முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதற்காக எழுதுகிறோம்?



 தமிழில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி கேட்கும் போது எனக்கு அண்ணாமலை ரஜினிகாந்த நினைவுவருவார். அதை விடுங்கள்! உண்மையான வெற்றி எது? அதிக வாசகர்களா? பணமா? பிரபலமா? அல்லது சாஸ்வத படைப்புகளை உருவாக்குவதா?

முதலில் கடைசிக்கு வருவோம். 18 வருடங்களுக்கு முன் ஜெயமோகன் என்னிடம் ஒன்று சொன்னார்: “இன்னும் நூறு வருடங்களுக்கு பின்னும் தமிழில் நிலைக்க போகிற எழுத்தாளர்கள் இருவர். ஒன்று நான், இன்னொன்று எஸ்.ரா. எஸ்.ராவுக்கும் இது தெரியும் என நினைக்கிறேன்”. அப்போது இருவரும் சினிமாவிலோ விகடனிலோ இணையத்திலோ பிரபலமாகவில்லை. இலக்கிய அங்கீகாரம் தான் இருந்தது. ஆனால் புனைவில் தனித்தடங்களை ஆழமாக பதித்தவர்கள் என்ற முறையில் இப்படி கூறுகிறார் என கணித்தேன். பிறகு அவர் சொன்னது தான் விசேசம்: “ஒரு எழுத்தாளனுக்கான மிகப்பெரிய பேறு அவன் மரணத்துக்கு பின்னரும் நிலைத்து இருக்கப் போகிறான் என்பது”. இந்த கூற்றில் ஒரு அடிப்படை முரண் உண்டு. செத்த பிறகு நம்மை வாசித்தாலோ கொண்டாடினாலோ நாம் அறியப் போவதில்லை. அதில் என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது?
காலத்தில் நிலைக்கப் போகிறோம் என்கிற உணர்வு ஒரு மனிதனுக்கு ஒரு ஆழமான திருப்தியை தருமா? தெரியவில்லை. நான் அறிந்தவரையில் நம் பண்பாட்டுக்கு ஒரு முக்கியமான பணி ஆற்றுகிறோம், ஒரு பெரிய கலாச்சார பணியின் பகுதியாக இருக்கிறோம் எனும் உணர்வு பெரும் உவகையை, அமைதியை ஒருவருக்கு தரலாம். க.நா.சுவும், சு.ராவும் தாம் வாழ்கிற காலத்திலேயே அதை உணர்ந்திருக்கலாம். அவர்கள் அளவுக்கு வீச்சுடன் இயங்காதவர்களும் கூட அந்த ஆத்ம திருப்தியில் இருந்திருக்கலாம்.
நிறைய வாசகர்களைப் பெற்றவர்களுக்கு வருவோம். இணையத்தில் பிரபலமாக நாளுக்கு முவாயிரத்துக்கு மேல் ஹிட் வாங்கிற நபர்களை சொல்லலாம். நிறைய பிள்ளைகள், அத்தனையும் தறுதலைகள் என்கிற காந்தாரியின் நிலைதான் இந்த பிரபல எழுத்தாளனுக்கு. ஆனால் பரவலாய் எழுத்தை கொண்டு சேர்க்கிறோம் என்கிற மகிழ்ச்சி இருக்கும். அது ஒரு பாதுகாப்புணர்வைத் தரும். மேலும் எழுத்தின் முக்கிய நோக்கம் உரையாடல் தானே. தகவலை அல்லது கருத்தை கடத்துவது தானே. ஆனால் இந்த எழுத்தாளர்கள் சராசரி மனிதனை பிரதிபலிப்பவர்களாக இருப்பார்கள். இளம்பெண் ஜாலியாக கட்டித் தூங்குகிற டெடிபேராக வாழ்வார்கள். இளம்பெண்ணுக்கு ஜாலி, டெடிபேருக்கு? அது ஒன்றுமே அறியாது, அதனால் ”ஒன்றுமே” செய்ய இயலாது.
 பிரபல எழுத்தாளன் தெரிந்தோ தெரியாமலோ சராசரி உணர்வுகளை, எண்ணங்களை பிரதிபலித்தாக வேண்டும். மோடி பிரபலம் என்றால் அவரை ஆதரிப்பான். பிரச்சனைக்குரிய கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பது நலம் எனும் சராசரி மனநிலையை கொண்டிருப்பான். மக்கள் நம்புவதையே தானும் நம்ப வேண்டும் என நினைப்பான். இத்தகையவர்கள் வாசகர்களின் சிந்தனையை மயிலிறகால் வருடுவார்கள். ஆனால் மாற்றுசிந்தனை தரமாட்டார்கள். மக்கள் எண்ணப் போக்கில் தாக்கம் செலுத்த மாட்டார்கள். விளைவாக மக்கள் மனநிலை மாறும் போது மாறி விடுவார்கள். மக்களோடு இருப்பார்கள், மக்களோடு போய் விடுவார்கள். ரஜினிகாந்த் அளவுக்கு போக வேண்டியதில்லை. இன்றும் பாண்டியராஜ், பாக்கியராஜுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சரத்குமார், ராம்கிக்கு இல்லை. இரு தரப்பினரும் வெற்றியை தந்தவர்கள். ஆனால் போக்கில் சிறு மாற்றத்தை ஏனும் கொண்டு வராதவர்களை மக்கள் மறக்க சாத்தியம் அதிகம். இது இயல்பாக நடக்க வேண்டும் என்பது வேறு விசயம்.
நிறைய வியாபாரம் ஆகிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உதாரணமாய் கிழக்கு பதிப்பக எழுத்தாளர்கள் சொக்கன், செல்லமுத்து குப்புசாமி, யுவகிருஷ்ணா இவர்களின் எழுத்து வருமானம் தெரியாது. ஆனால் சம்பாதிக்கிறார்கள். ஆனால் கிழக்கில் மேலும் மாதம் பத்தில் இருந்து இருபது வரை ராயல்டி வாங்கும் சில எழுத்தாளர்கள் உண்டென்று கேள்விப்பட்டேன். வருமானம் இதற்கு மேலும் கூட இருக்கலாம். பா.ராகவன் ஒரு நட்சத்திர உதாரணம். இதுவும் நல்லது தான். முழுநேர எழுத்தாளராய் இருப்பது ஒரு பாக்கியம். இணைய பிரபல எழுத்தாளர்களை விட எனக்கு இவர்களை சற்று அதிகம் பிடிக்கும். சோம்பல் இல்லாமல் நிறைய தயாரிப்புடன் சரளமாய் எழுதியிருப்பார்கள். போலித்தனம் இராது. சொக்கனுக்கு ஒரு தனி ஸ்டைல் உண்டு என நினைக்கிறேன். 2005இல் படிக்கையில் சொக்கனின் நூல்களை வாங்கி மாலையில் எங்காவது பூங்காவில் அமர்ந்து இருட்டுவதற்குள் படித்து முடித்து விடுவேன். சச்சின், சார்லி சாப்ளின் ஞாபகம் இருக்கின்றன. குப்புசாமியின் பிரபாகரன் பற்றின நூலும் தேவையானது. அதில் இருந்து எடிட்டர் முன்னூறு பக்கங்களை வெட்டி விட்டதாக கேள்விப்பட்ட போது “அட ஒரு கிளாசிக்காக வர வேண்டிய நூலை பிட்டு படம் போல் ஆக்கி விட்டார்களே” என வருத்தம் ஏற்பட்டது. ஒரு இரவில் தொடர்ச்சியாக இந்த நூலை படித்தது நல்ல அனுபவம். பா.ராகவனின் “டாலர் தேசம்” மிக வியப்பான ஒரு நூல். அமெரிக்க வரலாறு குறித்த ஒரு ஒட்டுமொத்த புரிந்துணர்வு இல்லாமல் அது போல் தன்னம்பிக்கையாக விரிவான சித்திரம் வரைய முடியாது. நான் அலுவலகத்துக்கு விடுப்பெடுத்து கீழே வைக்காமல் படித்த மிகச்சில குண்டு புத்தகங்களுள் ஒன்று.
சரி இவற்றி எவ்வகை எழுத்து உன்னதமானது? இது முழுக்க முழுக்க எழுத்தாளனின் தீர்மானம் தான். என் நண்பர் ஒருவர். திறமையான கூர்மையான கவிஞராக அறிமுகமானார். திடீரென கவிதையை நிறுத்தி விட்டு ஜாலியாக தினம் இணைய கட்டுரைகள் எழுதி பிரபலமாகி விட்டார். பாதை மாறாமல் இருந்தால் அவர் இன்னும் மேலான கவிஞராக உருவாகி இருக்க முடியுமா?
இப்படி வெளியே இருந்து இவரை மதிப்பிடுவது நியாயம் அல்ல. நாம் என்னவாக வேண்டும் என்பதை மனம் தான் தீர்மானிக்க வேண்டும். எது பிடிக்கிறதோ அதை செய்ய வேண்டும். நாம் யாருக்கும் இப்போதோ பிறகோ பதில் சொல்ல வேண்டியதில்லை. ஜெயகாந்தன் சு.ரா பற்றி இப்படி ஒருமுறை சொன்னார்: “இவர் கொஞ்சம் தன்னை மாற்றிக் கொண்டிருந்தால் பிரபல இதழ்களில் எழுதி நிறைய பேர் வாங்கி இருக்கலாம். அழகான மொழி நடை கொண்ட திறமைசாலி”. ஆனால் ஜெ.கா சு.ராவாக மாறி இருக்க முடியாதா? நாம் ஏன் இப்படி யோசிக்க கூடாது? தேவையில்லை என்பதே பதில்.
சுஜாதாவுக்கு இறுதி வரை தனக்கு இலக்கிய அங்கீகாரம் இல்லையே எனும் சின்ன ஏக்கம் இருந்தது என நினைக்கிறேன். தன் சிறுகதைகள் சில உலக இலக்கிய தரத்திலானவை என அவரே சொல்லி இருக்கிறார். சு.ராவின் சாகித்ய அகாதெமி எதிர்ப்பு கூட மற்றொரு வகையான ஏக்கம் தான். எல்லோருக்கும் ஏதாவது ஒரு ஏக்கம் இறுதி வரை இருந்து கொண்டிருக்கும். ஆனால் நம் ஆசைகளை நிறைவேற்ற எழுதுகிறோம். இந்த பணியை முடிக்க முடிந்தால், அதுவே மனதுக்கு நிறைவு தந்தால் அதுவே ஆகச்சிறந்த பரிசு.
பணம், பிரபலம், இலக்கிய அங்கீகாரம் தாண்டிய முக்கியமான விசயங்கள் உண்டு. குடும்ப வாழ்வு, ஆரோக்கியம், பிரசுர வாய்ப்பு – இவை சரியாக அமையாமல் முழுமையாக தன் லட்சியங்களை அடைய முடியாதவர்கள் உண்டு. அதுவும் வயதாக வயதாக குடும்பமும், உடலும் நமக்கு பெரும் தடைகளாக மாறிக் கொண்டு போகும்.
நான்காவதாய் ஒரு தரப்பு எழுத்தாளர்கள் உண்டு. டிவிட்டரில் ஏதாவது பாலியல் ஜோக் எழுதிக் கொண்டு, யாரையாவது கலாய்த்தபடி பொழுதை ஓட்டுவார்கள். இவர்களுக்கு என்று ஒரு “வாசகர் படை” கூட இருக்கும். வருட இறுதியில் மட்டும் கிரீடம் வைத்து, லிப் ஸ்டிக் போட்டு, அட்டைக்கத்தியை தூக்கியபடி மேடையில் அம்ர்ந்து பிறரை தன் கீர்த்திகளை பேச வைத்து எல்லா வித அங்கீகாரங்களையும் ஹைஜேக் செய்வார்கள். இவர்களும் இயற்கையின் ஒரு பகுதி தான். ஒரு குறிப்பிட்ட பூச்சியைப் பற்றி படித்திருக்கிறேன். எறும்புகள் சாரி சாரியாக உணவுத்துகள்களை தூக்கி நடக்கும் போது இது நடுவே வந்து “எனக்கும் ஏதாவது கொடு” என பிச்சை எடுக்கும். எறும்பும் கொடுக்கும். இப்படித் தான் அந்த பூச்சி இனமே பிழைக்கிறது. எந்த வகை எழுத்தாளன் ஆனாலும் சரி அவனுக்கு பின்னால் நிறைய உழைப்பும், கனவும், நம்பிக்கைகளும் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து தான் அந்த மதிப்பு உருவாகிறது. Tamiloola.com என்றொரு இணையதளம் இருக்கிறது. அதில் இருந்து நூறு பக்கங்களை உருவி வித்தியாசமான அட்டைப்படம் போட்டு பிரசுரித்து, மேடை அமைத்து நான்கு பிரபலங்களை அழைத்து கூட்டம் சேர்த்து வெளியிட்டு புகழ்ந்தால் மேற்சொன்ன மதிப்பு அந்த உழைப்பு, நம்பிக்கைகள், திறமை ஏதும் இல்லாமலே அப்புத்தகத்துக்கு கிடைத்து விடும். போகட்டும்! இயற்கையில் எல்லாவகையான உயிர்களும் தாம் இருக்கின்றன.

கருத்துகள்

யுவகிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
அச்ட்ஃப்
யுவகிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
கிழக்கில் நான்கைந்து நூல்களை எழுதியிருக்கிறேன் அபிலாஷ். 2009-2010 ஆண்டுகளில் நான் பொருளாதாரரீதியாக கடினப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கிழக்கு கொடுத்த ராயல்டி செக்குகள்தான் வாழ்ந்துவிட முடியுமென்ற நம்பிக்கையை தந்தது.

துரதிருஷ்டவசமாக கிழக்கு நிறைய நூல்களை வெளியிடுவதை குறைத்துவிட்டது. இல்லாவிட்டால் இன்னேரம் பல லட்சம் சம்பாதித்திருப்பேன் :(

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...