Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும் (3)


Image result for பாய்ஸ் படத்துக்கு எதிரான சர்ச்சை

1930களுக்குப் பிறகு ஒழுக்க காரணங்களுக்காக ஒரு வீரர் அணியில் இருந்து திரும்ப அழைக்கப்படுவது ஹர்த்திக் மற்றும் ராகுல் விசயத்தில் தான் நடந்துள்ளது என்கிறார்கள். ஏன் கடந்த ஐம்பதாண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரரும் பெண்களிடம் நெருக்கம் பாராட்டவில்லையா? பார்ட்டிக்கு சென்றதில்லையா? இச்சையை வெளிப்படுத்தியதில்லையா? உண்மை என்னவென்றால் இன்று ஆண்-பெண் உறவு மிகவும் சிக்கலாகி உள்ளது. இணையம் வழியாக ஆண்-பெண் தொடர்புறுத்தல் இன்று நூறு மடங்கு அதிகமாகி உள்ளது. இது நம் வலதுசாரி கலாச்சார காவலர்களை அச்சுறுத்துகிறது (அவர்களே இந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவதில்லை என்றாலும் கூட). பிரபலங்கள் மீது பாலியல் சர்ச்சைகள் எழும் போது அவர்கள் இந்தியாவின் மானத்தை காக்கும் பொருட்டு கொந்தளிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இதன் மூலம் ஆண்-பெண் ஒழுக்கத்தை தற்காலிகமாய் வலியுறுத்த முயல்கிறார்கள்.

அடுத்து, இன்று பெண்கள் எல்லா தளங்களிலும் தமது அதிகாரத்தை செலுத்த, வலியுறுத்த முயன்று வருகிறார்கள். பண்பாட்டுத் தளங்களில், ஆண்-பெண் உறவு குறித்த எந்த வெளிப்படையான விவாதங்கள் நடந்தாலும் அவற்றை பெண்களுக்கு எதிரான ஆபாசமாய் சித்தரித்து போராடுவதை இந்த பெண் போராளிகளில் சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒரு பெண் பாலியல் ரீதியாய் சித்தரிக்கப்படுவது, பெண் மீதான இச்சையை ஒரு படைப்பு சித்தரிப்பது நேரடியாய் பாலியல் குற்றங்களுக்கு காரணமாவதில்லை. மாறாக, பெண்ணுடல் மீது அதிகாரத்தை பிரயோகிப்பதற்கு பலாத்காரம் பயன்படும் போது பெண் துய்ப்பு கதையாடல்கள் அதற்கு துணைக்கருவியாகின்றன. ஆனால் துணைக்கருவியே பலாத்கார காரணம் அல்ல. பலாத்கார குற்றங்கள் நடப்புலகில் உள்ள ஆண்-பெண் பொருளாதார அரசியல் சமநிலையின்மையின் காரணமாகவே அதிகம் நடக்கின்றன. சமூக பொருளாதார மாற்றங்களே கலாச்சாரத்தை மாற்றுமே அன்றி நேர்மாறாக அல்ல. இதை பல சமயங்களில் நாம் புரிந்து கொள்வதில்லை. உதாரணமாய், சினிமாவில் பெண்கள் அதிகமாய் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தால் அங்கு பெண்கள் சுரண்டப்படுவது குறைவாகும். ஏனென்றால், ஏற்கனவே அதிகாரத்தில் கீழே உள்ளவர்களையே சுரண்ட முடியும். அப்படி சுரண்ட பாலியல் ஒரு வழிமுறை மட்டுமே. பாலியலுக்காக சுரண்டல் அல்ல சுரண்டலுக்காகவே பாலியல். இந்த நடப்பியல் பிரச்சனையை நம்மால் சுலபத்தில் சரி செய்ய முடியாது என்பதால் நாம் பாலியல் பண்பாட்டு சித்தரிப்புகளை தாக்குவதில் அதிக நேரத்தை செலுத்துகிறோம்.
 2003இல் ஷங்கரின் பாய்ஸ் படத்துக்கு எதிராய் தோன்றிய சர்ச்சைக்கும் இன்றைய ஹர்த்திக், ராகுல் சர்ச்சைக்கும் பெரிய வேறுபாடில்லை. ஷங்கரும் ஹர்த்திக் மற்றும் ராகுலும் வெளிப்படையாக பாலியல் பற்றி பேசினார்கள். செக்ஸில் எப்போதுமே உடல் தான் பிரதானம். ஒரு பெண்ணை அவளது சுபாவத்துக்காக, ஆளுமைக்காக ஒரு பெண் இச்சிப்பதில்லை. அது இயல்பல்ல. பெண்கள் ஒரு ஆணைப் பற்றி அரட்டையடிப்பதை ஒட்டுக் கேட்பவர்கள் அவர்களும் ஆணின் நல்லியல்பைப் பற்றி அதிகம் பேசுவதில்லை; அவர்களும் ஒரு ஆண்ஹாட்டாகஇருப்பதாய் சொல்லும் போது அவனது நல்ல மனத்தைப் பற்றி பேசுவதில்லை என அறிவார்கள். ஒரு பெண்ணுடலை அடைய வேண்டும் எனும் ஒரு ஆணின் அடிப்படையான இச்சையை நம் தமிழ் சினிமா என்றும் வெளிப்படையாக பேசினதில்லை. நமது ஹீரோ ஒரு பெண்ணைஉளப்பூர்வமாகநேசிப்பான். அவளை முத்தமிடும் ஆசை கூட அவனுக்கு இராது. அவளை ஆடையின்றி பார்க்க ஏங்க மாட்டான். அந்த ஆசையை சில்க் ஸ்மிதா பாணியிலான குலுக்கு நடனக் காட்சிகள் அரங்கேற்றிட, ஹீரோவின் காதல் தூய்மையாகவே தக்க வைக்கப்படும். இந்த போலி பிம்பத்தை உடைத்தது ஷங்கரின்பாய்ஸ்”. ஆனால் அதன் வெளிப்படையான பாலியல் உரையாடல்களை நம் கலாச்சார காவலர்களும் பெண்ணிய்வாதிகளும் கடுமையாய் எதிர்த்தனர். அவர்கள்உளப்பூர்வகாதலின் பாசாங்கையே விரும்பினர். ஷங்கர் அன்று பேசியதையே இன்று ஹர்த்திக்கும் செய்கிறார். செக்ஸே தனக்கு முக்கியம், பெண்ணைஉளப்பூர்வமாய்நேசிப்பதல்ல என்கிறார். ஒரு நடன / மது விருந்தில் ஒரு பெண்ணைப் பார்க்கையில் அவளது பெயரோ முகமோ அல்ல, அவளது உடல்மொழி வெளிப்படுத்தும் இச்சையும் பாலியல் நோக்கமுமே தனக்கு முக்கியம் என்கிறார். இதில் என்ன தவறு? காதலித்த பின்பே செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என யார் இந்த காலத்தில் சொல்ல முடியும்?
 தற்காலிக பாலுறவுகளே இன்றைய நடைமுறை. உடல்ரீதியாய் ஈர்க்கப்படும் போது செக்ஸை நாடுவதும் அதனோடு உணர்வுரீதியாய் ஒரு பிணைப்பு ஏற்படும் போது காதலை நாடுவதுமே இன்றைய தலைமுறையினர் செய்வது. இதன்  ஆதாயம் என்னவென்றால் முந்தைய தலைமுறையினரைப் போல இவர்கள் காதலையும் காமத்தையும் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். எளிய உடல் ஈர்ப்புக்காக ஐ லவ் யூ சொல்லி ஒரு தேவையற்ற உறவில் போய் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். சமீபத்தில்பியார் பிரேமா காதல்இதையே நாயகியின் தரப்பாக முன்வைத்தது. இன்றைய ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்படியே சிந்திக்கிறார்கள். கடந்த வருடம் நான் பதின்வயதான இன்றைய தலைமுறையினருடன் உரையாடிக் கொண்ட்டிருந்தேன். சில பெண்கள் மற்றும் ஒரு பையன் அந்த குழுவில் இருந்தார்கள். அந்த பையன் தான் சீக்கிரம் போக வேண்டும் என்றான். ஏன் என்றார்கள் அப்பெண்கள். ஒரு பையனை பார்க்க வேண்டும் என்ற அவன் அந்த பையனின் தோற்றத்தைப் பற்றி போகிற போக்கில் சொன்னான். அப்பெண்கள் அதைப் பிடித்துக் கொண்டு இருவரையும் சேர்த்து மிக ஆபாசமாய் பேசிக் கொண்டு போனார்கள். அந்த சீண்டல் பேச்சில் அவர்களுக்கு அப்பையன் மீதான இச்சை வெளிப்பட்டது. அவனது பாலுறுப்பை மறைமுகமாய் குறிப்பிட்டு அதற்கு ஆபத்து வரக்கூடாது என்றார்கள்; அவன் சந்திக்கப் போகும் ஆணுடன் ஓரின உறவு ஏற்பட்டு விடக் கூடாதே எனும் சின்ன பயம் அவர்களிடம் இருந்தது. இத்தகைய ஒரு வெளிப்படையான பேச்சை என் தலைமுறைப் பெண்கள் என் கல்லூரிப் பருவத்தில் நிச்சயமாய் பேசியிருக்க மாட்டார்கள். அவர்கள் பாலியல் பற்றி பட்டும் படாமல் பேசி நாணிக்கோணி சிரித்திருப்பார்கள். ஆனால் ஆணுடல் பற்றி இவ்வளவு வெளிப்படையாய் பேசியிருக்க மாட்டார்கள். இன்றைய பதின்வயதுப் பெண்களுக்கோ நான் அருகில் இருப்பது ஒரு பொருட்டே அல்ல.  ஏனென்றால் பாலியல் சாகசம் இன்று அவர்களின் அன்றாட கதையாடல்களின் பகுதியாகி இயல்பாகி விட்டது. அவர்களுக்கு இது ஆபாசமே அல்ல. ஆண்கள் இப்படித் தான் சிந்திப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும்; தாம் இப்படி சிந்திப்பதில் தவறில்லை என்றும் தெரியும்.
 சுமந்த் சி ராமன் தன் பேட்டியில்ஹர்த்திக் பேசுவதை கோடிக்கணக்கான இளைஞர்கள் கேட்கிறார்களே, அவர்கள் மனம் கெட்டு விடாதா? / கிரிக்கெட் வீரர்களை வழிபடும் எத்தனையோ இளம் பெண்கள் அவமானப்பட மாட்டார்களா?” எனக் கேட்கிறார். இன்றைய இளைஞர்கள் / இளைஞிகளைப் பற்றி அவருக்குத் தெரியாது என்பதையே இது காட்டுகிறது. ஹர்த்திக்கை நாடி வரும் இளம்பெண்களைப் பற்றி நாம் ஏன் இங்கு யோசிக்கக் கூடாது? எது அவர்களை ஈர்க்கிறது? ஹர்த்திக்கை மனமா? குணமா? அவரது பிம்பமமும் அதன் கலாச்சார அதிகாரமும் அவரது தோற்றமும் தானே? ஹர்த்திக் ஒரு பெண்ணின் உடல் பிம்பத்தைக் கொண்டு அவளை மதிப்பிடுகிறார் என்றால் அப்பெண் அவரது ஊடக பிம்பம், புகழ் மற்றும் பணத்தைக் கொண்டு அவரை மதிப்பிடுகிறார். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஒரு டான்ஸ் கிளப்பின் காவலாளியிடம் இப்பெண்கள் பேசி போன் நம்பரைக் கொடுப்பார்களா? பிரபலமான மற்றும் பணம் படைத்த ஒருவரிடம் தானே செல்கிறார்கள். பெண்களும் ஆண்களைப் போன்றே பிம்பத்தைத் தாண்டி மனத்தை நாடுவதில்லை என்பதே உண்மை. அதுவே எதார்த்தம். அப்பெண்கள் அதை இங்கு வெளிப்படையாய் சொல்லப் போவதில்லை என்பதே அவர்களுக்கும் ஆண்களுக்குமான வித்தியாசம். இப்பெண்கள் ஹர்த்திக்கின் கருத்துக்களால் காயப்படும் வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அவர்களே அதை நன்கு அறிவார்கள். ஹர்த்திக்கின் கருத்துக்கள் இன்றைய பதின் வயதினரை விட மூத்த வயதினரையே அதிகம் கலவரப்படுத்தி உள்ளது. அவர்கள் பார்க்க விரும்பாத, கேட்க விரும்பாத ஒரு உண்மையை ஹர்த்திக் அம்பலப்படுத்தி விட்டார்.
  ஹர்த்திக் பாண்டியாவும் ராகுலும் காமத்தையும் காதலையும் ஆரோக்கியமாக சரியாக புரிந்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். உடலை மையப்படுத்தி சமூக அதிகாரத்தை வலியுறுத்தும் நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டோரால் மட்டுமே இதை ஏற்க முடியாது போகிறது.
இன்றைய ஊடகச் சூழல் எப்படியான ஒழுக்க அதிகாரத்தை நிறுவனங்களுக்கு கொடுக்கின்றன, இந்த அதிகாரத்தின் பின்புலத்தில் எப்படி பொதுமக்களின் அதிகாரமும் தனிமனிதர்களுக்கு எதிராய் செயல்படுகிறது என்பதை இப்போது கேட்க வேண்டும்.
இன்றைய சமூக வலைதள புரட்சி / போராட்ட சூழலில் அதிகாரம் ஒரு புதுவிதமாக நம்மை வந்தடைகிறது: முன்பு நேரடியாக நிறுவனங்கள் வழி நம்மை அதிகாரம் வந்து ஒடுக்கியது. இப்போது கண்ணுக்குப் புலனாகாத பல வழிகளில் அதிகாரம் கலாச்சார ஒழுக்கமாக தோன்றி வந்து ஒடுக்குகிறது. இந்த கலாச்சார ஒழுக்கம் பெண்ணியமாக, சமூக வலைதள போராட்டமாக, கொந்தளிப்பாக, வலதுசாரிகளின் இந்து பண்பாட்டு (சுமந்த் சி ராமன் ஹர்த்திக்கை விமர்சிக்கும் போது) முன்னெடுப்பாக இன்று திரண்டு வருகிறது. இந்த பன்முக ஒழுக்க அதிகாரம் ஒன்றோடு மற்றொன்று முரண்பட்டாலும் அதன் நோக்கத்தில் ஒன்று படுகிறது - அது தன் அதிகாரத்தை, தன் முடிவெடுக்கும் வலிமையை நிறுவனங்கள் மீது வலியுறுத்த விரும்புகிறது. இதனால் தான் முந்தைய நிறுவனத்தில் செய்த (அல்லது செய்ததாய் நம்பப்படுகிற) குற்றத்துக்காக சம்மந்தமில்லாத ஒரு நிறுவனம் விசாரணை செய்யும் நிலை இன்று தோன்றுகிறது. இதனால் தான் கிரிக்கெட்டை நிர்வாகிக்க வேண்டிய ஒரு நிறுவனம் ஒரு வீரரின் கருத்து வெளிப்பாட்டை நுணுகி ஆராய்ந்து அதற்காக அவரை தற்காலிக நீக்கம் செய்து தண்டிக்க  வேண்டி வருகிறது.

பெண் அதிகாரமும் வலதுசாரி அதிகாரமும் கும்பல் அதிகாரமாய் மாறி கோர முகம் காட்டும், ஊடகங்கள் வழியே கட்டப்பஞ்சாயத்து செய்யும் இந்த காலத்தில் பாசாங்கே, இரட்டை நிலையே நாம் அனைவரின் ஆயுதமாக இருக்க முடியும்; முகமூடிகளே இனி நம்மை பாதுகாக்கும். இந்த விவகாரம் குறித்த பேட்டியொன்றில் பாஸ்கி சொல்வது போல, இனி நாம் சிகரெட் பிடிக்கும் முன்புகைபிடிப்பது உடல்நலத்துக்கு கேடுஎனும் எச்சரிக்கையை கழுத்தில் அட்டையொன்றில் எழுதி தொங்க விட வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் பொதுவிடத்தில் புகைபிடித்தால் கூட பாராட்டுவார்கள். இன்று நீங்கள் ஒரு பெண்ணை செக்ஷுவலாக அணுகி உறவு விட்டு, வெளியே அதைப் பற்றி பேசும் போதுபெண்களின் நல்ல சுபாவமும் பண்பும் ஆளுமையும் மட்டுமே என்னை ஈர்க்கிறது, நான் ஒரு பெண்ணின் கண்ணை நோக்கி உரையாடும் பண்பாளன்என புருடா விட வேண்டும். ஹர்த்திக் மற்றும் ராகுலின் கருத்துக்கள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை, அவை கண்டிக்கத்தக்கவை என விராத் கோலி இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்தார். ஆனால் இதே கோலி இந்திய அணிக்கு ஆடத் துவங்கிய புதிதில் (சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு) அளித்த டிவி பேட்டி ஒன்றில், டேட்டிங் ஆப் மூலம் சந்திக்க நேர்ந்த ஒரு இளம்பெண்ணுடனான தனது அனுபவம் ஒன்றைப் பற்றி பேசுகிறார். “அந்த பெண்ணை நேரில் பார்த்த உடனே நான் திரும்ப ஓடி வந்து விட்டேன்.” பேட்டி எடுப்பவர் கேட்கிறார், “ஏன் மிஸ்டர் கோலி?” கோலி மறைக்காமல் சொல்கிறார், “அவள் முகம் ரொம்ப அசிங்கமாக இருந்தது.” இதையே கோலி இன்று சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? பூஜை போட்டு பூசணிக்காய் உடைத்து சூலம் ஏற்றியிருப்பார்கள். ஹர்த்திக் சச்சையை ஒட்டி இந்த பல வருடங்களுக்கு முந்தைய குறும்பேட்டி சமீபத்தில் டிரெண்டிங் ஆனது. ஆனால் இன்றைய கோலியோ இப்படி நிச்சயம் பேச மாட்டார். அவர் இதையே இப்படி மாற்றி சொல்வார், “அப்பெண்ணை சந்தித்து உரையாடிய பின் அவருடன் என்னால் மனதளவில் உடன்பட முடியாது என உணர்ந்து கொண்டேன். அதனால் தான் நான் டேட்டிங்கை தொடர முடியாது எனக் கூறி வந்து விட்டேன்.” இப்படிபொய்பேசும் சாமர்த்தியத்தை கோலி இன்று பெற்று விட்டார். இன்று உலகமே ஒரு கண்காணிப்பு கோபுரம். ஆகையால், இன்று பொய்யும் புரட்டும் பெரும்பாலும் தேவைக்காக மட்டும் சொல்லப்படுவதில்லை; போலித்தனம் இன்று ஒரு பாதுகாப்பு அரணாக, அரசியல் சொல்லாடலாக மாறி விட்டது. பாசாங்கை பயிலாதவர்களுக்கு இன்று விசாரணைக் கமிஷன் தான்!
ஹர்த்திக்கின் பெற்றோர்கள் செய்த பெரிய தவறு தம் பிள்ளைக்கு பொய்யை கற்பிக்காதது தான். ஆனால் இத்தகைய சர்ச்சைகள் அவருக்கு பாடம் புகட்டி விடும். அப்படி பாடம் கற்று, “முதிர்ந்தபின் தான் ஹர்த்திக் உண்மையில் ஆபத்தானவராக இருப்பார்!

நன்றி: உயிர்மை


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...