”ரோஜா என்பது ரோஜா என்பது ரோஜா
என்பது ரோஜா”
இது கெர்டுரூட் ஸ்டெயின் எனும்
அமெரிக்க பெண் கவியின் பிரபல கவிதை வரி. அவர் என்ன தான் சொல்ல வருகிறார்? இந்த வரியை
ஒரு பார்முலாவைப் போல் பார்க்கலாம்:
ரோஜா = ரோஜா. இந்த பதிலான ரோஜா
என்பதும் ரோஜாவே.
இது இன்னும் தெளிவாக இருக்கும்:
ரோஜா = ரோஜா = ரோஜா = ரோஜா
அதாவது ஸ்டெயின் ஒரு பொருளின்
(ரோஜாவின்) சாரம் எது என கேட்கிறார். ரோஜா என்றால் என்ன? ஒரு பூ என்று சொல்வீர்கள்.
ஆனால் பூ என்பது மற்றொரு பெயர் மட்டும் தானே. ரோஜா என்பது அதன் அடிப்படையில் என்ன?
அதன் சாரம் என்ன? அதை ரோஜாவாக்குவது என்ன? அதன் அடர்சிவப்பு நிறம் அல்லது அதன் வாசனை
என நீங்கள் சொல்லலாம். ஆனால் அவை ரோஜாவின் இயல்புகள் மட்டுமே. அவை ரோஜா அல்ல.
ரோஜா என்றால் என்ன? அட இது என்ன
மண்டையிடியாய் போகுதே என யோசிக்காதீர்கள். இது ஒரு முக்கியமான கேள்வி.
இது போன்ற கேள்விகளை
எந்த சொல்லின் மீதும் நீங்கள் எழுப்பலாம். அப்போது அச்சொற்கள் உண்மையில் எதையும் குறிக்கவில்லை.
ஒரு பொருள் கொண்டிருப்பதான பாவனை மட்டுமே வைத்திருக்கின்றன என நமக்குப் புரியும்.
சொற்கள் அடிப்படையில் எதையும்
குறிக்கவில்லை என்றால் அவை எப்படி அர்த்தம் தருகின்றன? ரோஜா என்றதுமே நம் மனதில் ஒரு
ரோஜாவின் சித்திரம் எழுகிறதே. அது எப்படி?
எப்படியென்றால் ஒரு சொல்லின் பொருள் அதை சொல்லும்
முன்பே நம் மனதில் இருக்கிறது. ரோஜா என்ற ஒரு பிம்பம் நம்மிடம் உள்ளது. அதனாலே அச்சொல்
எதையும் சாரமாய் குறிக்கவில்லை என்றாலும் நமக்குப் புரிகிறது. இந்த பிம்பம் என்னவென
விளக்குவது சிரமம். தாயின் முலை என்ற சொல் அறியும் முன்னரே அதன் சாரத்தை நாம் அறிவோம்.
தாய்க்கும் மதலைக்கும் உடல் வழியாய் ஒரு உரையாடல் நிகழ்கிறது. முலையை பற்றி உறிஞ்சும்
மதலைக்கு அதன் சாரம் புரிகிறது. ஆனால் வளர வளர பெண் மார்பு பற்றின புரிதல் அவனுக்குள்
மாறிக் கொண்டே போகிறது. முலை எனும் பிம்பம் அவனுள் மாறிக் கொண்டே வருகிறது. அதற்கு
ஏற்ப புது புது சொற்களை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அன்பும் அரவணைப்பும் தந்த முலை
அவனுக்கு இப்போது கிளர்ச்சியும் ஆவேசமும் அளிக்கிறது. காதலில் அது மீண்டும் அவனுக்கு
அன்பும் அரவணைப்பும் நிம்மதியும் அளிக்கிறது. முலை என்பது இங்கு ஒரு சொல்லோ உடல் உறுப்போ
அல்ல. அது நம் மனதின் அடியாழத்தில் இருக்கும் ஒரு பிம்பம். அதை நம்மால் நேரடியாக எடுத்து
கையாள சந்திக்க முடியாது. சொற்களால் தான் அந்த பிம்பத்தை நாம் நமக்குள் உருவாக்கி அதைப்
பற்றி பேசுகிறோம்.
இந்த பிம்பம் நம் ஆழ்மனதில் இருக்கிறது
என்றால் அது எப்படி நம்மை வந்தடைகிறது? மொழியின் வழி. சரி, பிறந்த குழந்தையிடம், மொழி
அறியாத மதலையிடம் இந்த பிம்பம் எப்படி வந்தடைகிறது? ஆரம்பத்தில் தாயுடலுடன் (உடல் ரீதியாக)
உரையாடுவதன் வழி. அதன் பிறகு குழந்தை தன் பிரக்ஞையின் வழி, தனதேயான தர்க்கத்தின் படி,
கற்பனையின் வழி தான் பார்க்கும் பல பொருட்களை தன்னில் இருந்து பிரித்து அடையாளப் படுத்த
துவங்குகிறது. சொற்கள் இல்லாத மொழி ஒன்று அதனுள் இக்காலத்தில் உருவாகிறது. பிறந்த சில
நாட்களில் தன் ஸ்பரிசம் வழி உணர்ந்த முலை எனும் சாரத்தை அது பிம்பங்கள் வழி, தன் பிரக்ஞை
வழி, கற்பனை வழி மீளுருவாக்க முயல்கிறது. ஒவ்வொரு சொல்லையும் அது இப்படி கண்டடைகிறது.
வளர்ந்து மொழியை கற்ற பின் இந்த பயணம் இன்னும் சிக்கலானதாக, விரிவானதாக ஆகிறது.
ரோஜா என்பது உண்மையில் வெளியே
இல்லை; அது நமக்குள், நம் மொழிக்குள், நம் பண்பாட்டுக்குள் இருக்கிறது என்பது தான்
ஸ்டெயினின் மேற்சொன்ன வரியின் பொருள். ரோஜாவின் சாரத்தை நாம் தேடினால் அது பின்னால்
பின்னால் என வரலாற்றுக்குள், பண்பாட்டுக்குள், மொழிக்குள் சென்றபடியே இருக்கும். அது
முடிவற்ற பயணம். அதனாலே அவர் ரோஜா என்பது ரோஜா என்பது ரோஜா என்கிறார்.
இதைப் பற்றி தன் பேச்சில் ஒருமுறை
ஸ்டெயின் இப்படி குறிப்பிட்டார்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒருவர் ரோஜா
என்ற போது கற்பனாவாத காலத்து பார்வையில் அழகின் மகோன்னத வடிவமாய் அது இருந்தது. ஆனால்
இப்போது நாம் ரோஜா எனும் போது அது மகோன்னத அழகின் வடிவம் அல்ல; இப்போது ரோஜா என்பது
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கற்பனாவாதத்தை நினைவூட்டும் சொல். அது உண்மையான ரோஜா அல்ல.
ஸ்டெயின் என்ன தான் சொல்ல வருகிறார்?
உங்கள் பெயர் கோவிந்தசாமி என வைப்போம்.
நீங்கள் ஒரு அறிவியல் ஆசிரியராக ஒரு பள்ளியில் வேலைக்கு சேர்கிறீர்கள். முதல் நாள்
உங்களை அறிவியல் ஆசிரியர் என அறிமுகப்படுத்துவீர்கள். அதன் பின் வரும் நாட்களில் வகுப்பில்
உங்கள் பாடம் எடுக்கும் பாணி, உங்கள் பேச்சு, குரல், கருத்துக்கள், உணர்வுகள், வகுப்புக்கு
வெளியே உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் சேர்ந்து உங்களுடைய அடையாளம் வெளிப்படும். இப்போது
மாணவர்களும் சக ஆசிரியர்களும் உங்களை “கோவிந்தசாமி சார்” என்றோ “கெ.எஸ் சார்” என்றோ
அழைப்பார்கள். புதிதாய் வந்த அறிவியல் ஆசிரியர் என இனி உங்களை குறிப்பிட முடியது. அது
உங்கள் குணாதசியங்களை முழுக்க சுட்டாது.
பள்ளிக்கு உள்ளே எல்லாரும் உங்களை ”கோவிந்தசாமி சார்”
என்றே அழைப்பார்கள். ஆனால் வீட்டில் உங்கள் மாமனார் உங்களை அப்படி அழைக்க மாட்டார்.
அப்படி அழைத்தால் அதிர்ச்சியாக இருக்கும். அதே போல் பள்ளியில் யாராவது உங்களை பேர்
சொல்லி அழைத்தாலும் அது உவப்பாக இராது. ஆக, உங்களுக்கு நான்கு பெயர்கள். முதலில் கோவிந்தசாமியாக
உள்ளே வருகிறீர்கள். அடுத்து அறிவியல் ஆசிரியர் என அறியப்படுகிறீர்கள். இதை அடுத்து
“கோவிந்தசாமி சார்” அல்லது “கெ.எஸ் சார்” ஆகிறீர்கள். பள்ளியை விட்டு வெளியேறும் போது
மீண்டும் கோவிந்தசாமி ஆகிறீர்கள். இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கட்டத்திலும்
ஒரு பெயர் நமக்கு பொருந்துகிறது. ஒவ்வொரு பெயரும் ஒரு குறியீடாக இருக்கிறது.
உங்களை நீங்கள் இந்த பெயர்களில் ஒன்று மட்டும் தானா
எனக் கேட்டால் மறுப்பீர்கள். இந்த பெயர் மட்டுமே நான் அல்ல. நீங்கள் அரசியல் கருத்துக்கள்
தெரிவிக்கும் ஆளாக இருக்கலாம். நீங்கள் அவ்வப்போது கவிதை எழுதலாம். நாத்திகனாக இருக்கலாம்.
அல்லது ஒரு சாதிக்கட்சியின் அனுதாபியாக இருக்கலாம். உங்களுக்கு ஒரு ரகசிய காதலி இருக்கலாம்.
ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் வெவ்வேறு ஆள். அதனாலே நம்மை நம் பெயர் மட்டுமாக நாம் பார்ப்பதில்லை.
சுயபிரக்ஞை உள்ள அனைவரும் “நான் என் பெயர் மட்டுமே அல்ல” என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
சரி, அதற்காக கோவிந்தசாமியை ராமசாமி என அழைத்தால்? கோவிந்தசாமியின் மாணவர்களும் சக
ஆசிரியர்களும் நண்பர்களும் மனைவி குழந்தைகளும் மாமனாரும் அவரை ராமசாமி என அழைக்க ஆரம்பித்தால்
அவர் கதி என்னவாகும்?
கோவிந்தசாமியின் சாரம் அதன் பல
பரிமாணங்களில் அவரது பெயரின் பல வடிவங்களில் இருக்கிறது. கோவிந்தசாமி, கெ.எஸ் சார்,
“ஏங்க”, “யோவ்” “டேய்”, “ஏம்பா”, “அப்பா”, “சித்தப்பா”, “மாமா”, “மாப்ளே”, “தம்பி”,
“மச்சான்”… இப்படி அவர் பல குறியீடுகளுக்குள் வசிக்கிறார். இதையும் கடந்து ஒரு சாரமான
கோவிந்தசாமி இருக்கிறாரா என தெரியாது. ஆனால் இந்த குறியீடுகளுக்குள் அவர் பல விதமாய்
இருக்கிறார். அவரை ஏன் ராமசாமி என அழைக்க முடியாதென்றால் அந்த பெயர் இன்னும் அவரது
குறியீடாகவில்லை.
பெயர் எப்போதுமே குறியீடாகத் தான்
இருக்கிறது என்கிறார் ஸ்டெயின். நவீன தமிழ் இலக்கிய வாசகர்களால் யமுனாவை மறக்க முடியுமா?
யமுனா என்ற ஒரு பெண் நேரில் வந்தால் அவர்களுக்கு உடனே தி.ஜாவின் நாயகி தான் நினைவு
வருவாள். மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றில் தனக்கு ஏன் யமுனா என பெயர் வைத்தார்கள் என
ஒரு பெண் வருத்தப்படுவாள். ஏனெனில் யமுனாவைப் போல் அவள் அழகி அல்ல. யமுனா எனும் குறியீடு
அவளை எங்கு போனாலும் துரத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க முடியாது அவள் தவிக்கிறாள்.
இதே காரணத்துக்காகத் தான் சினிமாவில்
ஒருவர் நுழையும் போது பெயர் மாற்றுகிறார்கள். சில்க் ஸ்மிதாவின் கிளுகிளுப்புக்கு அவர்
பெயர் உணர்த்தும் இதமான மென்மையான உணர்வும் ஒரு காரணம். “விடுதலைச் சிறுத்தைகள்” இயக்கம்
ஆரம்பித்த போது திருமா தன் தொண்டர்களுக்கு தூய தமிழ்ப் பெயர் சூட்டினார். தன் பெற்றோரின்
பெயரைக் கூட அவர் மாற்றியதாய் கேள்விப்பட்டேன். பெயரை மாற்றுவது வரலாறு தம் மீது ஏற்றிய
சாதியின் சுமையை இறக்கி வைக்க உதவும் என அவர் நம்பினார். இதற்கு நேர்மாறாக நித்தியானந்தாவும்
தன் ஆசிரமத்தில் சேர்கிறவர்களின் பெயரை மாற்றி புதுப் பெயர் அளிக்கிறார். பெரும்பாலான
கார்ப்பரேட் சாமியார்கள் இதை தம் சீடர்களுக்கு செய்கிறார்கள். மனிதன் தன் சுயத்தை மாற்ற
விழையும் போது முதலில் பெயரை மாற்றுகிறான். ஏனெனில் அவன் சுயம் = பெயர்.
ஆனால் பெயரின் அடையாளத்தை மாற்ற
முடியாது என்றில்லை. திருமாவின் கட்சியின் முக்கிய தூணான ரவிக்குமார் தன் பெயரை மாற்றவில்லை.
அவர் தன் செயல்பாடுகள், படைப்பூக்கம் மற்றும் கருத்துக்கள் வழி ரவிக்குமாரை மற்றொரு
ரவிக்குமாராக, மற்றொரு குறியீடாக மாற்றினார். இப்போது உங்களுக்கு தெரிந்து இரு ரவிக்குமார்கள்
இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் கல்லூரியில் படிக்கும் ரவிக்குமார். அரசியல்வாதியும்
சிந்தனையாளனும் எழுத்தாளனுமான ரவிக்குமார். இப்படி உங்கள் பெயரை உங்களுக்கே உரித்தான
அடையாளமாக, சுயமாக உங்களால் கட்டமைக்க முடியும்.
மனுஷ்யபுத்திரன் ஆரம்பத்தில் தன்
புனைப்பெயரிலே தான் பேஸ்புக்கில் எழுதி வந்தார். ஒருமுறை புனைப்பெயரை அனுமதிக்க மறுத்து
பேஸ்புக் அவர் கணக்கை முடக்கியது. அதன் பிறகு அவர் அப்துல் ஹமீத் எனும் நிஜ பெயரில்
பேஸ்புக்கில் எழுத ஆரம்பித்தார். இப்படி பெயரை மாற்றுவதில் தனக்கு மிகுந்த தயக்கம்
இருந்ததாய் அவர் குறிப்பிட்டார். தன்னை பல வருடங்களாய் மக்கள் புனைப்பெயரிலேயே அறிந்திருக்கிறார்கள்;
அப்துல் ஹமீதாக அல்ல. பெயரை மாற்றுவது அவர் அடையாளத்தை பாதிக்காதா? வாசகர்களை குழப்பாதா?
இது ஒரு கவிஞனின் மரணம் அல்லவா? இங்கு தான் சுவாரஸ்யம். வாசகர்கள் இதை ஒரு பிரச்சனையாகவே
பார்க்கவில்லை. பேஸ்புக்கில் அவர் பக்கத்தை பார்க்கும் ஒருவர் அவர் புரொபைல் படத்தை
பார்த்ததுமே அதை மனுஷ்யபுத்திரன் என்றே அறிகிறார். பெயர் அப்துல் ஹமீத் என்றிருந்தாலும்
அதை அவர்கள் தம்மை அறியாமல் கடந்து போகிறார்கள். வாசகர்கள் யாரும் அவரை அப்துல் ஹமீத்
என அழைப்பதில்லை (பேஸ்புக் அப்படி வற்புறுத்தினாலும் கூட). ஒரு குறிப்பிட்ட ஆளுமையுடன்,
செயல்பாட்டுடன், குணாதசியத்துடன் ஒரு பெயர் சம்மந்தப்படும் போது, அதன் குறியீடாக மாறும்
போது, அதை நாமாகவே மாற்றினாலும் அது மாறாது. என்னை நீங்கள் சதீஷ் அழைக்க வேண்டும் என
நான் கேட்டுக் கொண்டு, என் படைப்புகளிலும் என் பெயரை நான் சதீஷ் என வெளியிட்டால் உங்களால்
என்னை சதீஷ் என காண முடியாது. அதற்கு, நான் சதீஷுக்கு என்று புது அடையாளத்தை உருவாக்க
வேண்டும். என் பெயரில் எனக்கு ஒரு சுயம் உருவாகி உள்ளது. இன்னொரு பெயர் இட்டுக் கொண்டால்
அப்போது இன்னொரு புது சுயம் மட்டுமே உருவாக முடியும்.
இதையே ஸ்டெயின் ரோஜாவுக்கும் பொருத்துகிறார். ரோஜா
என்பது ஒரு பூ என்றாலும் வரலாறு முழுக்க அது ஒரு பூவாக மட்டும் இல்லை. நாம் இந்த வரியில்
எதையும் யாரையும் நுழைக்கலாம். முலை என்பது முலை என்பது முலை என்பது முலை. ரஜினி என்பது
ரஜினி என்பது ரஜினி என்பது ரஜினி.
சரி கடைசியாக ஒரு கேள்வி. நாம்
பின்னால் பின்னால் தேடிச் சென்றால் ரோஜாவின் அந்த ஆதி சாரத்தை கண்டுபிடிக்க இயலுமா?
ரஜினி என்பதன் சாரம் அந்த நடிகரைத் தாண்டி உண்மையில் எதுவாக நம் மனதுக்குள் இருக்கிறது
என அறிய முடியுமா? முடியாது என்கிறார் மார்ட்டின் ஹெய்டெக்கர்.
மார்ட்டின் ஹெய்டெக்கர் இருபதாம்
நூற்றாண்டின் மிக முக்கியமான தத்துவஞானி. ஜெர்மானியர். ஒரு சர்ச்சைக்குரிய ஆளுமை. அவரைப்
பற்றின ஒரு நூலில் (Language and Being) மேற்சொன்ன விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன.
ஹெய்டெக்கரின் கருத்துக்கள் எனக்கு ஸ்டெயினின் மேற்கோளை ஆழமாய் புரிந்து கொள்ள உதவியது.
ஒரு சொல்லின் பின்னால் அர்த்தமின்மையே
உள்ளது. இந்த அர்த்தமின்மை தான் நமது இருப்பின் அடிப்படை என்கிறார் ஹெய்டெக்கர். இந்த
அர்த்தமின்மையை நாம் சொற்களின் அர்த்தத்தில் இருந்து கிடைக்கும் விடுதலை எனும் பொருளில்
புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வரியை, சொல்லை, உணர்வை ஒரு கவிதையோ ஜோக்கோ நாம் முற்றிலும்
எதிர்பாராத தொனியில் நமக்கு திறந்து காட்டுகிறது. இது நம்மை திகைக்க வைக்கிறது. நாம்
புரிந்து கொண்டது ஒரே அர்த்தம் அல்ல என நமக்குச் சொல்கிறது. முழுக்க மாறுபட்ட கோணம்,
பார்வை, ஒருவித விசித்தரம் அதற்கு உண்டு என நமக்குச் சொல்கிறது. ஒன்று அது அல்ல என
நாம் புரிந்து கொள்ளும் தருணத்தில் ஒரு அர்த்தமற்ற நிலை உருவாகிறது. அப்போது நாம் மிகவும்
பரவசம் அடைகிறோம். சிரிக்கிறோம். நெகிழ்கிறோம். இதை ஜென் தத்துவம் அக விடுதலை என காண்கிறது.
(அதனாலே ஜென்னில் ஜோக் மற்றும் கவிதைக்கு முக்கிய இடம் உள்ளது.)
இதையே ஹெய்டெக்கர் மொழியின் இருப்பு என்கிறார். நமது
இருப்பு என்பது வெளியே இல்லை. அது மொழிக்குள் மட்டுமே சாத்தியப்படுகிறது என்கிறார்.
மொழிக்குள் என்றால் மொழியை அறிவதன்
மூலம் அல்ல. மொழியின் இறுக்கமான பொருள் கட்டமைப்பை உடைப்பதன் வழி. மொழியை, அதன் அர்த்தத்
தளங்களைக் கடந்து, ஊடுருவி செல்வதன் வழி. ஒரு குழந்தையிடம் அம்மா அதன் அர்த்தமற்ற,
சொற்கள் அற்ற மழலை மொழியில் பேச முயல்கையில் கிடைக்கும் பரவசத்தில் இந்த ஊடுருவல் நிகழ்கிறது.
அப்போது மனிதன் தன் உண்மையான இருப்பை அறிய முடிகிறது என்கிறார் ஹெய்டெக்கர்.
ஹெய்டெக்கர் பேசுவது ஒருவித சூனியவாதமும்
தான். எனக்கு இதைப் பற்றி படிக்கும் போதெல்லாம் ஹெய்டெக்கரின் தத்துவம் இந்திய தத்துவத்தை
மிகவும் ஒத்திருப்பது குறித்து வியப்பு ஏற்பட்டது.
கடைசியாய் ஒரு பிரபல கவிதை. எப்போது
காதலைப் பற்றி கேட்டாலும் வெட்கத்தை தரும் பெண்ணிடம் தபு சங்கர் கேட்கிறார்: “வெட்கத்தை
கேட்டால் என்ன தருவாய்?” இது ஒரு மொழி விளையாட்டு தான் என்றாலும் சுவாரஸ்யமானது. வெட்கத்தை
“தருகிறாள்” என்பது ஒரு உருவகம். வெட்கத்தை யாரும் தர முடியாது. ஆனால் காதலைத் தர முடியும்.
சரி வெட்கத்தை தர முடியாது என்றால் அதை செய்யலாமா? வெட்கம் என்ன பொருளா செய்வதற்கு?
வெட்கத்தை காட்டலாமா? வெட்கம் என்ன மறைந்திருக்கும் வஸ்துவா எடுத்து வெளியே காட்ட?
வெட்கத்தை நிகழ்த்தலாமா? அது என்ன நிகழ்ச்சியா நிகழ்த்துவதற்கு? உண்மையில் வெட்கத்துக்கு
வினைச்சொல்லே இல்லை.
தபு சங்கரின் கவிதை நம் மொழியின் இந்த அசட்டுத்தனம்
பற்றியதே. அதனால் தான் இவ்வரி நமக்கு கிளர்ச்சி அளிக்கிறது. ஒரு மொழிப்பிரயோகம் மீதுள்ள
பாவனையை உடைக்க அது உதவுகிறது. நாம் சிரிக்கிறோம். உவகையடைகிறோம். இதுவும் ஒரு அகவிடுதலை
தான்! ஹெய்டெக்கரின் பார்வையில் சொல்வதானால் நம் நாமே இருப்பை அறிதல்.
நன்றி: தீராநதி
Comments