முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் பலாத்காரம் செய்தால்? (1)


Image result for danushree dutta rakhi sawant

நான் இங்கு பேசப் போவது MeToo கதையாடல்களில் அதிகம் அடிபடாத ஒன்று. ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்வில் நிகழும் பாலியல் தாக்குதல்கள் நமது ஊடகங்களில் அதிகம் பேசப்படுவதில்லை; MeToo போராட்டத்திலும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பிரதான இடம் இல்லை. இதற்கான நடைமுறை காரணம் இவர்கள் சிறுபான்மையினர் என்பது. உலகளவில் பல நாடுகளில் ஆண்-பெண்களின் பாலுறவு நிலைப்பாடு / பால்நாட்டம் குறித்து கணக்கெடுப்புகள் பல நடந்துள்ள. எத்தனை பேர் எதிர்-பால் கவர்ச்சியினர், எத்தனை பேர் ஓரினச் சேர்க்கையினர் (கேய் மற்றும் லெஸ்பியன்) என ஆராயும் இந்த கணக்கெடுப்புகள் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து சொல்வதென்ன

உலகம் முழுக்க அவர்களின் எண்ணிக்கையானது 1-8% என சராசரியாக சொல்லலாம். 1948 மற்றும் 1953இல் டாக்டர். ஆல்பிரட் கின்செயின் இரு கணக்கெடுப்புகளை – Sexual Behavior in the Human Male மற்றும் Sexual Behavior in the Human Female – அமெரிக்காவில் நடத்தினார். இதன் படி 37% ஆண்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக உள்ளார்கள்அதாவது அவர்கள் ஒருமுறையாவது சுயபாலினத்தினருடன் உடல்ரீதியான கவர்ச்சியை, புணர்ச்சியின்பத்தை உணர்ந்திருக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு அது வெளிவந்த காலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, இந்த கணக்கெடுப்பு முறையை ஆய்வாளர்கள் பின்வரும் காலத்தில் சரி பார்த்து 37% அல்ல 36.4% என தெரிவித்தனர். கின்செயின் கணக்கெடுப்பில் லெஸ்பியன் அனுபவம் கொண்டவர்கள் 13%.

தொண்ணூறுகளில் இருந்து சமீபம் வரை உலகு முழுக்க பல நாடுகளில் இத்தகைய கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. இந்த ஆய்வுகளின் பல நாடுகளில் படி ஓரினச்சேர்க்கையாளர்களின் சதவீதம் மேற்சொன்னவாறு 1-15% வரை உள்ளது.

 இந்த நவீன ஆய்வுகளில் ஒப்பீட்டளவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க ஒரு காரணம் இது ஒருவரின் பால்நாட்டத்தை அறிவிக்க கோருகின்றன; கென்செயின் ஆய்விலோ ஒருவரது ஓரின விழைவல்ல, அனுபவமே பிரதானப்படுத்தப்பட்டன. அதாவது இருபால் விழைஞர்களை (bisexual) கண்டறிவதே கென்செயின் நோக்கம்; மாறாக நவீன ஆய்வுகள் ஓரின விழைஞர்களை பிரதானப்படுத்துகிறது. இருபால் விழைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதில் ஆச்சரியமில்லை. அதாவது இன்று எதிர்பால் விழைஞர்களாய் இருக்கும் பெரும்பான்மையினரோர் இருபால் விழைஞர்களாகவும் இருக்கலாம். மேலும் படித்த, நல்ல வேலையில் இருக்கும் நகர்வாழ் ஆண்கள் தம்மை ஓரின விழைஞர்களாய் அடையாளப்படுத்த அதிக எண்ணிக்கையில் முன்வருகிறார்கள். சமீபகாலம் வரை இந்தியாவில் ஓரின சேர்க்கை ஒரு சட்டவிரோத செயலாக கருதப்பட்டது. எதிர்பால் விழைஞராய் இருக்கும்படியான சமூக அழுத்தமும் அதிகம். ஓரின விழைஞர்களுக்கு போதுமான கௌரவமும் சமூக இடமும் அதிகாரமும் இல்லாத நிலையில் பலரும் இருட்டில் இருக்கவும், மறைநிலை பாலுறவை தொடரவுமே விரும்புவார்கள். கணிசமான எதிர்பால் விழைவார்கள் இவ்வாறு இரட்டை வாழ்வு வாழ்கிறவர்களாகிறார்கள். இவர்கள் கணக்கெடுப்புகளில் உண்மையை சொல்ல மாட்டார்கள்; Gay Pride பேரணிகளில் முகம் காட்ட மாட்டார்கள். இதனால் இவர்கள் ஓரின / இருபால் விழைஞர்கள் அல்ல என நாம் கூற முடியாது.

இத்தகைய சிக்கல்கள் காரணமாய் கணக்கெடுப்புகளை நாம் அப்படியே கேள்வியின்றி எடுத்துக் கொள்ள முடியாது. சராசரியாய் 8% என்பது ஒரு குறைவான எண்ணிக்கையாகவே  இருக்க வேண்டும்.

பாலியல் வல்லுறவைப் பற்றி பேசும் போது நாம் அதை எதிர்பால் விழைஞர்களின் பிரச்சனையாக மட்டுமே காண்கிறோம். இந்த சட்டகத்துள் ஆண் எப்போதும் அதிகாரத்தை பிரயோகிக்கிறவனாய், துன்புறுத்துகிறவனாய் இருக்கிறான். பெண் பாதிக்கப்படுபவளாய் இருக்கிறாள். இந்த சட்டகத்துள் ஒரு மாறாத (ஆண்-பெண்) இருமை உள்ளது. இந்த ஆண் என்பவன் தன் உடலால் ஆணாக இருக்கிறான். அவனது உடல் அடையாளம் / பால்நிலை ஒரு குறிப்பிட்ட பால் விழைவை அவனுக்கு அளிக்கிறது. உடம்பால் ஆணாக இருக்கும் ஒருவன் ஒரு பெண்ணை ஆதிக்கம் செய்யவும் ஆட்கொள்ளவுமே விரும்புவான். அவன் வேறெப்படியும் யோசிக்க மாட்டான். இதனாலே ஒரு ஆண் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாய் குற்றச்சாட்டு எழும் போது நாம் கேள்வியின்றி ஏற்கிறோம், அவனை குற்றவாளி என விசாரணையின்றி முத்திரை குத்துகிறோம். அந்த ஆண் தனக்குள் ஓரின விழைவாளனாய், பெண்கள் பால் ஆர்வமில்லாதவனாய் இருந்தால்? அவன் பெண்களை தன்னைப் போல் ஒருவராய் கருதக் கூடியவனாய் இருக்கலாம். இரவில் ஒரு பெண்ணுக்கு அவன் குறுஞ்செய்தி அனுப்புகிறான் / போனில் அழைக்கிறான். அப்போது அப்பெண் தான் தொந்தரவுக்குள்ளாவதாய் நினைக்கலாம். அந்த ஆணின் பால்விழைவு எதிர்பாலினம் சார்ந்தது மட்டுமே என நினைக்கும் ஒருவர் அவனை உடனடியாய் முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் விளாசுவார். இங்கு தவறான முன்னெண்ணமே ஒருவரை குற்றவாளி ஆக்குகிறது. உலகம் முழுக்க எதிர்பாலின விழைவாளர்களே இருக்கிறார்கள் என கோருவதே இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துகிறது. ஒரு ஓரின விழைவாளரோ இருபால் விழைவாளரோ இத்தகைய வழக்குகளில் மாட்டிக் கொண்டால் தமக்கு பெண்கள் மீது இயல்பிலேயே விருப்பமில்லை என கோர முடியாதுஅப்போது அவர்கள் இதை விட மோசமான சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாவார்கள்.

அடுத்து, அதிகாரம். ஆண் அதிகாரம். ஆணாதிக்கத்தை நாம் ஆணுடலோடு பிணைக்கிறோம். ஆனால் ஒருவரின் பால் விழைவு உடல் ரீதியான பால் அடையாளத்துடன் ஒத்துப் போகவில்லை என்றால் என்னாவது? ஒருவர் ஆணின் உடலும் பெண்ணின் மனமும் கொண்டிருந்தால்? ஆணாக தோற்றம் கொண்டிருப்பதாலே அவர் பெண்களிடம் தப்பாக நடந்து கொள்ள வேண்டியதில்லையே? ஒரு பெண் பெண்களிடமும் ஆண்களிடமும் விழைவு கொண்டவர் என்றால் அங்கு அவரது பால் அதிகாரம் எவ்வாறாக உள்ளது? உயர்-பதவியில் இருக்கும் ஒரு இருபால் விழைவு கொண்ட ஒரு பெண்ணால் இன்று MeTooவில் குற்றம் சாட்டப்படும் ஆண்களுக்கு இணையான குற்றங்களை செய்ய முடியும்ஆண் மற்றும் பெண்களுக்கு எதிராக. ஆண் அதிகாரம் என்பது ஆண்களிடத்து மட்டுமல்ல பெண்களிடத்தும் செயல்பட வாய்ப்புண்டு. இதை பல ரேடிக்கல் பெண்ணிய போராளிகள் / MeToo போராளிகள் சில நேரம் ஏற்றுக் கொண்டாலும் தமது கள எதார்த்தத்தில் பொருட்படுத்துவதில்லை. ஒரு ஆணும் பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாய் முன்வந்தால் MeTooவினரின் அக்கறையும் ஆதரவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாலே இருக்கிறது. அவர்கள் அடிப்படையில் உடலளவிலேயே பால்விழையை காண்பது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

அடுத்து, மேற்சொன்ன விசயங்களுக்கு சில உதாரணங்களை தருகிறேன். லெஸ்பியன்கள் சக பெண்களை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்குவதை, இரு பால் விழைவு கொண்ட பெண்கள் ஆண்களை துன்புறுத்துவதை நிரூபிக்கும் சந்தர்பங்கள் இவை. MeTooவைப் போன்றே வாக்குமூலங்களின் அடிப்படையில் தோன்றியவை இந்த குற்றச்சாட்டுகள். ஆகையால், நிரூபிக்கப்படும் வரை இவற்றை குற்றங்களாக அல்ல குற்றச்சாட்டுகளாய் மட்டுமே பார்க்க இயலும். கீழே தரப்பட்டுள்ள வாக்குமூலக் கதைகளை சற்றே விலகலுடன் நாம் வாசிக்க வேண்டும். இவை உண்மையாக இருக்கக் கூடிய சாத்தியம் MeToo குற்றச்சாட்டுகள் எந்தளவு உண்மையாக இருக்க முடியுமோ அந்தளவே!



1)   தனுஷ்ஸ்ரீ தத்தா:

தனுஷ்ஸ்ரீ தத்தா ஒரு முன்னாள் பாலிவுட் நடிகை. இவர் பத்து வருடங்களுக்கு முன் (2008இல்) முன்னணி குணச்சித்திர நடிகர் நானா படேகர்ஹார்ன் ஒகெ ப்ளீஸ்எனும் படத்திற்கான பாடல் படப்பிடிப்பின் போது தன்னிடம் அத்துமீறியதாக சமீபத்தில் போர்க்கொடி உயர்த்தினார். ஒருஐட்டம் பாடலின் நடன அசைவு ஒன்றின் போது படேகரின் நடவடிக்கை தன்னை காயப்படுத்தியதாக அவர் கூறுகிறார். இதன் விளைவாக அவர் தொடர்ந்து நடிக்க மறுத்து வேனிட்டி வேனுக்குள் போய் அமர்ந்து கொள்கிறார். அன்றைய படப்பிடிப்பு ரத்தாகிறது. இதை அடுத்து தயாரிப்பாளர் கடுப்பாகிறார். ஒருநாள் படப்பிடிப்பு ரத்தானால் அதனால் ஏற்படும் நஷ்டம், ஒருவேளை அவர் கடன் வாங்கி தயாரிக்கிறார் என்றால் முதல் மீதான ஒருநாளைய வட்டி, வேலையே செய்யாத படக்குழுவினருக்கு அவள் அளிக்கும் கூலி மற்றும் வேறு செலவுகள் என கணக்கிட்டால் இது எத்தகைய பாதிப்பு என புரியும். ஆக தயாரிப்பாளர் தனுஷ்ஸ்ரீயை பணிய வைக்க மூன்றாம் தர முறைகளை பயன்படுத்துகிறார். தனது ஆட்களைக் கொண்டு அவரது வேனைத் தாக்க செய்கிறார்; தனுஷ்ஸ்ரீயின் பெற்றோர் காரில் வந்து அவரை அழைத்து செல்ல முயல இந்த ஆட்கள் காரை சேதப்படுத்துகிறார். இப்படி பிரச்சனை வளர்ந்து இரு தரப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாலிவுட் சம்மந்தப்பட்டது என்பதால் இது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த அடிதடி தடபுடல் சமாச்சாரங்கள் குறித்த விவரணையை அளித்தவர் அன்று அங்கு இருந்த பத்திரிகையாளர் ஜேனிஸ் செக்யூரா. நானா படேகர் குறிப்பாய் செய்த தவறு என்ன என்பதை அன்று படப்பிடிப்பின் போது அருகில் இருந்த ஒருவர் பேசினாலோ அல்லது அன்றைய காணொளி கிடைத்தாலோ மட்டுமே நாம் உறுதிப்படுத்த முடியும். குற்றம் என்னவாகினும் இந்த சந்தர்பத்தை படத் தயாரிப்பாளரும் நானா படேகரும் மோசமாக கையாண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. அதுவே தனுஷ்ஸ்ரீயை பத்து வருடங்களுக்குப் பிறகு கொந்தளிக்க வைத்துள்ளது. MeToo வகைமையை சேர்ந்த குற்றமா இது, இதற்கு சாட்சி / ஆதாரம் உண்டா எனும் கேள்விகளுக்கு என்னிடம் விடையில்லை. ஆனால் அன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்த பின் தனுஷ்ஸ்ரீ மனிதநேயமற்ற வகையில் நடத்தப்பட்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.



இதை அடுத்து மற்றொரு நடிகையான ராக்கி சாவந்த், தன் வழக்கமான அதிரடி பாணியில், தனுஷ்ஸ்ரீயின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். தனுஷ்ஸ்ரீ உடனே ராக்கிக்கு எதிராக 10 கோடி ரூபாய் கோரி மானநஷ்ட வழக்கைத் தொடுத்தார். இதை அடுத்து ராக்கி திரும்ப 50 கோடிக்கு மானநஷ்ட வழக்கை தனுஷ்ஸ்ரீக்கு எதிராக தொடுத்தார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து ஒரு குற்றச்சாட்டை வைத்தார்:  தனுஷ்ஸ்ரீயும் ராக்கி சாவந்தும் நீண்ட கால நண்பர்கள். இருவரும் சேர்ந்து மது விருந்து, பார்ட்டி என கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு பார்ட்டியின் போது தனுஷ்ஸ்ரீ தனக்கு போதை மருந்து, தான் மயங்கிய நிலையில் இருந்த போது தனது அந்தரங்க இடங்களில் வருடி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ராக்கி கூறுகிறார். ராக்கி அன்று வெறுத்துப் போய், தனுஷ்ஸ்ரீயிடம் இருந்து பிரிகிறார். தனுஷ்ஸ்ரீ அடிப்படையில் ஒரு லெஸ்பியன் என ராக்கி திரும்பத் திரும்ப சொல்கிறார்.

 அன்றைய பத்திரிகையாள சந்திப்பில் ராக்கி பேசின முறை தவறானது என்றாலும் அவரது குற்றச்சாட்டு சுவாரஸ்யமானது. அதை உண்மையென நிரூபிக்க முடியாது. தனுஷ்ஸ்ரீயின் குற்றச்சாட்டைப் போன்றே இதையும் பேச்சளவிலே எடுத்துக் கொண்டு அலசுவோம்.


எனது “MeToo: சில விமர்சனங்கள்” நூலில் இருந்து.

நூலை இணையம் வழி வாங்க:


https://www.udumalai.com/meetoo-vimarsanangal.htm


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...