முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (9)



Image result for காற்று வெளியிடை
காற்று வெளியிடை


(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

18. சமூகத்திலும் அரசியலிலும் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் சினிமாவில் எப்படிப் பிரதிபலிக்கிறது என்று இந்தப் புத்தகத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். இலக்கியத்திலும் அத்தகைய மாற்றங்கள் பிரதிபலிக்கப்படுகிறதா?



ஆர். அபிலாஷ்: இல்லை, இலக்கியம் அவ்வாறு சமூகத்திலும் அரசியலும் உடனுக்குடன் நிகழும் மாற்றங்களை பிரதிபலிப்பதில்லை. சொல்லப் போனால் மிக நுணுக்கமான தீவிரமான பண்பாட்டு நகர்வுகளைக் கூட உடனுக்குடன் காட்டுவது சினிமா தான். இலக்கியம் சமூக கலாச்சார நகர்வுகளை, அசைவுகளை, சரிவுகளை உருவகமாய் மாற்றுகிறது. அதற்கு ஒன்றோ இரண்டோ பத்தாண்டுகள் தேவைப்படுகின்றன. ஈழப் படுகொலைகள் முடிந்த பின், குருதியை மண் உறிஞ்சிய பின், காற்றில் ஓலங்கள் கரைந்து மறைந்த பின், ஈழப் போர் இலக்கியம் உக்கிரமாய் எழுந்து வந்தது. அதுவும் கூட நேரடியான அனுபவ சாட்சியங்களாய்த் தான். அடுத்த 25 ஆண்டுகளில் அந்த போர் அனுபவங்கள் மேலும் ஆழமாய் தீவிரமாய் பேசப்படலாம். ஜெயமோகனின்விஷ்ணுபுரம்படிக்கையில் அது நேருவின் காலம் துவங்கி இந்தியா முழுக்க இடதுசாரிகள் வீழ்ச்சியடைந்த காலம் வரையிலான காலகட்டத்தின் சித்திரம் என எனக்குத் தோன்றியது. அதாவது நமது சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியா குறித்த ஒரு உருவக / நீதிக் கதையாக அதைப் படிக்க முடியும். அதே போலத் தான்பொன்னியின் செல்வனும்”. “விஷ்ணுபுரத்தின்தீவிரமும் சிக்கலும் இல்லையெனிலும், “பொன்னியின் செல்வனில்சுதந்திரம் பெற்ற இந்தியாவின் லட்சியவாதமும் துடிப்பும் நிறைந்த, கல்மிஷம் இல்லாத ஒரு இளைஞனின் பார்வையில் (வந்தியத்தேவனின் பார்வையில்) சோழ சாம்ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியும் சதி வலைகளும் சூழ்ச்சிகளும் சித்தரிக்கப்படுகின்றன. சுந்தரச்சோழர் இந்திய தேசத்துக்கான உருவகமா அல்லது காந்தியின் குறியீடா?
ஆனால் சினிமா இப்படி வரலாற்றை தின்று செரித்து புத்துருவாக்கம் செய்வதில்லை. அது உடனுக்குடன் எதிர்வினை ஆற்றக் கூடியது.

19. அரசியல் சரிநிலைகளை நிராகரிப்பது பின்-நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. திரைப்படங்களுக்கு நம் சமூகத்தில் அதிக கவனம் கிடைக்கிறது. இவ்விரண்டு விஷயங்களையும் வைத்து பார்க்கும் போது, இன்று பின்-நவீனத்துவத்தை அறிந்துகொண்டு சினிமா இயக்க வரும் ஒருவர், அரசியல் சரிநிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமா?

ஆர். அபிலாஷ்: இன்றைய காலத்தின் ஆபத்தே அரசியல் சரிநிலைகள் தாம்அவை நம்மை சதா எச்சரிக்கை உணர்வுடன் இருக்க செய்கிறன. யாரையும் காயப்படுத்தக் கூடாது, நாம் பிற்போக்கு எனும் பிம்பம் ஏற்படக் கூடாது எனும் பீதி நம் மென்னியை பிடித்து நெரிக்கிறது. ஒரு படைப்பாளிக்கு அபாரமான சுதந்திரம் முக்கியம். அவன் தன்னை மொத்த சமூகத்துக்கும் பொறுப்பாக கருதும் போது, தன் பிம்பம் குறித்த மிதமிஞ்சிய பிரக்ஞை கொள்ளும் போது, தன் சுதந்திரத்தை இழக்கிறான். பின்நவீனத்துவம் அறிந்தவரோ அறியாதவரோ சரிநிலைகளை கைவிட வேண்டும்; அது தான் முக்கியாம். .தா., மணிரத்னம் பின்நவீனத்துவவாதி அல்ல. அவரது காற்று வெளியிடைஅரசியல் சரிநிலைகள் அற்ற ஒரு படம்.
இப்படம் தன்முனைப்பு மிக்க ஆனால் மூர்க்கமாய் ஒரு பெண்ணை நேசிக்கிற ஆணின் காதலை அவன் கோணத்தில் இருந்து பேசியது; அவனது குரூரத்தை, அக்கறையின்மையை, முரட்டுத்தனத்தை சித்தரித்தது; அத்தோடு அவனை எல்லா குறைகளை சகித்துக் கொண்டு ஒரு பெண் கசிந்துருகி காதலிப்பதையும் காட்டியது. இதை நம் பெண்ணியவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இப்படத்தை கடுமையாய் எதிர்த்தனர்.
 பெண்ணியவாதிகள் எதிர்பார்ப்பது அப்பெண் அவனை உதறிக் கொண்டு சுதந்திரமாய் வாழ்வதாய் மணிரத்னம் சித்தரித்திருக்க வேண்டும் என்பது. அது கருத்தியலுக்கு உவப்பாய் இருக்கலாம்; ஆனால் வாழ்க்கைக்கு நியாயமாய் இருக்காது. நிஜ வாழ்க்கையில் காதல் பல தீமைகளின் ஊடாய் தான் உயிர்க்கிறது, தழைக்கிறது; இப்பெண் ஏன் அவளை மதிக்காத அந்த ஆண் மீது இப்படி பைத்தியமாய் இருக்கிறாள் என்ற கேள்விக்கு சுலபத்தில் பதில் இருப்பதில்லை; காதல் நம்மை ஒரு அடிமையாய் இருக்க செய்கிறது; அதில் மனம் திளைக்க செய்கிறது. வாழ்க்கையை பகுத்தறிவுடன் மட்டும் எதிர்கொள்ளும் சில எளிய பெண்ணியவாதிகளுக்கு இந்த ஆழம் புரியாது.
ஒரு படைப்பாளி இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.