Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

காதல் நாடகம் (குறுநாடகம்)



-    
பாத்திரங்கள்:

சின்னபையன்
மண்வெட்டி பாலு
வெட்டுக்கிளி
தலைவர்
வனஜா
வேலு

காட்சி 1
மேடையில் சின்னபையனும் மண்வெட்டி பாலுவும் ஒரு கல்லூரி மாணவனும் தோன்றுகிறார்கள். சின்னபையனும் மண்வெட்டியும் வெள்ளைவேட்டி சட்டையில் இருக்கிறார்கள். இருவருமாய் மாணவனை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சின்னபையன்: ”உன்னைய அன்னிக்கு சொல்லித் தானே அனுப்பினேன். அப்புறம் ஏண்டா அந்த புள்ளகிட்ட திரும்பவும் பேசிக்கிட்டு நிக்கிறே. என்ன உயிர்பயம் போயிடுச்சா?”

மாணவன்: ”இல்லண்ணே. அவ தாண்ணே என்னை பாக்கணும்னா… அதான்…மத்தபடி சத்தியமா இல்லண்ணே”

மண்வெட்டி: ”போடா போடா ஒழுங்கா படிச்சு வாழற வழியப் பாரு”


சின்னபையன்: ”இர்றா. அவ ஏண்டா உன்னைய பாக்கணுங்கிறா? பழையபடி லவ்வா? தொலைச்சுப் போடுவேன். ஏண்டா உன் சாதியில எத்தனை குட்டிங்க இருக்கு? அதையெல்லாம் நாங்க பார்க்குறோமா?”

மீண்டும் அவனை அடிக்கிறார்கள்.

மாணவன்: “ஐயோ ஐயோ அவ தான் என்னை பார்க்கணுமுன்னா.”

சின்னபையன்: ”நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுடா கொய்யால”
மாணவன்: ”அவ தான் என்ன லவ் பண்ணினா”.
சின்னபையன்: ”அப்பிடி என்னடா உங்கிட்ட இருக்கு. அதையும் பார்த்துப் புடுவோம்”

மண்வெட்டி: ”அண்ணே” (அவன் கீழே கிடக்கும் மாணவனின் இடுப்பை சுட்டுகிறான்)
இருவருமாய் அவனை புரட்டி பின்புறமாய் பாண்டுக்குள்ளிருந்து இழுக்க ஒரு நீண்ட புலி வால் வெளிவருகிறது. பயந்து போய் அதைப் பார்க்கிறார்கள்.

மாணவன் வாலை சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடுகிறான். விளிம்புக்கு சென்றதும் நின்று கத்துகிறான்: “போடா பொட்டைங்களா”

சின்னபையன்: “டேய் புடிடா அவனை”
மண்வெட்டி அவனை துரத்திப் போகிறான்.

சின்னபையன் தன் இடுப்பில் முடிந்திருந்த ஒரு மாம்பழத்தை எடுத்து முகர்கிறான். லயிக்கிறான். அதை முகத்தோடு தேய்க்கிறான்.
மண்வெட்டி திரும்பி பார்த்து பேசியபடியே வருகிறான்: “தொலைச்சுப் போடுவேன். தோலை உரிச்சு தொங்க போடுறேண்டா பரதேசி” (அவன் உதடு கிழிந்திருக்கிறது. மண்வெட்டி அதை தொட்டு பார்க்கிறான்)

சின்னபையன்: ”என்னடாது?”
மண்வெட்டி: ”அடிச்சுப்புட்டான்னே”

சின்னபையன் அதை பொருட்படுத்தாமல் ஒரு மாம்பழத்தை கையில் வைத்து வருடுகிறான்: “என்னா அழகு. என்னா நைசு இல்லடா?”

மண்வெட்டி வலியை மறைந்து சிரிக்கிறான்: “ஆமாண்ணே. அப்பிடியே ஒரு பொண்ணோட…”
சின்னபையன்: ”அடச்சீ…”

மண்வெட்டி தன் வாயை பொத்துகிறான்.

சின்னபையன்: “நம்ம லிஸ்டில இனி அடுத்தது யாருடா?”

மண்வெட்டி சுட்டிக் காட்ட அங்கு வனஜாவும் வேலுவும் வருகிறார்கள். அவர்களை நோக்கி ஆவேசமாய் செல்லும் சின்னபையன் வனஜாவின் கன்னத்தில் அறைகிறான். வேலு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறான் அவனை சின்னபையன் உதைத்து தள்ளுகிறான். தரதரவென இழுத்துப் போகிறான். அவன் எழ முயல அடித்து வீழ்த்துகிறான். அவனை இழுத்தபடி சின்னபையன் அங்கிருந்து மறைய மண்வெட்டி வனஜாவிடம் போகிறான். அவள் தேம்பி அழுகிறாள்.

மண்வெட்டி: “அழாதெம்மா. நீ குப்புசாமி பொண்ணு தானே. குழந்தையா இருக்கிறச்சே உன்னை என் கையில வச்சு கொஞ்சியிருக்கேன். உனக்கு நினைவிருக்காது. ஆனா நீ அப்போ பால்டப்பா விளம்பரத்துல வர பாப்பா மாதிரி இருப்பே. அப்போ உனக்கு கன்னத்தில இந்த பக்கம் ஒரு மச்சம் இருக்குமே. நீ சிரிக்கிறச்சே அது கொள்ளை அழகா இருக்கும். உனக்கு ஏம்மா இவங்க கூட சகவாசம் எல்லாம்? நம்ம சமுதாயத்துக்குள்ள ஆளில்லாமலா சொல்லு?”

அவள் அழுகிறாள்.
மண்வெட்டி: அழாதெம்மா. இதெல்லாம் வெறும் நாடகம். உன்னை ஏமாத்தி காசு பறிக்கிறதுக்காக இந்த பசங்க போடுற வேசம். நம்ம அண்ணன் கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா? அவர் தான் விட்டிருவாரா?”

காட்சி 2
சின்னபையனும் வேலுவும் இரு மூலைகளிலாய் திரும்பி நிற்கிறார்கள்.

சின்னபையன் செல்போனில் பேசுகிறான்: “ஆமாண்ணே பையன் நம்ம கஸ்டடியில தான் இருக்கான். உங்க குடும்பத்துக்கு பங்கம் வராம நான் பார்த்துக்கிறேன். இனிமே நம்ம பொண்ணை பார்க்கவோ பேசவோ மாட்டான்னு எழுதிக் குடுத்திருவான். சின்னதா ஒரு செட்டில்மெண்ட் மட்டும் பார்த்து பண்ணுங்க. ஆங் அதாண்ணே ஒரு பத்து லட்சம். உங்க புள்ளயோடு வாழ்க்கையை நினைச்சா இதொண்ணும் பெரிய தொகை இல்லண்ணே. அவனுக்கு கட்சி பின்புலம் இருக்கு. அப்புறம் பெரிய பிரசன்னை ஆகிடும்ணே. அதான்.. ஆமா … இதைக் கொடுத்து பையனை செட்டில் பண்ணிடறேன். எனக்கு அஞ்சு பைசா வேணாம்னே. இதெல்லாம் நம்ம சமுதாயத்துக்காக நான் செய்யுற சேவை. அவ்வளவு தாண்ணே. சரிண்ணே. ஒகெ ஒகெ ரைட்டு”

சின்னபையன் வேலுவிடம் வருகிறான்.
சின்னபையன்: ”தோ பாரு. இதோட விட்ரு. ஏதோ உன் நல்ல காலம் உயிர்சேதம் இல்லாம பிரச்சனை முடிஞ்சிருச்சு. பொண்ணோட அப்பாகிட்ட பேசி சுமூகமா தீர்த்திட்டேன். இல்லெண்ணா வச்சுக்க இன்னிக்கு வீட்டுக்கு போறதுக்குள்ள உன் தலை ஏதாவது டிராக்கில கெடக்கும். புரியுதா? உன் நன்மைக்கு தான். ஒரு ஐம்பதாயிரம் வாங்கித் தரேன். வாங்கிட்டு ஓடிரு.”

வேலு: ”நாங்க லவ்வெல்லாம் பண்ல.”
சின்னபையன்: ”என்னடாது இது புதுசுபுதுசா? என்னைய நிம்மதியா தொழில் பண்ண விட மாட்டீங்க? தினமும் காலேஜ் பூரா ரெண்டு பேரு கையை கோர்த்திட்டு நடக்க வேண்டியது. அவ டியூசன் போற இடத்துக்கு நீயும் போற. ரெண்டுபேரும் ஒரே கலர்ல டிரஸ் போடுறீங்க. யாரு ஏமாத்துறீங்க”

வேலு: “நாங்க ஜஸ்ட் பிரண்ட்ஸ்”
சின்னபையன்: ”அப்பிடீன்னா? இப்போ தாலி கட்டாம சிலபேரு சேர்ந்து வாழறாங்களே அப்பிடி ஏதாச்சுமா?”

வேலு: “சேச்சே ஜஸ்ட் பிரண்ட்ஸ். லவ்வெல்லாம் தேவையில்லாத டார்ச்சர்.”
சின்னபையன்: “யார் கிட்ட? போனை குடுறா” (வேலுவின் போனை பிடுங்கி பார்க்கிறான்) “என்னடாது?” (ஆங்கிலத்தில் படிக்கிறான்) ”பிரண்டுன்னா இந்த மாதிரி தான் மெஸேஜ் அனுப்பியா? கொய்யால நறுக்கிருவேன்”
வேலு: “அது பாட சம்மந்தமான நோட்ஸ்”
சின்னபையன்: “யார ஏமாத்த பார்க்கிறே? இப்போ தான் பொண்ணோட அப்பங்கிட்ட பேசி முடிச்சிருக்கேன். நீ பாட்டுக்கு நடுவில குழப்பாத சொல்லிட்டேன். அப்புறம் நல்லாருக்காது”
வேலு: “நீ பத்து லட்சத்த ஆட்டைய போடுறதுக்கு என்னை மாட்டி விடாதே”.
சின்னபையன்: “டேய் யாருகிட்ட பேசுறே. நாயே சாவடிச்சிருவேன்.”
அவன் வேலுவை அடிக்க வேலு அங்கிருந்து ஓடுகிறேன். பாதி வழியில் நின்றூ வேலு கத்துகிறான்:
”யோவ் எனக்கும் ஆளிருக்கு. என் மேல கை வச்சா என் கட்சி சும்மா இருக்காது. நீ என்னதான் பண்ணிருவேன்னு பார்க்கிறேன்.”

சின்னபையன்: “காச வாங்கிட்டு ஓடச் சொன்னா இந்த நாய்க்கு என்னா கொழுப்பு பாரு.”

அவன் போனை காதில் வைத்தபடி அங்குமிங்குமாய் நடக்கிறான்: ”அண்ணே பையன் ரொம்ப முறுக்கிக்கிறான். கட்சியில ஆள் தெரியுங்கிறான். அவன் பின்னாடி ஆளீருந்தா நமக்கு எண்ணண்ணே பாத்துக்கிடலாம். கூட ஒரு 15 சேத்து 25 லட்சமா கொடுத்திருங்கண்ணே. ஆளை போட்டிரலாம். இனி வேற வழியில்ல. உங்க பொண்ணு வாழ்க்கை நமக்கு முக்கியம். மானம் போச்சுண்ணா வராது. சரிண்ணே. இன்னியோட முடிச்சிரலாம். ஆமாண்ணே. எந்த பிரச்சனையும் வராம பார்த்திக்கிறேன். சரிண்ணே சரிண்ணே. ஒகெ ஒகெ”
காட்சி 3
தலைவரும் வெட்டுக்கிளியும் மேடையின் எதிரெதிரே மைக் முன்னால் நின்று பேசுகிறார்கள். தலைவர் வெள்ளைவேட்டி சட்டை அணிந்திருக்கிறார். கண்ணாடி அணிந்திருக்கிறார். கையில் ஒரு வெள்ளை காகிதம். வெட்டுக்கிளி கறுப்பு பேண்டும் வெள்ளை சட்டையும் அணிந்திருக்கிறான். பின்னால் புலி வால் தொங்குகிறது. இருவருக்கும் முன்னால் ஒரு சின்ன கூட்டம் நின்று கைதட்டி ஆரவாரிக்கிறது.
தலைவர்: “நாங்கள் உங்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகிறோம். ஆனால் எங்கள் சமூதாயத்து 15 வயதுப் பெண்களை காதலிப்பதாய் ஏமாற்றி நாடகம் போட்டு சோரம் போக வைக்கும் கயவாளித்தனத்தை இனிமேலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.”
வெட்டுக்கிளி புலி போல உறுமுகிறான்: “கிர்ர்ர்”
தலைவர்: “பொறுங்கள். நான் புள்ளிவிபரம் தருகிறேன். இதுவரை நடந்துள்ள காதல் நாடகங்கள் மொத்த 80,056. போன வருடம் மட்டுமே 35,000 போலித்திருமணங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகி உள்ளதாய் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இப்படி பாதிக்கப்படும் எங்கள் சமூக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சமூகவிரோத கும்பல் ஒன்று இந்த போலிக்காதல்களுக்கு பின்னால் உள்ளது.”
வெட்டுக்கிளி: “இதுவரை நிலத்தின் பெயரிலும் கோயிலின் பெயரிலும் எங்கள் உரிமைகளை பறித்து உடைமைகளை அழித்தவர்கள் இப்போது காதல் நாடகங்கள் என்று புது பிரச்சனையை கிளப்புகிறார்கள். இது அப்பட்டமான சாதி வெறியை தூண்டும் அரசியல். எங்கள் புலிகள் இதை பொறுக்க போவதில்லை. ஒடுக்குமுறைக்கு எதிராய் எங்கள் போராட்டம் வலுக்கும்.”
தலைவர்: “இப்பிரச்சனையில் எங்களோடு இணையும் படி அனைத்து சாதிகளின் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.”
வெட்டுப்புலி: “நீதி கிடைக்கும் வரை, எங்கள் கடைசி சொட்டு ரத்தம் வடியும் வரை சமத்துவத்துக்கான போராட்டம் ஓயாது. அனைத்து சிறுபன்மை தோழர்களும் எங்களுடன் உள்ளார்கள்.”
காட்சி 4
வெட்டுக்கிளியுடன் சின்னபையனும் மண்வெட்டியுமாய் இருந்து மதுவருந்துகிறார்கள். வெட்டுக்கிளியின் வால் அவனது தலைக்கு மேலாய் தூக்கி நிற்கிறது. சின்னபையன் அடிக்கடி அதை வியப்பாய் தொட்டுப் பார்க்கிறான்.
சின்னபையன் ஒரு பெட்டியை நீட்டுகிறான்.
வெட்டுக்கிளி: “எவ்வளவு?”
சின்னபையன்: “அஞ்சு லட்சம்”
வெட்டுக்கிளி: “கட்சி மேலிடத்துக்கு வேறெ கொடுக்கணும். அது போக நான் என்ன கையை நக்கி கிட்டு இருக்கிறதுக்கா? பிரச்சனை கொதிச்சு போய் கெடக்கு தெரியுமில்லையா? ஊரே இதைப் பத்தி தான் பேசுது.”
சின்னபையன்: “அதுனால தானே உங்க கிட்ட வந்தேன் அண்ணே”
வெட்டுக்கிளி: “இந்த பிரச்சனையை இந்தளவுக்கு வளர விட்டது உங்க தப்பு. இப்போ ஊரே ரெண்டு பட்டு கெடக்கு. ரெண்டு கட்சியும் மோத வேண்டியதாயிடுச்சு. இப்போ நீங்க எது பண்ணினாலும் நாங்க அமைதியா போக முடியாதுப்பா. சொல்லிட்டேன்.”
சின்னபையன்: “அண்ணன் கொஞ்சம் பாத்து பண்ணனும். அந்த பையனை போட்டிரலாமுன்னு இருக்கோம். ரொம்ப முறுக்கிக்கிட்டு திரியிறான். சொன்னா கேட்க மாட்டேங்கான். இப்பிடியே விட்டா என் தொழிலு நாசமா போயிடும். மானம் மருவாதை இருக்காது.”
வெட்டுக்கிளி முடியாது என தலையாட்டுகிறான். சின்னபையன் மற்றொரு பெட்டியை எடுத்து முன்வைக்கிறான்: “இன்னொரு அஞ்சு இருக்குண்ணே. இதுவே என் கையில இருந்து சொந்த காசை எடுத்து பண்றேன். நான் தலையிட்ட பிரச்சனையாச்சேன்னு தான்”
வெட்டுக்கிளி வாங்கிப் பார்க்கிறான். அவன் முகம் மகிழ்ச்சியில் பூரிக்க அவன் சின்னபையனை அணைத்துக் கொள்கிறான். மண்வெட்டி இரு கோப்பைகளிலும் மது ஊற்ற சின்னபையன் அதிலொன்றை எடுத்து வெட்டுக்கிளிக்கு சின்னபையன் ஊட்டுகிறான். அவன் இன்னொரு கையால் வெட்டுக்கிளியின் வாலை தடவுகிறான்.
சின்னபையன்: “எப்பிடிண்ணே எப்பவும் இப்பிடி வெறைப்பா மெயிண்டெயின் பண்றே? குட்டிங்கிள எல்லாம் இப்பிடித் தான் கவுக்கிறியா?”
வெட்டுக்கிளி: “அதை வுடுய்யா. இருக்கிறவனுக்கு ஆயிரம் கவலை. இல்லாதவனுக்கு அது ஒண்ணே தான் கவலை.”
சின்னபையன்: “என்ன சொல்றே?”
வெட்டுக்கிளி: “இந்த அசிங்கத்தை எப்பிடி வெட்டுறதுன்னு நான் தவிச்சிக்கிட்டிருந்தா நீ வேறெ”
சின்னபையன்: “இதைப் போயா வேணாங்கிற? என்ன பின்னாடி இருக்கிறது தான் ஒரே பிரச்சனை”
வெட்டுகிளி எழுந்து பெட்டியை தூக்கியபடி நடக்கிறான். மேடை விளிம்பில் நின்றபடி திரும்பிப் பார்க்கும் அவன் புலி போல உறுமுகிறான். சின்னபையனுக்கு பயத்தில் தூக்கிவாரிப் போடுகிறது.
வெட்டுகிளி: “சும்மா ஏப்பம் விட்டேன்.” (அவன் நடந்து மறைகிறான்)
சின்னபையன் அவனை நோக்கி கத்துகிறான்: “வால் பத்திரமுய்யா. அதை வைச்சு தான் என் பொழைப்பு நடக்குது.”
சின்னபையன் மண்வெட்டியை பார்த்து: “டேய் நானும் சின்ன வயசில எத்தனையோ பொண்ணுங்களை லவ் பண்ணியிருக்கேன். எவளும் என்னை அப்போ மதிச்சதில்ல. இப்போ காசுபணம் வந்த பிறகு என் மேல வந்து விழுறாளுங்க. எனக்கு எவ மேலெயும் மரியாதை இல்ல. இந்த லவ்வுன்னா என்னடா பாலு?”
மண்வெட்டி: “சும்மா டிராமாண்ணே”
சின்னபையன்: “இல்லெடா எதுவோ இருக்கு. ஆனா ஏன் வேத்து சாதிக்காரங்க மேல இவளுங்களுக்கு ஆசை வருது?”
சின்னபையன் ஒரு மாம்பழத்தை எடுத்து முகர்கிறான். நக்குகிறான். கையில் வைத்து உருட்டுகிறான்.
மண்வெட்டி: “எத்தன நாள்தான்னே வச்சு பாத்திக்கிட்டு இருப்பீங்க? சாப்டுராமுல்லண்ணே”
சின்னபையன்: “இருபது வருசத்துல தமிழ்நாட்டையே இது ஆளப் போகுதுடா”
மண்வெட்டி: “அதுக்குள்ள அழுகிருமுண்ணே”
காட்சி 5
வேலு போனில் பேசியபடி நடந்து வருகிறான்: “நீ பயப்படாதே வனஜா. நான் ஊரை விட்டே போயிரலாமுன்னு இருக்கேன். இந்த பிரச்சனை அப்போ தான் முடியும்.”
அவன் பின்னால் மண்வெட்டியும் சின்னபையனும் பதுங்கி வருகிறார்கள். மண்வெட்டி அவன் மீது பாய்ந்து பின்னால் இருந்து கழுத்தை நெரிக்கிறான். சின்னபையன் ஒரு இரும்புத்தடியால் வேலுவின் மண்டையில் அடிக்கிறான். வேலு இறக்கிறான். இருவருமாய் அவனை இழுத்து கிடத்துகிறார்கள்.
சின்னபையன்: “டிரெயின் வர டைம் ஆச்சாடா?”
மண்வெட்டி: “ஆமாண்ணே. கொஞ்சம் பொஸிஷன் திருப்பி வப்போம். தலை சரியா நசுங்கட்டும்.”
உடலை நகர்த்தி போடுகிறார்கள். மண்வெட்டி வேலுவின் உடலில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறான்.
சின்ன்பையன்: “பர்ஸில ஐடி இருக்குதா? இருக்கட்டும். அடையாளம் தெரியணமில்ல.”
இருவரும் அங்கிருந்து போகிறார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...