நமக்கு முந்தின தலைமுறையினர் வேலையை சதா தலையில் தூக்கித் திரிபவர்களாக இருந்தனர். என் அப்பா வீட்டுக்கு வந்த பின்னரும் ஏன் தன் கனவில் கூட தன் வேலையிட கவலைகளையே அசைபோடுவார், அவற்றைப் பற்றியே புலம்புவார், வேலையிட சாதனைகளைக் குறித்து பெருமிதப்படுவார், தான் வேலை பார்த்த வங்கியின் பிள்ளை என்றே தன்னை குறிப்பிடுவார். சமூக அரசியல் செயல்பாடுகளில் லட்சியவாதம் தோற்ற பின் வேலையில் மட்டும் மக்கள் லட்சியவாதத்துடன் இருந்த காலகட்டம் என் அப்பாவுடையது. ஆனால் இன்று வாழ்க்கை ஒரு மசாலா சினிமா போல. அலுவலகத்தில் ஒரு சண்டைக் காட்சி முடிந்ததும், வெளியே ஒரு டாஸ்மாக் பாடல் அல்லது டூயட் என மக்கள் ஜெர்க்கே ஆகாமல் ஈடுபடுகிறார்கள்.
எனக்கு நமது சமகால தலைமுறையினரின் நடவடிக்கைகள் ஒரு சினிமாக் காட்சியை அடிக்கடி நினைவுபடுத்தும். அது குவிண்டன் டரண்டினோவின் Pulp
Fiction. அதில் ஒரு டானின் கீழ் வேலை செய்யும் சேர்ந்த இரண்டு அடியாட்கள் தமது டானை ஏமாற்றிய சில இளைஞர்களை தீர்த்துக் கட்டி அவர்களிடம் இருந்து தங்கத்தை மீட்க காரில் போகிறார்கள். ஒருவர் ஜான் டிராவால்ட்டோ, இன்னொருவர் சாமுவல் ஜாக்ஸன். டிராவால்ட்டோ பெண்களின் பாதத்தை மசாஜ் செய்வதைப் பற்றி பேசுகிறார்; அது செக்ஸுக்கு ஈடானது; சரியாக பாதத்தை மசாஜ் செய்யத் தெரிந்தவர் ஒருவர் ஒரு பெண்ணுக்கு உச்சகட்ட கிளர்ச்சியை அதன் வழியே அளிக்க இயலும் என்கிறார். ஜாக்ஸன் அது சுத்த பேத்தல் என்கிறேன். இந்த அற்ப விசயத்தை இருவரும் மிக சீரியஸாய் ஏதோ தத்துவ விவாதம் போல இதைப் பற்றி பேசுவார்கள். அடுத்து அந்த பையன்களை தீர்த்துக் கட்டும் கட்டம். அவர்களிடம் ஜாக்ஸன் விவிலியத்தில் இருந்து ஒரு மேற்கோளை எடுத்து விவரிப்பார். அநீதி விளைவிப்போரை ஆண்டவர் தோன்றி அழிப்பார் என கூறியுள்ளார். நீ என் டானுக்கு அநீதி செய்து விட்டார். ஆகையால் உன்னை அழிக்க நான் தோன்றி உள்ளேன் என்றபடி அனைவரையும் சுட்டி ரத்த வெள்ளத்தில் சாய்ப்பார்.
முதல் சம்பாஷணையில் இருவரும் ஒரு விளையாட்டுத்தனமான விசயத்தை சீரியஸாக பேசுகிறார்கள்; இரண்டாவதில் சீரியஸான ஒன்றை சற்றும் பொருத்தமில்லாத ஒரு சந்தர்பத்தில் சொல்கிறார்கள். ஒருவேளை ஜேக்ஸன் ஞாயிற்றுக் கிழமை காலை தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கையில் யாராவது அவர் கண்முன் ஒரு கொலை செய்தால் அதனால் மிகவும் தொந்தரவுக்குள்ளாகலாம். தேவனின் ஆலயத்தில் எப்படி ஒரு பாப காரியம் செய்யலாம் என அவர் ரத்தம் கொதிக்க்கலாம். ஆனால் அவர் தேவனின் சொற்களை ஒரு பாப காரியம் செய்ய பயன்படுத்துவார். அதில் அவருக்கு எந்த முரணும் இல்லை. ஏனெனில் எந்த தீவிர நம்பிக்கையும் வெறும் கதையாடலாகிப் போன ஒரு காலத்தில் நாம் இப்போது வாழ்கிறோம்.
மக்கள் எந்த குற்றத்தையும் புரிந்து விட்டு சாமர்த்தியமாய் அதை நியாயப்படுத்துவதை இன்று காண்கிறோம்; மக்கள் சளைக்காமல் மணிக்கணக்கில் ஒரு விசயத்தை பேசி நிறுவி விட்டு அதற்கு நேர் எதிராய் நடந்து கொள்வதை காண்கிறோம். எதிலும் பிடிப்பில்லாத மக்கள் எல்லாவற்றிலும் பிடிப்பு கொள்கிறார்கள். மக்கள் இன்று எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்கிறார்கள். சமீபத்தில் நடந்த புதிய தலைமுறை “புதுப்புது அர்த்தங்கள்” சர்ச்சை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
“புதுப்புது அர்த்தங்கள்” நிகழ்ச்சியில் பெண்களின் மாதவிலக்கு குறித்த ஒரு கவிதையை நெறியாளர் கார்த்திகேயன் பகிர, அதை ஒட்டி சமூக வலைதளத்தில் பா.ஜ.கவின் நாராயணன் இது இந்து மதத்தின் மீதான தாக்குதல் என எழுதி கண்டிக்கிறார். அவரை ஒட்டி இந்துத்துவர்கள் புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வனை தாக்குகிறார்கள். அவர்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டு மீண்டும் ஒரு பதிவெழுதும் நாராயணன் நீங்கள் கண்டிக்க வேண்டியது, சேற்றை வாரி அடிக்க வேண்டியது “கார்த்திகைச் செல்வனை அல்ல கார்த்திகேயனை” என திருத்துகிறார். இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று இது: இந்துத்துவர்கள் கார்த்திகேயன் என்ற பெயரைக் கேட்டதும் தமக்கு நன்கு பழக்கமான கார்த்திகைச் செல்வனின் தோற்றத்துடன் அதை பொருத்திக் கொள்கிறார்கள். கார்த்திகேயன் எனும் பெயரையும் கார்த்திகைச் செல்வனாய் தன்னிச்சையாய் இடம் மாற்றுகிறார்கள். நிகழ்ச்சியை அவர்கள் பார்க்கவில்லை என்று மட்டுமல்ல, அவர்கள் இச்சம்பவம் பற்றின குறைந்த பட்ச தகவல்களை அறியக் கூட எத்தனிக்கவில்லை. இந்துத்துவர்கள் பொதுவாகவே ஆட்டு மந்தை தானே என வினவு இணையதளத்தில்
இதைப் பற்றி எழுதுகிறார்கள். நான் இதை ஏற்கவில்லை. சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் இப்படித் தான் இருக்கிறோம். நம்மிடம் உள்ளது ஒரு குருட்டுக் கோபம், ஒரு குருட்டு பெருமிதம், ஒரு குருட்டு வெறுப்பு, ஒரு குருட்டு விசுவாசம். அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கையில் நாம் தகவல்களை உறுதிப்படுத்த எல்லாம் முனைப்பு காட்டுவதில்லை. இது தெருவில் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதுடன் ஒத்திருப்பதை காணலாம்.
தெருக் கிரிக்கெட்டில் அணிகளெல்லாம் துல்லியமாய் இருப்பதில்லை. கூட்டமாய் பையன்கள் ஆட்டம் நடக்கும் இடத்தில் இடத்தில் இருப்பார்கள். அவர்கள் இன்னின்னாருக்குத் தான் ஆட வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்க மாட்டார்கள். சற்று முன் அவுட் ஆன பேட்ஸ்மேன் களத்தடுப்பு செய்வார். அடுத்தவர் அவுட் ஆனதும் அதுவரை சாலை ஓரமாய் நின்று தன் பால்கனி காதலிக்கு காற்றில் முத்தம் அனுப்பிக் கொண்டிருந்த
பையன் அவசரமாய் பேட்டை வாங்கிக் கொண்டு பந்தை எதிர்கொள்ள தயாராவான். முதலில் பார்ப்பவர்களுக்கு இதெல்லாமே குழப்பமாக இருக்கும். ஆனால் ஆட்டக்காரர்களுக்கு எந்த குழப்பமும் இராது. ஆட வேண்டுமா, எப்போது ஆகியன மட்டுமே அவர்களின் முன்னுள்ள வினாக்கள்.
நான் இதுவரை சமூக வலைதளங்களில் கண்டுள்ள எல்லா சர்ச்சைகளிலும் இந்த மாதிரியை கண்டுள்ளேன். அலுவலகத்தில் பாத்ரூம் போக வந்தவர் முகநூலைத் திறந்து பார்த்து, “அட, ஏதோ சர்ச்சை நடக்கிறது போல” என யோசித்து பத்தே நொடிகளில் என்ன ஏதென்று சரிவர பார்க்காமல் ரெண்டு சாத்து சாத்தி விட்டு கிளம்பி விடுவார்.
இந்த விளையாட்டுத்தனம் நம் வேலையிடங்களில், சமூக வலைதள பக்கங்களில் எங்கும் வெளிப்படுகிறது. ஆகையால் தான் பிக்பாஸுடன் நம்மால் உடனடியாய் தொடர்புறுத்த முடிகிறது.
வாழ்க்கையே, அலுவலக வேலையே, பிக்பாஸ் என்றோம். அடுத்த கேள்வி: பிக்பாஸில் வழங்கப்படும் வேலைகளை பங்கேற்பாளர்கள் எப்படி செய்கிறார்கள்? பிக்பாஸில் தினமும் ஒரு வேலை வழங்கப்படுகிறது என்றாலும் அந்த வீட்டில் வாழும் ஒவ்வொரு நொடியும் பங்கேற்பாளர்களுக்கு ஒரு வேலை தான். ஒவ்வொரு நொடியும் பதிவாகிறது; ஒவ்வொரு நொடியும் பங்கேற்பாளர்கள் மதிப்பிடப்படுகிறார்கள். ஆனால் அதற்காக, அவர்கள் மிகுந்த வேலை நெருக்கடியுடனும் இல்லை. அவர்கள் இதை ஒரே சமயம் ஜாலியான ஒரு விளையாட்டாகவும் அதே சமயம் தவறிழைக்கக் கூடாத ஒரு பணியாகவும் காண்கிறார்கள். காலையில் பள்ளியெழுப்பு பாடல் சத்தமாய் ஒலிபரப்பானதும் இது ஆரம்பிக்கிறது. சிலர் இப்போது மாயமாகிறார்கள் பாத்ரூம் போய் சுத்தமாகி மேக் அப் போட்டு வெளிவருகிறார்கள். நமக்கு ஹாய் சொல்கிறார்கள். வேறு சிலரோ தூங்கி எழுந்ததுமே பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார்கள். மக்களிடையே பெயர் வாங்கும், கவனம் பெறும் எச்சிறு வாய்ப்பையும் அவர்கள் தவற விடுவதில்லை.
இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய வேலை பரஸ்பரம் கத்தி கூப்பாடு போட்டு பரபரப்பை உண்டு பண்ணி, பார்வையாளர் கவனத்தை ஈர்ப்பை, ரேட்டிங்கை ஏற்றுவது. ஏற்கனவே பிரிந்து வாழும் தம்பதியினரான பாலாஜி, நித்யாவுக்கு இடையிலான மோதலும் அவர்களின் இணக்கமும் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
இவர்கள் இருவர்
இடையிலான வெறுப்பை காட்சிப்படுத்தி மக்களுக்கு சொறிந்து கொடுப்பதும், அதன் பிறகு இவர்கள் இணங்குவதைக் காட்டி மக்களை உற்சாகப்படுத்துவதும் நிகழ்ச்சியின் நோக்கம் என்பது அப்பட்டமாக ஆரம்பத்திலேயே தெரிந்தது. இருவரும் திரைக்கதையை துல்லியமாய் பின்பற்றினர். ஆனாலும் நிறைய குழப்பம் தெரிந்தது. இருவரும் தம் தனிப்பட்ட எதிர்மறை நினைவுகளை வெளிப்படுத்துவதை தவிர்த்தனர். ஒருநாள் மோதினால் அடுத்து சற்று நேரத்தில் ஒன்றுமே நடக்காதது போல் இணக்கமாய் கூட பணியாற்றினர். சேர்ந்து பணியாற்றிய பின் வார இறுதியில் நெறியாளர் கமலுடன் உரையாடும் போது நித்யா தன் முன்னாள் கணவர் குறித்து தன் கசப்பை வெளிப்படுத்துவார். இவர்கள் விளையாடுகிறார்களா அல்லது நிஜமாகவே எதிர்வினையாற்றுகிறார்களா என யாராலும் கண்டு பிடிக்க முடியாது. பாலாஜியும் நித்யாவும் மட்டுமல்ல நம் ஊரின் எல்லா தம்பதிகளும் இதே போல் வீட்டுக்குள் விளையாடினால் எவ்வளவு வினோதமாய் இருக்கும்!
Comments