முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசி (2)


Image result for urban women painting

கட்டிடத்தின் பின்வாயிலைத் தாண்டி சென்றான். அங்கு வருகைப்பதிவேட்டில் பெயரெழுதும் இடத்தில் துவங்கி உள்ளே லாபி வரைக்கும் நிறைய நிறைய பெண்கள். நிறைய வண்ணத்தாள்களை கிழித்து பறக்க விட்டது போல் அவர்கள் குறுக்குமறுக்குமாய் நடந்து போனார்கள். அதற்கு பின்னரும் நிறச்சாயல்கள் காற்றில் மிதப்பதாய் அவனுக்கு தோன்றியது. வரவேற்பு மேஜையில் இருந்த பெண் துவங்கி அங்கு வேலை செய்யும் பெண்கள் வரை நிறைய மேக்கப்பும் குறைவான ஆடையும் அணிந்திருந்தார்கள். அவன் தரையை பார்த்து நடக்க முடிந்தவரை முயன்றான். ஆனாலும் ஆயிரமாயிரம் பெண்ணுடல்கள் மத்தியில் தான் தடுக்கி விழுவதான உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. மின் தூக்கி அருகே காத்திருந்த போது கண்ணை மூடி மூச்சை நன்றாய் இழுத்து விட்டான்.

மின் தூக்கிக்குள் அவனுடன் எட்டு பெண்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் மத்திய வர்க்கத்தை சேர்ந்த சுரிதார் அணிந்த வற்றலான பெண்கள். அவர்களுடன் நிற்க சற்று சகஜமாய் உணர்ந்தான். ஒருத்தியின் பெரிய உதடுகள் மீண்டும் மீண்டும் அவன் கண்ணில் பட்டன. அவளை பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை. அவனுக்கு நேராய் நின்றிருந்தாள். பக்கத்தில் திரும்பினால் யாரையாவது இடிக்க நேரும் என்பதால் அசையாமல் நின்றான். அவளது கண்களைப் பார்த்தால் அது உரையாட முயல்வது போல் ஆகும் என்பதால் முடிந்தவரை அவள் தலைக்கு மேல் பார்வையை உயர்த்தினான். ஆனால் பார்வை மீண்டும் மீண்டும் வழுக்கி உதடுகளுக்கு வந்தது. ஒவ்வொரு முறையும் அவள் சன்னமாய் புன்னகைத்தாள். ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அவள் உதடுகளையே நிலைத்து பார்த்தான். அவன் வாயில் எச்சில் ஊறியது. எதையாவது சாப்பிட்டாக வேண்டும் எனத் தோன்றியது.

அவன் இறங்க வேண்டிய தளத்தில் அவனுடன் வெளியேறின பெண்கள் அவனை இயல்பாய் உரசியபடி சென்றனர். அவர்கள் சென்றபின்னரும் அவர்களின் உடல் அங்கங்களின் அமைப்பு, மென்மை, உடைகளின் தன்மை, வெம்மை, வாசனை என தனித்தனியாக மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. சாப்பிட வேண்டும் என மீண்டும் நினைத்தான். ஒரு பொரித்த கோழிக்காலின் மினுமினுவென்ற மேற்புறம், அதன் இதமான சொரசொரப்பு, தோலை பிய்த்து விரலால் அழுத்தினால் சூடான வெளுத்த தசை, அதன் பசையான வழவழப்பு…..

மூன்று நாட்களாய் டீ மட்டுமே. பசித்து பசித்து பசியே இல்லாமல் ஆகி விட்டது. இப்போது கையில் உள்ள பணத்தில் அந்த வளாகத்தில் உள்ள கபெட்டீரியாவில் காபி கூட குடிக்க முடியாது. வெளியே வாயிலின் அருகே ஒரு தள்ளுவண்டிக்கடையில் சில ஊழியர்கள் சாப்பிடுவதை பார்த்திருந்தான். அங்கே சாப்பிட்டால் திரும்ப செல்லும் போது பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏற காசு இருக்காது. மேலும் எதற்கு சாப்பிட வேண்டும் எனத் தோன்றி விட்டது. சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது?

வேகமாய் சூயிங்கம்மை மென்று கொண்டான். தன் வாய்க்குள் இருப்பது அப்போது தன்னைக் கடந்து போன ஒல்லியான இளம்பெண்ணின் ஒரு அந்தரங்க பாகம் என கற்பனை தோன்றியது. வாய்க்குள் உடனே ஊறிய வெதுவெதுப்பான எச்சில் அவளது கசியும் குருதி. ரத்த வாசனை. கைகள் நடுங்கின.

கைநடுக்கத்துடன் பிளாஸ்டிக் பையை திறந்து ஒரு மஞ்சள் ரப்பர் பேண்டை எடுத்து தனது நீண்ட முடியை கொண்டை இட்டு கட்டிக் கொண்டான். நிறுவனத்தின் கண்ணாடி வாயிலில் முகத்தைப் பார்த்தான். சவரம் செய்து பளபளப்பாக இருந்தது. அந்த குதிரைவால் முடி அவனுக்கு சற்று கூடுதல் பெண்மை சேர்த்தது. தொப்பையை அசைத்தபடி ஒரு செக்யூரிட்டி நடந்து வந்தார். சாப்பாட்டு டப்பாவை அலம்பி மேஜையில் கவிழ்த்து விட்டு அவனருகே நெருங்கினார். அவர் அவனிடம் சி.வியை வாங்கி விட்டு காத்திருக்க சொன்னார். சற்று நேரம் கழித்து ஒரு விண்ணப்ப படிவம் தந்து நிரப்ப சொன்னார். அதையும் கொடுத்து விட்டு அரைமணி நேரம் இருந்தான்.

உணவு இடைவேளை முடித்து இயல்பான மெத்தனம் தெரிய ஒவ்வொருவராய் அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கறுப்பாய் ஒல்லியாய் ஒரு பெண் வெளியே வந்தாள். செல்போனில் பேசியபடி குறுக்குநெடுக்காய் நடந்தாள். தன் அம்மாவிடம் பேசினாள். அன்று இரவு வரை வேலையை நீடிக்க வேண்டி உள்ளதால் வீட்டுக்கு வர தாமதமாகும் என தெரிவித்தாள். இந்நேரம் அங்கு செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ஒரு பெண் அவளருகே வந்து சிநேகமாய் தோளை ஒட்டி நின்றாள். இவளைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். தான் இரவு வந்ததும் மதிய உணவை உண்டு விடுவதாய் போனில் எதிர்முனையில் உள்ள அம்மாவிடம் உறுதி அளித்தாள். பிறகு அம்மா பேசுவதைக் கேட்டு குழந்தை போல் சிரித்தாள். அடிக்கடி நாணத்தால் வாயை பொத்திக் கொண்டாள். அவளது செக்யூரிட்டி தோழி அடிக்கடி அவளைப் பார்த்து சிரிப்பதும் தலையாட்டுவதுமாய் இருந்தாள். அவள் பேசி முடித்ததும் இவளிடம்இப்போ தான் லஞ்சுக்கு கிளம்பறேன். வரியா?” எனக் கேட்டாள்.
 இவள்நான் பன்னெண்டுக்கே சாப்டேன்என்றாள்.
பார்த்தியாஎன அவள் உதடு பிதுக்கினாள்.
இல்லெப்பா ரொம்ப பசியெடுத்துது. காலைல மூணே இட்லி தான் சாப்டேனா அதான் தாங்கல. நீ வூட்டுக்கு கிளம்பலெ?”
எக்ஸ்டென்ஷன்
எடுத்து வந்திருக்கியா?”
இல்ல காண்டீன் போறேன்
இப்போ சாப்பாடு தீந்திருக்குமே. வெளியே போனா பாய்க்கடையில பிரியாணி இருக்கும். வாங்கியாரவா?”
இல்ல. மெக்டொனால்ட்ஸில வாங்கி சாப்புடுறேன்
இவள் அவள் தோளை பற்றி சிநேகமாய் சிரித்தாள். அவளது கூந்தலைத் தொட்டு தடவி எதையோ விசாரித்தாள். பிறகு அவள் நினைவு வந்தவளாய்என்ன சாப்பாடு?” என்றாள்.
நேத்தைய புளிக்குழம்பு. சாதம். தொட்டுக்க வெளியே பொரிச்ச மீன் வாங்கிக் கிட்டேன். முள்ளுமீனு. நல்லாவே இல்ல. நீ ஏன் இவ்வளவு லேட்டா வரெ? ஒரு மணிக்கு எப்பவுமே கிளம்பிடுவ இல்ல?” என்றாள் இவள்.
எக்ஸ்டெண்ட் பண்ண சொல்லிக் கேட்டாங்க. அப்பவே ரொம்ப பசிச்சுது. ஆனால் காலைல தந்த பைலை முடிச்சுட்டு சாப்பிடாலுமுன்னு உட்கார்ந்தேனா அப்பிடியே மறந்திட்டேன். பிறகு பசி போயிடுச்சு. இப்போ எதுனாச்சும் வாங்கி கொறிச்சுட்டு வரலாமுன்னு வெளியே வந்தேன். அம்மா வீட்ல முருங்கைக்கா சாம்பாரும் உருளைக்கிழங்கு பொரியலும் எனக்காக பண்ணி வச்சிருக்கிறதா சொன்னாங்க. நான் அதை வந்து சாப்பிட மாட்டேனோன்னு அவங்களுக்கு ரொம்ப வருத்தம். அதைக் கேட்ட பின்னே இப்போ சாப்பிடணமுன்னு ஆசையா இருக்குதுடி”.
இவள் அவள் தோளைப் பற்றி ஆறுதல் சொன்னாள். இருவரும் பேசியபடி மின் தூக்கிக்குள் நுழைந்து கீழே சென்றார்கள்.

(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...