வரவர மரணச் செய்திகள் என்னை மிகவும் பதற்றமடையச் செய்கின்றன. பல நாட்கள் நிம்மதியிழக்க வைக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் ஒருவர் மரணமடைந்ததை நம்ப இயலவில்லை. மரணமானவர் என்னுடனே இருக்க மரணம் ஒரு செய்தியாக மட்டும் எஞ்சி நின்று என் பிரக்ஞையின் பரப்பில் இருந்து அகல மறுக்கிறது. இந்தக் குறிப்பு என்னை நிலைப்படுத்த உதவும் என நம்புகிறேன்.
அரவிந்தனை புரவி இலக்கியக் கூடுகையின்போது கடைசியாகச் சந்தித்தபோது தன் அறைக்கு அழைத்தார். அது குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி போதிக்கிற ஒரு ஆசிரமத்தின் கட்டிடம். நாங்கள் தங்கியிருந்த அறைகளில் மிக அடிப்படையான வசதிகள் மட்டுமே இருந்தன என்றாலும் சுதந்திரமாக உணர்ந்தோம். அது கோடைக்காலம். மாலையிலும் நாற்பக்கங்களில் இருந்தும் தகித்தது. அந்த அறையில் இரண்டு கட்டில்கள். இரு கட்டிலில் ஒன்றில் இருந்த பையையும் சில பொருட்களையும் ஒதுக்கி விட்டு அமர்ந்து கொண்டேன். எல்லா இலக்கிய சம்பாஷணைகளிலும் நிகழ்வதைப் போல நாங்கள் நேரடியாக ஒரு கத்தியை வயிற்றில் இறக்குவதைப் போல தீவிர விவாதங்களுக்குள் நுழைந்துவிட்டோம். எனக்கு எப்போதுமே அவரிடம் நல்ல அலைவரிசை இருந்தது. பேசும்போது அவர் மௌனித்தாலோ தொண்டையின் செருமல் அதிர்வுடன் ம்ம்ம் என்றாலோ தோள்களைக் குலுக்கினாலோ நிமிர்ந்த முதுகை அசைக்காமல் தலையை மட்டும் மெதுவாக சலனித்தாலோ அதன் தனித்தனி அர்த்தங்கள் எனக்குப் புரியும். போனிலும் கூட இப்படித்தான். தன் மௌனங்களை எதிரிலிருப்பவர் சட்டென நிரப்பிக் கொள்ளும்படியாகப் பேசுகிறவர் அவர். இலக்கியச் சூழலின் பாசிசத்தன்மை, எதையும் எதிர்த்துப் பேச விரும்பாமல் எழுத்தாளர்கள் மௌனத்துக்குள் ஆழ்வது போன்ற விடயங்களைப் பேசிவிட்டு மொழிபெயர்ப்புக்கு வந்தோம். அவர் தன் அனுபவங்களைக் கூற நான் தமிழ்-ஆங்கில புனைவு மொழிபெயர்ப்பு குறித்து அண்மையில் செய்த ஆய்வைக் குறிப்பிட்டேன். அவர் அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதியை தன்னுடன் பகிர முடியுமா எனக் கேட்டார். அதன் பிறகு அவர் இப்படியான ஒரு இடம் கிடைத்தால் எழுதுவதற்கு நன்றாக இருக்கும் என்றார். எல்லா விசயங்களிலும் சற்று கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கும் நான் “இங்கா?” என்றேன். அவர் ஆமாம் என்றார். தனக்குத் தேவை வேளாவேளைக்கு “காபி, டிபன். ரொம்ப எளிமையாகப் போதும்.” என்று பெருவிரலையும் சுட்டுவிரலையும் ஒட்டி நாட்டியத்தில் விழி முத்திரை காட்டுவதைப் போலக் காட்டிச் சொன்னார்.
அவர் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தார், அவருக்கு எழுதும் பொருட்டு ஓய்வு தேவைப்படுகிறது என்று புரிந்துகொண்டேன். எழுதும் ஓய்வு என்றால் இடைவிடாமல் எழுதி உழைப்பது அல்ல. மனதை நிலைப்படுத்திக் கொள்ள எழுத்து ஒரு பயிற்சியாக, சிகிச்சையாக இருக்கும். அதை எழுத்தாளர்கள் அறிவார்கள். அவர் அதையே உத்தேசித்தார். ஆனால் அதே நேரம் நிறைய பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் எனும் பரபரப்பு அவரிடம் இருந்தது. பெரும்பாலும் பிறருக்காக அவர் செய்கிறவை. அவருக்கு தன்னால் முழுமையாக இலக்கியத்தில் இருக்க முடியவில்லை என்று ஒரு வருத்தம் இருந்ததென கணிக்கிறேன். அவர் அடிப்படையில் சுயநலம் மிக்கவர் அல்லர். நான் கண்ட வரையில் எழுத்தாளர்கள் தன்விருப்பமும் தன்னலமும் மிகுதியானவர்கள். அதனாலே பற்பல சிக்கல்களுக்கு ஆட்படுகிறவர்கள். மிக எளிமையானவராக வாழ்ந்த அசோகமித்திரன் கூட நான் அவரைச் சந்தித்த பொழுதுகளில் நிம்மதியவற்றவராகவே எனக்குத் தென்பட்டார். உதட்டைச் சுருக்கிப் புன்னகைத்தபடி சின்னச்சின்ன புகார்கள் வழியாக அதை வெளிப்படுத்துவார். அரவிந்தன் இவர்களுக்கு நேரெதிரான திசையில் பயணித்தவர். புகார்களோ, வருத்தங்களோ காட்டிக் கொள்ளாமல் எதாவது ஒரு இலக்கை நோக்கிப் பாய்பவர். ஆனாலும் இலக்கிய எழுத்துக்குள் மட்டும் தோய வேண்டும் எனும் தீவிர ஆர்வம் அவரிடம் இருந்திருக்க வேண்டும். எனக்கு அவர் வரும் ஆண்டுகளில் அதற்கு ஏற்ற முகாம்களில் கலந்து கொண்டும் ஒய்விடங்களைக் கண்டறிந்து எழுத்தில் செயல்படுவார் எனத் தோன்றியது. ஆனால் ஒரு கதவை முகத்துக்கு எதிரே சட்டென மூடுவதைப் போல எல்லாம் முடிந்து போகிறது.
அன்று தனியாக இருப்பது குறித்து எங்கள் சம்பாஷணைச் சென்றது. அவர் என்னிடம் தான் சென்னையில் இருந்து வேலை பொருட்டு நாகர்கோயிலுக்குப் போய் இருக்கப் போவதாகச் சொன்னபோது நான் அதை உவப்பற்றுதான் எதிர்கொண்டேன். குடும்பத்தை, வீட்டைப் பிரிந்து ஏன் தனியாக இருக்க வேண்டும், அது துன்பம் அல்லவா என்றேன். அவர் அது தனக்குப் பிடிக்கும் என்றார். இம்முறையையும் அதைக் கேட்டேன். என்னதான் நாகர்கோயில் அவருக்குப் பரிச்சயம் என்றாலும் அது அவரது சொந்த ஊர் அல்ல. அவர் தன்னுடைய தேவைகள் குறைவு, தன்னால் ஒரு சாதாரண இடத்தில் கூட சுயநிறைவுடன் தனியாக இருக்க முடியும் என்றார். என்னுடைய கதை நேர்மாறானது என்றேன். அதற்குக் காரணம் பேய்ப் பயம். பேய் பயம் என்பது கூட சரியல்ல. எனக்கு பேய் நம்பிக்கை தீவிரமாக உள்ளது. என்னால் பேய்களின் ஸ்பரிசத்தைக் கூட தனிமையில் உணர முடியும். அது ரொம்பத் தொந்தரவாக உள்ளதாலே நான் தனிமையைத் தவிர்க்கிறேன், எனக்குப் பேசிக் கொண்டிருக்க எப்போதும் யாராவது வேண்டும் என்றேன். நான் எழுதும்போது கூட பக்கத்தில் யாராவது பேசுகிற சப்தம் எனக்கு வேண்டும். அது ஒரு ஆறுதல். அரவிந்தன் அதைக் கேட்டு இனிமையாகச் சிரித்தார்.
இப்போதும் கூட அரவிந்தன் தனியாக இருந்திருக்கக் கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது. எப்போதுமே யாருடைய அணுக்கமாவது நம்மிடம் இருப்பது பாதுகாப்பானது. இது என்னுடைய பயத்தினால் விளையும் கருத்தாக இருக்கலாம்.
அன்றைய கூடுகையின் அடுத்த நாள் தூயனிடம் அவர் எப்படி அப்பெயரைத் தேர்ந்தெடுத்தார் என்று கேட்க அவர் அது தன் நிஜப்பெயர் என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். அப்படித்தான் நான் மீண்டும் அரவிந்தனுக்கு அவரது அப்பாவின் சினேகிதர் “குறிஞ்சி மலர்” நாவலின் நாயகன் அரவிந்தனின் பெயரைச் சூட்டிய கதைதை நினைவுபடுத்தினேன். அரவிந்தன் அச்சம்பவத்தை விவரித்தார். அது எப்படி அந்த சினேகிதருக்குத் தெரிந்திருந்தது? அப்பெயருக்கு அவ்வளவு பொருத்தமானவர் அரவிந்தன். அதே போன்ற மென்மை, லட்சிய உணர்வு, லட்சியத்தின்பாற்பட்டு மட்டும் வருகிற கோபம். கண்ணில் தீ பறக்க பேசுவது மட்டுமே வித்தியாசம்.
அரவிந்தனிடம் சு.ராவின் தாக்கம் இருப்பதை சு.ராவை அறிந்தவர்கள் சட்டென கண்டுகொள்வார்கள். சு.ராவிடம் உள்ள அந்த கண்ணியம், உறுதிப்பாடு, மென்மையான குரல், கீழிருந்து பார்வையை ஏறெடுத்துப் பார்த்துப் பேசுகிற தோரணை, கனிவு என பல விசயங்களை வரித்துக் கொண்டிருந்தார். முக்கியமாக ஒரு ஆசிரிய மனோபாவம். நல்லாசிரியர் தன் மாணவர்களை வழிநடத்துவார், ஆனால் அவர்களைச் சமமாகப் பாவித்தே அவர்களை நெறிப்படுத்துவார். எதையும் வற்புறுத்தாமல் அவர்களைத் தம் போக்கில் செல்ல அனுமதிப்பார், ஒரு கண்ணை வைத்துக் கொண்டே. முக்கியமாக யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டார். சொந்த நடத்தையே பிறருக்கான அறிவுரை என நம்புவார். இப்படியான நல்லாசிரியப் பண்பும் அரவிந்தனிடம் தாராளமாக இருந்தது. அதில் அவர் ஒருவித மகிழ்ச்சியையும் நிறைவையும் கொண்டார் என நினைக்கிறேன். இத்தகையோர் மாணாக்கரை தம் வசம் இழுத்துக் கொண்டே இருப்பார்கள். அவரைக் குறித்து எழுதிய இளம் நண்பர்கள் பலரும் இதனால் ஈர்க்கப்பட்டு நற்பெயன் பெற்றவர்கள்.
அன்று முதல் நாள் நான் அவரிடம் அவரது அறையில் வைத்துப் பேசிக்கொண்டிருக்கையில் தோழர் பல்லவி வழக்கம்போல என்னிடம் வந்து என்னை குழந்தையாக பாவித்து பல மென்-விசாரணைகளை நடத்தினார் (இது வேண்டுமா அது வேண்டுமா?). அரவிந்தன் அவரிடம் சென்று “என்னை உங்களுக்குத் தெரியுமான்னு தெரியல. என் பேரு அரவிந்தன்.” என்று அறிமுகப்படுத்தினார். பல்லவி இதனால் அகமகிழ்ந்து போனார். தன்னிடம் ஒருவர், அவ்வளவு மூத்த ஒரு படைப்பாளி, பணிவாகப் பேசி அறிமுகப்படுத்திக் கொள்கிறாரே, சமமாக மதிக்கிறாரே என்பது அவளுக்கு ஒரு ஒப்பற்ற அனுபவமாக இருந்தது.
தன் எல்லையை மீறக் கூடாது எனும் கவனம் அவரிடம் பேச்சிலும் எழுத்திலும் நடத்தையிலும் இருக்கும். அது அதீதப் பிரக்ஞையோ பயமோ அல்ல. அது 'சமநிலையே தன்னை அறிதல்' எனும் நம்பிக்கையில் இருந்து தோன்றுவது. தீவிர எதிர்நிலைகள் பிறழ்வு, அறிவீனம் என இத்தகையோர் நம்புவர். இந்திய தத்துவ மரபிலும் கிரேக்க மரபிலும் இதை வலியுறுத்திய பலர் உண்டு. இது எழுத்துக்கு நல்லதா கெட்டதா என்பதையும் யாரும் வரையறுக்க முடியாது. ஆனால் இத்தகையோர் எழுத்திலும் பேச்சிலும் நமக்கு மிகவும் ஆறுதல் அளிப்பார்கள். எந்த அதிர்வும் இல்லாமல் இழிவு, கீழ்மை இல்லாமல் ஒரு உரையாடல் சாத்தியப்படும். அரவிந்தனிடம் இலக்கிய வெளியின் பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கிறேன், ஓரிடத்தில் கூட இழிசொல்லோ கடும் விமர்சனமோ தீர்க்கமான மதிப்பீடுகளையோ தனிநபர்கள் குறித்து வைக்க மாட்டார். இதையே தான் அவர் எழுத்திலும் எதிர்பார்த்தார். நான் அவர் மின்னம்பலத்தில் எடிட்டராக இருந்தபோதுதான் அதிகமாக எழுதி அனுப்பினேன். அப்போது இப்படி சமநிலை மீறுவதாகத் தனக்குத் தோன்றுகிற என் கட்டுரைகளை அவர் தெளிவான காரணங்களுடன் மறுத்துவிடுவார். நான் கவலையில்லாமல் அவற்றை அப்படியே என் இணையதளத்தில் பிரசுரிப்பேன். அதே தோரணையுடன் அடுத்து சில கட்டுரைகளை அனுப்புவேன். அவருடன் வேலை பார்ப்பது ஒரு கார்ப்பரேட் சூழலில் இருக்கும் உணர்வைத் தரும். ஒரு எடிட்டராக எந்த கூடுதல் தகுதியையோ அங்கீகாரத்தையோ கோர மாட்டார். நான் தான் உங்களை வளர்த்தெடுத்தேன் என கண்ணீர் வடிக்க மாட்டார். இது என் வேலை, அது உங்கள் வேலை, நாம் இப்பணிகளைச் சீராக அர்ப்பணிப்புடன் செய்வோம், அதைத் தாண்டி ஒன்றும் பேசிக்கொள்ள வேண்டியதில்லை எனும் தொழில்சார் அணுகுமுறை. எனக்கு இது பிடித்திருந்தது. அவருடன் பணியாற்றியவர்களும் இதைத்தான் உணர்ந்திருப்பார்கள். இதற்கு நடுவே சக-ஊழியர்களை சமமாக, கனிவாகப் பாவிக்கிற பண்பும் அவரிடம் இருந்தது.
நேரெதிரான மனநிலை, நம்பிக்கைகள் கொண்டவர்கள் கூட எப்படி இணக்கமாக கலந்துரையாடலாம் என்பதற்கு அவர் ஒரு தனித்த அணுகுமுறையை வைத்திருந்தார். இதை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை. நம்பிக்கைகள், கொள்கைகள் ஒரு மொழி நிலைப்பாடு, கருத்துக்கு அப்பால் அதில் ஒன்றுமில்லை, அதைவிட மனித உணர்ச்சிகளும் மாண்பும் முக்கியம் என அவர் நம்பினார். அதனால் கருத்தை அதனளவில் உறுதியாக அவர் எதிர்கொண்டார். கருத்தை மனிதராகப் பார்க்கவில்லை. இதை மனிதர் பயில்வது இன்றைய நிலையில் மிக அவசியமானது. என் சக-எழுத்தாளர் ஒருவரது கதையைக் குறித்து ஒரு தொழில்நுட்பரீதியான கருத்தை நான் பின்னூட்டத்தில் தெரிவித்தேன். அவ்வளவுதான், அவர் என்னை ஜென்ம விரோதி என்று அறிவித்தார். என்னைப் பார்த்தால் பேசுவார், புன்னகைப்பார், ஆனால் ஜென்ம விரோதிதான். ஆனால் அரவிந்தனுக்குத் தன் எழுத்து குறித்த கூருணர்ச்சியும் கவலைகளும் அவரிடம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் அவரை அசைத்தாலும் அவை பொருட்படுத்தத்தகாதவை, இலக்கியக் கருத்துக்களுக்கு அப்பால் மனிதர்கள் முக்கியம் என அவர் நகர்ந்து விடுவார்.
எனக்கும் அவருக்கும் ஜெயமோகன் குறித்து மாற்றுக் கருத்துக்கள் உண்டு - கறுப்பா பயங்கரமானவரா பயங்கர கறுப்பா வகையான முரண்பாடுதான். ஜெயமோகனின் இலக்கியச் செயல்பாடுகள் இலக்கிய, பண்பாட்டுச் சூழலுக்கு ஆபத்தானவை, அவர் ரஷ்யாவின் ஸ்டாலின் ஆற்றிய கொடுமைகளைத்தான் இங்கு நம் சூழலுக்கு ஆற்றுகிறார், எழுத்துப் பங்களிப்பை வைத்து இதை ஏற்க முடியாது என்று நான் நினைப்பேன். இல்லை, ஜெயமோகனின் நடத்தையில் அறம் இல்லை, அவர் மனிதர்களை இழிவாக அறமற்று மாண்பற்று நடத்துகிறார், இலக்கியத் தகுதியை வைத்து அவரது இந்த இயல்பை ஏற்க முடியாது என்பதே அரவிந்தனின் எண்ணம். ஆனால் ரெண்டு பேருமே அவர் கடத்தல் பேர்வழி பில்லாதான் என்பதை ஏற்றுக் கொண்டோம்.
வேறெந்த புனைவெழுத்தாளரையும் விட நாவல் வடிவம் குறித்த ஒரு கதைப் பிரக்ஞை அவருக்கு அதிகம். தன் நாவலின் துவக்கம், முடிவு எப்படி அமைய வேண்டும் எனத் திட்டமிட்டதைப் பற்றிச் சொல்வார். தமிழில் இப்பிரக்ஞையை புனைவெழுத்தாளர்களிடம் அரிதாகவே காண முடியும். நாவல்களைத் தொடர்ந்து எடிட் செய்து அவர் இத்திறனைப் பெற்றிருந்தார். அவர் என் முந்தைய நாவலை எடிட் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அனுப்பியும் கொடுத்தேன். ஆனால் அவருக்கு அதற்கான அவகாசம் இருக்கவில்லை. என்னுடைய அடுத்த நாவல் வித்தியாசமாக இருக்கும், அதை முடித்ததும் அவர் வாசித்துக் கருத்துச் சொல்ல வேண்டும் எனக் கேட்டேன். ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் இல்லை. வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட ஞானபீட விருதைச் "சூழலுக்கு நேர்ந்த அவலம்" எனத் தலைப்பிட்டு அவர் அவுட்லுக் இதழில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று நேற்று பிரசுரமாகி இருக்கிறது. அதைப் படித்தேன். ஆனால் அதைப் பார்க்க அவர் இல்லை.
நான் அவரைக் கடைசியாகச் சந்திக்கையில் அவரிடம் ஒரு சோர்வு வெளிப்படையாகவே தெரிந்தது. அண்மையில், அவருக்கு அறுபது வயதைக் கொண்டாடினார்கள் என்பதெல்லாம் மறந்து போயிற்று. என் கண்ணுக்கு அவர் ஐம்பது வயதுக்காரராகவே தெப்பட்டார். அதனால் அக்களைப்பை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. தூக்கமின்மை போன்ற சிக்கல்கள் கொண்டவர் அல்ல என்றே தோன்றியது. சரியான நேரத்துக்குத் தூங்கப் போனாலும் இல்லாவிட்டாலும் சரியாக நேரத்துக்கு எழுந்து விடும் ஒழுங்கு இருந்தது. ஒருவேளை அவரது இதயம் ரத்தத்தை இறைப்பது குறைந்து போயிருந்ததால் ஏற்பட்ட சோர்வா அது? ஒருவேளை அவர் எங்காவது சில வாரங்கள் ஓய்வுக்குச் சென்று அமைதியாக எழுதிக் கொண்டிருந்தால் அவரது அப்பிரச்சினை தீவிரமாகாமல் கடந்து போயிருப்பாரா? நிலைமை சீராகி இருக்குமா? இப்படி எல்லாம் எண்ணங்கள் என்னைச் சூழ்கின்றன.
மரணம் என்பது காலத்தில் தோன்றும் ஒரு இடைவெளி. அந்த இடைவெளியை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் தவிக்கிறது. நீங்கள் போய் வர வேண்டாம். போகாமல் இங்கேயே இருந்து விடுங்கள்.
அன்று பல்லவியிடம் என்னைப்பற்றிப் பேசும்போது எழுத்தாளராக என்னை மிகவும் பாராட்டி ஒரு வரி சொன்னார். அவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒருபோதும் சொல்லாத மிகையான பாராட்டு அது. ஒரே சமயத்தில், எனக்குக் கூச்சமாகவும் உத்வேகமாகவும் இருந்தது. நாம் அதிக காலத்தைக் கோரும் நாவல் போன்ற ஒரு படைப்பை எழுதும்போது இத்தகைய பாராட்டுகள் அவசியம் என அன்றிரவு எழுதிவிட்டு உறங்கச் செல்லும்போது தோன்றியது. இன்று அதுவே நினைத்துப் பார்க்கையில் பாரமாக எனக்குள் கனக்கிறது. இனி நான் என்னைக் குறித்து எதாவது ஒரு தருணத்தில் பெருமிதம் கொள்ளும்போது அது இருள் சூழ்ந்ததாக மாறும். நீங்கள் அதைச் சொல்லாமலே விட்டிருக்கலாம் அரவிந்தன்.
Comments