முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூட்டத்தில் ஒருவர்

 




"தனித்தனியாக செயல்படுவதும், புறவயமான கட்டமைப்பு, அதிகாரமும் பி.ஆர்.ஓவும் இல்லாமல் இருப்பதே எழுத்தாளரின் இயல்பு. தொடர்ந்து தம் எழுத்தை மறுபரிசீலனை செய்வதும், மேம்படுத்துவதும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு எழுத்தைக் கொண்டு போவதுமே நோக்கம். ஏனென்றால் எழுத்தென்பது மைக்கினால் எழுதுவது அல்ல. இலக்கியம் என்பது நீ போய் சாம்பார்ல உப்பைப் போடு, அவன் போய் மேடையில குண்டு வைக்கட்டும் என்று ஆணையிடுவது அல்ல. எழுத்தாளர்கள் கூட்டத்தில் இருந்தாலும் அங்கும் தனியாகவே உணர்வர். ஏனென்றால் அவர்களின் சாராம்சமே தனிமையில், முரணில், சுயமுரணில், தீர்க்க முடியாத புதிர்களில் இருக்கிறது. எழுத்தாளர்களால் ஒரு குழுவின் மொழியில் பேச இயலாது. அப்படிப் பேச ஆரம்பித்தால் அவர்களால் எழுத்தாளராக இருக்கவும் இயலாது." என்று புரவிக் கூடுகையின் பின்பான மாலைப் பொழுதில் நண்பர் டி.ஐ அரவிந்தனின் அறையில் அமர்ந்து உரையாடுகையில் சொன்னேன். அவர் ஆமோதித்தார். எழுதுவதும் பேசுவதும் சுயமாக, தணிக்கையின்றி இருக்க வேண்டும். நன்றியுணர்வாலோ கண்காணிக்கப்படுகிறோம் எனும் எச்சரிக்கையுணர்வாலோ அவை கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஆனால் இன்று இலக்கியச் சூழல் அவ்வாறாகத்தான் மாறிவிட்டது, சில அற்பமான தேவைகளுக்காக, அங்கீகாரத்துக்காக சுதந்திரத்தைப் பறிகொடுக்கிறோம் என்று எங்கள் உரையாடல் நகர்ந்தது. எனக்கு அவரது "பயணம்" நாவலே இச்சூழலுக்கான உருவகக் கதை என்று தோன்றும். அதை அவரிடம் சொல்லவும் செய்திருக்கிறேன். தன் நண்பர் ஒருவர் இப்படி சட்டென அதிகாரத்தை நோக்கி நகர்ந்தபோது சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்ததாகவும் தலைகீழாக மாறியதாகவும் அதைக் குறித்த அதிர்ச்சியில் ஆராயும் பொருட்டு எழுதியதே அந்நாவல் என்றார். நாம் ஒன்றை நோக்கிப் பயணிக்கிறோம், ஆனால் அதற்கு நேரெதிரான இலக்கை அடைகிறோம். நாம் நமக்கே விரோதியாவதை உணராமல் வாழ்கிறோம். நாம் வெறுத்த ஒன்றாக நாமே மாறுகிறோம். இந்த உள்முரண் அந்த காலத்தில் (70-90கள்) எழுதப்பட்ட சில நாவல்களில் பேசப்பட்டுள்ளன. தகழியின் "மாடிப்படிகள்" ஒரு உதாரணம். அதிகார மோகம் ஒருவரை தன்னில் இருந்தே அந்நியமாக்கும், அந்த அந்நியமாக்கலே அவருக்கு அதிகாரத்தையும் பெற்றுத் தரும், தன்னை இழக்கிறவர், அதிகாரத்தை ஈட்டுகிறார் என்று அரசு அதிகார எந்திரத்தின் பின்னணியில் இதை தகழி சித்தரிப்பார். அரவிந்தன் இதையே ஒரு இயக்கத்தின் பின்னணியில் பேசியிருப்பார். வினோதமாக இந்த விசயம் இன்றைக்கு அதிகப் பொருத்தமானதாக மாறி இருக்கிறது. இன்று நாம் ஒரு குழுவாகவோ இப்படி நமக்கு எதிரான விசயங்களை அதிகாரத்துக்காகவும் செல்வாக்குகாகவும் செய்கிறோம். செய்கிறோம் என்பதை விட நிகழ்த்துகிறோம், நம் நிகழ்த்துதலை பண்டமாக மாற்றி விற்கிறோம், இப்படியே நம்மையே இழக்கிறோம். அன்றைய உரையாடலில் நான் இதையும் சொன்னேன்.


இதைப் போன்ற பல விசயங்களில் அரவிந்தனுக்கும் எனக்கும் ஒத்திசைவான அலைவரிசை இருக்கும். யாருக்கும் அவசியமின்றி அடிபணியக் கூடாது, யாரையும் அவமதிக்கவும் கூடாது எனும் அவரது கொள்கை எனக்குப் பிடித்தமானது.

இப்படியானவர்களை இழப்பது ஒரு கை ஒடிவதற்கு ஈடானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...