Skip to main content

கோகிலாவின் அம்மா



அம்மா கணினியில் தலைவிட்டு தேடிக் கொண்டிருந்தாள். கோகிலா தன் குட்டிப் பின்னலை வைத்து விளையாடியபடி டி.வி சேனல்களை மாற்றினாள். கொஞ்ச நாளாக அவள் கார்டூன் தமிழ் பேச ஆரம்பித்திருந்ததால் அம்மா அவளை வளர்ந்தோருக்கான சேனல்கள் பார்க்க சொல்லி இருந்தாள். கோகிலாவுக்கு சீரியல்கள் பிடித்தன.
அதில் அவள் அம்மாவை போல பல அம்மாக்கள் வந்தார்கள். அழகாக டிரஸ் பண்ணி ஓவர் மேக்கப், ஒட்டியாணம் உட்பட ஏகப்பட்ட நகை சகிதம் தோன்றினார். அம்மாவை போல் அவர்களும் பல சமயம் அழுதார்கள். ஆனால் பவிசாக அழகாக. தன் அம்மா மட்டும் இவர்களைப் போலல்லாது அழும் போது ஏன் வெளிறிப் போன நைட்டியும் எண்ணெய் வடியும் முகமுமாக தெரிகிறாள் என அவளுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கோகிலா அழகாக ஆடையணிந்தவர்களைப் பார்த்தால் சட்டென்று ஒட்டிக் கொள்வாள். அழுக்கானவர்களைப் பிடிக்காது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவளது நிஜ பெற்றோர்கள் மிக பகட்டாக இருந்திருப்பார்கள் என அவள் அம்மாவுக்கு தோன்றும், ஆனால் வெளியே சொல்ல மாட்டாள்.

கோகிலா கொஞ்ச நாளுக்கு முன் அநியாயத்துக்கு பொய் சொல்ல துவங்கினாள். பள்ளிக்கு மட்டம் போட வயிற்று வலி என்று அழுவாள். சரி என்றால் கொஞ்ச நேரத்தில் லெய்ஸ் சிப்ஸ் கொறித்தபடி டீ.வியில் குத்து டான்ஸ் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அம்மாவின் கவனத்தை ஈர்க்க அவள் எப்போதும் சத்தமாக டீ.வியில் குத்து டான்ஸ் வைத்து போதாதற்கு இடுப்பை வெட்டி வெட்டி ஆட்டம் வேறு போடுவாள். அவளுக்கு பொய் சொல்வதில் கூச்சமே இல்லை என்பது மட்டுமல்ல தான் பொய் சொல்லுகிறோம் என்பதை அவளே வெளிப்படுத்தியும் விடுவாள். அப்போது அவள் அம்மாவுக்கு சிரிப்பாகவும் வருத்தமாகவும் ஒரே நேரத்தில் வரும். கோகிலா பின்னர் வகுப்பில் இருந்து வாசனை ரப்பர், மேஜிக் ஸ்கேல் போன்றவற்றை திருடிக் கொண்டு வரத் துவங்கினாள். ஒருநாள் வீட்டில் இருந்து பாதாம் மலாய் இனிப்புகளை எடுத்துக் கொண்டு போய் விட்டாள் எத்தனை கேட்டும் எடுத்ததாய் ஒத்துக் கொள்ளவில்லை. பின்னர் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு அவள் பங்கிட்டு தின்றதை அறிந்த போது அம்மாவுக்கு அது சுட்டியாகத் தான் தெரிந்தது. ஆனால் சற்று வருத்தமாகவும் இருந்தது. இந்த திருட்டு புத்தி அவளது ரத்தத்தில் இருக்குமோ என்ற பயம் அவளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

கோகிலாவின் அம்மா சந்தியா தத்தெடுப்பதற்காக விண்ணப்பித்த போது தோற்றம் நிறம் முக அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்பவே குழந்தையை தேர்ந்தார்கள். நாற்பது வயதுக்கு மேல் திருமணக் கனவை ஒரேயடியாக துறந்து விட்டிருந்தாள். ஆனாலும் குடும்பத்துக்குள் சம்மதிக்க வைக்க அநாயச பிரயத்தனம் தேவைப்பட்டது. விதவையான அக்கா அவளது முழுஆதரவையும் தருவதாக உறுதி அளித்தாள். அம்மா “நம்ம குலம் கோத்திரத்துக்குள்ளே இருந்து ஒரு நல்ல குழந்தையா பாத்து எடுத்தா சரி என்ற நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள். சந்தியாவுக்கு அதெல்லாம் சாத்தியமில்லை என்று தெரிந்தாலும் பேருக்கு சரி என்றாள். அம்மா தன் உறவினர் தெரிந்தவர் இடம் எல்லாம் கோகிலா தூரத்து சொந்தத்தில் இருந்து தத்தெடுத்த குழந்தை என சொல்லி வைத்தாள்.

இப்படியெல்லாம் திட்டமிடல் இருந்தாலும் குழந்தை ஒரு தெய்வீக பந்தம் காரணமாகவே தன்னிடம் வந்தது என சந்தியா நினைத்தாள். கோகிலாவை குழந்தைகள் இல்லத்தில் பார்த்த அந்த நிமிடங்கள் அவளுக்கு துல்லியமாக நினைவிருந்தன. பார்த்தவுடன் நெஞ்சில் ஒரு பரிதவிப்பு, ஒரு ஒட்டுதல், நீண்ட நாள் பிரித்தவரை பார்க்கையில் போல இதயம் வேகமாக என்று அடித்தது. கைகால்கள் பரபரத்தன. இவள் தான் தன் குழந்தை என உள்ளுணர்வு சொல்லியது.

கோகிலா இப்போது டி.வி சத்த்தத்தை அதிகப்படுத்தி தரை அதிர குதித்தாள். அம்மா போய் அறைக்கதவை சாத்தினாள். அவள் கதவைத் தட்டி “அம்மா பசிக்குது என்றாள், தன் சின்ன வாயை கோணியபடி. “இப்போதானேடி சாப்பிட்டே என்று சலித்தபடி சாதம் பிசைந்து உருளைக்கிழங்கு வறுவலுடன் ஊட்டினாள். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டி “அம்மா தூக்கம் வருது என்றாள், முழங்காலையும் தலையையும் சொறிந்தபடி. சந்தியாவுக்கு அவசரமான வேலை இருந்தது. ஆனாலும் கணினியை அணைத்து மெத்தையை தயார் பண்ணி கோகிலாவை படுக்க வைத்து கூட படுத்துக் கொண்டாள். கொஞ்ச நேரமாவது கூடப் படுத்தால் தான் அவள் தூங்குவாள். அப்படியும் தூங்காவிட்டால் கதை சொல்ல வேண்டும்

கோகிலாவுக்கு பிரியமான கதை அவளை தத்தெடுத்த கதை. அதை சொன்ன கொஞ்ச நேரத்தில் உம் கொட்டியபடியே தூங்கி விடுவாள். அது உண்மையில் கதையே அல்ல. தத்தெடுக்கும் போது ஆலோசகர்களும் அவளது நண்பர்களும் கோகிலா ஒரு தத்துக்குழந்தை என்ற உண்மையை விரைவிலே சொல்லி வளர்ப்பது உசிதம் என்று அறிவுறுத்தினார்கள். அப்படித் தான் உண்மையை அவள் ஒரு கதை போல் கோகிலாவுக்கு சொல்லி புரிய வைத்தாள். எதிர்பார்த்தது போல் கோகிலா அதிர்ச்சி அடையவோ அழவோ இல்லை. அவளுக்கு அந்த கதை மிகவும் பிடித்து போனது. போரடிக்கும் போதெல்லாம் அந்த கதையை சொல்லக் கேட்பாள். சந்தியாவுக்கும் உண்மையை அவள் சுலபத்தில் ஏற்றுக் கொண்டு விட்டதில் மகிழ்ச்சி. அன்றும் கதை சொன்னாள்:
“அப்போ கோடைக்காலம் துவங்கி இருந்தது. ஒரே வெக்கை, வறட்சி. ஆனால் அன்னிக்கு சட்டுன்னு மழை பெஞ்சுது. நான் குடை எடுத்துட்டு போகலையா நல்லா நனைஞ்சுட்டேன். புனித பீட்டர் குழந்தைகள் இல்லம். பொதுவா உள்ளே போய் குழந்தைங்களை பார்க்க விட மாட்டாங்க. ஆனால் நிர்வாகிகள் எனக்கு தெரிஞ்சவங்க என்கிறதுனால அலவ் பண்ணுனாங்க. நிறைய குழந்தைங்களை பார்த்தேன். கொஞ்சம் குழப்பமா பயமா இருந்துது. அப்போ என் கூட வந்த அம்மா உன்னை காட்டினாங்க. ஒரு ஓரமா உட்காந்திருந்தே. நீ அப்போ நல்ல குண்டா புஸ்புஸ்ஸுன்னு இருப்பே.
“நிஜமாவா அம்மா. ஆனா இப்போ இவ்வளவு ஒல்லியா ஆயிட்டேன் இல்லியா
“ஆமா
“எனக்கு எவ்வளவு வயசு அம்மா அப்போ?
இவையெல்லாம் அவள் வழக்கமாக கேட்கிற கேள்விகள் என்பதால் சந்தியா எந்திரத்தனமாக பதில் சொல்லி வந்தாள்.
“ஒண்ணேகால் வயசு
“உம். சொல்லு
“நீ என்னைப் பார்த்து சிரிச்சே. சின்னதா அழகா இதே மாதிரி ஒரு தெய்வீக சிரிப்பு. நான் உன் கன்னத்துல தொட்டு நெத்தியை தடவி விட்டேன். திரும்பி நடந்தப்போ நீ என் முந்தானையை பிடிச்சுக் கிட்டே. அம்மான்னு கூப்பிட்டே. எனக்கு கண்ணில தண்ணி தாரை தாரையா கொட்டுது. நம்பவே முடியல. முழங்காலிட்டு அமர்ந்து உன்னையே பார்த்தேன். நீ திரும்பவும் அம்மான்னே. உடனே உன்னை அள்ளியெடுத்து வீட்டுக்கு வந்திட்டேன்....
கோகிலா “அப்புறம் சொல்லு என்று கேட்டபடியே தூங்கிப் போனாள். சந்தியா கண்ணின் ஓரம் துடைத்துக் கொண்டே அவளை அணைத்தபடி தூங்க முயன்றாள்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் கோகிலா பள்ளி விட்டு அழுதபடி வந்தாள். “யாராவது திட்டினாங்களா?, ஸ்கூல்ல மிஸ் அடிச்சாங்களா? என்ன கேட்டாலும் பதில் சொல்லவில்லை. அவள் பாட்டுக்கு உம்மென்ற முகத்துடன் நொறுக்குத்தீனி தின்று காப்பி குடித்தாள். முகம் அலம்பி தலைவாரி விட்ட போதும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் சந்தியா தன் அறைக்கு சென்று கணினிக்குள் தலை விட ஆரம்பித்ததும் டி.வி சத்தத்தை குறைத்து வைத்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். இது ஏதோ புது உத்தி என்று தான் சந்தியா முதலில் நினைத்தாள். ஆனால் கோகிலா வேறென்றும் இல்லாதது போல் அப்படி அழுதாள். அவளை தேற்றவோ தடுக்கவோ முடியவில்லை. முகம் வீங்கி கண்கள் சிவந்து போயின. ஒரு கட்டத்தில் சந்தியாவும் அவளுடன் சேர்ந்து அழத் துவங்கினாள். அப்போது தான் கோகிலா அழுகையை குறைத்தாள். அம்மாவை அரவணைத்து “அழாதே அம்மா என்று தேற்றினாள். மெல்ல மெல்ல காரணம் வந்தது.

அவர்களின் உறவினர் பையன் ஒருவன் கோகிலாவின் வகுப்பில் புதிதாக சேர்ந்திருந்தான். அவன் மூலமாக கோகிலா தத்துக்குழந்தை என்ற சேதி வகுப்பில் பரவ மாணவர்கள் அவளை கேலி பண்ணத் துவங்கி இருக்கிறார்கள். நெருங்கின தோழிகள் அவளை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மறுக்க கோகிலாவால் தாங்க முடியவில்லை.

சந்தியா அவளுக்கு பிடித்தமான பிட்சா ஹட்டுக்கு அழைத்து சென்றாள். போகும் வழியெல்லாம் “ஏன் நீ என் நிஜ அம்மா இல்ல? என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். “நீ தான் என் நிஜ அம்மான்னு சொல்லும்மா என்று கெஞ்சினாள். சந்தியாவால் இதை எப்படி சமாளிக்க என்றே தெரியவில்லை.

சந்தியா பள்ளிக்கு சென்று பேசி பிரச்சனையை ஒருவாறு சரி செய்தாள். கோகிலாவும் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல துவங்கினாள். இரவுணவு ஆனதும் அம்மாவை வந்து கட்டிப் பிடித்து படுத்துக் கொண்டு கதை சொல்லக் கேட்பாள். என்னென்னமோ கதை சொன்னாலும் “ம்ஹும் என்னை தத்தெடுத்த கதை சொல்லு என்பாள். சந்தியா முதலில் இருந்து துவங்குவாள்.
(நன்றி: தாமரை, ஜூன் 2012)

Comments

Unknown said…
i liked this story and read by me many times

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...