முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரகாட்டக்காரன் செந்திலில் இருந்து “காணாமல்” போன அதிமுக எம்.எல்.ஏ வரை – பத்து நிமிட தெரிதா (2)


அறிதலை தள்ளிப் போடுவதே வாசிப்பு

Image result for bhagwat geeta

ஒரு வாக்கியம் பூடகங்களால், அனர்த்தங்களால், குழப்பத்தின் பனிப்படலத்தால் சூழப்பட்டு உள்ளது; அதை விலக்கி விட்டு நிஜமான முகத்தை காண வேண்டும்; அதுவே வாசிக்கும் முறை என நமக்கு தவறாய் தொடர்ந்து சொல்லித் தந்திருக்கிறார்கள். ஆனால் வாசிப்பின் சுவாரஸ்யமே அறிவது அல்ல, அறிதலை தள்ளிப் போடுவதே என தெரிதா சொன்னார். உதாரணமாய், ஒரு கதையோ கவிதையோ வெளிப்படும் தருணம் என ஒன்று உண்டு. சட்டென ஒரு ஒளி நம் மீது பாய்ந்தது போல உணர்வோம். “ஆஹா, அபாரமான படைப்புஎன சிலாகிப்போம். ஆனால் ஏன் சிலாகிக்கிறோம் எனக் கேட்டால் நம்மால் உடனடியாய் தெளிவாய் சொல்ல வராது. தெளிவாய் ஒரு கோட்பாடாய் நம் சிலாகிப்பை வடிவத்துக்குள் கொணர்ந்ததும் அது சலித்துப் போகும். இதனாலே நமக்கு தெளிவின்மை சுகிப்பது போல தெளிவு சுகிப்பது இல்லை.


 அதாவது அறியாமையே சுவாரஸ்யம் என நான் சொல்லவில்லை; ஆனால் வாசிப்பில் அறிதல் சில நொடிகள் தள்ளிப் போகும் சந்தர்ப்பம் உண்டு; அப்போது நம் இதயம் ஒரு சொல்லை, ஒரு சொல்லாடலை கண்டுணர்ந்து திகைக்கிறது. கொஞ்ச நேரம் நம் அறிவு மனம் அதை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியாமல் திணறி விட்டு பின்பு அதை சாதிக்கிறது; அடுத்து வாசிப்பை தொடர்கிறோம். ஒரே சமயம் அறிவைக் கொண்டும் இதயத்தைக் கொண்டும் இரண்டிரண்டாய் வாசித்தபடியே இருக்கிறோம்; நம் அறிவு மனம் கைவிடப்பட்டு மீண்டும் தன்னை நிலைப்படுத்தும் தருணங்களே வாசிப்பின் இன்பமாகிறது.

இந்த இரண்டுக்கும் நடுவே என்ன உள்ளது? அறிய முடியா வியப்புக்கும் அறிதலின் உறுதிப்பாட்டுக்கும் இடையில் ஒருவித சூனியம் உள்ளது. அதாவது, “இது என்ன?” எனக் கேட்ட அடுத்த நொடிஇது அது தானா?” “இல்லை அதுவாக இருக்க முடியாதே?” “இதுவும் அல்ல, அதுவும் அல்ல எனில்?” என கேட்டுக் கொண்டே போவதே அர்த்தத்தை மனித மனம் அறியும் விதம் என்றார் தெரிதா.

மற்றமையை கண்டறிவது, அதை மற்றமையுடன் பொருத்தி ஒன்று அதுவல்ல என உணர்ந்து அவ்வாறே அதைப் புரிந்து கொள்வது, “அதுவல்ல இதுவேஎன்ற பின் இந்தஇதுவும்மற்றொன்றின் எதிர்மையே என அறிந்த பின் மேலும் குழம்பி அடுத்தடுத்து வரும் மற்றமைகளுடன் அதை உரசிப் பார்த்தபடியே செல்கிறோம். இப்படி அர்த்தத்தைஅறியும்அறியும் போதே அதை தள்ளிப் போட்டபடியும் இருக்கிறோம். வித்தியாசப்படுத்தி தள்ளிப் போடும் செயலே பொருளறியும் செயல் என்றார் தெரிதா. இந்த இரண்டையும் (difference + deferral) ஒன்றாக்கி அவர் differance என புது கலைச்சொல் ஒன்றை உருவாக்கினார்.

அத்வைத தத்துவத்தில் இறையைஇதுவும் அல்லஎன (”நேத்தி நேத்தி…”) என அடையாளப்படுத்துவதற்கு இணையானது இது எனலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தன்னை அர்ஜுனனுக்கு அடையாளப்படுத்துகையில் நான் இதுவும் அல்ல, நான் அதுவும் என ஒவ்வொன்றாய் கழித்துக் கட்டியபடியே வருகிறார். ஆனால் தான் இதுவென என குறிப்பிடாமல் அவர் செல்கிறார். இந்த கழித்துச் செல்வது தான்நான்என்கிறார் அவர். தெரிதாவின் differance கிட்ட்த்தட்டஇதுதான் எனலாம். தெரிதாவுடன் இணக்கமான மற்றொரு தத்துவ ஆசிரியர் பௌத்த அறிஞர் நாகார்ஜுனர் (சூன்யவாதம்) (ஆம், தெரிதா உள்ளிட்டு பல பின்னமைப்பியல் சிந்தனையாளர்களிடமும் நமது சூன்யவாதத்தின் தாக்கம் உண்டு.)

ஒரு கையெழுத்தில் நாம் எங்கு இருக்கிறோம்?

தெரிதா இந்த தத்துவார்த்த கருவியை அன்றாட உறவாடல்களுக்கு மத்தியில் வைத்துப் பார்த்தார். மனிதர்கள் அர்த்தங்களுடன் சூதாடுபவர்கள் என அவர் கருதினார். எழுதுவதும் வாசிப்பதும் ஒரு அர்த்த விளையாட்டே என்றார். மொழிக்குள் ஒருவர் இருக்கும் போதே இல்லாமல் ஆகி விடுகிறார்; அவர் அப்படி இல்லாமல் ஆவதற்கு அதற்குள் அவர் இருந்தாக வேண்டும் என்றார். உதாரணமாய், நீங்கள் ஒரு ஆவணத்தில் கையெழுத்து இடுகிறீர்கள். அந்த  பிரதியில் நீங்கள் அதிகாரபூர்வமாய் வீற்றிருக்க துவங்குகிறீர்கள். அந்த கையெழுத்தைக் காட்டிஉங்கள் சம்மதம்”, “உங்கள் அதிகாரபூர்வ கோரல்அங்கு உள்ளதாய் சொல்வார்கள். ஆனால் உங்கள் கையெழுத்து இருக்கும் இடத்தில் நீங்கள் இருப்பதில்லை என ஏற்றுக் கொண்ட பின்னரே அது கையெழுத்தாக மதிப்பு பெறுகிறது. அதாவது, உங்களது ஒரு காசோலையை கையெழுத்திட்டு அளிக்கும் போதுஉங்கள் சார்பாய் அந்த கையெழுத்தைக் கண்டு இவருக்கு உங்கள் பணத்தை அளிக்கும் படிகோருகிறீர்கள். அங்கு நீங்களோ உங்கள் பணமோ இல்லை என்பதே சுவாரஸ்யம். அதாவது, ஒரு காசோலையை அளிக்கும் முன் உள்ள உங்கள்இருப்புகாசோலையில் கையெழுத்திடும் போதுஇன்மைஆகிறது. ஆனால் காசோலை வங்கிக்கு சென்ற பின் அந்த இன்மைமீண்டும்இருப்பாகும்”. இப்படி இருப்பும்-இன்மையுடம் ஒன்றுடன் ஒன்றுடன் கண்ணைக் கட்டி திருடன் போலீஸ் விளையாடுவதே காசோலையின் அர்த்தமாகிறது, வங்கி பரிவர்த்தனையாகிறது, பணமதிப்பாகிறது. இன்மையுடன் அதன் பின்னாலேயே மறைவாகஇருப்புஇருக்க வேண்டும் என்பதே நமது சமூக விதிமுறை. இதனாலே காசோலை பணமின்றி திரும்பும் போது அது குற்றமாகிறது. அப்போது நீங்கள் இன்மையில் இருந்து இருப்புக்கு செல்லாமல் தொடர்ந்து இன்மையிலே நீடிக்கிறீர்கள்.

இப்படி சொற்களுக்குள் அர்த்தங்கள் நழுவி நழுவி விளையாடுவதை தெரிதா மிகவும் கொண்டாடினார் என்பதாலே தனது கலைச்சொல்லுக்கும் differance என பெயரிட்டார். இதில் என்ன விளையாட்டு? Difference என்றால் மாறுபாடு. இதை டிஃபெரன்ஸ் என உச்சரிப்போம்.  Differance என்பதையும் நாம் டிஃபரான்ஸ் என உச்சரிக்கிறோம். அதாவது இச்சொல்லைமாறுபடுத்திக்காட்டும் பொருட்டு. ஆனால் பிரஞ்சுக்காரரான தெரிதா இதை உருவாக்கும் போது பிரஞ்சில் இச்சொல்லில் “a”எனும் ஒலி மௌனமாகும் என உணர்ந்திருந்தார். அதாவது, இரண்டு சொற்களும் உச்சரிக்கையில் பிரஞ்சில் ஒன்று போலவே தொனிக்கும்; இதன் மூலம் தான் உருவாக்கும் சொல்லையே அவர் மேலும் குழப்பத்தில் விளையாட்டுத்தனத்தில் ஆழ்த்துகிறார் என்கிறார் ஜூலியன் வூல்ஃபிரேய்ஸ் Deconstruction – Derrida எனும் நூலில். இந்த விளையாட்டுத்தனம் நமது அன்றாட புழக்கத்தில் நாம் அறியாமலே நிகழும் ஒன்று தான்.

உதாரணமாய், இந்த கட்டுரைக்கு நான் அளித்துள்ள தலைப்பை பாருங்கள்: “பத்து நிமிட தெரிதா”. நிச்சயம் உங்களால் இதை பத்து நிமிடத்தில் படிக்க முடியாது என எனக்குத் தெரியும். அப்படி என்றால்பத்து நிமிடம்என்பது என்ன? இக்கட்டுரை வழி சுருக்கமாய் தெரிதாவை அறிந்து கொள்ளலாம் என்கிறேனா? ஆனால் நான் தெரிதாவைப் பற்றி விரிவாக அல்லவா பேசிப் போகிறேன்! அப்படி என்றால்பத்து நிமிடம்என்பது இங்கே என்ன? என்னைப் பொறுத்தமட்டில்கொஞ்சம் சுலபமாய் கொஞ்சம் எளிதாய்எனும் பொருளிலேபத்து நிமிடம்எனும் சொற்கள் வழி நான் உணர்த்துகிறேன். “சுலபமாய் எளிதாய் தெரிதாஎன நான் நேரடியாய் சொன்னால் இந்தபொருள்எழாது. ஏனென்றால் தெரிதாவை சுலபமாய் எளிதாய் அறிய முடியாது என்று தானே இதில் விவாதிக்கிறேன். எனக்குகொஞ்சம்இங்கு முக்கியம். ”கொஞ்சம் எளிதாய்என்பதை கூட நான்கொஞ்சம் எளிதாய்என்று சொன்னால் சரியான அர்த்தம் வெளிப்படாது. அதற்கு சற்று மறைமுகமாய், கொச்சையாய்பத்து நிமிடஎன நான் சொல்லியாக வேண்டும். என்னால் சரிவர சொல்ல முடியாத, உங்களால் சரிவர புரிய முடியாத ஒன்றையே இந்தபத்து நிமிடஎனும் அடைச்சொற்கள் உணர்த்துகின்றன. இதுஒன் நிமிட் பாஸ்என அன்றாட உரையாடல்களில் நாம் சொல்வதற்கு இணையானது. இவ்வாறு மொழி  விளையாட்டுத்தனமாய் செயல்படுவதே உண்மைக்கு நெருக்கமாய் நம்மை கொண்டு செல்லும். அதுவே மொழியின் அழகு, சுவாரஸ்யம், அதன் இன்பம்.

ஒக்க நிமிஷம் பாபு

 ஒரு நிமிசம்என்றால் ஒரு நிமிசம் அல்ல என அனைவரும் அறிவோம். ஆனால் அது எத்தனை  நிமிடங்கள்என ஒருவராலும் உறுதிப்பட சொல்ல முடியாது. நாம் வரவேற்பறையில் ஒருவருக்காய் காத்திருக்கையில்கொஞ்ச நேரம் இருங்கஎன அவர் சொன்னால் நாம் கடுப்பாகி விடுவோம். ஆனால்ஒன் மினிட் இருங்கஎன்றால் ஆறுதலாவோம். “கொஞ்ச நேரத்தில்உள்ள நேரடியான நிச்சயமின்மையைஒன் மினிட்தள்ளிப் போடுகிறது . ஆனால் அந்தஒரு நிமிடமேகூட ஒரு புது நிச்சயமின்மையை தோற்றுவிக்கிறது. பத்து நிமிடங்கள் கடந்து அரை மணி ஆகி விட்டதே என நாம் கடிகாரம் பார்க்கும் போது கோபம் தலைக்கேறுகிறது. “எவ்வளவு நேரங்க வெயிட் பண்றது?” என சீறுகிறோம். உடனே நம்மை காத்திருக்க சொன்னவர்இன்னும் அஞ்சே நிமிசங்கள்என ஆறுதலாய் சொல்கிறார். நாம் அமைதியாகி காத்திருக்க தொடங்குகிறோம்.

இப்படி ஒத்தி வைப்பதே நல்ல நகைச்சுவையின் அடிநாதமாகிறது என ஜெர்மானிய தத்துவர் அறிஞர் ஹைடெக்கர் சொல்கிறார். ஒரு நகைச்சுவையை நாம்புரிந்துகொள்ளும் அது நகைச்சுவை அல்லாமல் ஆகிறது. நாம் புரிந்து கொள்வதற்குஅரைவினாடிக்குக்கு முன்பு எதற்கு சிரிக்கிறோம் என தெரியாமல் சிரிப்பதே ஒன்றை நல்ல ஜோக் ஆக்கிறது. அதாவது, நகைச்சுவையின் திளைப்பு புரிதலுக்கும் புரிதலின்மைக்கு நடுவே, புரிதலை மிகக் கொஞ்ச நேரம் நாம் ஒத்திப் போடுவதில் உள்ளது. இப்படி ஒத்திப் போடுவதில் ஒருகாலமற்றகாலம் உள்ளது. இதுவே நம்மை நகைச்சுவையை இந்தளவுக்கு விரும்பத் தூண்டுகிறது. நகைச்சுவைக்கு அடுத்தபடியாய் இந்த பண்பு கவிதைக்கே உண்டு என்கிறார் ஹைடெக்கர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...