முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊடகம் ‘பிழைத்த’ வரலாறு

2015 வரை நானும் அரசியல் / பொது விவாதங்களில் (சன், தந்தி, புதிய தலைமுறை துவங்கி விஜயகாந்தின் சேனல் வரை) பங்கெடுத்திருக்கிறேன். அப்போது விவாத அரங்குக்கு கட்சி சார்பாக ஆட்கள் வருவார்கள், புள்ளி விபரங்கள், கருத்துக்கள் என்ற அளவில் மோதிக்கொள்வார்கள். பாஜக சார்பில் (வலதுசாரி / அரசியல் விமர்சகர் என்ற பெயரில்) பேசும் ரவீந்திரன் துரைசாமி, நாராயணன், எஸ்.வி சேகர் போன்றோருடன் நிகழ்ச்சிகளில் விவாதித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் பழக இனிமையானவர்கள் எனக் கண்டிருக்கிறேன். கழக கட்சி பேச்சாளர்களும் அறியப்பட்டவர்களாகவே இருப்பார்கள். பாஜக தரப்பு பலவீனமாக இருக்கும், கழக பேச்சாளர்களும், காங்கிரஸ் பிரதிநிதிகளும் அடித்துப் பேசுவார்கள். ஊடக விவாதங்களில் மூன்றாவது அணி என ஒன்று இருந்தாலும் அது அப்போது வரை பொருட்படுத்தப்பட்டதில்லை - திமுக, அதிமுக, ஒரு (அறிவார்ந்த) பொதுத்தரப்பு என்பதே சேர்க்கை. மத்தியில் பாஜக வந்த பின்னர் அவர்கள் அந்த மூன்றாவது இடத்தை எடுத்துக் கொண்டார்கள். ஒன்றிய அரசு பற்றின விவாதம் என்றால் காங்கிரஸ், பாஜக, ஒரு பொதுத்தரப்பு (சில நேரங்களில் நிலைமையைப் பொறுத்து அதிமுக / திமுக). நெறியாளரே தன்னிடம் உள்ள பட்டியலில் இருந்து அன்றன்றைக்கான பேச்சாளர்களைத் தீர்மானிப்பார் என்றாலும் முதன்மை எடிட்டரிடம் (நிர்வாகத்திடம்) அன்றைய தலைப்பு பற்றி அனுமதி வாங்க மாலை மூன்று மணி வரை காத்திருப்பார்கள். அதன் பிறகு வேகவேகமான தயாரிப்புகள் நடக்கும். தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லை, பகிங்கர அம்பலப்படுத்தல்கள் இல்லை, அன்று இந்தளவுக்கு சர்ச்சைகள் சமூக வலைதளங்கள் வழி வெளியாகவில்லை என்பதால் அவற்றை வைத்து ஷோ நடத்தும் அழுத்தமும் இல்லை. பெரும்பாலும் செய்தித்தாள் முகப்பு செய்திகளே விவாதப் பொருளைத் தீர்மானித்தன. நீங்கள் தினமும் ஏதாவது ஒரு அரசியல் டிவி விவாதத்தில் கலந்து கொண்டாலும் அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள், ஆனால் ஒரே ஒரு நீயா நானா ஷோவில் பங்கேற்றால் அது பல மாதங்களுக்கு ஊரெல்லாம் மக்கள் உங்களைக் கண்டுகொள்ளும் நிலையை ஏற்படுத்தும். இந்த இரவுணவு நேர விவாதப் போர்களை யாரும் பார்ப்பதில்லை என்று நான் யோசித்துக் கொண்டிருப்பேன். ஆனாலும் கூப்பிடுகிற போது பழக்கத்துக்காக போவேன். நெறியாளர்கள் கோட் போட்டிருந்தாலும் அடிப்படையில் நம்மைப் போன்று எளிமையாகவே இருப்பார்கள் (அல்லது அன்றே எதாவது கொடுக்கல் வாங்கல் இருந்ததா தெரியவில்லை, ஆனால் இன்றுள்ள பணப்புழக்கம் இல்லை என நினைக்கிறேன்.). ஒருவித பழகிய ஸ்கூட்டரைப் போல இந்நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருந்தன

எனக்குத் தெரிந்து இந்நிலை ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு முடங்கி, இங்கு பல்வேறு மாற்று சக்திபீடங்கள் உருவான போது ஏற்பட்ட நிலைகுலைவு, குழப்பங்கள், அதிகார அமைப்புகளின் மறுசீரமைவு துவங்கிய போது ஆரம்பித்தது. உளவுத்துறையும், அரசியல் தரகர்களும் புகுந்து ஒரு கலக்கு கலக்கினார்கள். அவர்களே இந்த நடுநிலை, மென்வலதுசாரிநேரடி வலதுசாரி, மறைமுக பாஜக ஆதரவாளர்கள், நேரடி பாஜக கட்சி பேச்சாளர்கள் என ஒரு இனம் தோன்றிட காரணமானார்கள். விவாதங்களில் நெறியாளர்கள் பொது அறிவுத்தரப்பையும் (intellegensia) இடதுசாரிகளையும்ஒதுக்கியபோதே ஏதோ ஒரு புதிய அரசியல் வியாபாரம் நடக்கிறதே என யோசித்தேன். மாநிலத்தில் ஆளும் அரசு பற்றின சமூகவலைதள கருத்துக்கள், தரகர்களின் கோரல்கள், ஹேஷ்யங்கள், சந்தேகங்கள், குழப்பங்களே அக்காலத்தில் விவாதப்பொருளாயின. ஒரு தரப்பு திமுக என்றால், இன்னொரு தரப்பாக சில நேரங்களில் அதிமுக, பல நேரங்களில் வலதுசாரி / தமிழ் தேசியவாதி / அரசியல் விமர்சகர் என ஒரு கும்பல் களமிறக்கப்பட்டது. சில நேரங்களில் மூன்றாவதாக பாஜகவே இருக்காது, இவர்கள் இரு கூறாகப் பிளந்து அதிமுக சார்பில் திமுகவுடன் மோதுவார்கள். அதிமுக பிரதிநிதி வந்தாலும் அவர் எடப்பாடி / பன்னீர் / சசிகலா / குருமூர்த்தி என ஏதாவது ஒரு அணியின் சார்பிலே பேசுவார் (நடுநடுவே எங்க அம்மா, மதிப்பிற்குரிய என்று சேர்த்துக் கொள்வார்கள்) இதன் நீட்சியே இன்று நாம் பார்க்கிற டிவி / யுடியூப் அரசியல் விவாத மேடைகள்

யாருமே கவனிக்காத ஒரு இடத்தில் இருந்துக்கிட்டு ஏண்டா சண்டை போடுறீங்க என நான் அவ்வப்போது வியந்ததுண்டு. ஆனால் அதிமுகவின் இடத்தில் ஒரு மாற்றுத்தரப்பாக பாஜகவை உருவாக்கும் / நிலைநிறுத்தும் தேவை அன்று உளவுத்துறைக்கு இருந்தது. அத்தரப்புக்கு முட்டுக்கொடுப்பவர்கள் / பின்னால் இருந்து மோதி சூழலை தயார் பண்ணுகிறவர்களாக மூன்றாவது அணியினர் (அன்று தமிழ் தேசியவாதிகள், பின்னர் நாம் தமிழர் / மய்யம்) இருந்தனர்


2019 தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்ற பின்னர் அக்கட்சி தமிழகத்தை குறிவைத்து இன்னும் மும்முரமாக இயங்கியது. ஏகப்பட்ட பணத்தை களமிறக்கியது. ஊடக முதலாளிகளை இத்தரகர்கள் மூலம் விலைக்கு வாங்கியது. விஜய், அஜித், சோப்பு டப்பா என எந்த விவாதம் என்றாலும் ஒரு தரப்பாக பாஜகவினர் உட்காரத் தொடங்கினார்கள். சில நேரங்களிலே அவர்களே மாறுவேடத்தில் இரு தரப்புகளாக அமர்வார்கள். விவாதம் என்பது (அர்னாப் பாணியில்) கூட்டமாக அமர்ந்து ஒரே சமயத்தில் கத்துவது, அந்தரங்க தாக்குதல் தொடுப்பது என மாறியது. கொரோனா லாக் டவுனின் போது யுடியூப் சேனல்கள் பிரசித்தமாக அதை பயன்படுத்தி யுடியூப் அரசியல் பேச்சாளர்கள் உருவானார்கள். இவர்கள் கடந்த சில ஆண்டுகளில் மறைந்து போன இடதுசாரி விமர்சகர்கள் / அறிவுத்தரப்பின் இடத்தை எடுத்துக் கொண்டார்கள். இவர்களுடன் நிஜ / போலி ஊடகவியலாளர்களும் சேர்ந்து கொண்டார்கள்


அதன் பிறகு யுடியூப் / சேனல் பேட்டி வடிவம் வந்தது (பாண்டே இந்த போக்கை முன்பே ஆரம்பித்திருந்தாலும்) - ஒருவரை அம்பலப்படுத்துகிறோம், கலாய்க்கிறோம், திட்டுகிறோம், கேள்வி கேட்கிறோம் என்று இவர்கள் முச்சந்தி மேடைப்பேச்சு வடிவத்தை பேட்டியாகவும் தனி உரையாகவும் மாற்றிக்கொண்டார்கள். அப்போது தான் யுடியூப் வழி அதிகமான மக்களை இவர்கள் போய் சேரவும், அரசியல் கருத்துக்களை உருவாக்குகிறவர்களாகவும் மாறத் தொடங்கினார்கள். இவர்களுடைய தாக்கம் இளைஞர்கள், பொதுமக்கள் இடையே இருப்பதை வெளிப்படையாகவே பார்க்கிறோம். ஆனால் இது வாக்காக மாறுகிறதா எனத் தெரியாமலே இதை வைத்து இவர்களுக்கு பெரும் பணம் கொடுத்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவோ பிறரை தாக்கி அழிக்கவோ பிம்ப கட்டமைப்புக்கோ எப்படி உருவாக்குகிறார்கள், எப்படி மிரட்டி பணம் பிடுங்குகிறார்கள், கார்ப்பரேட் பாணியில் இயங்கி செழிப்பாக வாழ்ந்து எப்படி தடுக்கி விழுந்தால் ஐந்து நட்சத்திர ஓட்டல் பார் என இருக்கிறார்கள்இவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஐடி விங் / வார் ரூம் எனப்ட்ட 25,000 சம்பளம் வாங்கும் இணையப் படை ஒன்று எப்படி தரகர்களாகவும் மாறி செயல்படுகிறார்கள், ஒரே சமயம் பல பக்கங்களில் கோல் போடுகிறார்கள், எப்படி பெயரளவுக்கு பாஜக / திமுக ஆதரவு என இருந்துகொண்டு எதிர்க்கட்சிக்காக பணம் வாங்கி வேலை செய்கிறார்கள், இவர்கள் எல்லாம் சேர்ந்து அரசியல் விவாத மேடையை ஒரு கட்டப்பஞ்சாயத்து மேடையாக எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதை மதன்-வெண்பா அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். “அதாவது மாதேஷ், எனக்குத் தெரிஞ்ச ஒரு சோர்ஸ் மூலமா என்ன தெரிய வந்ததுன்னாஎன்று சவுக்கு விரல் நீட்டி சொன்னதெல்லாம் மாதேஷ் ஏற்கனவே தன் சோர்ஸிடம் பேசித் தெரிந்து கொண்டு சவுக்குடன் விவாதித்து பகிர்ந்த தகவல்களே, இது ஒரு கணவன் - மனைவி சண்டை மேடை நாடகம் எனப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இதுவே உண்மை. ஶ்ரீமதி விவகாரத்தில் சவுக்கு அப்பள்ளித் தாளாளரைக் காப்பாற்ற ஊர் ஊராகப் போய் பேசி அம்பலப்பட்டாரே அதுவும் இப்படியே 5 நட்சத்திர ஓட்டலில் உட்கார்ந்து பேசி மாதேஷ் வாங்கிக் கொடுத்த டீலாகத் தான் இருக்கும். இப்படி பேசிப்பேசி எவ்வளவு சம்பாதித்திருப்பார்? தன்னை கனிமொழி ஆதரவாளர் / உதய் எதிர்ப்பாளர் எனக் காட்டிக்கொண்டே திமுகவை மிரட்டி கூட இந்த ஆள் பணம் பெற்றிருக்கக் கூடும் என நினைக்கிறேன். பாண்டே அண்மையில் நடத்திய வருடாந்திர கொண்டாட நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டதும் 40 லட்சத்துக்கு விளம்பர வருமானம் வந்ததாக ஜீவா டுடே பேட்டியில் பத்திரிகையாளர் உமாபதி சொன்னார். என்னடா நடக்குது இங்கே?


சமூக அரசியல் பிரச்சினைகளுக்காக நெஞ்சில் குருதி கொட்டியவர்கள் எல்லாரும் முட்டாள்கள். தப்பில்லை. இப்போதாவது நாம் முட்டாள்கள் எனப் புரிந்து கொண்டு திருந்துவோம்.


 தமிழ் ஊடக வெளியில் அண்மையில் நிகழ்ந்த மிகமுக்கியமானசம்பவம்இதுவே. இவர்கள் இதை வைத்து தனியாக கட்டப்பஞ்சாயத்து வியாபாரம் பண்ணுவார்களோ எனும் வலுவான ஐயம் இருந்தாலும் இது ஒரு பாராட்டத்தக்க நிகழ்வே


இதை நான் சொல்லும் போதே பேஸ்புக்கிலும் டிவிட்டரில் எந்த லாபநோக்கும் இன்றி தான் நம்பும் ஒரு அரசியலுக்காக, சித்தாந்தத்துக்காக பல்லாயிரம் சொற்களை எழுதிக்குவிக்கிறார்கள் என்று அறிவேன். ஆனால் இவர்களுக்கு ஆளும் அரசியல் தரப்பின் கருணை இருக்காது, பணம் வராது, 200 ரூ .பி மாதிரியான அவப்பெயரே எஞ்சும். இது 200 ரூ மேட்டர் அல்ல, ஒரு கட்சியின் காணொளிக்கு 40,000 ரூ என மதன் - வெண்பா ஸ்டிங் காட்டித் தந்திருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இவ்வளவு கோடி பணத்தை இறக்கி விட்டு வேணும்னா 200 ரூ வாங்கிக்கோங்க பிரதர் என அண்ணாமலை அப்பாவி ஊடகவியலாளர்களையே கலாய்க்கிறார். பணத்துடன் இவர்களுக்கே இன்று ஆட்சி புரியும் தரப்புடன் நேரில் சந்திக்கும், போனில் பேசி உதவி கேட்கும் அளவுக்கு அணுக்கம் வளர்ந்துள்ளது. இவர்களுடைய வீட்டில் எழவு விழுந்தால் முதல்வரே நேரில் போய் கையைப் பற்றி கண்ணீர் சிந்துகிறார். சொல்லப் போனால் மாதேஷ் போன்ற ஒருவர் தன்னால் முதல்வர் ஸ்டாலினையே மிரட்டி அடிபணிய வைக்க முடியும் என நம்புகிறார்


இந்த கொடுக்கல் வாங்கல் தான் எதார்த்த உலகம், சித்தாந்தம்-சமநீதி-மாற்றம்-போராட்டம் அல்ல. காலம் வெகுவாக மாறிவிட்டது. மனிதர்களுக்கு இன்று பணம்-அதிகாரம் எனும் மொழி மட்டுமே புரிகிறது. சமூக ஊடகங்களில் மாய்ந்து மாய்ந்து எழுதுவோரும், பாரம்பரிய ஊடகங்களில் இன்றும் நேர்மையாக செயல்படலாம் என முயல்கிறவர்களும் இதைப் பற்றி யோசிக்க வேண்டும்.


நான் இதை ஒரு பெரும் சீரழிவாகப் பார்க்கவில்லை. இதை பொருளாதார ரீதியாகப் பார்க்கிறேன் - கடந்த சில ஆண்டுகளில் அரசியல் டிவி சேனல்கள் லாபம் இழந்து வீழ்ச்சியை சந்தித்தன என நினைக்கிறேன். அந்த கட்டத்தில் அவர்கள் பாஜக கொண்டு வந்து கொட்டும் பெரும்பணத்தை ஒரு நல்ல முதலீடாகக் கருதி பயன்படுத்திக் கொண்டன. யாரெல்லாம் இந்த வியாபாரத்தில்கைகொடுக்கவில்லையோஅவர்கள் வெளியேற்றப்பட்டனர். தரகர்களும், ‘ஊடக நடிகர்களும்’ (நெறியாளர்கள்) காப்பாற்றப்பட்டதும் பெரும் பணக்காரர்களாகவும் மாறி இருக்கிறார்கள். நான் இவர்களையே அதிக மரியாதையுடன் பார்க்கிறேன். எந்த பயன்மதிப்பும் இல்லாத ஒரு நிகழ்ச்சி வடிவை இவர்கள் பணம் கொழிக்கும் பொழுதுபோக்ககவும், கட்டப்பஞ்சாயத்தாகவும் மாற்றி இருக்கிறார்கள். இது முன்னேற்றமே. ஒவ்வொரு தேர்தலும் இன்று பல நூறு கோடிகளை கட்சிகளிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு ஆளை கட்டமைக்கும் / போட்டுத் தள்ளும் வியாபாரம். இந்த மாற்றம் வராவிட்டால் தமிழ்  அரசியல் ஊடகங்கள் கடையை மூடிக்கொண்டு கிளம்பியிருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது


கருத்துகள்