| பாஹ்ல் |
இது எப்போது குற்றத்துக்கு வெகு அருகே செல்லும் எப்போது குற்றமாகும்
என்பதற்கு விகாஸ் பாஹ்ல் விவகாரம் ஒரு உதாரணம். இவ்விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பெண்ணின் கூற்றே அடுத்து வருவது. அது பொய்யாகவும் கூட இருக்கலாம்: பாஹல் தனக்கு கீழ் பணி செய்யும் ஒரு பெண்ணுடன், ஒரு விருந்துக்குப் பின் அவளுடன் அவளது அறைக்கு துணை செல்கிறார். அங்கு சென்ற பின் அவர் அவளது மறுப்பையும் மீறி அறைக்குள்
நுழைந்து அவளது படுக்கையை பயன்படுத்துகிறார். அவள் கேட்டுக் கொண்ட பின்னும் எழுந்து வெளியேற மறுக்கிறார். அப்பெண் அடுத்து அவர் அருகே படுத்து உறங்குகிறாள். சற்று நேரத்தில் பாஹ்ல் தன் ஆடைகளை களைந்து அவளுடன் உறவு
கொள்ள முயல்கிறார். அவள் எதிர்க்க
அவர் சுயமைதுனம் செய்து அவளை அவமதித்து விட்டு வெளியேறுகிறார். பாஹ்ல் திரைத்துறையில் இது போல் வேறு பெண்களிடமும் நடந்து
கொள்ள முயல்வதாய் நடிகர் இம்ரான் கான் குற்றம் சாட்டுகிறார். நாம் இந்த சம்பவத்தை மட்டுமே எடுத்துக் கொள்வோம். பாஹ்ல் செய்தது நிச்சயம் குற்றமே. ஏனெனில் அவர் ஒவ்வொரு கட்டத்திலும் அத்துமீறுகிறார். அப்பெண்ணின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தன் எல்லையை கடந்து
ஒரு மிருகம் போல் நடந்து கொள்கிறார். ஆனால் இதே அத்துமீறலை நீங்கள் நானா படேகர் / வைரமுத்து விவகாரத்துடன் இணைத்து ஒரே பட்டியில் அடைப்பது
அநியாயம். ஒரு பெண்ணின் முன் நிர்வாணமாகி சுயமைதுனம் செய்வது
ஒரு தெளிவான குற்றம்; ஆனால் ஒரு பெண்ணின்
கையைப் பற்றி நடனமாடுவது குற்றமாவது அதை அர்த்தப்படுத்தும் விதத்திலேயே நிகழ்கிறது. (ஒருவேளை வைரமுத்துவுக்கு எதிராய் கூறப்படுவது உண்மையெனில்) ஒரு பெண்ணை அணைத்து தன் இச்சையை வெளிப்படுத்துவது குற்றத்துக்கான
முகாந்திரம் ஆகலாம், ஆனால் அது பலாத்காரத்துக்கு
இணையான ஒன்றல்ல.
பெண்கள் ஒரு ஆண் மீதான தம் விருப்பத்தை உடலளவில் சிலநேரம்
காட்டுவதுண்டு. வெகுநெருக்கமாய் வந்து ஒரு ஆணை உரசியபடி நிற்பது, தன் உடல் பகுதிகளை அவனுக்கு சன்னமாய் காட்டி அவனை தடுமாற
வைப்பது ஆகியவற்றை பெண்கள் செய்வதுண்டு. ஆனால் ஆண்களோ தயங்காமல் ஒரு பெண்ணின் கையை பற்றவோ முத்தமிட முயலவோ செய்வார்கள். பெண்கள் செய்வது A என்றால் ஆண்கள் செய்வது B. ரெண்டும் செயலளவில் வேறு வேறு என்றாலும் உத்தேசம் ஒன்றே. உத்தேசத்தைக் கொண்டு தான் இரண்டின் நியாயத்தையும் மதிப்பிட
வேண்டும். பாலுறவுக்கான உத்தேசத்தை காட்டுவதும் அதை வன்முறையாய்
பிரயோகிப்பதும் (வன்புணர்வு) ஒன்றல்ல. இன்று நாம் இரண்டையும்
ஒன்றாய் காணும் அபத்தத்தை செய்கிறோம். தொட்டாலே ரேப் எனும் மிகை-எதிர்வினைகளே
நம் சூழலில் இன்று நிறைந்துள்ளன.
“எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது” என்பதை ஒருவர் சொற்களாலும் சொல்லலாம், உடல்ரீதியாய் செய்கையாலும் காட்டலாம். இதை ஆணும் பெண்ணும் எல்லா காலத்திலும் செய்திருக்கிறார்கள். வயது வித்தியாசம், மணமாகியுள்ளதா இல்லையா என்பதெல்லாம் பாலியல் விருப்பத்தை
பொறுத்தமட்டில் ஒரு பொருட்டல்ல.
இதை செய்கிறவர்கள் அனைவரும் பொறுக்கிகள் எனில் இந்த உலகிலுள்ள
அனைவரும் பொறுக்கிகளே. ஒரு ஆணும் பெண்ணும்
சமூக கட்டுப்பாடுகளுக்கு ஒழுக்க நியதிகளுக்கு உட்பட்டே பாலியல் விருப்பங்களை தெரிவிக்க
முடிவதில்லை என்பதே எதார்த்தம். உறவுகளில் சின்ன
சின்ன பிறழ்வுகளை நாம் அனுமதிப்பதே ஆரோக்கியம். பிக் பாஸ் முதல் அத்தியாயத்தில் ஆரவ் ஓவியாவுக்கு மருத்துவ
முத்தம் கொடுத்ததை ஒரு விளையாட்டுத்தனமாய் நாம் கடந்து விட்டோம். ஆனால் ஆரவ் தன்னை பலாத்காரம் செய்ததாய் ஓவியா குற்றம் சாட்டியிருந்தால்
ஆரவ்வின் நிலை அதோகதி ஆகியிருக்கும். அது ஏற்புடையதா இல்லையா, அது வெறும் மருத்துவ
உதவியா அல்லது அத்துமீறலா என யார் தீர்மானிப்பது? பெண் மட்டுமே தானா? ஓவியாவின் அப்போதைய எதிர்வினை மிக ஆரோக்கியமானது. பிக்பாஸ் நிர்வாகமும் கமலும் அதை ஆரோக்கியமாய் எதிர்கொண்டார்கள். ஆனால் ஒரு செயல் பலாத்காரமாகவோ வெறும் காதல் சைகையாகவோ பார்க்கப்படுவதற்கு
நடுவிலான கோடு மிக மிக மெல்லிதானது. ஓவியா அன்று எரிச்சல்பட்டு
ஆரவ்வை வெறுத்திருந்தால் அந்த முத்தத்தை அவர் குற்றமாய் எண்ணி ஒரு பெரிய பிரச்சனையை
கிளப்பி இருக்கலாம். ஆணின் நிலை தான்
இங்கு மிக மிக பரிதாபமானது.
இது போன்ற பிறழ்வுகளை கற்பழிப்பு என நாம் முத்திரை குத்த
துவங்கினால் ஆணும் பெண்ணும் பேசுவதை தடை செய்து அரபு நாடுகளில் உள்ள ஒழுக்க பயங்கரவாத
நிலைக்கே நாம் செல்ல வேண்டி வரும்.
ஆண்-பெண் உறவில் விபத்துகளும்
மனஸ்தாபங்களும் தவறான புரிதல்களும் இருந்து கொண்டேதான் இருக்கும்; அதில் மென்மையான வன்முறையும் இருக்கும், கண்ணீரும் வேதனையும் கோபமும் இருக்கும். நெடுங்காலமாய் அப்படியே இருக்கிறது. ஆனால் இன்று ஒரு டேட்டிங்கின் போது தான் ஆண் மிக மிக கவனமாய்
இருக்க வேண்டி உள்ளது. பெண்ணின் சமிக்ஞைகளை
வாசிக்க தவறும் ஒரு ஆண் அவள் தன் இச்சைக்கு உடன்படுகிறாள் என கருதி அடுத்தடுத்த முயற்சிகளை
எடுக்க வாய்ப்புகள் அதிகம். இவற்றை அந்த உறவுக்குள்ளான
பிரச்சனைகளாக பார்க்க வேண்டுமே அன்றி அத்துமீறல்களாய் அல்ல. இப்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒரு பாதி இவ்வகையானவை. இப்படியே போனால், எதிர்காலத்தில் டேட்டிங் செல்லும் பெண்கள் கூட ஆணை குற்றம்
சாட்டும் சூழல் ஏற்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தீவிரத்தை, அவற்றை தண்டிக்க வேண்டிய அவசியத்தை ஏற்கிறேன். ஆனால் உலகமே ரேப்பிஸ்டுகளின் கூடாரம் எனும் கடும்பீதியில், paranoiaவில் போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஒரு ஆண் உங்களை ரெண்டு நொடி கூடுதலாய் பார்த்தாலே அதை மிகைப்படுத்தி “என்னை பார்வையாலே பலாத்காரம் செய்கிறார்களே” என புலம்புவதை, அந்த புலம்பலை நாம் பாலியல் குற்றத்துக்கான ஆதாரமாய் கொள்வது ஆபத்தானது. அழகான, கம்பீரமான ஆண்களை
பெண்களும் உற்றுப் பார்ப்பதுண்டு. இது அரிதல்ல. பெண்கள் இப்போதெல்லாம் வெளிப்படையாகவே நிறைய சைட் அடிக்கிறார்கள்; ஜொள்ளு விடுகிறார்கள். எந்த ஆணும் தான் அத்துமீறப்படுவதாய் அப்போது குற்றம் சொல்வதில்லை. ஆம், ஒடுக்குமுறையை பொறுத்தமட்டில் ஆண்களும் பெண்களும் ஒரே அளவு பாதிக்கப்படுவதில்லை. பெண்களும் என்றுமே அதிகம் பாதிப்படைகிறவர்களாக நெடுங்காலமாய் இருந்து வருகிறார்கள். ஆனால் இப்படி ஒடுக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்பதாலே ஒரு ஆண் தன் இச்சையை வெளிப்படுத்தவோ ஒரு பெண்ணை அடைய முயலவோ கூடாது, எனச் சொல்லலாமா?
ஒரு அலுவலகத்தில் ஒரு ஆண் மேலாளராகவும் ஒரு பெண் அவருக்குக் கீழே புதிதாய் சேர்ந்த ஜூனியர் என்றும் வைப்போம். தன் பதவியில் இருந்த படியே அவர் தன் விருப்பத்தை அப்பெண்ணிடம் காட்டினார் என்றால் அதைக் குற்றம் என ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும்? என்னதான் அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் அங்கே அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அப்பெண்ணை வற்புறுத்தாதவரையில் மிரட்டாதவரையில் அவர் அப்பெண்ணை அணுகுவதில் தப்பில்லை. அதிகாரம் ஓரிடத்தில் இருக்கிறது என்பதற்காகவே அவ்விடத்தில் உள்ளோர் தனிமனிதனாய் ஒரு செயலில் ஈடுபட முடியாதா? அப்பெண்ணிடம் விருப்பத்தை தெரிவிப்பதற்காக, அவளது காதலன் ஆவதற்காக அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? ஒருவர் அதிகாரத்தை கொண்டிருக்கிறார் என்பதற்காகவே அவர் எதைச் செய்தாலும் அதில் தன் அதிகாரத்தை பிரயோகிக்கக் கூடும் என்பது ஒரு சந்தேகம் மட்டும் தானே! ஏன் அவர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் செயல்பட முடியாதா?
இந்த அதிகார துஷ்பிரயோக கதையாடல் ஆண்-பெண் உறவில் ஒரு சமநிலை இருந்தாக வேண்டும், அது ஜனநாயகபூர்வமாய் இருக்க வேண்டும் எனும் லட்சியத்தின் அடிப்படையிலானது. ஆனால் இந்த லட்சியம் நடைமுறை மதிப்பற்றது. ஆண்-பெண் உறவில் எந்தவித சமநிலையும் உண்மையில் சாத்தியமில்லை; ஆனால் சமநிலையை நோக்கின சமரசமே அதில் தொடர்ந்து நிகழ்கிறது.
நான் மேற்சொன்ன உதாரணத்தில் ஒரு நேரடியான அச்சுறுத்தல் உள்ளது. அப்பெண்ணின் பதவிக்கு அந்த மேலாளரால் ஆபத்து நேரலாம். ஆனால் மறைமுக அச்சுறுத்தல்கள் இல்லாத காதலே எனக்குத் தெரிந்து இல்லை. எல்லா காதல் உறவுகளிலும் ஆணோ பெண்ணோ அழுகையாலும் மிரட்டலாலும் பரஸ்பரம் அச்சுறுத்தியும், மூளைச்சலவை செய்து நெகிழ வைத்தும் பொய்களை அடுக்கியும் பரஸ்பரம் அதிகாரத்தை பிரயோகித்து வருகிறார்கள். மேற்சொன்ன மேலாளரின் நேரடி அதிகார வலிமை இல்லாத ஒரு ஆண் மறைமுகமாய் கடுமையான வேறுவகை அதிகாரத்தை தன் காதலி மீது பிரயோகித்தபடி இருப்பான். அதன் வழி அவளை தன் எல்லா விருப்பங்களுக்கும் உடன்படுத்துவான்; அவளை அழ வைப்பான், அச்சுறுத்துவான், அலைகழிப்பான். அல்லாவிடில் ஒரு பெண் ஒரு ஆணுக்கு இதையெல்லாம் செய்து அவனை பைத்தியமாக்கிக் கொண்டிருப்பாள். இதுவே காதல். இதில் இரு சாராருக்கும் முடிவெடுக்கும் அதிகாரமும் உரிமையும் உள்ளதாய் நாம் தவறாய் நம்புகிறோம். உண்மையில் இரு சாராராலும் சுலபத்தில் ஒரு காத்திரமான தீவிரமான உறவில் இருந்து அறுத்துக் கொண்டு விடுபட முடிவதில்லை. அந்த மேலாளரின் இச்சை வெளிப்பாடு இதற்கு இணை அல்ல தான். ஆனாலும் அதிகார துஷ்பிரயோகம் இன்றி ஆண்-பெண் உறவே சாத்தியமில்லை என விளக்குவதற்காக இந்த ஒப்பீட்டை செய்தேன். சுலபத்தில் ஒருவர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என நாம் கூறி விட முடியாது – ஏனெனில் அதிகாரமும் இச்சையும் அப்படி பின்னிப் பிணைந்த ஒன்று.
ஆகையால் தான் அதிகாரத்தில் உள்ள ஒருவர் ஒரு பெண்ணை நேரடியாய் வற்புறுத்துவது மட்டுமே தப்பு என்பேன். காதல் மனு போடுவதெல்லாம் குற்றமல்ல. அவர் மனு போட்டாலே அதில் அதிகாரம் விளையாடுகிறது என்பது மற்ற காதல் உறவுகளில் அதிகாரமே இல்லை எனும் தோரணையை கொண்டுள்ளது. மேற்சொன்ன ஆயர்-கன்னியாஸ்திரி விவகாரத்தில் அந்த ஆண் தன் அதிகாரத்தை தவறாய் பயன்படுத்தினார் என நாமாகவே கற்பனை பண்ணிக் கொள்கிறோம். ஆனால் மாறாக அப்பெண் ஏன் அவரது இயல்பான அதிகார்மிக்க நிலையை கண்டு இச்சை கொண்டிருக்கக் கூடாது? ஆயருடன் உறவு கொள்ளும் பெண் அவரது அதிகாரத்தில் பங்கு கொண்டவராகிறார் தானே! அப்பெண் இப்போது கசப்பு கொண்ட நிலையில் நாம் மொத்த பழியையும் ஆயர் மீது சுமத்துவது நியாயமா என்ன?
இன்னொரு விசயம் – பெண்கள் எப்போதும் அதிகாரம், செல்வாக்கு, பணபலம், பிரபலம் கொண்ட ஆண்கள் பால் கவரப்படுகிறார்கள். இந்த ஆண்கள் தம்மை விட வயதில் மூத்தவர்கள் என்றாலும் கூட. (ஆயருடனான கன்னியாஸ்திரியின் உறவு முதல் தனுஷ்ஸ்ரீ வைக்கும் குற்றச்சாட்டு வரையிலான சர்ச்சைகளை நான் இவ்வகையில் தான் பார்க்கிறேன்.) நான் மேலே சொன்ன உதாரணத்தில் சில மாற்றங்கள் செய்வோம். ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனம். அதன் சி.இ.ஓ. வயதானவர், திருமணமாகி குழந்தைகளும் பேரப்பிள்ளைகளும் உடையவர். அவருக்கு கீழ் பணி செய்யும் ஒரு இளம் பெண். இருவருக்கும் இடையில் ஒரு காதல் தோன்றுகிறது. இப்போது இந்த உறவில் வற்புறுத்தல் இல்லை தான். இதில் பலாத்காரம் இல்லை தான். பெண்ணுக்கு தொந்தரவு இல்லை தான். ஆனால் அந்த காதல் தோன்றுவதில் ஆணின் அதிகாரமும் செல்வாக்கும் செயல்படவில்லை என உங்களால் சொல்ல முடியுமா? நாளை ஒருவர் எழுபது வயதான நீ ஒரு 20 வயதுப் பெண்ணை உன் அதிகாரத்தை பயன்படுத்தி இப்படி சீரழிக்கலாமா எனக் கேட்டால் அதில் நியாயமுள்ளதா? அந்த உறவில் நிச்சயம் அதிகார பிரயோகம் உள்ளது, அது துஷ்பிரயோகமா இல்லையா என்பது அந்த பெண்ணின் பார்வையைப் பொறுத்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு அவர் தனக்கு போதுமான கவனத்தை தரவில்லை எனத் தோன்றினால் அவர் தன் மேல் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என அப்பெண் கருதலாம்; அவர் தனது ஆளுமை மற்றும் அதிகாரம் கொண்டு கொடுத்த அழுத்தமே தன்னை அவர் பால் சாய வைத்தது என அப்பெண் குற்றம் சுமத்தலாம். ஆனால் அவர் மகிழ்ச்சியாய் அந்த உறவில் திளைத்த போது அதிகாரம் அவர் மீது செயல்படவில்லையா? அந்த உறவின் திளைப்பே, அதன் சூட்சுமமே இந்த அதிகார அழுத்தத்தில் தான் இருக்கிறதா? ஒருவேளை ஒரு பெண் ஆணிடம் ஈடுபட இந்த அதிகார முள் ஆண் பக்கம் சாய வேண்டியது அவசியமோ? இயற்கை நம்மை அவ்வாறு தான் படைத்திருக்கிறதோ?
Comments