முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)


Image result for மிஷ்கின்

ஏன் தமிழ் சினிமாவில் மட்டும் இத்தனை இயக்குநர்கள் நடிகர்களாக மலர்கிறார்கள் என ஒரு நண்பர் அரட்டைக்கு இடையே கேட்டார். ஆம், உண்மை தான்.
ஹாலிவுட்டில் மெல் கிப்சன், கிளிண்ட் ஈஸ்ட்வுட், சார்லி சாப்ளின், ஆகியோர் உடனடியாய் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் தமிழுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையும் குறைவே. மேலும் தமிழில் கடந்த முப்பதாண்டுகளாக இந்த போக்கு வளர்ந்து கொண்டே போகிறது. இடைநிலை மற்றும் குணச்சித்திர நடிகர்கள் நாயகனாக உருமாறுவதும் இயக்குநர்கள் விசயத்திலே அதிகம் நடக்கிறது. அதாவது, ஒரு ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், வசனகர்த்தா, லைட் மேன், கலை இயக்குநர், படப்பிடிப்பு மேலாளர், மேக் அப் கலைஞர் நாயகன் ஆவது சிரமம்; அவர்களாக விரும்பி முன்வந்தாலும் மக்கள் ஏற்பது அரிதே. ஒரு படத்தின் கதைகூறலுடன் மிக நெருக்கமாய் இருப்பவர்கள், கதைசொல்லியின் குரலாக ஒலிப்பவர்கள் சுலபத்தில் நடிகராக முடிகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா போன்றோர் தாம் உச்சத்தில் இருந்த காலத்தில் பாடல் காட்சிகளிலும் தாமாகவே தோன்றியிருக்கிறார்கள். எஸ்.பி.பி நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் தோன்றி இருக்கிறார். .ஆர். ரஹ்மான், ஹரிஹரன் போன்றோர் ஆல்பம்களில் அதிகம் தோன்றி நடித்தார்கள் எனில் தற்போது அனிருத் தான் இசையமைக்கும் பாடல்களில் சில நொடிகள் நடனமாடி விட்டுப் போகிறார். ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி, ஹிப்ஹாப் தமிழா ஆதி, கெ (மிஷ்கினின் படங்களுக்கு இசையமைத்தவர்) ஆகியோர் முழுநேர நாயகர்களாக மாறி உள்ளனர். இந்தியில் கிஷோர் குமார் 86 படங்களுக்கு மேல் நடித்தவர். சமகால பாடகர்களில் ஹிமேஷ் ரேஷமையா, சோனு நிகம், லக்கி அலி ஆகியோரை இப்பட்டியலில் சேர்க்கலாம். ஏன் சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு சாத்தியமாகிறது?

ஒரு படத்தின் கதையோட்டத்தில் சில கலைஞர்கள் மட்டுமே கதைசொல்லிகளாக மக்கள் மனதில் பதிகிறார்கள்இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் (தொடர்ந்து மீடியா வழி அவர் தன்னை முன்வைத்து முகப்பரிச்சயம் பெறும் போது) போன்றோர். ஒரு படத்துடன் இவ்வாறு நேரடியாய் தொடர்புறுத்தப்படுவோர் நடிக்க வரும் போது அவர்கள் சுலபத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு ஒளியமைப்பாளர் படத்தின் மொழிக்கு, தோற்றத்துக்கு, கதையின் தாக்கத்துக்கு பிரதான பங்களிப்பவர். ஆனால் அவரை ஏனோ மக்கள் அவ்வாறு பார்ப்பதில்லை. படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் ஆகியோர் கதைசொல்லிகளாய் ஏற்கப் படுவதில்லை. எதிர்காலத்தில் ஒளியமைப்பின் மொழி குறித்த பரிச்சயம் மக்களுக்கு ஏற்படுகையில் அவரும் நாயகனாக முடியலாம்.
பாடலாசிரியர்களில் வாலியும் கண்ணதாசனும் தோன்றியிருக்கிறார்கள் / நடித்திருக்கிறார்கள். தற்போது சிநேகன் நாயக அவதாரம் எடுக்க தவிக்கிறார். அவர் பிக்பாஸில் இடம்பெற்றதையும் நாம் இவ்வாறே புரிந்து கொள்ள வேண்டும்பாடல்களை உருவாக்குகிறவர்கள் (பாடகர், கவிஞர், இசையமைப்பாளர்) மக்கள் மனதோடு சுலபத்தில் நெருங்கி விடுகிறார்கள்; ஒரு படத்தை அவர்களின்றி நம்மால் உணர்வுரீதியாய் ஏற்க முடிவதில்லை. ஆக, ”ஆட்டோகிராப்படத்தில்ஒவ்வொரு பூக்களுமேபாடல் வரும் போது அதைப் பாடுபவர், பாடி கதையை நகர்த்துகிறவர் சேரன் மட்டுமல்ல சிநேகனும் தான்.
நாயகர்களாய் உருவெடுத்து வெற்றி பெற்ற சந்தானம் மற்றும் வடிவேலு போன்றோரையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவர்களின் நகைச்சுவை டிராக் என்பது படத்தின் மைய ஓட்டத்துக்கு மாற்றாக அமையும் அல்லது இவர்கள் தொடர்ந்து படம் முழுக்க நாயகனுடன் பயணிப்பவர்களாக இருப்பர். ஒரு கட்டத்தில் இவர்கள் தாமே நாயகனாக தோன்றும் போது ஒரு மாற்று நாயகனாய் அவர்களைப் பார்ப்பது நமக்கு அதிர்ச்சியாய் இருப்பதில்லைஏற்கனவே பழக்கமான ஓன்றாய் படுகிறது.
நடன இயக்குநர்கள் தொடர்ந்து பாடல்களில் நாயகனுக்கு இணையாகவோ பின்னணியிலோ ஆடி பரிச்சயமாகிறார்கள்; ஒரு கட்டத்தில் ராஜூ சுந்தரம், பிரபுதேவாவை நாம் நாயகனுக்கு இணையாகவோ அல்லது சகபாடியாகவோ பார்க்கத் துவங்குகிறோம். நாயகனே கதையின் நடத்தி செல்கிறவன், பல படங்களில் அவன் கண்ணோட்டத்திலே கதை சொல்லப்படுகிறது. ஆக அவனோடு சமமாக சில நிமிடங்கள் வரும் ஒரு நடன இயக்குநர் கூட மெல்ல மெல்ல நாயக அந்தஸ்தை, கதைசொல்லியின் இடத்தைப் பெற்று விடுகிறார்.
இந்த நாயக அவதார தகுதித் தேர்வில் வில்லனாய் பெயர் வாங்கியவர்கள் நாயகனாவது சிரமம். ரகுவரன் நாயகனாவது சிரமம்; ஆனால் விசுவால் குணச்சித்திரமும் ஹீரோயிசமும் கலந்த ஒரு பாத்திரத்தில் நடிக்க முடியும்; படம் முழுக்க அவர் குரலே ஒலிக்கும்.
 இயக்குநர்களே தாம் இயக்கும் படங்களில் நடிக்கும் போது தான் நாயகனாக முடிகிறது என நண்பர் ஒருவர் சொன்னார். இப்படங்கள் மூலம் அவர்கள் அஜித், விஜய் போலாவதும் இல்லை; படுமசாலா படங்களை எடுப்பதும் இல்லை. தமிழின் இடைநிலை சினிமா முழுக்க இவர்களாலே தோன்றி நிலைப்பட்டுள்ளது எனலாம். பல இயக்குநர்கள் தாம் நடிகராவதற்கு சொல்லும் காரணம் முன்னணி நடிகர்கள் தமது படத்தில் நடிக்க முன்வரவில்லை என்பது. ஆனால் இது கூட எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. இதே இயக்குநர்கள் ஆரம்பத்தில் இடைநிலை நடிகர்களைக் கொண்டு படமெடுத்து வெற்றிபெற்றவர்களே. ஆக, நாயகனாவதற்கு வேறு பலன்களும் உண்டுகுறிப்பாய் முகபரிச்சயம். மிகச் சிறந்த படம் எடுத்தவர்கள் கூடடிவியில் அடிக்கடி தலைகாட்டாத பட்சத்தில்; அப்படங்கள் உச்ச நட்சத்திரங்களுடன் பெரும் வணிக வெற்றி பெறாத பட்சத்தில்மக்கள் மத்தியில் பிரபலமாவது சிரமம். ஆனால் நாயகனான ஒரே படம் ஒரு இயக்குநருக்கு அதை சாதித்து கொடுத்து விடும். இப்போது நண்பர் மற்றொரு கேள்வியை கேட்டார், “நீங்க சொல்றது சரின்னா ஏன் இது பிற இந்திய மொழிகளில் அதிகமா நடக்கல?”
நான் இதைப் பற்றி நீண்ட நேரமாய் யோசித்தேன். இயக்குநர்கள் பிரபலமடைய விரும்பாத ஊர் எங்குண்டு? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த விருப்பமுண்டே! ஏன் பிற மொழி இயக்குநர்கள் இவ்வாறு கோதாவில் இறங்கவில்லை?
இறங்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில் மலையாளம் மற்றும் இந்தியில் நடிகரான இயக்குநர்களும் இயக்குநரான நடிகர்கள் உண்டு. அப்படி புகழ் பெற்றவர்களும் உண்டு.

(தொடரும்)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hello just wanted to give you a quick heads up. The text in your content seem to be running off the screen in Ie.
I'm not sure if this is a format issue or something to do with browser compatibility but I figured I'd
post to let you know. The design and style look great though!
Hope you get the issue solved soon. Many thanks

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...