முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு விபரீதக் கதை


 

ஒரு ஊரில் பெரிய அளவில் வளர்ச்சியில்லை. வறட்சியான பூமி, அதில் கொஞ்சம் விவசாயம், இருக்கிற பணத்தையும் உணவையும் வைத்து மக்கள் அங்கு வாழ்கிறார்கள். அங்கு எந்த பெரிய முன்னேற்றங்களும் வருவதில்லை. அதே நேரம் பெரிய வறுமையும் இல்லை. அவர்களுக்குப் பெரிய கவலைகளும் இல்லை. தன்னிறைவாக வாழ்கிறார்கள். அந்த ஊர் இளைஞர்களும் நவீன வேலைகளையும் வசதிகளையும் தேடி வேறு ஊருக்குப் போகிறார்கள். பருவம், வெக்கை, மழை, சடங்குகள், காலம் என எதுவுமே அங்கு மாறுவதில்லை. அப்படி இருக்க ஒருநாள் அங்கு ஒரு குஜராத்தி வருகிறார். அவர் இவர்களுக்கெல்லாம் செயலூக்கம் இல்லையே, சுயமுயற்சி இல்லையே என நினைக்கிறார். அவர் ஒரு வட்டிக் கடையை ஆரம்பித்து அங்குள்ளவர்களுக்கு ஆத்திர அவசரத்துக்கு நகை அடமானத்துக்கு கடனுதவி செய்கிறார். அவரிடம் ஓரளவுக்குப் பணம் சேர தன் ஊர்க்காரர்களை அழைத்து கூட வைத்துக்க் கொள்கிறார். அடுத்து சின்னச்சின்ன கடைகளை ஆரம்பிக்கிறார். அவர் தன் ஊர்க்காரர்கள் கடை வைக்க உதவினால் அவர்களுக்குப் பண உதவியும் ஆலோசனைகளும் தந்து அவர்கள் நிலைபெற உதவுகிறார். வியாபாரம் ஜோராக நடக்கிறது. வெளியூர்களில் இருந்து முதலீட்டைப் பெற்று பெரிய வணிக நிறுவனங்களை ஆரம்பிக்கிறார். மெல்ல மெல்ல அந்த ஊர்க்காரர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த ஊரை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் தம் மொழியில் பேசுவது, கோயில் கட்டுவது, கொண்டாட்டங்கள் நடத்துவது, தமக்கென ஒரு ஊரை உருவாக்குவது, தெருவுக்கு தம் மொழியில் பெயரிடுவது என அதகளம் செய்கிறார்கள். தம் கோயில் விழாவின் போதும், திருநாட்களின் போதும் கறிக்கடைகளைத் திறக்கக் கூடாது என்றவர்கள் போகப் போக புலால் உண்பதே பாவம் எனப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகிறார்கள். தம் மதமும் நடத்தையுமே சரி, பிறர் பிற்போக்கானவர்கள் என்று பேசுகிறார்கள். இப்போது சொந்த ஊர்க்காரர்களுக்கு அசூயையாகிறது. அவர்கள் எதிர்க்க இந்த வியாபாரி அவர்களிடம் பேசுகிறார்: "இதோ பாருங்கள் நான் முதலில் வரும்போது இந்த ஊரில் ஒன்றுமே இல்லை. உங்களை யாருமே மதிக்கவில்லை. நான் பூஜ்யத்தில் இருந்து ஒரு கட்டமைப்பை, கலாச்சாரத்தைப் புதிதாக உருவாக்குறேன். இந்த ஊருக்கு உலக வரைபடத்தில் ஒரு இடத்தை உருவாக்கி இருக்கிறேன். நான் வந்த பின்னரே பொருளாதார வளர்ச்சி இங்கு அதிகரித்திருக்கிறது. உங்களிடம் க்ரியா சக்தி இல்லை. எங்களிடம் அது அதிகமாக உள்ளது. நீங்கள் சோம்பேறிகள், நாங்கள் கடும் உழைப்பாளிகள். அதனாலே உங்களது நகைகள் பலவும் என்னிடம் அடகில் உள்ளன. உங்களில் பலரும் என்னிடம் வாங்கிய கடனைக் கூட இன்னும் திருப்பவில்லை. ஆனால் என்னை எதிர்க்க மட்டும் செய்கிறீர்கள். உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் உள்ளதா? கேவலமாக இல்லையா? எங்களுடன் இணக்கமாக உள்ளவ உங்களில் சிலருக்கு எவ்வளவு நல்ல வாய்ப்புகளைக் கொடுத்து மேடையில் அமர வைத்து அவர்களை அலங்கரித்திருக்கிறோம் எனப் பாருங்கள். உங்களால் இத்தனை நாளாய் அது முடிந்திருக்கிறதா? இல்லையே. ஒன்று அவர்களைப் போல இருங்கள் அல்லது வாயை மூடிட்டுப் போங்க."

இந்தப் பிரச்சினையே முடியாதபட்சத்தில் இன்னொரு பிரச்சினை ஆரம்பிக்கிறது. ஊரில் உள்ள கருவேல மரங்களை அரசும் தன்னார்வலர்களுமாக அகற்ற கருவேல மரங்களின் சங்கத்தினர் போராடுகிறார்கள். கருவேல மரங்கள் வந்து சாலையை ஆக்கிரமிக்கின்றன. அம்மரங்களின் தலைவர் வந்து கேட்கிறார்: "உங்கள் ஊரில் பஞ்சம் நிலவிய போது உங்கள் மண்ணைச் செழிக்க வைக்கவும் விறகுக்காகவும் என்னைக் கொண்டு வந்து வளர்த்தீர்கள். நாங்கள் எங்கள் திறமையாலும் உழைப்பாலும் வளர்ந்தோம், பெருகினோம். உங்கள் மண்ணின் மரங்கள் சோம்பேறிகள், சத்தில்லாதவர்கள், சின்ன வறட்சிக்கே பொசுங்கி விடுகிறவர்கள். அவர்கள் அழிந்தார்கள். இது எங்கள் தவறா இல்லையே. நாங்கள் இந்த நாடு முழுக்கப் பரவியுள்ளோம். எங்களைப் பாராட்டாமல் எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளாமல் அழிப்பதால் எதாவது பயனுண்டா? இப்போது நாங்களே உங்களுக்கு அதிகமான நிழலைத் தருகிறோம், குருவிகள், புலம்பெயர் பறவைகளுக்கு கூடுகட்ட கிளைகளைத் தருகிறோம். ஏழை எளியோருக்கு விறகைத் தருகிறோம். எங்களை ஒழிப்பது அறமா? எங்களை நீங்கள் நியாயமாக விழுந்து கும்பிட வேண்டாமா? எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டாமா? எங்களைக் கேவலமாகப் பேச உங்களுக்கு கேவலமாக இல்லையா? உங்களைப் போன்ற ஈனப்பிறவிகளை எண்ணி வெட்குகிறோம்! அடச்சே! எங்களை எதிர்த்தால் இனி இந்த ஊரே பற்றி எரியும். உங்கள் பூமி பாலைவனமாகும். நாங்கள் உலகம் முழுக்கப் பரவி இருக்கிறோம். மண் முழுக்க, காற்று முழுக்க எங்கள் விதைகளே."
இப்போது யோசியங்கள்: அவர்கள் அந்த ஊருக்குச் செய்தது நல்லதா அல்லது கேடா? உங்கள் கருத்தென்ன?
மேற்சொன்ன கதைதான் ஓஷோ அமைப்பின் கதையும். அதுதான் நம் இலக்கியச் சூழலில் உள்ள சர்வாதிகார ஒற்றை மைய அமைப்புகளின் கதையும். இவர்கள் இலக்கியச் சூழலில் வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி நிதியைக் கொண்டு வந்து பெரிய கூட்டங்களை நடத்துவது, பரிசளிப்பது, அதைக் கொண்டு எதேச்சதிகாரம் செய்வது, கண்காணிப்பு மையங்களை உருவாக்குவது வளர்ச்சியா பாதகமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...