“ஆண் வெறுப்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு கௌரவமான, செயல் மதிப்புள்ள
ஒரு அரசியல் முன்னெடுப்பு; ஒடுக்கப்படும் பெண்கள் தம்மை ஒடுக்கும் ஆண் வர்க்கம் மீது
வர்க்க வெறுப்பு கொள்ள உரிமை உள்ளது.
-
ராபின் மோர்கன், ரேடிக்கல் பெண்ணியவாதி”
இன்று metoo போராட்டத்தில்
முன்னிலை பெறுவது ரேடிக்கல் பெண்ணியவாதம். எந்த வித நுணுக்கங்களையும் சிக்கல்களையும் கருத்தில் கொள்ளாமல் “ஆண் என்றால் ஆணாதிக்கவாதி, ஆணாதிக்கத்தை ஒழிக்க ஆணை மிதிக்க வேண்டும்” எனும் தட்டையான பார்வையை கொண்டது ரேடிக்கல் பெண்ணியம். ரேடிக்கல் பெண்ணியத்துக்கு ஒரு நல்ல உதாரணம் ஆரம்ப கால அம்பையின்
கதைகள். அதில் கணவர்கள், அப்பாக்கள் எல்லாரும் வில்லன்கள். பெண் ஒடுக்குமுறையில் சாதி மற்றும் மதத்தின் பங்கு என்ன எனும்
கேள்வியை நீங்கள் அம்பையில் காண இயலாது. பெண் என்பவள் எப்படி ஒரு மாறாத இருப்பல்ல, அவளது இருப்பு நீர்மையான இருப்பாக உள்ளது எனும் புரிதல் அவரது
கதைகளில் இருக்காது. ஆணற்ற ஒரு பெண்
சகோதரத்துவமே அம்பையின் கனவு. ஆனால் ஆணும் ஆண்-மைய வாதமும் ஒன்றல்ல எனும் புரிதல் அக்கதைகளில் இருக்காது. ஆண் = ஆண்-மைய வாதம் எனும் எளிமைப்படுத்தலையே அத்தனை ரேடிக்கல் பெண்ணியவாதிகளிடமும்
நாம் காண்கிறோம்.
உலகம் முழுக்க பெண்ணியம் இந்த தட்டைவாதத்தை கடந்து இன்று
நெடுந்தூரம் வந்து விட்டது. இன்று அது பால்நிலையை
ஒரு கட்டமைப்பாக பார்க்கிறது – அரசியல், கலாச்சாரம், சமூகம், மொழி என பல நிலைகளில் பெண் ஒடுக்குமுறை கட்டமைக்கப்படுவதை
கவனிக்கிறது இன்றைய பெண்ணியம். அது ஆணாதிக்கத்தை
ஆண் சம்மந்தப்பட்ட ஒன்றாய் பார்ப்பதில்லை.
பெண்நிலை என்பது வெகு நுணுக்கமாய் பல சமூக கட்டமைப்புகளுக்குள்
பொதியப்பட்டுள்ளது. ஆணை மட்டும் செவிட்டில்
அறைந்தால் பெண் விடுதலை சாத்தியமாகாது. வீட்டில் கணவனும் அலுவலகத்தில் மேலதிகாரியும் பேருந்தில் உரசு சகபயணியும் மட்டும்
அல்ல ஆணாதிக்கவாதி – மதத்தை நேரடியாய் / மறைமுகமாய் ஆதரிக்கும் ஒரு பெண்ணும் தான் ஆணாதிக்கத்தை தனக்குள்ளே கொண்டிருக்கிறாள். சாதியை பின்பற்றும் பெண்ணும் தான் ஆணாதிக்கவாதத்தை அனுசரிக்கிறாள். பெரியார் இதைக் குறித்து முன்பே சிந்தித்திருக்கிறார். ஆகையால் தான் அவர் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் அடிவேரை
சாதி மற்றும் மதங்களில் தேடினார். கடந்த சில பத்தாண்டுகளில்
நமது இந்திய பெண்ணியவாதிகள் இந்த பல-நிலையிலான பெண் இருப்பை புரிந்து கொண்டிருக்கிறார்களா என்றால் இல்லை என்பேன்.
அவர்கள் இதைப் புரிந்து கொண்டிருப்பின், சாதிப் படுகொலைகள் நிகழும் போது பாதிக்கப்பட்ட தலித்துடன்
கைகோர்த்து, மேல்சாதி பெண்களையும் போராட களமிறங்க கோரியிருப்பார்கள். இளவரசன் – திவ்யாவை முன்வைத்து
வன்முறை வெடித்த போது அவர்கள் ஒரு இயக்கமாய் நின்று போராடி திவ்யாவை மீட்டிருப்பார்கள். ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று வீசப்பட்டால் ஆயிரக்கணக்கில்
பெண்ணிய போராளிகள் கொடி எந்தி போராடுவார்கள். ஆனால் இதுவே ஒரு தலித் ஆண் கொல்லப்பட்டு ரயில் பாதையில் வீசப்பட்டால்
அவரகள் ஏன் களமிறங்குவதில்லை?
தலித் ஆணுக்காய் போராட தலித் அமைப்புகள் இல்லையா என நீங்கள்
கேட்கலாம். ஆனால் தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் இரண்டாய்
பார்ப்பது பெண்ணியத்துக்கே ஆபத்தாகும், ஊறு விளைவிக்கும் என நான் பார்க்கிறேன்.
மேலும், பெண்கள் ஒடுக்கப்படும் போது அரசியல் கடப்பாடு கொண்ட
ஆண்கள் பெண்ணிய பதாகை ஏந்த தயங்குவதில்லை. சொல்லப் போனால் ஏழைகள், மத சிறுபான்மையினர்,
தலித்துகள், நிலம் பிடுங்கப்பட்டவர்கள் என பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்குமான குரலை
போராளிகள் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். ஆகையால், பெண்ணியவாதிகளும் சாதிய வன்முறை
எதிர்ப்பில் முனைப்புடன் களமிறங்குவதே நியாயம்.
தொடர்ந்து பெண்களை சாதியத்தில் இருந்து, சாதிக்குள் மணம் புரிவதில் இருந்து, கோயிலில் இருந்து, மதவாத சடங்குகளில் இருந்து, தேவாலயத்தில் இருந்து, மசூதியில் இருந்து விடுவிக்காமல் பெண்விடுதலை சாத்தியப்படாது.
ஏன் இந்திய பெண்ணியவாதிகள் இதைச் செய்வதில்லை என்பதற்கு ஒரு
அடிப்படையான காரணம் உள்ளது – இந்தியப் பெண்கள்
மறைமுகமாயும் நேரடியாகவும் சாதியை ஆதரிக்கிறார்கள்; அவர்கள் மதத்துடன் கட்டுண்டு கிடக்கிறார்கள். ஆகையால் அவர்கள் சாதிக்கு எதிராய் சுலபத்தில் ஒன்று திரட்ட
முடியாது. பதிலாக, ஆண் எனும் நேரடி இலக்கை காண்பித்து அவர்களை ஒன்று திரட்ட
முடியும்.
ஆனால் இந்திய பெண்கள் தம் மகள்கள் சாதிக்குள் மணம் புரிவதை
ஏற்பவர்களாகவும், அவர்கள் சாதியைக் கடந்து காதலிக்கும் போது அப்பெண்களுக்கு எதிராய்
கௌரவக் கொலைகள் நடத்தப்படும் போது அவற்றை ஆதரிப்பவர்களாகவும் உள்ளார்கள். பாஜகவின்
மஹிள மோர்ச்சாவின் தேசிய தலைவர் விஜயா ரஹத்கர் கூறுவதுபடி பாஜகவில் மூன்று கோடி பெண்
உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்களும் பெண் விடுதலையை கோருபவர்களே. Association of
Democratic Reforms வெளியிட்ட ஆய்வு முடிவின் படி பாஜகவில், பெண்களுக்கு எதிராய் குற்றம்
புரிந்து வழக்கு பதியப்பட்ட எம்.எல்.ஏ, எம்பிக்களின் எண்ணிக்கை 48. இந்திய தேசிய கட்சிகளிலேயே
இவ்விசயத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஆனால்
பாஜகவை ஆதரிக்கும் பெண்கள் இது குறித்த எந்த அக்கறையும் அற்றவர்கள். அடிப்படையில் பாஸிஸ்ட்
கொள்கை கொண்ட பாஜகவில் இருந்து கொண்டு, ஆணாதிக்க தேசியவாதத்தை முன்னெடுக்கும் பாஜகவில்
இருந்து கொண்டு இவர்கள் பெண் விடுதலையையும் கோருவார்கள் என்பதே நகைமுரண். இந்த பானைச்
சோற்றின் ஒரு பருக்கை தான் தமிழிசை. அவர் தான் சமீபத்தில் சின்மயியின் metoo பதிவுகளுக்கு
ஆதரவளித்தார்.
தேசிய அளவில் நேரடியாய் மோடியை ஆதரவளிக்கும் பெண்ணிய்வாதி
மது கீஷ்வர். அவர் இந்துத்துவாவுக்கு பெண்ணிய சாயம் பூசுவதைக் கேட்டால் தலை சுற்றும்.
மனு ஜோசப் இந்த கட்டுரையில் தான் பேட்டியெடுத்த பெண் பாஜக ஆதரவாளர்களைக் குறிப்பிடுகிறார்.
இவர்களில் சிலர் தம் பெயரை குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார்கள். இது தான்
இன்றைய நிலை – இந்துத்துவ பெண் ஸ்லீப்பர் செல்கள் கணிசமானோர் இங்கு உள்ளர,
https://www.livemint.com/Leisure/mWiYGk5ixlqU99RVvrjGAJ/Women-in-the-right-wing.html
மோடி இங்கிலாந்துக்கு சென்றிருந்த போது அங்கு அவருக்கு ஆர்ப்பாட்டமான
ஆதரவளித்த கணிசமான ஆதரவாளர்கள் பெண்கள். இதை feminisminindia பத்திரிகையின் இந்த எழுத்தாளர்
வியப்புடன் பதிவு செய்கிறார். ஆசீபா படுகொலைக்கு சற்று பின்னரே மோடி இந்த பயணித்தை
மேற்கொண்டார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
https://feminisminindia.com/2018/04/23/protest-modi-in-london/
நடப்பு வாழ்வில் உள்ள பாலிய ஒடுக்குமுறைகளை ஒழிக்க வேண்டும், நாம் ஒரு ஆரோக்கியமான சமூகமாக மாற வேண்டும் என்பதை ஏற்கிறேன். ஆனால் பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது வேறு வகைகளில் தொடர்ந்து
கொண்டு தான் இருக்கும்.
மதம், சாதி எனும் பெருந்தொகைகளுக்குள்
தான் குடும்பம் எனும் சிறு தொகையும், அதனுள் தான் கணவன், மேலதிகாரி எனும்
சிறு நபர்கள் வருகிறார்கள். ஒன்றை விடுத்து
இன்னொன்றை மட்டும் நீங்கள் தாக்குவது சாக்கடையை சுத்தம் செய்யாமல் கொசுவை மட்டும் அடிப்பதைப்
போல. கொசுவை அடித்து விட்டு தினமும் சாக்கடையை வணங்குவது
போல.
இரு உதாரணங்கள் தருகிறேன். பெண்ணியம் பேசிக் கொண்டே தம் சாதித் தலைமைகளுடன் ஆதரவாய்
இருக்கும் பெண்ணியவாதிகளை எனக்குத் தெரியும். ஆணவக் கொலைகளை தம் சாதித் தலைமைகள் செய்யும் போது அமைதி காக்கும்
பெண்ணியவாதிகளைத் தெரியும். தம் குடும்பத்தில்
பெண்கள் சாதியைக் கடந்து காதலிக்கும் போது அதை ஒடுக்குகிற பெண்ணியவாதிகளை எனக்குத்
தெரியும். மதவெறி கொண்ட, ஆனால் ஆணாதிக்க வெறியை மட்டும் தனியாய் எதிர்க்கிற பெண்ணியவாதிகளை
எனக்குத் தெரியும். தன் மகள் லெஸ்பியன்
எனத் தெரிந்ததும் அவளை அடித்து மிரட்டி ஒரு ஆணுக்கு மணமுடித்து வைத்த பெண்ணியவாதிகளை
எனக்குத் தெரியும்.
இவர்களால் தான் நான் ரேடிக்கல் பெண்ணியவாதத்தை எதிர்க்கிறேன். அது தவறானது, நாசிஸ போக்கு கொண்டது என நினைக்கிறேன். (ரேடிக்கல் பெண்ணியவாதிகள் என்றால் முரட்டு பெண்ணியவாதிகள்; எல்லா முதலாளிகளும் கெட்டவர்கள், அவர்களை மட்டும் ஒழித்தால் போதும் என நம்பிய ஆரம்ப கால மார்க்ஸியவாதிகளைப்
போன்றவர்கள். முரட்டுப் பெண்ணியவாதிகளுக்கு ஆண்கள் மட்டுமே
வில்லன்கள், அவர்களை ஒழித்தால் எல்லா பிரச்சனைகளும் ஒழிந்து
விடும். இவர்களின் கனவு என்பது ஆண்களே அற்ற ஒரு பெண்ணுலகம், பெண் சகோதரத்துவம்.)
ஆண் ஒரு பெண்ணை நேரடியாய் ஒடுக்கும் போது மட்டுமே
எதிர்வினையாற்ற வேண்டும், மற்ற நேரங்களில்
கம்மென இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்ணியவாதிகளுடன் என்னால் உடன்பட முடியவில்லை. உங்கள் அலுவலகத்தில் சாதிய மேலாதிக்கம் இருக்கலாம், அதனால் நீங்கள் பலன் பெறலாம், நீங்கள் எப்போதும் உங்கள் சாதி ஆண்கள் மற்றும் பெண்களுடன்
இனக்குழு போல செயல்படலாம், பரஸ்பரம் உதவலாம், ஆனால் ஆண்கள் உங்களை ஆதிக்கம் செலுத்தினால் மட்டும் சீறுவீர்கள்
எனும் அரசியல் எனக்கு புரியவில்லை.
நீங்கள் சுய-சாதியினருக்கு காட்டும் ஆதரவு தான் ஆணாதிக்கமாக உங்களை நோக்கி திரும்பி வருகிறது
என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? நீங்கள் பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை படைப்பதும், பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதும், ஆகம முறைகளை பின்பற்றுவதும் தான் ஆணாதிக்கமாய் உங்களை நோக்கி
திரும்ப வருகிறது என ஏன் உங்களுக்குப் புரியவில்லை? நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்கும் போது அது சினிமாவில் காஸ்டிங்
கவுச்சையும் அலுவலகங்களில் பாலுறவு அனுகூலங்களை எதிர்பார்க்கும் மேலதிகாரிகளையும் மறைமுகமாய்
உருவாக்குகிறது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? ஏன் பெண்ணியவாதிகள் தம் அஜெண்டாவில் இந்துத்துவ எதிர்ப்பை
சேர்த்துக் கொள்வதில்லை? ஏன் LGBT சமூகத்தினரின் போராட்டத்தில் நீங்கள் இணைவதில்லை?
இதையெல்லாம் ஏன் ஒரு பெண் செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கலாம். நீங்கள் metooவில் காட்டும்
முனைப்பில் சிறு அளவு கூட இதையெல்லாம் எதிர்ப்பதில் காட்டுவதில் காட்டுவதில்லை என்கிறேன். தொடர்ந்து எல்லா வித அரசியல் செயல்பாடுகளிலும் பெண்கள் ஒதுங்கி
நிற்கிறார்கள். பெண் மீது விரல் சுட்டப்படும் போது மட்டுமே ஒரு
பெண் கொந்தளிப்பாள் என்றால் அவள் இச்சமூகத்தில் வாழவில்லையா?
பெண்ணை அரசியல் சமூக வெளிக்குள் அனுமதிக்காதது ஆணாதிக்க உத்தி
என்பதை நான் ஏற்க மாட்டேன். பெண்கள் மீதான
நேரடி ஒடுக்குமுறைக்கு எதிராய் இந்தளவுக்கு வெளியே வந்து போராட முடிகிற, லாபியிங் செய்ய முடிகிற பெண்களுக்கு வேறு விசயங்களில் அந்த
உரிமைகள் இல்லை என்பதில் உடன்பட மாட்டேன்.
ரேடிக்கல் பெண்ணியவாதிகள் எல்லாவற்றையும் கறுப்பு-வெள்ளை எனும் இருமைக்குள் வைத்து பார்ப்பதாலே நான் ஏற்பதில்லை. பெண்ணியவாதிகளே, நீங்கள் சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் ஒடுக்கப்படுவோர்
விசயத்திலும் -இந்துத்துவா, இந்து, கிறுத்துவ, இஸ்லாமிய மத அமைப்புகள், சாதிய சடங்குகள் ஏற்படுத்தும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் – போராட முன்வாருங்கள். நான் அன்று உங்களோடு கைகோர்ப்பேன்.
ஒரு ஊனமுற்றவனாய் இச்சமூகத்தில் நான் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளம்.
ஒரு பெண்ணியவாதி எனக்காகவும் பேச முன்வரும் போது நான் உங்களை மனப்பூர்வமாய்
ஆதரிப்பேன். உங்களை நீங்கள் இவ்வளவு தனியாய், exclusuveவாக வைத்துக் கொள்ளும் வரை, ஆண்களால் உங்களை சுலபத்தில் ஆதரிக்க முடியாது.
ஏனெனில் ஆதரிக்க முன்வரும் ஒரு ஆணைக் கூட மறைமுக
பலாத்காரம் செய்கிற ஒருவர் என்றே நீங்கள் பார்ப்பீர்கள். எல்லா ஆண்களுக்குள்ளும் ஆணாதிக்க மனோபாவம் உறைந்துள்ளது, அந்த ஆண் பெண்ணியத்தையும் ஆதரித்தாலும் கூட என்று கோருவதே
இன்றைய ரேடிக்கல் பெண்ணியம். ஆனால் பெண்ணுக்குள்ளும்
எப்படி ஆணாதிக்கவாதம் உறைந்திருக்கும் என்பதை இவர்கள் கவனிக்க மாட்டார்கள். ஏனென்றால் எல்லா பெண்களும் நல்லவர்கள், எல்லா ஆண்களும் இயல்பிலேயே கெட்டவர்கள்!
இந்த கண்மூடித் தாக்குதலை நீங்கள் நிறுத்தும்
வரை, ஆணை வெறும் ஆணுடலாய் மட்டும் பார்க்கும் வரை, ஆணுடல் என்பது சாதி மதம் உள்ளிட்ட பல சமூக காரணிகளால் கட்டமைப்பட்டது
என்பதை ஏற்று உங்கள் போராட்டத்தை விரிவு படுத்தும் வரை இது வெறும் தட்டையான போராட்டமாகவே
பார்க்கப்படும்.
பின்குறிப்பு: மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி, லீனா மணிமேகலை எனும் வரிசையிலான தமிழின் பெண்ணிய கவிகளை நான் ரேடிக்கல்
பெண்ணியவாதிகள் பட்டியலில் இணைக்க மாட்டேன். அவர்களிடம் தெளிவும் சமூக அக்கறையும் உள்ளது. அவர்கள் சாதியத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். நான் இங்கு குறிப்பிடும் முரட்டு பெண்ணியவாதிகள்
தெளிவான அரசியல் புரிதல் அற்றவர்கள், தம் எலைட் வாழ்க்கையை தாண்டி பிரச்சனைகளை கவனிக்க
தவறுபவர்கள். பிரச்சனைகளை அறிவார்ந்த ஆழமான தளத்தில் வைத்து கவனிக்க விவாதிக்க முன்வராதவர்கள்.
கண்மூடித்தனமாய் புல்டோசரால் இடித்து தள்ளுவதே பெண்ணியம் என நினைப்பவர்கள்.
Comments