
நேன்ஸி மொரேஜோன் எனும் க்யூபக் கவிஞரின் “கறுப்பினப் பெண்” எனும் கவிதையைப் பற்றி ஒருநாள் வகுப்பில் விவாதிக்கும் போது அக்கவிஞரின் மார்க்ஸிய அரசியல் பின்னணி, மார்க்ஸியத்துக்கும் கிறித்துவத்துக்குமான தொடர்பு பற்றி குறிப்பிட்டேன். அந்த புரட்சிகர கவிதையில் சில வரிகள் விவிலியத்தின் தாக்கம் கொண்டவை என்பதை சுட்டிக் காட்டினேன். ஆனால் மாணவ, மாணவியரில் கணிசமானோருக்கு மதத்தை பற்றி விவாதிப்பதில் ஒரு அசூயை உள்ளதை கவனித்தேன். அதை ஒரு பழம் பஞ்சாங்கமாக, மரபின் சுவையாக அவர்கள் காண்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் நாத்திகர்கள் என்றோ தத்துவார்த்தமாக மதத்தை மறுப்பவர்களோ என்றில்லை. இந்த தலைமுறை சில பத்தாண்டுகளுக்கு முன்பு விடலைப் பருவத்தில் நாங்கள் இருந்ததைப் போன்றே இருக்கிறார்கள்.
மரபில் அறிந்து கொள்ள முக்கியமாக ஒன்றுமே இல்லை, வாழ்க்கை தினம் தினம் புதிதாக ஒரு மலரை பூக்க வைக்கிறது. அதை ரசிக்காமல் ஏன் வாடிப் போன பழைய மலர்களை தொகுத்து பாதுகாக்க வேண்டும் என நாங்கள் பதின்வயதினராக இருந்த போது நினைத்தோம். ஆகையால், எங்கள் வகுப்பில் பழமை மீது ஒரு விடலைத்தனமான எதிர்ப்பு எப்போதும் இருந்தது. கிறுத்துவ பாதிரியாராக பயிலும் என் நண்பர்கள் கூட ஒருவித எதிர்ப்புடனே விவிலியத்தை வாசித்தார்கள். இன்றைய தலைமுறையைப் பொறுத்தமட்டில், மரபில் அவர்கள் ஏற்பது சாதியும் குடும்பம் வழியாக அவர்கள் பெற்ற சமூக நம்பிக்கைகளையும் மட்டுமே. மற்றபடி பழைய மொழி, பழைய சினிமா, பழைய மனிதர்கள், பழைய அன்பு, பழைய வெறுப்பு எல்லாவற்றையும் அவர்கள் அலுப்புடன் எதிர்கொள்கிறார்கள்; கைகொட்டி சிரிக்கிறார்கள். இந்த விடலைத்தனமான கலக பாவனை எங்கிருந்து வருகிறது? ஏன் இருபதின் துவக்கம் வரை நாம் வேர்களை உதறி விட்டு பறக்க விரும்பும் பூஞ்செடிகளாக இருக்கிறோம்? இது என்னவித மனநிலை?
நான் இதை இவ்வாறு புரிந்து கொள்கிறேன். மானிடர்களின் அடிப்படையான விழைவு உயிருடன் இருப்பதல்ல. ஏனென்றால் உயிர்வாழ்தல் ஒரு செயல் அல்ல. அது ஒரு நீரோட்டம். அதற்கு துவக்கமோ முடிவோ உண்டென்றால் அதை வாழும் மனிதன் உணரப் போவதில்லை. வாழும் போராட்டத்தை விட காலமும் இடமும் நிர்பந்திக்கும் எல்லைகளை கடந்து போகும் போராட்டமே பெரிது. பிறந்த குழந்தை என்ன பண்ணுகிறது? அது அழுகிறது. “நான் இதுவல்ல, நான் இன்னொன்றாக, பசியை ஆற்றும் இருப்பாக, தாய்மையின் பாதுகாப்பை, அக்கறையை அறியும் இருப்பாக, என் சத்தத்தால் உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இருக்க விரும்புகிறேன்” என்பதே அந்த அழுகையின் பொருள். இதனால் தான் குழந்தைகளே அதிக சத்தத்தில் உலகின் அத்தனை ஒலிகளையும் வெல்லுமளவுக்கு வீரிடுபவர்களாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சைரன் ஒலியைப் போல. பிறந்த குழந்தையுடன் மல்லாடி ஒரு தாய் களைத்துப் போகிறாள். அடுத்து அது எழுந்து நடக்கத் தொடங்க அவள் அதன் மீது கண்வைத்தே களைக்கிறாள். அடுத்து அது ஓடத் துடங்க உலகமே அதன் பின்னால் ஓடுகிறது. அது கொண்டு வரும் குதூகலம் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. மொழியின், அன்றாடத்தின், பண்பாட்டின், காலத்தின், வெளியின் விதிகளை அது ஒவ்வொன்றாய் முறிக்கிறது; அது அப்போது காயப்படுகிறது, முட்டியை சிராய்த்துக் கொண்டு, தாயிடம் அடிவாங்கிக் கொண்டு அழுகிறது. மெல்ல மெல்ல அது முதிர்கிறது. அப்போது அது காலத்தின் கதவுகளை உடைத்து வெளியேற பல புது வழிகளைக் கண்டு கொள்கிறது - உணவு, விளையாட்டு, சிரிப்பு, வன்முறை, காமம், கலை ... எதையும் முரணாக, நேர்மாறாக சிந்திப்பதில் ஒரு பேருவகை, சுதந்திரம் உண்டு என்பதை குழந்தை தான் முதலில் கண்டுகொள்கிறது. குழந்தைகளே நம் உலகில் சங்கோஜமற்று வெடித்து சிரிக்கிறவர்களாக், உடம்பை வில்லாக வளைத்து கோணல் சேஷ்டைகள் பண்ணுகிறவர்களாக, நடந்து போக வேண்டிய இடங்களுக்கு ஓடியும், ஓடிச் செல்ல வேண்டிய இடங்களுக்கு தாவியும் செல்கிறவர்களாக இருக்கிறார்கள். இது ஒவ்வொன்றுமே கால-வெளியின் இறுக்கங்களை லகுவாக்கும் முயற்சிகளே. குழந்தைகளே நிஜமாக ஆத்மார்த்தமாக வாழ்வதாய் நமக்குத் தோன்றுகிறது. வளர்ந்த ஒவ்வொருவரும் குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு பூரிக்கிறார்கள்; ஒரு குழந்தை தூங்குவதில் கூட பாசாங்கற்ற கவலையற்ற விடுதலை பாவனை உண்டு. குழந்தையின் துயிலைக் கண்டு புன்னகைத்தபடி ரசிக்கிறோம். மனதுக்குள் “ராராரோ” என முணுமுணுக்கிறோம். ஆனால் இந்த பூரிப்பின் பின்னால் ஒரு பொறாமை உள்ளதை நாம் உடனடியாய் உணர்வதில்லை. இந்த பொறாமையே குழந்தையை திருத்த, பாதுகாக்க நம்மைத் தூண்டுகிறது.
இதே மனநிலை தான் பதின்வயதினரைக் கண்டதும் நமக்கு கவலையும் அலட்சியமான கேலியும் அவர்கள் பால் தோன்ற காரணமாகிறது. புரிதலின்றி எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள். கட்டுப்பாடின்றி காலத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறார்களே என சாலையில் பைக்கில் சீறிப் போகும் ஒரு விடலையைக் கண்டதும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் பதின்வயது என்பது மதலைப் பருவத்தின் நீட்சி மட்டுமே. ஒரு மதலையைப் போன்றே ஒரு பதின்வயதினன் காலத்தை ஒவ்வொரு நொடியையும் புதுமையாக, தன் விருப்பப்படி வளைக்க முடியும் என நம்புகிறான். அவன் முன்பு வளையாது நிற்பது “கடந்த காலம்” மட்டுமே. கடந்த காலத்தின் அடிப்படையில் நிகழ்காலம் மதிப்பிடப் படுவது அபத்தம் என அவனுக்குத் தோன்றுகிறது. கடந்த காலத்தை உதறுவது, பகடி பண்ணுவது, எதிர்ப்பதே அதைக் கடந்து போக தனக்கு உதவும் என அவன் நம்புகிறான்.
கருத்துகள்