முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாடாமல்லி




இம்மாத தீராநதியில் கண்மணி குணசேகரனின் சிறுகதை “வாடாமல்லி” வாசித்தேன். கொஞ்சம் பிசகினால் “முதல் மரியாதை” போல் நாடகீயமாகி விடக் கூடிய கதை. ஆனால் தடுமாறாமல் நூல் பிடித்தாற்போல் கதையை கொண்டு போகிறார். மல்லிகா பன்னீர் எனும் கிராமத்து ரோமியோவை காதலிக்கிறாள். இருவரும் சேர்ந்து ஓடிப் போகும் போது ஊர்க்காரர்கள் பிடித்து பிரித்து வைத்து விடுகிறார்கள். இருவருக்கும் வேறு நபர்களுடன் திருமணம். வெறுப்பில் சக்கரை குடிகாரனும் பொறுக்கியும் ஆகிறான். மல்லிகா தன் கசப்பையும் ஏக்கத்தையும் வைராக்கியமாய் மாற்றிக் கொள்கிறாள். எதுவுமே பாதிக்காதத்து போல் குடும்ப வாழ்க்கையை சிறப்பாய் நடத்துகிறாள். குழந்தை, கணவன் என நிறைவான வாழ்க்கை. அப்போது பன்னீர் இறந்து போன சேதி வருகிறது. அதுவரை அவன் தன் வாழ்க்கையில் இல்லாதது போல் நடந்து கொண்டவள் இப்போது சட்டென கலங்கி நிற்கிறாள். ஊர் என்ன சொல்லுமோ என அஞ்சாமல் அவனை இறுதியாய் பார்க்க கிளம்புகிறாள். ஆளுயர மாலையை வாங்கிப் போய் அவன் உடம்பில் போடுகிறாள். அவளைப் பார்த்து ஊர் அதிர்ந்து நிற்கிறது. கடும் அழுத்தத்துடன் காதலை மறைத்து வாழ்பவர்கள் ஒருநாள் அதே அழுத்தத்துடன் துணிச்சலுடன் அதை வெளிக்காட்டவும் செய்வார்கள். இந்த உளவியல் தான் கதைக்கு அழகு.

இரண்டு விசயங்கள். இக்கதையை இமையம் இன்னும் சிறப்பாய் எழுதியிருப்பார் என ஒரு கணம் தோன்றியது. இன்னும் சில பரிமாணங்களை கதைக்கு சேர்த்திருப்பார். ஒரு சில வசனங்களில் பக்க பாத்திரங்களை இன்னும் உயிரோட்டம் கொள்ள வைத்திருப்பார். இன்னும் கூர்மையான கவுச்சி வாசம் வீசும் வசனங்களை எழுதியிருப்பார்.
நவீன சிறுகதையில் எழுதப்படாத விதி ஒன்று உண்டு. பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அந்த துளி விஷத்தை பற்றி எழுத வேண்டும் என்பது அது. கண்மணி குணசேகரன் இயல்பாகவே அந்த பாலைப் பற்றியே எழுதுகிறார். அப்படி எழுதி ஒருவர் மௌனியும் அசோகமித்திரனும் தொட்ட உயரங்களை அடைவது சிரமம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.