கல்வி விமர்சனம் குறித்தான இவ்வார “நீயா நானா” நானாவைப் பார்த்தேன். அதில் கல்வி சார்பாகப் பேசிய தரப்பினரின் வாதம் மொத்தமாக பெரும் அபத்தமாக இருந்தது. முக்கியமாக, நிறைய பேர் தவற விட்ட ஒரு கோணம் - யாரும் இங்கு கல்வி வேண்டாம் எனக் கூறவில்லை. நவீன கல்வியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன, அவற்றைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே கோரிக்கை. உடனே இதை கல்வியை ஒழிக்க சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ளக் கூடாது. திருமணம் வேண்டாம் என்பவர்கள் திருமணத்துக்கோ குழந்தைப்பிறப்புக்கோ எதிராக சதி செய்பவர்கள் அல்ல. அவர்கள் நவீன திருமணத்தின் பிரச்சினைகளை கவனப்படுத்துவதற்காக அவ்வாறு சொல்கிறவர்கள். அதுவே கல்விக்கும் பொருந்தும். என்ன பிரச்சினை எனில் இவ்விமர்சனங்களை எதிர்கொள்ளவே கல்வி வீராச்சாமிகள் தயாராக இல்லை; ஏனென்றால் அவர்கள் கல்வி வீராச்சாமிகள் அல்ல, தனியார்மயமாக்கலை உள்ளுக்குள் நேசிக்கும், நவீன தாராளவாத சந்தையைப் பார்த்து விரைப்பாகும் வீராச்சாமிகள். இந்த விவாதம் கல்வி சந்தையை, தனியார் சந்தையை கேள்விக்குள்ளாக்கக் கூடும் என்பதை அவர்கள் உள்ளூர அறிவார்கள். இந்த சந்தை பல லட்சம் கோடிகள் மதிப்பிலானது. உடனே அவர்கள் இந்த மொத்த வ...