முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்வி ஒரு மோசடியா?




இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழிலில் பணியாற்றுவோரின் சதவீதம் 11.5%ஆகக் குறைந்துள்ளது. அதாவது மேற்சொன்ன பணிகளில் வாய்ப்பு குறைந்ததும் அதுவரை பயன்பற்றதாகக் கருதப்பட்ட விவசாயத்தை நோக்கி இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது வளர்ச்சியற்ற மாநிலங்களின் நிலையாக இருந்தாலும் இதிலுள்ள அவலம் கவனிக்கத்தக்கது. இவர்கள் கல்வியை நம்பி வறுமையில் இருந்து தப்பிக்கலாம் எனக் களம் இறங்கியவர்கள். உற்பத்தித் தொழிலில் அதிக வேலை வாய்ப்புள்ளதால் விவசாயத் தொழிலுக்கு ஆள் கிடைக்காமல் அங்கு ஊதியம் பெருகும் எனும் நம்பிக்கை பொய்த்துள்ளது, தலைகீழாகி உள்ளது என இவர்கள் இருவரும் தெரிவிக்கின்றனர்.
மத்திய வர்க்கத்தின் மீது இதனால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைப் பற்றி பி.பி.ஸி கட்டுரை ஒன்று பேசுகிறது.
// The unemployment rate for graduates stands at 29.1%, nine times higher than for those who never attended school. Education, the defining aspiration of the Indian middle class, has stopped delivering on its promise.//

இந்தியாவில் மத்திய வர்க்கத்தினர் 450 மில்லியன். பட்டதாரிகள் 140 மில்லியன். UDISE+ புள்ளிவிபரப்படி 25.58 கோடி பேர்கள் பள்ளிக் கல்வியை முடிக்கிறார்கள். இதெல்லாம் ஒரு சிறிய எண்ணிக்கை என நான் நினைக்கவில்லை. இவர்கள் பெருமைக்காகப் படிப்பதாகவும் நான் நம்பவில்லை. படித்தால் வேலை கிடைக்கும் என உத்தரவாதம் உள்ளதாலே படிக்கிறார்கள். 9 ஆண்டுகளுக்குப் பழைய தரவுப்படி இந்தியாவில் உள்ள வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 45 மில்லியன். இதுவும் கூட அரசிடம் உதவி நாடுகிற வேலையில்லாதோரின் எண்ணிக்கைதான். அசல் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் என நினைக்கிறேன்.

யோசித்துப் பார்த்தால் இதில் ஒரு பெரிய அநீதி உள்ளது. நாம் கல்வியை அறிவு விருத்தியாக, திறன் மேம்பாடாகப் பார்க்கிறோம். லட்சியவாத தொனியில் கல்வியைக் கொண்டாடுகிறோம். ஆனால் தனியார் கல்வியின் கட்டணங்களைப் பற்றி நாம் எந்த விவாதத்திலும் பேச விரும்புவதில்லை. கல்வி ஒரு சேவையாக வழங்கப்படுவதாகப் பாவிக்கிறோம். இது உண்மையல்ல. வாழ்நாளுக்கான ஒரு முதலீடாகக் கருதியே பெற்றோர் இன்று லட்சங்களில் இருந்து கோடிகள் வரைச் செலவிடுகிறார்கள். வேலை கிடைக்கவில்லை, கிடைத்த வேலையிலும் ஊதியமாக அவர்களால் தம் முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியவில்லை எனில் அது ஒருவித 'மோசடிதான்'. அரசு ஒன்று தனியார் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் அல்லது நல்ல மதிப்பெண் பெற்றும் சரியான சம்பளம் பெற முடியாதோருக்கு அரசு தற்காலிக ஊதியம் வழங்க வேண்டும். நல்ல வேலைக்கான உத்தரவாதம் இல்லாதப்ட்சத்தில் யாரும் இவ்வளவு பணத்தை முதலீடு செய்யப் போவதில்லை. பணம் மட்டுமல்ல கடும் உழைப்பு, தகுதித் தேர்வுகளில் வெல்வதற்கான இடையறாத முயற்சிகள், போராட்டம் இவையெல்லாம் வெறும் சூதாட்டமாக மாறுகின்றன. எதிர்காலத்தில் செய்யறிவின் விளைவால் இன்னும் பல லட்சம் பேர்களுக்கு வேலையில்லாம போகும் எனச் சொல்லப்படுவதைப் பார்த்தால் கவலை அதிகரிக்கிறது. வாழ்க்கைப் பாட்டுக்கான செலவு, பண வீக்கம், வரிகள் மட்டும் அதிகரிக்கின்றன, வேலைகள் குறைகின்றன எனில் அரசு அங்கு குறுக்கிட்டு எதையாவது செய்ய வேண்டும். பெருவணிகர்களின் ஒப்பந்தங்களில் மட்டும் அக்கறை காட்டினால் போதாது. குறைந்தது வேலையில் தன்னியமாக்கலையாவது (automation) கட்டுப்படுத்த வேண்டும். இதனால் மட்டுமே பல லட்சம் பேர்கள் வேலை இழப்பதாக, பெரும்பாலான பி.பி.ஓக்கள் மூடப்படுவதாகச் சொல்கிறார்கள்.

எனக்கு ஒரு கேள்வி உள்ளது - சரியான வேலைகள் இல்லாதபட்சத்தில் மக்கள் தம் பிள்ளைகளுக்குச் செய்யும் கல்விச் செலவைச் சேர்த்து வைத்து ஏன் ஒரு தொழிலில் முதலீடு செய்து அதில் பயிற்சி எடுக்கக் கோரக் கூடாது? அவர்கள் பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வியில் பெறலாம். அப்போது அவர்கள் செய்த லட்சக்கணக்கான முதலீட்டில் ஒன்று லாபம் பெற்றிருப்பார்கள் அல்லது அனுபவத்தை அடைந்திருப்பார்கள். எப்படியும் லாபம்தான். 15,000 ரூபாய்க்கு சேல்ஸ்மேனாக இருப்பதற்கு ஒரு பட்டதாரி பானிபூரி விற்றோ உணவுக் கடை நடத்தியோ வேறு பல தொழில்கள் செய்தோ அதைவிட ஐந்து மடங்கு சம்பாதிக்கலாம். முதலீடு இன்மையும் கடனும் தொழில் அனுபவமும் அறிவும் இல்லாததுமே மக்களை பயமுறுத்துகிறது. அதே நேரம், மாதச் சம்பளம் கிடைக்கும் வேலை நிச்சயமானது எனும் நிலை தலைகீழாகி விட்டது. தினம் தினம் பயத்துடனே கணிசமானோர் வேலைக்குப் போகிறார்கள். அனுபவமின்மை இன்று நட்டமல்ல. அனுபவம் உள்ளவர்களுக்கு மதிப்பும் இல்லை. இன்றைய பட்டதாரி வேலைகளில் வளர்ச்சியும் இருப்பதில்லை, இன்றுள்ள வேலை நாளை இருக்குமா எனும் நிச்சயமின்மை இருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு ஐ.டி ஊழியருக்கு வேலை போனது. அவர் பெங்களூரில் இருந்து கேரளாவுக்குச் சென்றார். அங்கிருந்தே திரும்பவும் பல வேலைகள் தேடி அலைந்தார். அந்த இடைவேளையில் அவர் வாடகைக் கார் ஓட்டி சம்பாதித்தார். புது வேலை கிடைக்கும்வரை இந்த ஊதியம் அவருக்கு உதவியது. இன்னொருவர் காபி தயாரிக்கும் எந்திரத்தை விற்கும் பணியில் இருந்தவர். அவரிடம் சொந்தமாக சிறிது பணம் இருந்தது. அதை வைத்து ஒரு காபி கடை ஆரம்பிக்க முயன்றார். அவரது மனைவி சைனாவில் இருந்தார். அவரிடம் ஓரளவுக்கு முதலீடு இருந்தது. லாக்டவுனால் சைனாவில் இருந்து அவரால் அப்போது வெளியேற முடியாத நிலை. அவர் அங்கேயே ஒரு காபி கடையை நடத்தினார். அது வெற்றியும் பெற்றது. இப்போது ஆறு கடைகள் அங்கு நடக்கின்றன. மைசூரில் மினிமலிஸ்ட் காபி என ஒரு மிகச்சிறிய கடையும் உள்ளது. அவர் சேல்ஸ்மேனாக மட்டும் இருந்திருந்தால் வேலை, அழுத்தம், பணவீக்கம், பதற்றம் என முன்னேற்றம் இன்றி இருக்க வேண்டியதுதான்.
இப்படிப் பலர் இன்று இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இளைஞர்களை இப்படித்தான் மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பட்டதாரிகள் சந்தைக்கு வேலையைத் தேடி வருவது ஆரோக்கியமான சூழல் அல்ல. அவர்களில் கால்வாசி பேர்களாவது சொந்தமாக ஒரு தொழிலை உருவாக்கவோ தற்சார்பாக இருக்கவோ முடிய வேண்டும். அல்லது கல்வி இலவசமாகவோ குறைந்த செலவானதாகவோ இருக்க வேண்டும். கல்விச் செலவுக்கும் வேலைக்குமான / ஊதியத்துக்குமான பொருத்தம் எதிர்விகிதச் சமமாக இருக்கலாகாது. குறைவாகக் கல்வியில் செலவிட்டு அதிகமாக ஊதியத்தில் பெருக்க வேண்டும். மாறாக, அதிகமாகக் கல்வியில் செலவிட்டு அதில் பாதியைக் கூட வேலையில் பெற முடியாமல் போகக் கூடாது.

கல்வி நிறுவனங்களைக் கேள்வி கேட்டால் நம்மூரில் உடனே சிலர் "அப்படின்னா யாருமே படிக்க வேணாம்னு சொல்றீங்களா? நீங்க மட்டும் ஏன் படிச்சீங்க?" என பயங்கரமாகக் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்காக இது: கல்வியைக் கைவிட நான் கோரவில்லை. தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கும், தொழிற்துறைக்கும் அரசுக்கும் இதில் ஒரு பொறுப்பு உள்ளது. அவர்கள் மக்களைக் கைகழுவி விடுவதை வேடிக்கைப் பார்க்கக் கூடாது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...