கீர்க்கெகாட் (1813–1855) டென்மார்க்கைச் சேர்ந்த இருத்தலியல் தத்துவவாதி. ஆதி கிரேக்க தத்துவவாதியும் தத்துவத்தின் தந்தை என அறியப்படுபவருமான சாக்ரடீஸ் தன் தத்துவ விவாதங்களில் ஒரு கருத்தை அதன் தர்க்க முரண்களை நோக்கி நகர்த்துவார். அதை மொழியில் விளக்கவே முடியாத இடமொன்று வரும். அப்போது வரும் திகைப்பை aphoria என்கிறார்கள் (நம் மொழியில் பரவசம், வெளிச்சம்; அத்வைதத்தில் பிரசன்னம், ஆன்ம தரிசனம்). சாக்ரடிஸ் இதற்கு பயன்படுத்திய முரணை அம்பலப்படுத்தும் விவாத முறையை reduction ad absurdum என்று சொல்வார்கள். அவர் முன்னிலைப்படுத்தியது நம் சிந்தனையிலும் மொழியிலும் கருத்துக்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், லட்சியங்களிலும் உள்ள ‘நகைமுரணை’. இதை சாக்ரடீய நகைமுரண் (socratic irony) என்பார்கள். இதை நம்மூரில் பௌத்த தத்துவவாதி நாகார்ஜுனரும் பயன்படுத்தினார். (நாகார்ஜுனர் சாக்ரடீஸை விட பலமடங்கு மேலான ஆழமான தத்துவ விவாதங்களை எழுப்பியவர். ஆனால் அது உலகளவில் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒரு துயரம்.) நாகார்ஜுனரின் வாதமுறை பிரசங்கம் என அழைக்கப்பட்டது. அதற்கு விளைவு என எளிதாகப் பொருள் சொல்லலாம். இந்த முறையை இப்படிப...