எனது நண்பர்கள் சிலர் கழுவி ஊற்றியிருக்கும் அளவுக்கு இப்படம் சொதப்பல் இல்லை. நான் பொதுவாக எந்த படம் ஆரம்பித்து பத்து நிமிடம் வரை தான் பொறுப்பேன். அதற்குள் கதையை ஆரம்பிக்காமல் பி.ஜி.எம்மை மட்டும் ஸ்வெங்ங் என அழவிட்டால் என்னையும் மறந்து தூங்கி விடுவேன். ஒருதடவை என் கூட வந்தவர் “நீ தூங்கு பரவால்ல, ஆனா குறட்டை விடாதே” என்றார். ஆனால் இந்த படத்தில் நான் ஒரு நொடி கூட தூங்கவில்லை. இத்தனைக்கும் திரையரங்குக்கு செல்வதற்கு பத்து நிமிடத்துக்கு முன் வரை அசந்து தூங்கி விட்டுத் தான் போனேன். அந்த விதத்தில் இப்படத்தை பாராட்ட வேண்டும்.
ஆனால் இடைவேளையின் போதும் சரி, கிளைமேக்ஸிலும் சரி பார்வையாளர்களிடம் ஒரு பரபரப்போ பரவசமோ இல்லை. ஏதோ தப்பான முகவரிக்கு வந்து விட்ட குரியர் பாய்களைப் போல உட்கார்ந்திருந்தார்கள். அல்லது புரியாத மொழியில் திட்டு வாங்குகிறவர்களைப் போல. இதற்குக் காரணம் திரைக்கதையில் உள்ள ஒரு அடிப்படையான பிழை தான் என நினைக்கிறேன்.
அது என்ன?
கல்கியின் நாவலில் அருண்மொழி வர்மனோ கரிகாலனோ வந்தியத்தேவனையோ குந்தவையோ அல்ல ஹீரோ. அது அவர்களைப் பற்றின நாவல் அல்ல. அது சோழ தேசத்தின் பாதுகாப்பு பற்றின நாவல். சோழ தேசமானது இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முந்தைய-பிந்தைய இந்தியாவுக்கான உருவகம். கல்கி ஒரு தேசப்பற்றாளர் அல்லவா? அதனால் அவருடைய தலைமுறையின் அடிப்படையான கவலைகளை, பயங்களை, லட்சியங்களை பழைய சோழர் குடும்ப கதையாக்கி (காந்தி, வல்லபாய் பட்டேல், நேரு, நேரு குடும்பம், சாவர்க்கர், வெள்ளையர்கள்) ஒரு வணிக, spy thriller நாவலாக எழுதினார். அதனால் தான் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் கதையாக அவர் அதை எழுதவில்லை. அதனாலே நாடிழந்த சிற்றரச குடும்பத்தின் வாரிசான ஒருவனுடைய ஒற்றறியும் சாகசங்களுடன் அவர் நாவலை ஆரம்பிக்கிறார். அதாவது இந்திய வரலாற்றின் சதிகாரர்களை முறியடித்து நாட்டைக் காப்பாற்றும் ஒரு கட்சித் தொண்டனின் (வந்தியத்தேவன்) பார்வையில் கதையை சொல்வதைப் போல. ஆனால் இந்நாவலை இன்றும் இப்படியே திரைப்படமாக எடுக்க முடியாது. அதற்கு நீங்கள் வந்தியத்தேவனை மட்டுமே பிரதானமாக்கி, கதையில் பிரதான மாற்றங்களைக் கொண்டு வந்து “முதல்வன்”, “மாநாடு” போல எடுக்க வேண்டும் - நாடற்ற வந்தியத் தேவன் நாட்டைப் பெறுவதாக ஒரு மாற்றுக் கதையாக மாற்ற வேண்டும். அல்லது வந்தியத்தேவனை மறந்து விட்டு கரிகாலனிடம் இருந்து கதையை ஆரம்பித்து இண்டெர்வல் பிளாக்கில் அவனைக் கொன்று விட்டு ஒரு பெரும் பதற்றத்தை உண்டு பண்ணி அங்கிருந்து தம்பி அருண்மொழியின் எதிர்நடவடிக்கை, புத்திசாலித்தனம், சாகசம், இறுதி தியாகம் என எடுத்து செல்ல வேண்டும். இங்கு தான் மணிரத்னம் தவறி விட்டார்.
சுருக்கமாக சொல்வதானால், சினிமா என்பது ஒரு நாயகனின் பயணம், தேடல், ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட இலக்குக்கான முயற்சி, அதில் வரும் தடைகள், அத்தடைகளை அவன் முறியடித்து வெல்வதோ, தோற்பதோ, அதன் வழியாக அவனும் பார்வையாளர்களும் கற்றுக் கொள்ளும் ஒரு விழுமியம் என்பது தானே தவிர பல பேர்களின் வாழ்க்கையில் உள்ள பல சிக்கல்களை ஒரு முடிச்சாக மாறி அது ஒரு கூட்டு முயற்சியால் அவிழ்க்கப்படுவதல்ல. முன்னது திரைக்கதை என்றால் பின்னது நாவல். பல்வேறு கண்ணோட்டங்களுக்கு, தேடல்களுக்கு, சிக்கல்களுக்கு, குரல்களுக்கு ஒரு நாவலில் உள்ள இடம், வாய்ப்பு, சாத்தியங்கள் ஒரு திரைப்படத்தில் இல்லை. திரைப்படம் என்பது ஒற்றை மனிதனின் ஒற்றைக் குரல், ஒற்றை மனிதனின் ஒற்றைப் பயணம். எப்படி ஒரு சிறுகதையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களுக்கு, அவர்களுடைய பலதரப்பட்ட அனுபவங்களுக்கு இடமில்லையோ அதைப் போல திரைக்கதையிலும் இல்லை. திரைக்கதையும் சிறுகதையும் இவ்விசயத்தில் ஒன்று.
சிறுகதையில் இருந்து தன் படங்களை உருவாக்க குரசாவோ விரும்பியது இதனாலே. குறுநாவல்களில் இருந்தும் நல்ல படங்களை எடுக்க முடியும், வெற்றிமாறன் “அசுரனில்” செய்ததைப் போல. பெரும் நாவல்களை படமாக்க நீங்கள் அதை சுருக்கினால் போதாது, அதை ஒரு கூட்டுக்கதையில் இருந்து தனிக்கதையாக்க வேண்டும். விபூதிபூஷனின் “அபராஜிதோவில்” நிறைய முக்கியமான சிறுபாத்திரங்கள் உண்டு. ஆனால் சத்யஜித்ரே அதை அப்புவின் கதையாக ஒரே சீராக கொண்டு போவார். அவன் மட்டுமே படம் முழுக்க நிறைந்திருப்பான். அவனுடைய நண்பனின் பாத்திரத்துக்கு கூட சில காட்சிகளே கொடுத்திருப்பார். படம் அவனுடைய தேடல், அதில் வரும் தடை, துயரம், வீழ்ச்சி, அவன் மீண்டு வருவது என்றே இருக்கும். டேவிட் பிஞ்சரின் Fight Club படம் அதே தலைப்பிலான சக் பேலெனிக்கின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதே. நாவலின் துவக்கத்துக்கும் படத்தின் துவக்கத்துக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. நாவல் தெருச்சண்டை குழுக்கள், அவற்றின் விதிகள் பற்றி ஆரம்பிக்குமென்றால் படம் அதன் மைய பாத்திரமான கதைசொல்லியிடம் இருந்து ஆரம்பித்து, விமானத்தில் அவன் சந்திக்கிற அவனுடைய கற்பனைப் பாத்திரமான (ஒரு மனப்பிரமையான) டைலர் டெர்டனை அவன் சந்திக்கும் காட்சிக்கு சென்று அடுத்தடுத்த சம்பவங்களை நோக்கி வேகமாக செல்கிறது. இப்படி ஒரு பரந்துபட்ட நாவலை லேசர் வெளிச்சம் போல ஒரு புள்ளியை நோக்கி, ஒரு பாத்திரத்தின் கதையாக மாற்றுவதற்கு ஒரு தனி திறன் வேண்டும். “பொன்னியின் செல்வனில்” அந்த திறன் தான் மிஸ்ஸாகிறது.
இந்த படத்தில் ஹீரோ யார், வில்லன் யார் என்பது தெளிவாக இல்லை, ஒவ்வொரு பாத்திரமாக வரிசையாக தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள், கவனத்தை சிதறடிக்கிறார்கள் என புளூ சட்டை மாறன் தன் விமர்சனத்தில் சொல்வதில் உண்மை உண்டு. நான் இந்த படத்தைப் பார்த்த ஒரு தோழியிடம் “படத்தின் கதையை மூன்றே வரிகளில் சொல்லு” என்றேன். அவரால் சொல்ல முடியவில்லை. “பழுவேட்டரையர் சதி செய்கிறார். மதுராந்தகன் அரியணை வேண்டும் என்கிறான். நந்தினி இவர்களுக்குப் பின்னிருக்கிறாள்.” என்று திக்கித் திக்கி சொன்னார். “சரி அடுத்து என்னாகிறது? படம் யாரைப் பற்றியது? என்ன பிரச்சனை, என்ன தடைகள் வருகின்றன, அவை எப்படி முறியடிக்கப்படுகின்றன, எதிர்பாரா திருப்பங்கள் என்ன?” என்று கேட்டால் அவரிடம் பதில் இல்லை. “நான் ஒருவேளை நாவலைப் படிக்காததால் எனக்குப் புரிந்திருக்காதோ என்னமோ” எனப் பின்வாங்கினார். நான் சொன்னேன் நாவலைப் படித்திருப்பது அவசியம் அல்ல என்று. ஒரு நாவலின் முதல் 10-15 நிமிடங்களில் படம் யாரைப் பற்றியது, அவருக்கு என்ன வேண்டும், அது ஏன் கிடைக்கவில்லை என்பது தெரிந்து விட வேண்டும். ஹீரோ எடுக்கிற அடுத்தடுத்த முயற்சிகளும், அதில் வரும் தடைகளும் அடுத்த 40 நிமிடங்களில் காட்டப்பட வேண்டும். அப்போது தான் பார்வையாளர்களுக்கு கதை தெளிவாகப் புரியும். அப்படி இந்த கதையை எடிட் செய்ய முடியும், அதற்கான சாத்தியங்கள் உள்ளன, ஆனால் 30 வது நிமிடத்தில் வர வேண்டிய காட்சி இண்டெர்வல் தாண்டி எங்கோ வருகிறது, கிளைமேக்ஸ் வரவே இல்லை. அதை அடுத்த பாகத்தில் வைப்பேன் என்று சொல்ல முடியாது. முதல் பாகத்துக்கு என்றே ஒரு துவக்கம், நடுப்பகுதி, இறுதிப்பகுதி தனியாக இருக்க வேண்டும்.
இதே தோழியிடம் நான் பாகுபகுலியின் கதை என்ன என்று கேட்டேன். “அவரால் எளிதாக அதை சொல்ல முடிந்தது: ஒரு பலம் பொருந்திய கொடுங்கோலன் இருக்கிறான். அவனிடம் சிக்கி நாட்டின் ராணி வதைபடுகிறாள். அவனை மக்கள் வெறுக்கிறார்கள். ஒரு பலம் பொருந்திய ஹீரோ இருக்கிறான். சந்தர்ப சூழ்நிலையால் அவன் இந்த கொடுங்கோலனை எதிர்க்க நேர்கிறது. கடைசியில் அவன் ராணியைக் காப்பாற்றி விடுகிறான்.” கூடுதலாக, ஹீரோவைப் மக்கள் பார்த்ததும் அடையாளம் காண்கிறார்கள். அதில் ஒரு மர்மம் இருக்கிறது. அடுத்து அவன் ராணியைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறான். அப்போது கட்டப்பாவால் அவன் யார் என்றும் அவனுடைய அப்பா யார் என்றும் வெளிப்படுத்தப்படுகிறது. அவனுடைய அப்பா சதியால் கொல்லப்பட்டதை சொல்லி, அடுத்த பாகத்தில் அவனுடைய அடுத்த இலக்கு என்ன என்றும் உணர்த்தப்படுகிறது. கூடவே கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனும் கேள்வியும் வருகிறது. இந்த கதை எவ்வளவு எளிதாக நேரடியாக சிக்கலின்றி இருக்கிறது பாருங்கள். துவக்கத்தில் அடிமையாக இருக்கும் ராணியைக் காப்பாற்ற வேண்டும் எனும் இலக்கில் எதேச்சையாகப் போய் இணைந்து கொள்ளும் ஹீரோ அதை இறுதியில் அடைகிறான், அத்துடன் தன் பூர்வகதையை அறிந்து அந்த ராணியை அவன் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அறிகிறான். எதுவும், யாரும் இக்கதைக்குள் வீணாக இல்லை. ஒரு படத்துக்கு இவ்வளவு போதும், ஆனால் ஒரு நாவலுக்குப் போதாது.
“பொன்னியின் செல்வனின்” முக்கிய பிரச்சினை மணிரத்னம் நாவலில் இருந்து பிறழ்ந்து போக தயங்கி அப்படியே காட்சி வரிசை மாறாமல் எடுத்து விட்டார் என்பது. அதனாலே பார்வையாளனுக்கு தான் என்ன கதையைப் பார்க்கிறோம் என்பதே சரிவர புரியவில்லை. அவனுக்குள் எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. அவன் திரையில் பெரிய நாயக, நாயக நடிகர்கள் தோன்றும் போதெல்லாம் விசிலடிக்கிறான். அதைத் தாண்டி அவனுக்கு விசிலடிக்க, கைத்தட்ட ஒன்றுமே இல்லை.
எனக்கு இதில் பெரிய ஆச்சரியம் இவ்வளவு திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை எழுதி இருக்கிறார்கள், ஆனால் எப்படி இவ்வளவு பெரிதாகக் கோட்டை விட்டார்கள் என்பதே. நான் சொல்வதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது என்றில்லை. தெரியும், ஆனால் வேறேதோ நோக்கங்களுக்காக அடிப்படையில் சமரசம் பண்ணி விட்டார்கள். ஒட்டுமொத்தமாக சுவாரஸ்யம் வராமல், அங்கங்கே மட்டும் சிறு தெறிப்புகள், பரபரப்பு, வக்கணையான வசனங்கள், சீரான நடிப்பு என சுமாராக மட்டும் போவதன் காரணம் அடிப்படையான இப்பிழை தான்.
நான் இத்திரைக்கதையை எழுதியிருந்தால் நாவலைப் பற்றி கவலைப்படாமல் அருண்மொழி வர்மனிடம் இருந்து கதையை ஆரம்பித்து அவனை வைத்தே முழுப்படத்தையும் நகர்த்தி அவனுடனே முடித்திருப்பேன். அவனுக்கு அடுத்தபடியாக கரிகாலனுக்கு இடமளிப்பேன். இரண்டு சகோதரர்கள் எப்படி சதிகாரர்களை முறியடித்து சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்றுகிறார்கள், அப்போது நிகழும் சில மரணங்கள், துயரம், வீழ்ச்சி, இறுதியில் வெற்றி, அருண்மொழியின் எழுச்சி, தியாகம் என ஆரம்பித்து முடித்திருப்பேன். (இரண்டாம் பாகத்திற்கு எல்லாம் எடுத்து வைக்க மாட்டேன். பொன்னியின் செல்வனில் இரண்டு படங்களாக எடுப்பதற்கான சரக்கு இல்லை என்பதே உண்மை.)
அதாவது இந்த நாவலை அப்படியே படமாக்க முடியாது. ஓரளவுக்கு சுதந்திரம் எடுத்து இதை திருப்பி ஒரு திரைக்கதையாக எழுதினால் மட்டுமே இது ஒரு நல்ல சினிமாவாகும். பூமணியின் “வெக்கை” நாவலை வெற்றிமாறன் அவ்வாறு தானே தனக்கான கதையாக உருமாற்றினார். பழிவாங்க நடக்கும் கொலை, அடுத்து எதிரிகளிடம் இருந்து தப்பிக்க அப்பாவும் மகனும் ஒளிந்திருப்பது தான் “வெக்கை”, ஆனால் “அசுரனில்” இந்த சின்ன விசயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு நிறைய மாற்றி இருந்தாரே வெற்றிமாறன். அதனாலே அப்படம் வெற்றி பெற்றது.
மற்றபடி படத்தின் காட்சிமொழி, பின்னணி இசை, செட் பிராபர்டி, கள அமைப்பு, கிராபிக்ஸ் என எல்லாமே படுமோசம் என சில நண்பர்கள் கருதுவதை நான் ஏற்கவில்லை. தூங்காமல் அலுக்காமல் என்னால் பார்க்க முடிந்தது. கொஞ்சம் பிசகினாலே கண்ணை மூடி குறட்டை விடும் நானே முழுமையாகப் பார்த்திருக்கிறேன் என்றால் உங்களாலும் முடியும். தைரியமாகப் போங்க!

கருத்துகள்