ஒருவர் மறையும் போது சற்று கராறாக அவரை மதிப்பிடுவதும் அவசியம் என நினைக்கிறேன். அதில் சற்று காரமான விமர்சனம் இருந்தாலும் தப்பில்லை. எப்படி மிகையாக புகழ்ந்துரைப்பது இருக்கிறதோ அப்படியே விமர்சனபூர்வமான மதிப்பிடல் வேண்டும். தினமும் அல்வா மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நீரிழிவு வந்து விடும் அல்லவா!
சமூகவலைதளங்கள் வந்த பிறகு ஒவ்வொரு சொல்லும் நமது பிம்ப கட்டமைப்பிற்கான செங்கல்லாக பார்க்கப்படுகிறது. அதனால் பொதுப்போக்கில் இருந்து விலகி ஒரு கருத்தைக் கூறக் கூட தயங்குகிறோம். அவ்வளவு வெளிச்சம் நாம் அனைவர் மீதும் இருப்பதாக கருதுகிறோம். கூச்சம், பயம், குழப்பம் நிலவுகிறது. நாம் ஒரே பாதையில் ஒரே போல நடக்கும் ஆட்டு மந்தையாகி விட்டோம்.
ஒரு வெளிநாட்டுக்காரர் நாம் எழுதும் அஞ்சலிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாய் படித்தால் இந்த தமிழ் இலக்கிய உலகமே “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” போல ஒரு விக்ரமன் குடும்பம் என நினைத்து விட வாய்ப்புண்டு. அஞ்சலிகள் மட்டுமல்ல நமது “வாழ்த்துக்களும்” அப்படித்தான்.
ஒருவர் வாழும் போது எப்படி மதிப்பிடப்பட்டாரோ சாகும்போதும் அப்படி மதிப்பிடப்படுவதே நியாயம். செத்து விட்டாரே என எதிர்மறையை பூமாலைக்குள் மறைத்து வைத்து ஒரு பெரிய சிரிப்புடன் வரிசையில் வந்து நிற்பது பொய்யல்லவா. இலக்கியவாதிகளைக் கண்டு அரசியல்வாதிகளும் கெட்டுவிட்டார்களா அல்லது அவர்களை நாம் காப்பி அடிக்கிறோமா தெரியவில்லை.
உயிருடன் இருக்கும் போது நீங்கள் எழுதுகிற விமர்சனங்கள், நிராகரிப்புகள் ஒருவரைக் காயப்படுத்தாத போது செத்த பிறகு மட்டும் காயப்படுத்துமா என்ன? நியாயமாக காலமான பிறகு தானே ஒருவரை துணிந்து மதிப்பிட முடிய வேண்டும். ஆனால் நான் இதை தலைகீழாகவே செய்கிறோம். வாழும் போது கராறாகவும் காலமான பின் ரொம்ப இளகின மனத்துடனும் நடந்து கொள்கிறோம். இது ஆளுக்கான மரியாதையா மரணத்துக்கான மரியாதையா? மரணம் ஒருவரை மகத்துவமாக்கும் எனில் வாழ்வு அதை செய்யாதா? இது ஒரு வெற்று செண்டிமெண்ட் இல்லையா? இவ்வளவு செயற்கைத்தனங்கள் இருக்குமெனத் தெரிந்தால் இவர்கள் சாகாமல் இருந்திருப்பார்கள்.
என்னைப் போன்று கராறாய் மதிப்பிடு அஞ்சலி எழுதுவோரை கூட இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். உயிருடன் இருக்கும் போது ஒன்று, சாகும் போது மற்றொன்று என நான் தனித்தனியாக எழுதுவதில்லை.
நகுலனின் ஒரு கவிதை:
“செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”

கருத்துகள்