முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Dispossessed - மொழியாக்க கதைகள் (2)


Dispossessed என்பது நவீன கோட்பாடுகளில் கவனம் பெறும் சொல். நிலத்தை இழந்தவர்கள், சொந்த அடையாளத்தை, பண்பாட்டு வேரை தொலைத்தவர்கள், உளவியல், ஆன்மீக ரீதிகளில் மையத்தில் இருந்து கழன்று வந்து தனித்து விடப்பட்டவர்கள், அகத்தில் இருந்து சிதறிப் போய் உழல்பவர்கள் என பல நிலைகளில் உள்ளவர்களை இக்கதைகள் சித்தரிக்கின்றன. ஐம்பதுகளில் இருந்து 2017இல் எழுதுகிறவர்கள் வரை பிரதிநுத்துவப்படுத்துகின்றனர். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்து 16 கதைகள். 

இக்கதைகளின் படைப்பாளிகளையும் அவர்களிடம் இருந்து பதிப்புரிமையை பெற்றுள்ள பிரசுர நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு இக்கதைகளுக்கான அனுமதியை பெறுவது சுலபமல்ல. அது ஒரு தனியாளாய் சாத்தியமாகும் ஒன்றல்ல. ஆகையால் இந்நூலை விற்க வேண்டாம், உள்சுற்றுக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம். (ஏற்கனவே ஒரு பாடத்துக்கு நாங்கள் இவ்வாறு ஒரு தொகுப்பு நூலை உள்சுற்றுக்கென வைத்திருக்கிறோம்.) ஆனாலும் சு.ராவின் கதைக்காக மட்டும் காலச்சுவடு கண்ணனிடம் தெரிவித்து அவரை வெளியீட்டின் போது பேசக் கேட்டேன். அவருக்கு வேறு கூட்டம் அப்போது இருந்ததால் முடியவில்லை.
லக்கான நூலை விட இதை எடிட் செய்வது சவாலாக அமைந்தது. அத்தனை கதைகளையும் படித்து தேர்ந்தெடுத்து ஒரு வடிவத்துள் கொண்டு வருவது மூட்டைகளை சுமந்து அடுக்குவது போன்ற கடும் பணி. அடுத்து சரித்தன்மை. கன்னடக் கதையை ஒரு நண்பரின் உதவியுடன் சரி பார்த்தேன். தமிழும் மலையாளமும் எனக்கு தெரியும் என்பதால் நானே ஒப்பு நோக்கிக் கொண்டேன். ஆனால் அது மட்டுமல்ல, மொழியாக்க மொழி எல்லா கதைகளுக்கு சீராக வர வேண்டும்; கதைகளின் தொனியும் ஒரே ஸ்ருதியில் அமைய வேண்டும். பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் கையிருந்தாலும் அது ஒற்றைக் கை எழுதியது போன்ற தோரணையை கொண்டிருந்தால் வாசிக்க லகுவாக அழகாக இருக்கும். இறுதியாய் இலக்கணத் தவறுகளை திருத்த வேண்டும். இப்பணிகளை நான் முடித்து விட்டு, மாணவர்களைக் கொண்டு ஒரு ஆசிரியக் குழு அமைத்து இரண்டாம் நிலை திருத்தங்களை மேற்கொண்டேன். அடுத்து, அட்டையை அமைக்கும் பணி. அதில் நான் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டேன். லக்கான் நூலுக்கு அட்டைப்படம் வரைந்தவர் நிதின் எனும் மாணவர். அவரது கோட்டோவிய பாணி எனக்கு பிடித்தமானது – அவரைக் கொண்டே இந்நூலுக்கும் ஒரு அபாரமான ஓவியத்தை வரைந்து பெற்றேன். அலெக்ஸ் எனும் மற்றொரு மாணவர் அட்டை வடிவமைப்பை எடுத்துக் கொண்டார். ஆச்சரியமாக அவர் நமது சந்தோஷ் நாராயணனைப் போல மினிமலிச பாணியில் ஆர்வம் கொண்டவர் என அறிந்து கொண்டேன். ஆக கோட்டோவியமும் மினிமலிசமும் சேர்ந்து ஒரு அபாரமான அட்டைப்படம் தயாரானது. (அதற்கான சில முக்கிய தொழில்நுட்ப, அழகியல் ஆலோசனைகளை வழங்கிய சந்தோஷுக்கு இங்கு என் நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன்.) ஆனால் கல்வி அரையாண்டு முடிந்து போனதால் நூல் தயாரிப்பு நின்று போனது. இந்த அரைக் கல்வியாண்டு துவக்கத்திலேயே நூலை பிரசுரித்து வெளியிட்டு விட்டோம்.
கடத்தி வரப்பட்டவர்களைப் போன்ற பார்வையாளர்களை ஒரு கூடத்தில் வைத்து தனியாய் நூல் வெளியிடுவதில் எனக்கு உடன்பாடில்லை – அதனால் வகுப்பிலேயே வெளியிட்டேன். என்னுடன் நூலை எடிட் செய்த மாணவி மிருத்திகா துவக்க உரை வழங்கினார். 2008இல் தனது மராத்திய நாவல் மொழிபெயர்ப்புக்கு (டோப்பி ஷுக்லா) சாகித்ய அகாடெமி விருது பெற்ற பேராசிரியர் மீனாட்சி ஷிவ்ராமும் கவிஞரும் பேராசிரியருமான கெ.ஜெ ஜோஷியும், எங்கள் டீன் ஜான் ஜோசப் கென்னடியும் நூலை வெளியிட்டு பேசினர். நான் நன்றியுரை வழங்கினேன்.
இந்த தொகுப்பு பணியின் போது என்னை ஆச்சரியப்படுத்தின ஒன்று மலையாளிகளின் இலக்கிய ஆர்வம் – அவர்கள் அதிகமான கதைகளை மொழியாக்கினார்கள். கதைத் தேர்வும் அபாரமாய் இருந்தது. இதற்கு அடுத்து இந்தி. தமிழிலிருந்து சு.ராவின் விகாசம் கதையை ஒரு மாணவர் தானாகவே எடுத்து மொழியாக்கினார். மிச்ச இரு கதைகளில் ஒன்றை நானாக மொழியாக்கினேன் (ஜி.நாகராஜனின் “துக்க விசாரணை”); மற்றொன்றை (புதுமைப்பித்தனின் “இது மிஷின் யுகம்”) நான் தேர்ந்து கொடுத்து ஒரு மாணவி மொழியாக்கினாள். தமிழ் மாணவர்களுக்கு ஆங்கில அறிவும் புத்திசாலித்தனமும் உண்டு – ஆனால் தமிழ் இலக்கிய பரிச்சயம் ஏனோ மிகவும் குறைவு. இந்நிலை விரைவில் மாற வேண்டும்.
மொழிபெயர்ப்பு நூல் பிரசுரம் எவ்வளவு சவாலான அதே நேரம் சாகசமான வேலை என அறிந்து கொண்டேன். திறமை மிக்க மாணவர்களை சரிவர பயன்படுத்தி இத்தகைய பணியை நிறுவனங்கள் பெரிய அளவில் செய்தால் இதுவரை மொழிபெயர்ப்பே காணாத பல இந்திய மொழிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கதைகளை ஆண்டு தோறும் கொணர முடியும். அந்த காலம் விரைவில் மலரட்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...