முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஷாக் (2)


Image result for pain of love painting
என் பார்வை  அப்போது அங்கு வந்த ப்ரியா மீது சாய்ந்தது. கன்னம் வற்றி, நெற்றியில் கவலைக் கோடுகளுடன் அலுப்பாக தெரிந்தாள். என் கண்களை கவனித்ததும் அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அட ஒண்ணும் ஆகாதுங்க. தொடுங்க
தொட்டேன். ஒன்றும் தெரியவில்லை.
ஒரு வைப்ரேஷன் தெரியுதா?”
இல்லீங்க

அதான். ஆனால் எனக்குத் தெரியுது. சில நேரம் எதாவது உலோகத்தைத் தொடுகையில் எனக்கு சின்னதா ஷாக் கூட அடிக்குது. போனவாட்டி நீங்க இது பற்றி சொன்ன போது விசித்திரமா பட்டுச்சு. இப்போ...”
என்ன சொல்றீங்க? அதெப்படி உங்களுக்கு திடீர்னு? சேச்சே
இது காதலில் விழுற மாதிரி இல்லையா?”
ஆங்?”
I know this is a stupid comparison. ஆனால் காதல் வயப்பட்டிருக்கையில் நமக்கு மட்டும் தான் அந்த அவஸ்தை என நினைப்போம். இந்த நிலைமின்சாரப் பிரச்சனையும் அப்படித் தான். ஆனால் உங்களுக்கு மட்டுமல்ல பல லட்சம் பேர் இதனால் அவதிப்படுகிறார்கள்.
அவரது சொற்கள் எனக்கு ஊடாய் கடந்தன. சும்மா சொன்னேன்,
என்னால் நம்ப முடியல சார்!”
 நேத்து ப்ரியா காப்பி கொணந்தாளே அதை வாங்கின போது ஸ்ர்ர்ன்னு ஒரு ஷாக். கையை விட்டதுல மொத்தமும் கொட்டிடுச்சு. ஆனால் அடுத்த வாட்டி அவள் காப்பியை கொணந்து கீழே வச்ச பின்னே நானா எடுத்தா ஷாக் இல்ல.”
ஆமா. அதுக்கு பின்னே தான் நான் இதைப் பற்றி தேடித் தேடி படிச்சேன். Static electric field. அது தான் இந்த விசித்திரத்துக்கு எல்லாம் காரணம். இதுக்கு முன்னே எனக்கு இருந்ததில்லை. ஆனால் இந்த மருந்து மாத்திரை, அலைச்சல், பதற்றம், கவலை, பின்னே lack of sex, ஆமா செக்ஸ், she hardly touches me now…
அவர் ஏன் அப்படிச் சொன்னார்? ப்ரியா சட்டென முகம் சிவந்து கண் நிறைந்து போய் எழுந்து நின்றாள். வேகமாய் பக்கத்து அறைக்கு சென்று கதவை சாத்தினாள். அக்ஷய் கணினியை விட்டு எழுந்து ஓடி வந்து அவன் அப்பா கையை கட்டிக் கொண்டான். அவர் அவனை ஒற்றைக் கையால் அணைத்துக் கொண்டார்.
சாரி சாரிநான் அப்படி சொல்லி இருக்க கூடாது.”
நான் பேச்சை மாற்றினேன். அவருக்கு பிரியமான பாடல் ஒன்றை கிட்டாரில் மீட்டி கேட்பித்தேன். நான் முடித்த போது அவர் என் கையைப் பற்றி தழுதழுத்தார். ஆச்சரியமாய் எங்களுக்குள் ஷாக்கே இல்லை. இதைச் சொன்னதும் அவர் கண்கள் ஜொலிக்க சிரித்தார்.
தீராவியாதியாளன் ஒருவர் மருத்துவமனையில் தன்னை ஒத்த இன்னொருவனைக் கண்டதும் கொள்ளும் நிம்மதியைப் போல இது இல்லையா?”
அலுவலகத்தில் எனக்கு மேலாளரான ப்ரியா இப்போது மற்றொருத்தியாக மாறிப் போனாள். அவளது நடவடிக்கைகளில் ஏதோ இனம்புரியாத மாற்றங்கள். என்னை ஒன்று புறக்கணித்தாள்; அல்லது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினாள். ஒருநாள் நான் தனியாய் இருக்கையில் சுவரைப் பார்த்தபடி என்னிடம் பேசினாள்:
வீட்டுக் கோவத்தை முழுக்க உன் மேல காட்டுறேன் இல்லையா? ஏன் உன்னை இப்படி வதைக்கிறேன்? சத்தியமா தெரியல…”
 வேலையை விடலாம் என அந்த தருணத்தில் முடிவெடுத்தேன்.
அடுத்த நாள் சீக்கிரமாகவே சென்று விட்டேன். வரவேற்பறை தாண்டினதும் வரும் அந்த சின்ன சந்திப்பு அறை. ஒரு சின்ன மேஜை. சில பத்திரிகைகள். இரண்டு நாற்காலிகள். விடாமல் சொட்டும் ஏ.ஸி. அவளை முதன்முதலாய் பார்த்த இடம் அது. சரியாய் பதிமூன்று மாதங்களுக்கு முன்.
அன்று என் கையில் ஏற்கனவே சில நிறுவனங்களின் ஆபர் லெட்டர்கள் இருந்தன. மேலான சம்பளம், நல்ல பொறுப்புகள். சரி, இந்த வேலை வேண்டாம், ஆனால் இறுதி கட்ட நேர்முக சந்திப்பை மட்டும் முடித்து விடுவோம் என காத்திருந்தேன். அதற்குத் தான் டையை அடிக்கடி லகுவாக்கி மொபைலை பார்த்தபடியான அந்த காத்திருப்பு. அப்போது தான்  அவ்வறையை சிலமுறைகள் கடந்து போன அவளை முதலில் பார்த்தேன். நீல காட்டன் சேலை; தலையில் கொஞ்சமாய் மல்லிகை. அழகாய் மூக்குத்தி. அந்த அலுவலகத்தில் அப்படி ஒரு தோற்றத்தில் நான் பார்க்கும் முதல் பெண்.
அங்கு உள்ள ஒரு சீனியர் என்றே அவளைப் பற்றி முதலில் எண்ணினேன். ஆனால் அந்த அறைக்குள் எனது இறுதி கட்ட நேர்முகத்தை எடுப்பதற்கு அவளே வருவாள் என சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.
கண்ணாடிக் கதவைத் திறந்து எனக்கு எதிரே அமர்ந்து கோப்பில் இருந்து சில காகிதங்களை எடுத்து பார்வையை ஓட்டினாள். முந்தானையை சரி செய்தாள். இருக்கையில் நகர்ந்து அமர்ந்தாள். என்னிடம் அவள் கேட்ட அலுவல் நிமித்தமான கேள்விகள் எப்படியோ எனது இருப்பை அவள் துல்லியமாய் அந்தரங்கமாய் உணர்ந்து கொண்டதை சொல்லின. நான் மேஜையில் சாய்ந்து கிட்டத்தட்ட அவள் முகவாயை தொடும் வண்ணம் நகர்ந்து மென்மையாய் பேசினேன். அவள் கேட்டதற்கெல்லாம் சரி என்றேன். இந்த வேலை உறுதியானதல்ல, இது ஒரு பைலட் புரோஜக்ட், புரோஜக்ட் வெற்றி பெற்றால் மட்டுமே ஊதியம் உயரும், உங்கள் அனுபவத்துக்கு இதை விட சிறப்பான பொறுப்புகள் வெளியே கிடைத்தால் போய் விடுவீர்களா? அவள் விரும்பியதை நான் சொன்னேன். நான் விரும்பியதை அவள் கேட்டாள். நாங்கள் பரஸ்பரம் கைமாறின சொற்கள் முழங்கையில் ஏறி கொத்தி விளையாடும் கலர் கலரான கோழிக்குஞ்சுகளைப் போல நடந்து கொண்டன.
நான் எழுந்து கண்ணாடிக் கதவின் பிடியில் கைவைத்தேன். பட்டென மெல்லிய அதிர்ச்சி தாக்கியது. ஒரு நொடி திடுக்கிட்டு தடுமாறினேன். அது தான் துவக்கம்.

(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...