்படுகிற நிலை. சதா யார் முன்னிலையிலாவது நிரூபிக்கும் நெருக்கடி. இதிலிருந்து தப்பிக்கும்பொருட்டே இறைவனுடனான உரையாடலுக்குத் தனிமனிதர்கள் முயல்கிறார்கள் (ஜோசியர் சொன்னதற்காகச் செய்பவர்களை நான் சொல்லவில்லை. அது நாடகம்.). விரதம், தன்னையே வருத்திக் கொள்ளுதல், அந்தரங்கமாக மண்டியிட்டு வேண்டுதல், புனித தலங்களை நாடிப் பயணித்தல் மற்றமையில்லாத ஒரு பகுதியை நோக்கிப் போகும் முயற்சிகளே. எந்திரமயமான இன்றைய உலகில் ஆன்மீகம் (அதாவது மதம்) மற்றும் கலைகள் (படைப்பாக்கம்) மட்டுமே இந்த ஒன்றுமில்லா வெளியைத் தோற்றுவிக்க அனுமதிக்கின்றன.

இந்தத் தேவை அனேகமாக எல்லாருக்குமே உள்ளது. அண்ணாமலை, விஜய் போன்றவர்களும் ரம்ஜான் அன்று மட்டும் குல்லா அணிந்து போஸ் கொடுப்பவர்களும் இத்தேவையை மற்றொரு நோக்கத்துக்காகப் பயன்படுத்தி ஒரு விளையாட்டாக்கி விடுகிறார்கள். மதத்தை அவர்கள் மீண்டும் மற்றமையாக்கல் நோக்கிக் கொண்டு வருகிறார்கள். தம்மை வழிபடுபவராகக் காட்டி பக்திக்கு நேரெதிரான வேலையைச் செய்கிறார்கள்.
விஜய்யின் காணொளியில் கூடவே ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் நடந்து வருவது சுவாரஸ்யமானது - அவர் இறைவனிடம் தன் மற்றமையை இழக்கும் பக்தரிடம் 'நீ என் கண்காணிப்பில்தான் இருக்கிறாய், உன்னை நான் 'பார்த்து' மதிப்பிடுகிறேன், அந்த அதிகாரத்தை எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான்' எனக் கோருகிறவர்கள். இந்து மதமெனில் அங்கு இத்தகைய புகைப்படங்களிலும் காணொளிகளிலும் ஒரு அந்தணரும் கூட இருப்பார். இவர்கள் இருவருமே மனிதரை மீண்டும் அதிகார விளையாட்டுக்குள் மீட்டுக் கொணர்ந்து கட்டுப்படுத்துவோர். ஒரு வித்தியாசம், கிறிஸ்துவத்தில் சுயத்தைக் கடந்து போகும் நபரிடம் உன்னை இங்கே வைப்பதற்கான உரிமையை, அதிகாரத்தை நான் நீ அப்படிச் செய்யும் செயலை அங்கீகரிப்பதன் வழியாகப் பெறுகிறேன் எனக் கோருபவர்கள் பாதிரியார்கள், இந்து மதத்திலோ உன் தரிசனத்திற்கு வழிகாட்டுபவன் நான் எனக் கோருபவரே பூசாரி என்பது. ஒருவர் அங்கீகரிப்பவர், மற்றவர் வழிகாட்டி.

நோலனின் "இன்செப்ஷன்" திரைப்படத்தில் நாயகன் ஒரு சிறிய பம்பரத்தை (சின்னம்) தான் புலனுலகில்தான் இருக்கிறேன், தான் தன் கனவில் இல்லை என நினைவுபடுத்தப் பயன்படுத்துவான். இந்தப் பூசாரிகள் அத்தகைய பம்பரங்களாகவே நம்மிடையே தோன்றியிருக்க வேண்டும். போகப்போக அவர்கள் அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும் செல்வாக்கு செலுத்துபவராக மாறிப் போனார்கள். விஜய் மண்டியிட்டு நகர்ந்து போகும்போது ஒருவித அரசியல் பம்பரமாக அக்கத்தோலிக்கச் சாமியார் தோன்றுகிறார். அக்காட்சிக்கு ஒரு அரசியல் பரிமாணத்தை அவரே அளிக்கிறார். ஒருவர் குழந்தையைப் போல தவழ்ந்து தவழ்ந்து 'இறைவனிடம்' போக அவரை இன்னொருவர் கூடவே நடந்து வழிகாட்டி அழைத்துச் செல்கிறார். இவ்வளவு குறியீட்டுத்தனமான அரசியல் நாடகத்தை நீங்கள் 'அரசியலும்' பார்க்க முடியாது.

இப்படி இது அந்தரங்கமாகவும் அரசியலாகவும் ஒரே சமயத்தில் மாறுவதால் இதை அரசியல் என்று மட்டுமே பகுத்தறிவு சார்ந்து விமர்சிக்க இயலாது. காட்சிப்படுத்தப்படுவதால் இது அந்தரங்கமான செயலாகவும் இருப்பதில்லை. இரு தளங்களிலும் பொருளற்று ஒரு அறைக்குள் அமைக்கப்பட்ட ஜன்னலைப் போலாகிறது. கதவைத் திறந்தால் அடுத்த அறையே தெரியும். அங்கிருந்து பார்த்தால் இந்த அறை தெரியும். எதையொன்றையும் குறிப்பிட இயலாத ஒரு வெற்றுக்குறிப்பானாக இது மாறுகிறது.விஜய் மண்டியிட்டு போய்க்கொண்டே இருக்கிறார். அவர் அதன் முடிவில் தான் மண்டியிட்டு நடப்பதை மட்டுமே காண்கிறார். இப்படி இது ஒரு இன்செப்ஷன் காட்சியாகி விடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...