விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்




நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம், அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன். அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார், அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள். போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர். அவர் இடதையும், இடது-மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார். இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும்.


ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது. அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள். எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார். இந்த காலகட்டம் முக்கியமானது. முதன்முதலாக சமத்துவம், சுதந்திரம், தாராளமயம் கொடிகட்டிப் பறந்தது. அனைவருக்கும் வாக்குரிமை, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அதேவேளையில், தொடர்ச்சியாக நடந்த கலவரங்களைக் கணக்கிற் கொண்டு மிதமிஞ்சிய அதிகாரத்தை (அவசர நிலை) ஜனாதிபதிக்கு வழங்கும் சட்டப்பிரிவு 48-உம் இருந்தது. 1922-23 காலத்தில் கடும் நிதி நெருக்கடிக்கு ஆட்பட்ட ஜெர்மனிய சமூகத்தை பிரதமர் (சான்செலர்) ஸ்டெரெஸ்மான் தன் நிதிக் கொள்கைகளால், சீர்திருத்தங்களால் தற்காலிகமாக மீட்டார். ஆனால் 1929இல் தோன்றிய மாபெரும் பொருளாதார அழுத்தம் (Great Depression) காரணமாக ஜெர்மனியிலும் வேலையில்லா திண்டாட்டம் தீவிரமானது, மக்கள் உணவுக்காக அலையும் நிலை ஏற்பட்டது. பிற நாடுகளில் நடப்பதைப் போல பொருளாதார நிலைகுலைவு  ஜெர்மனியிலும் வலதுசாரி அரசியலில் எழுச்சிக்கு வித்திட்டது. மக்கள் தெருவுக்கு வந்து கலகம் பண்ணும் நிலை. அப்போது ஜெர்மனியில் மூன்று முக்கியமான கட்சிகள் இருந்தன. ஒன்று ஜெர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி (KPD), அடுத்தது சமூக மக்களாட்சிக் கட்சி (SPD), கடைசியாக ஹிட்லரின் தேசிய சோஷலிஸ ஜெர்மனானிய தொழிலாளர் கட்சி (NSDAP). ஹிட்லரின் கட்சி 1928இல் நடந்த தேர்தலில் 2.7% வாக்குகளையே பெற்றது. ஆனால் 1929இல் வால் ஸ்டீரில் நிலைகுலைந்து நிலைமை படுமோசமானபோது ஹிட்லரின் கட்சி வளர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாயின. ஹிட்லரின் கருத்துப் படங்கள், புகைப்படங்கள், துண்டறிக்கைகளைப் பயன்படுத்தியும், நேரடியாக இடதுசாரிகள் மீது தாக்குதல் நடத்தியும் மக்களைக் கவர்ந்திழுத்தனர். எளிய நேரடி எதிரிகளைக் கண்டடைந்து பொருளாதார தோல்வியியின், மக்களின் வறுமையின் இலக்காக அவர்களை மாற்றியதும், தேசியவாதத்தையும் தூண்டி மக்களுக்கு ஒருவித நம்பிக்கை கொடுத்ததுமே ஹிட்லருக்குப் பயனளித்தது. கூடுதலாக, அப்போதைய முதலீட்டாளர்களின் ஒரு பகுதியினர் ஒரு தீவிர வலதுசாரி கட்சி ஆட்சிக்கு வந்தால் தம்மால் சந்தையை நிலைப்படுத்தி கைப்பற்ற முடியும் என நம்பினர். ஹிட்லர் தன்னுடைய தீவிரவாதத்துக்காக கைதாகி சிறைசென்ற போது அங்கு அவருக்கு கிடைத்த ராஜமரியாதையும் அவர் விரைவில் விடுவிக்கப்பட்டதும் இந்த முதலீட்டாளர்களின் ஆதரவினால்தான் (விஜய்க்கும் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களில் இருந்து வேதாந்தா, ஶ்ரீதர் வேம்பு போன்ற முதலீட்டாளர்களின் மறைமுக, நேரடி ஆதரவு உள்ளதை கவனியுங்கள். அவரும் இவர்களாலே பின்னிருந்து செலுத்தப்படுகிறார்.). வெளியே வந்தவர் தனக்கு அளிக்கப்பட்டு பணியை மேலும் சிறப்பாகச் செய்து மக்கள் மத்தியில் NSDAP பிரபலமாக்கினார். அடுத்து 1932 தேர்தல். அதில் NSDAP தனிப்பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணி ஆட்சி அமைத்தது. 1933இல் முதலீட்டாளர்களின் அழுத்தத்தினால் ஹிட்லர் பிரதமராக்கப்படும்போது அவரைச் சுலபத்தில் கட்டுப்படுத்தலாம் என்றே நம்பினர். சுவாரஸ்யமாக, அப்போது சமூக மக்களாட்சி கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியுமே கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். சமூக மக்களாட்சி தத்துவமானது இடதுசாரித்தன்மை கொண்டது என்றாலும் அது மையவாதக் கட்சி என்றும், மக்களை ஏமாற்றி முதலாளிகளுக்கு அடிமையாக்கும் பண்பு கொண்டது என்றும், அக்கட்சியினர் துரோகிகள் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருதினர். ஆகையால் கம்யூனிஸ்டுகளுக்கு எஸ்.பி.டியே முதன்மை எதிரியானார்கள். இவர்கள் இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டபோது ஹிட்லர் வளர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். அப்போதும் கம்யூனிஸ்டுகள் அவரை ஒரு ஆபத்தாகக் காணவில்லை. அவரது ஆட்சியில் மக்கள் வெறுப்படையும்போது வலதுசாரி தேசியவாத அரசியல் மீது மக்களுக்கு அவநம்பிக்கையும் சோர்வும் ஏற்படும் என்றும் தொழிலாளர் புரட்சிக்கு அப்போது காலம் கனிந்து விடும் என்றும், ஹிட்லர் தன் கொடுமையான ஆட்சியால் தமக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவார் என்றும் கம்யூனிஸ்டுகள் நம்பினார்கள். எஸ்.பி.டியினரோ (நமது இடதுசாரிகள், விசிக, காங்கிரஸைப் போல) அவரைச் சுலபத்தில் நெறிப்படுத்தலாம் என்றும், அவர் தம் பேச்சை மீறிச் செல்ல மட்டார் என்றும் முழுமூச்சாக நம்பினர். இருவரும் நம்பிக்கையையும் பொய்ப்பித்து ஹிட்லர் ஒரே ஆண்டில் சர்வாதிகாரியானார். கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டினார். எஸ்.பி.டியை முடக்கினார்.


ஆட்சி அமைந்த புதிதில் கூட்டணிக் கட்சியின் நெருக்கடியால் விஜய் தன் தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவதும், திருத்துவதும் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அவர்கள் விஜய்யை சரியாக வழிநடத்தி மக்களுக்கு நல்லாட்சி வழங்க வைக்க முடியும் என நம்புகிறார்கள். ஆனால் அது நல்லாட்சி வழங்கவும் நிர்வாகம் செய்யவும் உத்தேசிக்கும் மக்களாட்சி தலைவர்களுக்கே சரியாக வரும். அவரது இதுவரையிலான வாழ்க்கையையும், தேர்தல் கால நடவடிக்கைகளையும் ஆட்சிப் பொறுப்பேற்ற போதான நடத்தையையும் பார்க்கையில் விஜய் அடிப்படையில் ஒரு பாசிஸ்ட் என்பது தெளிவாகிறது. அவர் அதிகாரத்தைக் குவிக்கும் நோக்கில் மட்டுமே செயல்படக் கூடியவர். இவர்களுடைய தயவு அவருக்குத் தேவையில்லாத நாள் வரும்போது அவர் முற்றிலும் மற்றொருவராக மாறியிருப்பார். இவர்கள் அவரைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தவில்லை, அவரே இவர்களை பலிபீடம் நோக்கி நகர்த்திச் சென்றிருக்கிறார் என்று அவர்கள் அன்று உணர்வர்


விஜய்க்கும் ஹிட்லருக்குமான முக்கியமான வித்தியாசம் ஹிட்லரைப் போல் அல்லாது அவருக்கு எந்த தீவிர இனவாத, தேசியவாத கொள்கையும் இல்லை என்பதுதான். அவர் தனது நார்சிஸத் தன்மை கொண்ட ஆளுமையையும் காட்சி ஊடக வலிமையையும் கொண்டு மக்களாட்சிப் பண்புகளை ஒழித்து தேசியவாத முதலீட்டிய சக்திகளை இங்கு காலூன்றி ஆட்சி செய்ய வழிவகை செய்வார். உள்ளூர் முதலீட்டிய சக்திகள் தம்மிடத்தை இழக்கும். அவர் அதற்காக தமிழ் தேசியம், பெரியார், நலத்திட்ட அரசியல், காமராஜர், வேலுநாச்சியார் என அனைவரையும் இழுத்துக் கொண்டு வருவார். திராவிடக் கட்சிகளுக்கும் தவெகவுக்கும் இவ்விதத்தில் நாம் காணப் போகிற முக்கிய வித்தியாசம் எந்த உரையாடலுக்கும் பின்னதில் இடமிருக்காது, முதல்வரின் ஒற்றைச் சொல்லுக்கு மொத்த மாநிலமும் அடங்கி வரிசை கட்டி நிற்கும் என்பதே. இப்போதைக்கு அவர் மைனாரிட்டி ஆட்சியை நடத்துகிறார். ஆனால் அவர் இந்த ஐந்தாண்டுகளுடன் நின்று கொள்ளப் போவதில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் பெரும்பான்மையுடன் வெல்லத்தான் போகிறார். அதன்பிறகு அவர் எந்த சிறு கூட்டணிக் கட்சிகளின் பேச்சுக்கும் தலைசாய்க்கத் தேவையிராது. அவர் தன் ஆதரவாளர்களிடம் "பொறுமையாக இருங்க நண்பா" என்று சொல்வதை கவனியுங்கள். எந்த மக்களாட்சி தலைவரும் பொறுமையைக் கோர மாட்டார். அவர் தன் முன் உள்ள சாத்தியங்களைப் பரிசீலித்து சமரசங்களுக்கு உட்பட்டு முடிவுகளை எடுப்பார். அவர் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்ல மாட்டார். திராவிடம் இல்லாத தமிழ்நாடு, காங்கிரஸ் இல்லாத இந்தியா, எதிர்ப்பே இல்லாத முழு அதிகாரம் என்றெல்லாம் மக்களாட்சியில் நம்பிக்கையுள்ளோர் சிந்திக்க மாட்டார்கள். விஜய் சிந்திப்பார். அவர் இப்போது தோழமைக் கட்சியினரைக் கேட்டு இணங்கிப் போகவில்லை. சகித்துப் போகிறார். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு


பாசிஸ்டுகளின் நோக்கம் ஆட்சி செய்வதோ சம்பாதிப்பதோ அல்ல. அவர்கள் தம்மை செல்வத்துக்கும் பதவிக்கும் அப்பாலானவர்களாகவே காட்டிக் கொள்வர். அவர்களுடைய பிரதான நோக்கம் கட்டற்ற அதிகாரப் பெருக்கமே. அதிகாரம் ஒற்றைப் புள்ளியில் குவிவதும் அதை நிலைப்படுத்துவதுமே அவர்களுடைய இலக்கு. அதற்காகக் காத்திருந்து தந்திரமாகச் செயல்படுவதே அவர்களுடைய போக்கு. பாசிஸ்டுகளும் பேச்சு மூச்சு செயல் எல்லாமே அதிகாரம்தான். ஆகையால் அவர்கள் அதை நோக்கி இரவு பகலாக உழைப்பவர்களாக இருப்பார்கள். இனிவரும் நாட்களில் நாம் விஜய்யின் கடும் உழைப்பு, கறார்தன்மை, தூய்மை, நேர்மை குறித்து அவரது கட்சியினரும் அவர் விலைக்கு வாங்கிய ஊடகங்களும் கொண்டு தரும் பலசெய்திகளைக்கேள்விப்படுவோம். அதிகாரத்தை நம்மை வழிபட வைப்பதற்கான முயற்சி இது. அவர் அதிகாரத்துக்காக தன்னை அர்ப்பணிக்கிறார் பாருங்கள் என்றே செய்தி நமக்குச் சொல்லுங்கள். அப்போது ஏற்படும் பிரமிப்பும்பயமும்நம்மை அதற்காக தயார்படுத்தும். வேலையிடத்திலும் வெளியிலும் நாம் தீவிரமான உழைப்பை, மும்முரத்தை நோக்கி அஞ்சத் தொடங்குவோம். இந்த பின்நவீனத்துவ யுகத்தில் இது கேளிக்கையாகவும் இருக்கும். முழுநேரமும் திரண்டு தலைவருக்காக கத்திக் கொண்டே இருப்பது, சமூக ஊடக உள்ளடக்கத்தை உற்பத்தி செய்துகொண்டே இருப்பது, வேலையிடத்தில் கேள்வியின்றி பணிவது என இது மாற்றியமைக்கப்படும். இப்போக்கு மிக நுட்பமாக நம் கண்ணுக்கே தெரியாமல் செயல்படும். ஒரு பக்கம் அரசைக் கண்டு நாம் கொள்ளும் அச்சம், இன்னொரு பக்கம் வேலையிடங்களில் நிர்வாகத்தின் பால் வரும் அச்சம், பாதுகாப்பின்மை, கண்காணிப்பு இவை இயல்பாக்கம் செய்யப்படும்


விஜய் தன் ஆட்சியின் தவறால் தானே படுகுழியைத் தோண்டிக் கொள்வார் என்பதும் தவறான பார்வையே. வரலாறு நேர்மாறாகவே சொல்கிறது. அடுத்த சில தேர்தல்களிலும் அவர் பெரும் வெற்றியை ஈட்டப் போகிறார். பாசிசத் தலைவர்கள் அவர்களைத் தோற்றுவித்த சூழல் மாறுவரை வெற்றிபெற்றுக் கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய வெற்றிக்கும் எதிர்க்கட்சியின் தோல்விக்கும் சம்மந்தமில்லை. அவர்கள் மக்களாட்சி கட்டமைக்குள் போட்டியிட்டாலும் அதற்குள் 'செயல்படுவதில்லை'. அவர்களை உருவாக்கிய சூழலும் 'எதிர்க்கட்சியே இல்லாத முற்றதிகாரத்தையே' முன்வைக்கும். அதை நோக்கியே சமூகத்தை, சமூக உளவியலைச் செலுத்தும். விஜய் அதன் முகம் மட்டுமே


விஜய்யை வீழ்த்த அவரது கட்சியின் கோளாறுகளை அம்பலப்படுத்தினால் போதாது. ஏனென்றால் நிர்வாகத்துக்காக அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அந்த உத்தேசம் முழுமையாக இல்லை.அவரை வேறொரு சமூக இச்சையே இங்கு கொண்டு வந்துள்ளது. அவரது குற்றங்களைக் கண்டு சிலர் கொதிப்படைவர். அதாவது அவருக்கு இதுவரை வாக்களிக்காதவர்கள். ஆனால் ஒரு பகுதி வாக்காளர்கள் அவரை இன்னும் தீவிரமாக ஆதரிக்கவே செய்வர். அவர்கள் விஜய்யுடன் தம்மை அடையாளப்படுத்த தொடங்கி விட்டார்கள். பாசிஸம் என்பது தலைமை அல்ல, அது ஒரு சமூகப் போக்கு. விஜய்யை முறியடிக்க இச்சமூகச் சூழலை மாற்ற வேண்டும்.

Comments