முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“முலைகள்” கடந்து வந்த பாதை



பண்டைய தமிழர் நம்மைப் போல பெண்ணுடலை பொத்திப் பாதுகாக்க வேண்டிய “செல்வமாக”, ஆண் சமூகத்தின் “உடைமையாக” கருதினார்களா அல்லது அது மிக இயல்பான ஒன்றாக கருதப்பட்டதா? இன்று இந்நிலை எப்படி உள்ளது? இலக்கியத்தில் இதற்கு கிடைக்கும் பதில்கள் என்ன?
கம்பராமாயணம் போன்ற காப்பியங்களோ, திருக்குறள் போன்ற நீதி இலக்கியமோ, சங்க இலக்கியமோ பெண் உடல் வர்ணனைகள் மலிந்து கிடக்கின்றன. கொசலை நாட்டு தெருக்களில் எதிர்படும் மகளிர், அந்தரப்புர அழகியர் என யாரைக் குறித்தென்றாலும் கம்பன் தடமுலைகளைக் குறிப்பிடாமல் நகர்வதில்லை. ஏன்?

பெண்ணின் மேலுடலை மறைப்பது இந்திய வரலாற்றில் சமீபத்தைய நிகழ்வு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்று பெண்ணின் முகத்தை பாராட்டி ரசிப்பது போன்றே முலைகளைப் பற்றி விவரிப்பதும் இருக்க வேண்டும். அதாவது பாலுறுப்பு எனும் மிகையான சமூகக் கூச்சம் இல்லாதிருந்திருக்க வேண்டும். உதாரணமாய் சிலப்பதிகாரத்தில் பதிகத்தின் முதல் பாடலில் ஒற்றை முலையுடன் கண்ணகி மரத்தின் கீழ் நிற்கும் சித்திரம் வருகிறது. அவள் முலையை திருகி வீசுவதும் தெருவிலே பட்டவர்த்தமாய் நடக்கிறது. முலை எனும் சொல்லின் வேர்ச்சொல்முல்” – இதன் பொருள் முன்னே. முலை என்றால் முன்னிற்கும் உறுப்பு என அர்த்தம். அவ்வளவு தான். அதில் எந்த கவர்ச்சியான உட்செய்தியும் இல்லை. ஆதி தமிழர் முலையை இவ்வாறு ஒரு சாதாரண உடலுறுப்பாகவே கண்டனர்.
கம்பராமாயணத்தில் நூற்றுக்கணக்கான முறை முலைகள் வருகின்றன.

ஒரு உதாரணம் தருகிறேன்:
 கமலப் பொதியினை நகுவன புணர் முலை”. (நாட்டுப்படலம், 44)
புணர் முலை என்பது நெருங்கிய ஸ்தனங்கள். இந்த முலைகள் கட்டுக்குலையாதவை எனக் குறிப்பிட கம்பன் அவற்றை விரியாத தாமரை மொட்டுகளுடன் ஒப்பிடுகிறார். இப்பெண்களின் முலைகள் தாமரை மொட்டுகளை விட மேலானவை. ஏனெனில் மொட்டுகள் மலர்ந்து பின் வாடி விடும். ஆனால் பெண் முலைகளோ ஆணின் கரம் பட்டு மலராது பின் வாடாது மொட்டாகவே இருப்பவை.
அண்ணாதுரை வைணவ பக்தி இலக்கியத்தை விமர்சித்து, திராவிட அடையாளத்தை அதற்கு மாற்றாய் கட்டமைக்கும் நோக்கில் கம்பரசம் (1947) எனும் நூல் எழுதுகிறார். அதில் பக்கம் பக்கமாய் கம்பனின் பெண் பாலுறுப்பு வர்ணனைகளை மேற்கோள் காட்டி கம்பராமாயணத்தை ஆபாச இலக்கியம் என வரையறுக்கிறார்.
பழந்தமிழ் பெண்டிர் ஆடைக்கட்டுப்பாட்டை பொறுத்தமட்டில் கூடுதல் சுதந்திரத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் பெண்ணுடலை உடைமையாக காணும் நோக்கு அன்றும் வலுவாகவே இருந்தது.
நவீன காலத்தில் ஒரு பக்கம் பெண்கள் வேலை செய்யவும் சம்பாதிக்கவுமான வாய்ப்புகள் பெருக ஆடை சுதந்திரமும் பெண்களுக்கு கிடைக்கிறது. இன்னொரு பக்கம், இப்போது தான் பெண்கள் மீதான கண்காணிப்பும் கற்பு குறித்த விசாரணைகளும் பலாத்காரங்களும் வன்முறையும் அதிகமாகியுள்ளன. “முலை” என்ற சொல்லை வெளிப்படையாய் உச்சரிக்கவே நாம் தயங்குகிறோம். இப்போது பெண் உடலை வெளிப்படையாய் சித்தரிப்பதே பெண் சுதந்திரத்தை அடைய சிறந்த வழி எனும் நிலைப்பாட்டை பெண் கவிகள் உலகம் முழுக்க எடுக்கிறார்கள். “காலாவில்” ரஞ்சித் சொல்வது போல் “உடலே ஆயுதம்” எனும் இடத்திற்கு இவர்கள் வந்து சேர்கிறார்கள். தமிழிலும் இது நேர்கிறது.
ரெண்டாயிரத்தில் குட்டிரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி எனும் படைப்பாளிகளின் வருகை தமிழ் கவிதை உலகை தடம் புரள் செய்கிறது; புத்துணர்வு அளிக்கிறது. ஆனால் நவீன இலக்கியம் இதை சரிவர புரிந்து கொள்ளும் முதிர்ச்சியுடன் இல்லாததால் பெண் கவிதை கடும் சர்ச்சைக்குள் ஆகிறது. அண்ணா கம்பனை பழித்தது போன்றே இப்போது நம் பெண் கவிகள் பழிக்கப்படுகிறார்கள். குட்டிரேவதியின் “முலைகள்” (2002) எனும் தொகுப்பு ஏற்படுத்திய சலசலப்பை இங்கு குறிப்பிடலாம்.
ஆனால் பண்டைய இலக்கியத்தில் தென்படும் ஆண்-மைய நோக்கு, ஆணின் பார்வை (male gaze) குட்டிரேவதியின் கவிதைகளிலும் உள்ளது ஆச்சரியமே.
 பருவத்தின் வரப்புகளில்
மெள்ள அலை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்” (முலைகள்)
 கம்பனைப் போன்றே குட்டிரேவதியும் முலையை ஒரு மலராகத் தான் காண்கிறார்.
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசுகண்ட அதிர்வின்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன”

ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிகளாய்
தேங்கித் தளுப்புகின்றன” (முலைகள்)
இங்கு முலைகளின் இருப்பே ஆணின் தழுவலில் ஏற்படும் பூரிப்பிலும் மதலையின் உறிஞ்சுதலில் கிடைக்கும் புளகாங்கிதத்திலும், ஆணுடனான வருத்தத்தில் ஏங்கி தளும்புதலிலும் தான் நிகழ்கிறது. ஆணின்றி முலைகளை கட்டமைக்க முடியாது எனும் இடத்தில் மீண்டும் பெண்ணிருப்பு வந்து நிற்கிறது.
ஆனால் இதற்கான எதிர்நிலையில் நின்று லீனா மணிமேகலை, மாலதி மைதிரி, சுகிர்தராணி ஆகியோர் எழுதினர்.
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது.
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.” (“உடலெழுத்து”, சுகிர்தராணி)
இப்படி ஆண் அதிகாரத்தை முறியடிக்க பெண் கவிகள் முலைகளை வெளிப்படையாய் சித்தரிக்கத் துவங்கின போது கடும் சர்ச்சைகள் கிளம்பின (அண்ணாவின் கம்பரசம் போன்றே); அவற்றின் தாக்கம் இன்னும் ஓயவில்லை.
நன்றி: விகடன் தடம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.