பொய்கையில் நீர் வற்றும்போது பறவைகள் வராது என்று ஒரு மூதுரைப் பாடலுண்டு (ஔவை). அது அதிகாரத்துக்கும் பொருந்தும் - அதிகாரத்தின் அரியணையை நீங்கும் கணம் பல பறவைகள் நம்மை விட்டுக் காணாமல் போய் நாம் தனியாவோம். அப்போது ஆம்பல் கொடிகளைப் போல நம்மைச் சுற்றி சேற்றில் கிடப்பவர்களைப் போன்ற நட்பே உடனிருக்கும். அதாவது நடைமுறையில் நம்முடன் நெருங்கிப் பின்னிப்பிணைந்திருப்போர் நம் துவக்க காலமுதலே இருப்போர். பறவைகள் இடையில் தங்கிட வருவோர். அதிகாரம் இந்த பறவைகளையே அதிகமாக இழுக்கும். வாயெல்லாம் பொய்ப்பேச்சாக சர்க்கரைப் பாவையாகத் தோன்றும் மனிதர்கள். இப்படி தனிமையாவது ஒருவித சுதந்திரம். அதிகாரத்தில் திளைப்ப்பது பொய்யில் திளைப்பதாக இருக்கிறது.
எனக்கு என்றுமே அதிகாரத்தில் திளைத்திருக்கும் நிலை ஏற்பட்டதில்லை. நான் வெளியே நிற்பவன். ஆனால் அப்படி உயரத்தில் இருப்பவர்கள் கடைசியில் யானைப்படை, குதிரைப்படை இல்லாமல் தனியாகப் போவதைப் பார்க்க பாவமாக இருக்கும். ஆனால் அது பொய்ப்புனைவுகளைக் கழற்றிப் போட்டு சுதந்திரமாவதும்தான்.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
கருத்துகள்