
ரத்த பந்தத்தின் ஒரு வலிமை அது நெருங்கின உறவினர் குறித்து அளிக்கும் உள்ளார்ந்த ஒருவித புரிதல். மகனை ஒரு தாய் அறிவது போல, தம்பியை ஒரு அக்கா உள்ளுணர்வால் புரிந்து கொள்வது போல, சகோதரர்கள் பரஸ்பரம் அறிவது போல அவனுடன் நெடுங்காலம் பயணித்த நண்பர்கள் அல்லது காதலிகளால் கூட முடிவதில்லை. இதை என்னிடம் பத்து வருடங்களுக்கு முன்பு சொல்லி இருந்தால் பிற்போக்கான சிந்தனை என காறித் துப்பியிருப்பேன் (இந்த ரத்தவழியிலான இணக்கம், வலைதொடர்பு சாதியையும் பல சனாதன இயல்புகளையும் வளர்க்கிறது என சொல்லி). ஆனால் இன்று அது எந்தளவு உண்மை என அனுபவம் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. நம் மூதாதையர் ரத்த பந்தங்களுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு, நெருங்கின நெருங்காத உறவுகளுக்கு கொடுத்த அதிமுக்கியத்துவத்தின் காரணத்தை இப்போது புரிந்து கொள்கிறேன். எப்படி?
என் அக்காவிடம் மிக குறைவாகவே இதுவரையில் உரையாடி இருக்கிறேன் – அதாவது நான் மற்றவர்களிடம் வாயாடி உள்ளதை ஒப்பிடுகையில். சமீபத்தில் அவள் என்னிடம் ஒன்று சொன்னாள். இதுவரை யாருமே என்னைப் பற்றி அவ்வளவு துல்லியமாய் கூர்மையாய் அவதானித்ததில்லை: “உனக்கு தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிவில்லை. ஏதாவது சிக்கல் என்றால் தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்கிறாய். யார் பிரச்சனையை எழுப்புகிறார்களோ அவர்களிடம் பேசுவதை முழுக்க தவிர்த்து அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்வதற்கான வழிகளை நாடுகிறாய். ஒன்றுமே நடவாதது போல பாவனை செய்கிறாய். ஆனால் எந்த பிரச்சனையையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளாவிடில், தொடர்ந்து உறைநிலையில் வைத்தால், அது சரியாகாது; மேலும் பல புதிய பிரச்சனைகளை அது அழைத்து வரும். எவ்வளவோ எழுதுகிறாய், ஆனால் ஏன் இந்த சின்ன உண்மை உனக்குப் புரியவில்லை.” நான் விக்கித்து விட்டேன். என்ன பதில் சொல்லவென தெரியவில்லை. புன்னகைத்து தலைகுனிந்து கொண்டேன். பின்னர் தொடர்ந்து அது குறித்தே யோசித்துக்
கொண்டிருந்தேன்.
மிக நெருங்கின தனிப்பட்ட உறவுகளிடம், நான் மிக மிக முக்கியமாய் கருதும் ஆட்களிடம் நீண்ட காலமாய் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறேன். வேறு நபர்கள் என்னை காயப்படுத்தினால் அதை பேசி தீர்வு காண்பது என எளிது. எனது குறைபாடுகளையும் யோசித்து சீர் செய்ய முயல்கிறேன். அதைப் பற்றி பொதுவெளியில் எழுதவும் நான் தயங்குவதில்லை. என் மனத்தை தீர அலசி அதைப் பற்றி விரிவாக கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். என் பால்ய கால அனுபவங்களை – மிக அந்தரங்க அனுபவங்களைக் கூட – என் முதல் நாவலில் சித்தரித்திருக்கிறேன். என் நண்பர்கள், என் அலுவலக சகபாடிகள், சமூகவலைதள சகஹிருதயர்கள் என யாரிடமும் நான் பகையை பெரிதாய் வளர்ப்பதோ, காயம்பட்டு அவர்களிடம் பேசாமல் ஓடி ஒளிவதோ இல்லை. முந்தாநாள் அடித்து கட்டிப்பிடித்து மண்ணில் புரண்டிருப்பேன். ஆனால் அடுத்த நாள் கூசாமல் போய் மன்னிப்பு கேட்டு நண்பராகி விடுவேன். சின்ன வயதில் இருந்தே இதுவே என் இயல்பு. ஆனால் நான் மிக ஆழமாய் நேசிக்கிறவர்கள் விசயத்தில் மட்டும் நான் நேர்மாறாக இருக்கிறேன். இதைத் தான் அக்கா குறிப்பிட்டாள்.
என் அப்பாவுக்கு மிகவும் உடல் நலமில்லாமல் ஆகி அவர் இறுதி கட்டத்தில் இருந்த வேளை அது. சென்னையில் இருந்து அவரைப் பார்க்க ஊருக்கு சென்றிருந்தேன். எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு பேசிக் கொள்ள முடியாத பிரியம் உண்டு. அவரை வெறுத்து அதே சமயம் அதே உக்கிரத்துடன் நேசித்து அதை வெளியே சொல்லிக் கொள்ளத் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பேன். அந்த ஒரு வாரமும் அப்படித் தான் போனது.
நான் மிகவும் சிரமப்பட்டு அப்பாவைக் காண சென்ற போது அவரோ என்னை பொருட்படுத்தவே இல்லை. அதனால் காயப்பட்டு மிக பதற்றமாக இருந்தேன். இனிமேல் அவருடன் இருக்க வேண்டாம் என கடுங்கோபத்தில் ஒருநாள் புறப்பட்டு விட்டேன். கிளம்பும் போது கூட அவர் என் கையைப் பிடித்து “போகாதே இரு” என சொல்ல மாட்டாரா என ஏக்கமாய் இருந்தது. ஆனால் அவரோ சாதாரணமாய் “சரி போய் வா” என்றார். சென்னையை நெருங்கிய போது “அப்பா காலமாகி விட்டார்” என சேதி வந்தது. அப்படியே திரும்பி வந்தேன். அவரது ஈமக்கிரியை முடிந்து மசானத்தில் அவரது கடைசித் துண்டு எலும்பை கையில் எடுத்து பார்த்த போது தான் மடையுடைத்துக் கொண்டு அழுகை வந்தது. (அதன் பிறகு அந்த அனுபவத்தையே “அப்பாவின் புலிகள்” என்றொரு கதையாக வனைந்தேன்.)
என் அம்மாவிடமும் ஏதாவது ஒரு சின்ன விசயத்துக்காக முரண்பட்டு கோபித்து மாதக்கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறேன். அக்காவிடமோ வருடக்கணக்கில். இதையடுத்து நான் மிகவும் வருத்தப்பட்டு பேசாமல் இருந்தது ஜெயமோகனிடத்தில் தான். அவரது ஒரு சின்ன உதாசீனம் எனக்கு ஏற்படுத்தும் வலி மிகப்பெரியது. அதை நினைத்தே கசந்து மௌனமாகி இறுகிப் போய் விடுவேன். அப்படியே பத்து வருடங்களுக்கு மேலாக பேசாமல் இருந்து விட்டு, கடந்த வருடம் நான் சென்னையில் இருந்து கிளம்பும் போது “இனி வாழ்க்கையே முடிந்து விட்டது” என மிகையாக எண்ணி மனம் மிகவும் கனத்துப் போன நிலையில் அவரை அழைத்து சில நிமிடங்கள் பேசினேன். அவர் மிக இயல்பாய் அன்பாய் பேசினார். சென்னையை விட்டு வர மிகப்பெரிய பலமாய் அவரது சொற்கள் அமைந்தன. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் மீண்டும் அவர் என்னிடம் இருந்து விலகி விட்டார் எனத் தோன்ற கசந்து போய் அகல்யையாகி விடுவேன். இன்றும் அவரிடத்து என் உறவு அப்படியே நீடிக்கிறது.
பெங்களூர் வந்த பின் சாலையில், கடைகளில், குடியிருப்பில், புகைப்படங்களில் குழந்தைகளைக் காணும் போதெல்லாம் என் கண்கள் தளும்பி விடும். என் மகன் என் மனம் முழுக்க நிறைந்து விடுவான். அவன் என் வசம் இல்லை எனும் நினைவு என்னை கொல்லாத நாளில்லை. எவ்வளவு மகிழ்ச்சியான தருணத்திலும் மாரில் பாய்ந்த ஒரு வாளைப் போல அவன் முகம் இருந்து கொண்டிருக்கும். மறக்க முயலும் போதெல்லாம் அவன் முகம் என்னுள் ஆழமாய் இறங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அவனைத் தேடிப் போய் அணைத்துக் கொள்ள என்னால் முடியாது. இப்போது அவனை முழுக்கவே நான் இழந்து விட்டேன் எனும் நிலைமை. இனி அவனுடன் வாழவோ, அவனை கையில் ஏந்தவோ உணவு தரவோ அவனுடன் புது இடங்களுக்குப் பயணிக்கவோ அவனது அந்த நசநசவென்ற பேச்சை ரசிக்கவோ முடியாது. ஆனாலும் நான் நினைத்தால் அவனைத் தேடி அடைந்து காண முடியும். ஆனால் என்னால் முடியாது. அந்த வேதனையை, துயரத்தை என்னால் தாள முடியாது. தாள முடியாது எனும் அச்சமே என்னை அந்த உறவுச்சிடுக்கை அவிழ்க்க விடாமல் செய்கிறது.
வலியைக் கண்டு ஓடும் இயல்பு என் உடல் வலிகளின் மீதான் அச்சத்தில் இருந்து தோன்றியது என எண்ணுகிறேன். சின்ன வயதில் இருந்தே நான் வலிகளோடு தான் வாழ்ந்திருக்கிறேன் – ஆக காலில் சின்னதாய் காயம்பட்டாலே ஒவ்வொரு நிமிடமும் “ஐயோ வலிக்குமே” என எண்ணி காலை அசைக்காமலே வைத்திருப்பேன். லேசாய் கழுத்து வலி ஏற்பட்டாலே நான் பண்ணும் அதகளம் கண்டு கூட இருப்பவர்கள் பயந்து விடுவார்கள். மிக சன்னமாய் வேதனை ஏற்பட்டாலே வலிநிவாரண மருந்துகளை உட்கொள்ளும் வழக்கம் அப்படியே ஏற்பட்டது. வலி சகிப்பின்மை என் உடலில் இருந்தே என் மனத்துக்கு, என் இயல்புக்கு பற்றிப் படர்ந்திருக்க வேண்டும்.
இது என் வாழ்நாள் சிக்கல். அதுவாகவே தானாக ஒருநாள் அவிழ்ந்து சரியானால் தான் உண்டு. அன்று நான் வலியைக் கண்டு ஓடாமல் அதை அரவணைத்துக் கொள்பவனாக இருப்பேன்!
Comments