முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

 Suryavanshi, 14, dubbed 'next superstar' after batting records tumble\\

ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான மட்டையாளராக அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட 'சிந்தனையாளராகத்' தோன்றுகிறார்.


சிந்தனை என்பது அகவயமானது மட்டுமல்ல, நாம் நமது காலத்திலும் வெளியிலும் நம் உடலைக் கொண்டு புறவயமாகவும் சிந்திக்கிறோம். கிரிக்கெட்டில் ஒருவர் முதல் பந்தை விடும்போதோ ஒற்றை ஓட்டத்துக்குத் தட்டிவிட்டு ஓடும்போதோ அல்லது டி20யில் குறிப்பாக நான்கு ஓட்டங்களுக்கு முயலும்போதோ அவர் அங்கு 'சிந்திக்கவே' செய்கிறார். முன்கூறாகத் திட்டமிட்டுச் செயல்படுத்த முயலும் சிந்தனை, போராடும் சிந்தனை, தற்காப்புச் சிந்தனை என. சூர்யவன்ஷி இவர்களிடையே பந்தை எதிர்கொண்டு முறியடிக்கிற நேரடியான எளிமையான இயல்பான சிந்தனையை நமக்குச் சித்தரிக்கிறார். அதனால்தான் ஒவ்வொரு கணமும் திகைப்பாக இருக்கிறது.

பிராட்மேன் இப்படி ஆடுகிறவர் என்று சொல்வார்கள். டெஸ்டில் பிரையன் லாரா. அவருக்குப் பிறகு 50 ஓவர் போட்டி வடிவில்
இலங்கையின் சனத் ஜெயசூர்யா. எதிரணி முக்கி முனகி 50 ஓவர்களில் 240-260 அடித்திருப்பார்கள். ஜெயசூர்யா 20 ஓவர்கள் ஆடினால் அந்த ஸ்கோரில் 90% எடுத்து விடுவார். அவர் அந்த ஸ்கோருக்காக அடிக்க மாட்டார்; அவர் சுதந்திரமாக ஒவ்வொரு பந்தையும் அதன் இடத்துக்கு (மைதானத்துக்கு வெளியே) அனுப்ப முயல்வார். அதிலுள்ள இன்பத்தை வெளிப்படுத்துவார். அது வன்முறை அல்ல, தன்னை உணர்தல். ஒரு போட்டியின் எதிர்பார்ப்புகளுக்கு வெளியே ஆட்டத்தை கொண்டு செல்லுதல். அதன்பிறகு கில்கிறிஸ்டும் சேவாகும் வந்தார்கள். அண்மையில் டெஸ்ட் ஆட்டத்தில் ரிஷப் பண்ட். இப்போது அவர்களின் வரிசையில் சூர்யவன்ஷி. எனக்கு சூர்யவன்ஷியின் ஆட்டத் தத்துவம் சேவாக்குடன் வெகுகாக நெருக்கமானது எனத் தோன்றுகிறது.

கங்குலி ஒருமுறை சேவாகைப் பற்றி ஒரு நேர்முகத்தில் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். சேவாக் அவுட் ஆகிவிட்டு டக் அவுட்டில் அமர்ந்திருக்கிறார். அவரது சக மட்டையாளர்கள் ஆடுவதைப் பார்க்கிறார். ஒரு சிறப்பான பந்தை டிராவிட் அழகாக கணித்து விடுகிறார். மற்றொரு நல்ல் பந்தை லஷ்மண் தட்டிவிட்டு ஒற்றை ஓட்டமெடுக்கிறார். சேவாக் மட்டையாளர்களின் ஒவ்வொரு விடுதலுக்கும் ஒற்றை ஓட்டத்துக்கும் 'அதோ ஒரு பவுண்டரி மிஸ் ஆகிருச்சு, அட அது ஒரு சிக்ஸர், வீணாக்கி விட்டார்களே' என்று வர்ணித்துக் கொண்டு போகிறார். ரொம்ப சிரியஸாகத்தான் இதையெல்லாம் சொல்கிறார். கேலி இல்லை. அவருக்கு பல நல்ல வாய்பப்புகளைத் தன் சகவீரர்கள் பறிகொடுப்பதாகத் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் இதைக் கேட்டுப் பொறுக்க முடியாத அவரது அணித்தலைவர் கங்குலி "வீரு, அவர்கள் தம் ஆட்டத்தை ஆடட்டும், நீ உன் வாய்ப்பு வரும்போது உன் ஆட்டத்தை ஆடு" என்கிறார். சேவாக் வாயை மூடுகிறார்.
சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் அவருக்கு நல்ல நீளத்தில் (டெஸ்ட் ஆட்ட பந்து வீச்சுக்கான நீளம்) விழும் பந்தை எப்படி விடுவது, தடுத்தாடுவது எனப் பயிற்சி கொடுக்கிறார். ஆனால் சூர்யவன்ஷியோ பயிற்சியாளர் பார்க்காதபோது அதே பந்துகளை சிக்ஸர் அடிக்கிறார். பயிற்சியாளர் அவரைத் தனியே அழைத்து விசாரிக்கிறார். அப்போது அவர் எளிதில் அடிக்க முடிகிற பந்துகளை ஏன் தடுத்தாட வேண்டும் எனக் கேட்கிறார். இது திறமை மட்டுமல்ல ஆட்டத்தின் மீதான அணுகுமுறையும்தான்.
ஏப்ரல் 10 (2026) அன்று ஐ.பி.எல்லில் பெங்களூருக்கு எதிரான அவரது அரைசதத்தை (26 பந்துகளில் 78) எடுத்துக் கொள்வோம். அவர் அதில் வெளியேறுவதற்கான இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அதிர்ஷ்டத்தால் தப்பித்தார். ஆனால் அவருக்கு அது பொருட்டல்ல. அதைத் தன் துணிச்சலுக்கு கொடுக்கும் விலையென அவர் கருதுவதில்லை என நினைக்கிறேன் - அவருக்கு அவை சின்னச்சின்ன பிறழ்வுகள், அவற்றால் வெளியேறும் நிலை ஏற்பட்டால் அடுத்த போட்டியில் அதே பந்துகளை இன்னும் நன்றாக, நேர்த்தியாக சிக்ஸர் அடிக்க முயல்வார். அவ்வளவுதான். வேறு எல்லா சாத்தியங்களையும் கேள்விகளையும் அவர் உதறிவிடுகிறார், குத்துச்சண்டையில் எதிராளியின் முஷ்டியும் முகமும் மட்டுமே சண்டையிடும் வீரருக்குத் தெரிவதைப் போல அவருக்கு தான் அடிப்பதற்கான பந்து மட்டுமே தெரிகிறது. இந்த தெளிவு, எளிமைதான் நமக்கு கிரிக்கெட்டையும் வாழ்க்கையும் வேறுவிதமாகச் சிந்திக்கக் கற்றுத் தருகிறது. ஒரு கவிஞன் தன் சொற்களைத் தன்னில் இருந்து பாய அனுமதிப்பதைப் போல, எந்தக் கட்டுப்பாடும் இன்றி இரு நண்பர்கள் சம்பாஷிப்பதைப் போல, ஒரு பழத்தை எடுத்து ஒருவர் மகிழ்ச்சியாக கடித்து சாற்றை உறிஞ்சுவதைப் போல.

அவர் அடிக்க அடிக்க இப்படியெல்லாம் வாழ முடியாதா என்றே தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.