முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எது ஜெயமோகனை இப்படி வன்மாஞ்சலி எழுத வைக்கிறது?

 /வாழும் தமிழ் அமெரிக்கா வரை போகாமல் இருந்திருந்தால் அந்த அஞ்சலி குறிப்பிற்கும் பெரியதாக எதிர்வினை வந்திருக்காது. //

- ஒரு ஜெ.மோ ஆதரவாளர்




அமெரிக்கா வரை போவதென்றால் என்ன? அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த இலக்கியப் பரப்பையும் நோக்கிச் செல்வதா? அங்குள்ள மக்களைத் திரும்பிப் பார்க்க வைப்பதா? இல்லையே. அங்குள்ள இவர்களுடைய நண்பர்களையும் அன்பர்களையும் வைத்து கூட்டம் நடத்துவதுதானே? எனக்குத் தெரிந்து வாசக சாலை அமைப்பினர் தொடர்ச்சியாக பெங்களூரில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் நடத்துவதை விட பெங்களூரில் கூட்டம் நடத்துவது பல மடங்கு கடினம். அவர்களுக்கு இத்தனைக்கும் எந்த நிதி ஆதாரமும் இல்லை. வி.பு குழுவுக்கோ பணக்காரர்கள், வலதுசாரி தொழிலதிபர்கள், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு உண்டு. வாசக சாலையிடம் அப்படி ஒன்றுமே இல்லை ஆகையால் அவர்கள் செய்த விசயங்களே ஒரு சாதனைதான். அதற்காக அவர்கள் வாசக சாலை கர்நாடகா வரைச் சென்றுவிட்டது எனக் கோரவில்லை. ஏனென்றால் கர்நாடகாவில் ஒரு தமிழ்க் கூட்டத்தை நடத்தினால் அது கர்நாடக சமூகத்தையோ பண்பாட்டையோ இலக்கியச் சூழலையோ அசைத்ததாகாது. ஆனால் வி.பு குழுவினர் இப்படியெல்லாம் சொல்வார்கள். இதற்கு ஈடான மிகையை, போலித்தனத்தை நாம் பொதுவாக இலக்கிய வெளியில் பார்க்க முடியாது. அதைக் குறிப்பிடவே இதை எழுதுகிறேன். இப்போக்கை நீங்கள் நடப்பு அரசியலில் காண முடியும். ஒரு சின்ன கிராமத்திற்கு சென்று அங்குள்ள மரக்கிளைகளிலும் கம்பங்களிலும் தம் கட்சிக்கொடியை கட்டுவார்கள். ஒரு சிறிய அறையை வாடகையை அமர்த்தி கட்சி அலுவலகம் திறப்பார்கள். மாலையில் ஒன்றிரண்டு பேர்கள் அங்கு இருப்பார்கள். வெளியே கட்சி மாநிலத்தின் கடைக்கோடி வரை பரவி விட்டது என்பார்கள். அவர்களுடைய ஆதரவாளர்கள் எங்கள் தலைவர் வந்த பின்னர் கட்சி அளப்பரிய வளர்ச்சி பெற்றுவிட்டது என்பார்கள். எதிர்க்கட்சிக்கு எங்களைக் கண்டு வயிற்றெரிச்சல், பயம் என்பார்கள். இந்தப் பேச்சை நீங்கள் இலக்கிய வெளியில் காண முடியாது. வி.பு குழுவினரிடம் காணலாம். இலக்கியம் நடைமுறை அரசியலை நோக்கிப் போகிறது என்று நான் ஏற்கனவே எழுதியது இதை வைத்துத்தான். இப்போக்கை மேலும் புரிந்துகொள்ள நீங்கள் ஓஷோவின் ஆசிரம அமைப்பு செயல்பட்ட விதத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவர்களும் ஒரு எதிரொலிக் கூடத்திற்குள் வாழ்ந்தார்கள். அவர்களும் அமெரிக்காவை நோக்கியே படையெடுத்தார்கள். அவர்களும் அரசியல் கட்சியின் செயல்பாடுகளைப் போலி செய்து அரசியலில் நுழைந்து போட்டியிட முயன்றார்கள். ஒப்பற்ற தலைவரைக் கற்பித்து அவரைப் போலி செய்தார்கள். முழுக்க மூளைச்சலவை ஆனார்கள், பிறரையும் செய்தார்கள். அந்த ஆசிரமம் முழுக்க வீழ்ந்து கலைக்கப்பட்ட பின்னர் கூட நடந்த எதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளாமலே இருந்தனர். பொதுவாக இதை கூட்டு உளநோய் என்பார்கள். தம்மையறியாமலே இத்தகைய எண்ணங்கள் இவர்களுடைய உடலிலும் மனதிலும் செயல்படுகின்றன.
அடுத்து அன்னாரின் கருத்துக்கு வருவோம். ஜெயமோகன் ஏற்கனவே எழுதிய பல அஞ்சலிகளுக்கும் இத்தகைய எதிர்வினைகள் வந்துள்ளன. மேற்சொன்னவர் தன் நிம்மதிக்காக அவற்றை மறந்துவிடுகிறார் போலும். அதுவும் அவருக்கு நல்லதுதான். ஆனால் அதனால் ஜெயமோகன் மீதான பொறாமையில் தாக்குகிறார்கள் என்பது உண்மையல்ல. ஜெயமோகனுக்கு மனித உடல், அதன் கீழ்மை, மனித மனம், ஆன்மாவின் மகத்துவம் குறித்து ஒரு இருமை-சார் நம்பிக்கை உள்ளது. இதை அவரது பல கதைகளில் நாம் காண முடியும். இதை ஒரு death fetish, decay fetish என்று சொல்ல முடியும். அதாவது மரணம், பிணம், நோய்மை, குறைபட்டவை மீதான மிகை பாலியல் ஈர்ப்பு. ஊனமுற்றவர்கள் ஜெயமோகனின் மனதை அதிகமாக ஈர்க்கிறார்கள். ஒரு அறையில் லேசாக ஊனத்துடன், சிறு உடல் மாறுபாட்டுடன் ஒருவர் வருகிறார் என வைப்போம். அவருடன் பேசுகிறவர்கள் அவரது ஆளுமை, பேச்சு, கருத்துக்கள், மாண்பு, உணர்வுகளை கவனிப்பார்கள்; ஜெயமோகன் கண்ணுக்கு அந்த மாறுபட்ட உடல் தன்மை மட்டுமே புலப்படும். இதை ரொமாண்டிசைஸ் பண்ணி காதலாக, காமமாகச் சித்தரித்து எசுநாரி கவபாட்டா சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். பின்நவீனத்துவாதிகள் இதை எதிர்-அழகியலாகக் காண்பதுண்டு. ஆனால் குற்றவுணர்விலும் போதாமையிலும் மகிழ்ச்சி காணும் இயல்பு கொண்ட ஜெயமோகன் இதையே அருவருப்பு, துன்பம், கழிவிரக்கம், நசிவு, கீழ்மை என மாற்றி அதில் இன்பம் காண்பார். இது ஒரு ஆளுமைப் பிரச்சினை, மனப்பாங்கு கோளாறு.
இம்மாதிரி விசயங்களை வைத்து எழுதும்போது அவருக்கு பெரிய மனத்திளைப்பு கிடைக்கிறது. அறம், ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கோபம், வீழ்ச்சி போன்ற பின்னணிகளை வைத்து அவர் இந்த fetish ஐ எழுதும்போது அது நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. அவரது "விஷ்ணுபுரத்தில்" பிரம்மாண்டம் குறித்த கவித்துவமான, பிரமிப்பான சித்தரிப்புகளில் இதே fetish உண்டு. "ஏழாம் உலகம்" இதற்குச் சிறந்த உதாரணம். அதை ரசிக்கும்போது நமக்குள் தூண்டப்படும் fetish இன்பத்தை அவர் இலக்காக்குகிறார். ஆனால் அஞ்சலி எனும் பெயரில் வன்மாஞ்சலி எழுதும்போது இதெல்லாம் அப்பட்டமாகத் தெரிந்து போகிறது, அருவருப்பாக நம் முகத்தில் வந்து அறைகிறது. மேலும் தனிமனித மாண்பு மீதான தாக்குதலாகவும் இது மாறுவதால் பலரும் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏனென்றால் இதை நம் சட்டமே நமக்கு உத்தரவாதம் செய்கிறது. இந்த அஞ்சலியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றம் போனால் ஜெயமோகன் சிக்கிக் கொள்வார். அவரது அதிர்ஷ்டம் இதுவரைக்கும் அப்படி நடக்கவில்லை. ஆகையால் வாசகர்களின், சக-எழுத்தாளர்களின் எதிர்வினை மிகவும் எதிர்பார்க்கத்தக்கதே. ஜெயமோகன் இதே பாணியில் மனுஷ்ய புத்திரனை அவமதித்து எழுதிய கட்டுரையைக் கொண்ட நூல் வெளியானபோது அம்மேடையில் வைத்து சாரு அதைக் கிழித்து எறிந்தாரே அதுவும் இத்தகைய தனிமனித மாண்பின் மீதான தாக்குதலை எதிர்க்கவே. இதற்கு ஒரு நீண்ட மரபு உள்ளது. ஜெயமோகனின் மேற்சொன்ன fetish தீராதவரைக்கும் அல்லது அவர் அதை தனக்குள் புதைக்காத வரைக்கும் இம்மாதிரி எதிர்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கும்.
அந்த வி.பு ஆதரவாளர் அடுத்து இவ்வாறு கூறுகிறார்:
//அவர் செய்யும் சிறிய விஷயங்களின் மேல் கொள்ளும் வன்மம் அந்த பெரிய விஷயங்கள் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று நேரடிபொருள் வந்துவிடுகிறது.//
சிறிய விசயம் - பெரிய விசயம் என எப்படி முடிவு செய்கிறார்? ஒன்று மிகப்பெரிய சாதனையாக இருப்பதால் அதனுடன் ஒப்பிடுகையில் ஜெயமோகனின் குணக்கேடு சிறிய விசயம் என்கிறார். என்னால் முதலில் இந்த 'பெரிய விசயத்தையே' ஏற்க இயலாது. அது ஒரு பெரிய ஊழல், பெரிய சீரழிவு என்பேன். இதை விளக்கி பல கட்டுரைகளை நான் முதன் முதலாக வி.பு கூட்டத்தின் மேடையில் ஏறிப் பேசி அங்குள்ள பிரச்சினைகளை நேரடி அனுபவத்தில் கண்ட நாளில் இருந்தே எழுதியிருக்கிறேன். என்னுடைய இணையதளத்தில் நீங்கள் தேடிப் படிக்கலாம் (அவர்கள் செய்த தவறே என்னை அழைத்ததுதான்.). விஷ்ணுரம் கூட்டங்களில் பிரச்சினை அவை பேச்சு சுதந்திரத்துக்கு, சிந்தனைச் சுரந்திரத்துக்கு எதிரானவை, அவை சமகாலச் சிந்தனைகள், தத்துவங்களுக்கு எதிரானவை, எல்லாவற்றையும் பழமையான, நவ-செவ்வியல் கருத்துக்களாகச் சுருக்கிக் கொள்கின்றன என்பது. எல்லா விதங்களிலும் வி.பு ஒரு அரசியல் கட்சியைப் போன்றே செயல்படுகிறது. ஒற்றைப்படையான எண்ணங்கள், மையவாதப் பார்வை ஒரு பக்கமும் அமைப்பற்ற அமைப்பு எனும் போக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. அதாவது ஆர்.எஸ்.எஸின் பல்வேறு கிளைகளுக்கு எந்த நேரடித் தலைமையும் இராது. அவற்றை ஆரம்பிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தலைவரே. ஆனால் அவர்கள் அவர்களுக்கு இடையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மையத்தலைமையை, அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பதில் மௌன உடன்படிக்கை இருக்கும். அதனாலே அவர்கள் இலக்கியத்தின் பெயரில் நடத்துபவை ஒரு 'கலாச்சார அரசியல்' இயக்க நிகழ்வாகின்றன. அவர்களுடைய நோக்கம் இலக்கிய, அறிவியக்கத்தை ஊடுருவுவது. அவ்விதத்தில் ஜெயமோகன் இலக்கியத்தின் பால் ஈடுபாடு மிகுந்த ஒரு அரசியல்வாதி மட்டுமே. அவர் இலக்கியமா (தனித்து இயங்குவது, முரண்பட்டுச் சிந்திப்பது, சுயபரிசீலனையில் சதா இருப்பது, தன் கற்பனையைத் தன் தன்னிலையாகக் கருதுவது, தன் தேகத்தைத் தியாகம் செய்வது, தன் சுயத்தை அழிப்பது) தன் அரசியலா (அமைப்புசார் செயல்பாடு, கருத்தியலைப் பரப்புவது, கூட்டம் சேர்ப்பது, தன் தன்னிலையை மரபின் நீட்சியாகக் காண்பது, உடலைப் பேணுவது, எப்போதுமே தன் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது) என்று வந்தால் அரசியல் பக்கமே நிற்கிறார். ஜெயமோகன் இலக்கியவாதியே அல்லர் என்பதே என் பார்வை. அவர் இலக்கியத்தைத் தன் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தும் ஒரு பண்பாட்டு அரசியல்வாதி. அவரது பல கதைகளையும் நாவல்களையும் இன்றும் மீள்வாசிப்பு செய்தால் அவற்றிலுள்ள அரசியல் பிரச்சாரம் அம்பலப்படும். அவரே அதை மறைக்க உத்தேசித்ததில்லை. ஒவ்வொரு முறையும் நாட்டில் உள்ள வெகுமக்கள் அரசியல் போக்குகளை ஒட்டி அவர் தன் அரசியல் நிலைப்பாட்டை சிறியே மாற்றுவார். அது ஒரு நாவலாகும். நாம் பொதுவாக இடதுசாரி படைப்பாளிகளையே பிரச்சார எழுத்தாளர்கள் என்கிறோம். ஜெயமோகனும் வலதில் இருந்து தோன்றிய அத்தகைய ஒரு பிரச்சாரகர்தான். அவரது புனைவெழுத்தின் நுட்பங்களை நாம் வியக்கலாம், ஆனால் அவருக்கு அது பொருடல்ல, தன் அரசியலே முக்கியம் என்பதை அவரது நடத்தைகளில் காணலாம். ஜெயமோகன் தீடிரென இப்படி ஆகவில்லை, எனக்கு அவரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். அப்போதிருந்தே அவரது கூட்டங்களில், முகாம்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் அப்போதிருந்தோ அதற்கு முன்பிருந்தோ அவர் இத்தகைய முயற்சிகளில்தான் இருந்தார் என்பேன். அவரது அளப்பரிய ஆற்றலில் நாம் காண்பது ஒரு அரசியல் செயல்பாட்டாளாரைத்தான், இலக்கியவாதியை அல்ல.
இடதோ வலதோ அது இங்கு என் பிரச்சினை இல்லை. ஜெயமோகன் எந்த கட்சியை சித்தாந்தத்தை ஆதரித்தாலும் அது எனக்கு பொருட்டில்லை. அவர் முழுமையாக இலக்கியத்தில் இல்லை, இலக்கியத்தை வேறெதெற்கோ பயன்படுத்துகிறார், பயன்படுத்தி இலக்கியப் போக்குகளின் திசையையே மாற்றுகிறார் என்பதே என் பிரச்சினை.
இதனாலே ஜெயமோகன் செய்வது பெரிய செயல் அல்ல, அது இலக்கியச் செயலே அல்ல என்கிறேன். அது இலக்கிய மொழியில் நடத்தப்படும் அரசியல் நிகழ்வு மட்டுமே. அதைக் குறித்து பிறருக்கு அசூயையும் கசப்பும் இல்லை எனச் சொல்கிறேன். அதை ஒரு பெரிய செயல் என்று வலதுசாரி, மையவாத கட்சிக்காரர்களும் கருதலாம். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே ஜெயமோகனின் அதே தளத்தில்தான் உள்ளனர். அவர்களும் 'அரசியல்தான்' முக்கியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...