முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமனிதன் எனும் பிரமை (2)

Image result for boys movie

கலைஞர்கள், படைப்பாளிகள், படைப்பு மனம் கொண்டவர்கள் ஒரு சிறுபான்மையினராக வாழ்க்கை முழுக்க நீடித்த பதின்பருவத்தில் வாழ்வார்கள். தொடர்ந்து “தன்னை” முன்வைக்க போராடிக் கொண்டிருப்பார்கள். பதின்வயதின் சிக்கல்களான வன்முறை, தீவிர போதைப் பழக்கம், கருத்து மோதல், சுய அடையாளத்தை சத்தமாய் அறிவிப்பது, பாலியல் பொறாமை மோதல்கள் ஆகியனவற்றை நாம் இலக்கிய குழுக்களில் இன்றும் காணலாம்.

 பொது சமூகம் எழுத்தாளனையும் கலைஞனையும் சற்று கோணலான பிரகிருதிகளாய் கருதுவது அவர்களின் இந்த “முதிராத”, “முதிர விரும்பாத” தன்மையினால் தான். மேற்கே ஷெல்லியில் இருந்து ஹெமிங்வே வரை, தமிழில் ஆத்மாநாம், ஜி.நாகராஜன், பிரமிள் முதல் லஷ்மி மணிவண்ணன் வரை நம் காண்பது இந்த நீட்டிக்கபட்ட “பாய்ஸ்” மனநிலை தான்.
பொதுவாக படைப்பாளிகள் “பதின்பருவத்தில்” நீடிக்கும் போது நாம் அவர்களை கலகக்காரர்கள் என்கிறோம். ஏனென்றால் சமூக போக்குகளுடனான தமது முரண்பாட்டுக்கு அவர்கள் அரசியல், கலை, உளவியல் சார்ந்த சித்தாந்த நியாயப்பாடுகளை அளிக்கிறார்கள். தாம் கலகக்காரர்கள் எனும் அதேவேளை தாம் அனுபவிக்கும் வேதனையை, பதற்றங்களை, நெருக்கடியை தொடர்ந்து பதிவு செய்யவும் செய்கிறார்கள்.
எழுத்தாளன் என்றாலே துயரத்தில் தோய்ந்தவன், தன் இருப்பு குறித்த ஐயப்பாடுகள் கொண்டவன் எனும் பிம்பம் உலகம் முழுக்க இருக்கிறது. இது பதின்பருவ நிலையின்மையை அவர்கள் கலையின், தத்துவத்தின், அதிகார எதிர்ப்பின் நுட்பமான தீவிரமான நிலைகளுக்கு எடுத்துப் போவதாலே நிகழ்கிறது.
 “முதிர்ச்சியான”, நரைகூடிய, சமூகப் பொறுப்பு கொண்ட “பாய்ஸாக” கலைஞர்கள் இருக்கிறார்கள். சமூகம் அவர்களின் இந்த பங்களிப்பை மதித்தாலும் அங்கீகரித்தாலும், முக்கிய ஆட்சி அதிகார முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகளை அது இந்த “பாய்ஸுக்கு” அநேகமாய் அளித்ததில்லை.
 ஒரு சிறந்த ஆட்சியாளனாக தத்துவவாதியும் சிந்தனையாளனுமே இருக்க இயலும் என பிளேட்டோ அறிவித்து எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகின்றன. ஆனால் அறிவுஜீவிகள் வரலாற்றில் எந்த சமூகமும் முழுக்க நம்பி பொறுப்பை கொடுப்பதாய் நிகழ்ந்ததில்லை. அப்படி நடந்தாலும் அந்த அறிவுஜீவி தன் “கலகக்கார பிம்பத்தை” கழற்றி வைத்து விட்டு “முதிர்ச்சியை” எடுத்து அணிந்தவனாக இருப்பான்.
Image result for karunanidhiImage result for nehru playboy

கலைஞர் கருணாநிதி இதற்கு நேர்மறை உதாரணம். நேரு ஒரு எதிர்மறை உதாரணம். கலைஞரின் அரசியல் வாழ்க்கை வெற்றிகரமானது, தத்தளிப்புகள் அற்றது. ஏனெனில் அவர் அரசியலில் டீனேஜ் கலகக்காரர் அல்ல. ஆனால் நேருவோ அவ்வாறு டீனேஜ் முகமூடியை கழற்ற முடியாது தத்தளித்தவர். சர்தார் பட்டேலிடம் இருந்து தொடர்ந்து தன் அரசியல் இடம் குறித்த நெருக்கடியை சந்தித்தவர்.
டீனேஜில் நாம் அனுபவிக்கும் உள்-போராட்டத்தின் மையமே “நான் தனி ஆள்” என காட்டும் விழைவு தான் என கூறினேன் அல்லவா; நமக்குள் இந்த ”தனி ஆள்” உண்மையிலே இருக்கிறானா? அல்லது இது ஒருவித பிரமையா? தனிமனித நிலை உன்னதமானதா அல்லது பொதுப்போக்கு / பொதுப்புத்தி என பழிக்கப்படும் சமூக மனநிலை சரியானதா? ஊரை எதிர்ப்பது சரியா ஊருக்கு வழங்கிப் போவது சரியா? இந்த கேள்விகளை எனது மாணவர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் எழுப்பினார்.
 அவர் பெயர் ஆதர்ஷ். ஆரம்பநிலை எழுத்தாளன். தன் கட்டுரைகளை எனக்கு அனுப்பி கருத்துக் கேட்பார். ஆய்ஷின் கேள்விகள் என்ன என அடுத்த பதிவில் பார்ப்போம்…
(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...