முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரகாட்டக்காரன் செந்திலில் இருந்து “காணாமல்” போன அதிமுக எம்.எல்.ஏ வரை – பத்து நிமிட தெரிதா (4)


இனி சில மருத்துவ விளம்பரங்களைக் காண்போம். கீழ்வருபவற்றை பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நான் படமெடுத்தேன்.

அறிவியல் எந்தளவுக்கு அறிவிடம் பேசுகிறது?

இந்த விளம்பரங்கள் என்னை வெகுவாய் கவர்ந்ததற்கு ஒரு விநோதக் காரணம் உண்டுஇவை மருத்துவ சேதிகளை கிட்டத்தட்ட ஒரு மருத்துவ மொழியில் சொல்கின்றன, ஆனால் மருத்துவ சேதிகளைப் போல் அல்லாது இவை நம்மை சற்றே குழப்புகின்றன. தெளிவாக ஒரு நோக்கத்துடன் குழப்புகின்றன. இப்படி குழப்பினாலும் அவற்றின் நோக்கமான அதிர்ச்சியை ஏற்படுத்துவதை கச்சிதமாய் நிறைவேற்றுகின்றன. எப்படி எனப் பார்ப்போம்.

  




ஆறு நொடிகளுக்கு ஒருமுறை இவ்வுலகில் ஒருவர் பக்கவாதத் தாக்குதலுக்கு ஆட்படுகிறார் என்பது மருத்துவ உண்மையே. ஆனால் நமக்குத் தெரியும் நம்மிடையே மிகச்சிலருக்குத் தான் பக்கவாதம் வருகிறது என்று, ஜலதோஷம், தலைவலி போல பக்கவாதத் தாக்குதல் பரவலான நோயோ நோய் அறிகுறியோ அல்ல என்று. அதாவது ஒரு அலுவலகத்தில் சதா பத்து பேர் மூக்கு சிந்துவதை, இருமுவதைப் பார்ப்போம். ஆனால் பத்து பேர் நம் முன்பு பக்கவாதம் வந்து தளர்ந்து சரிந்து விழுவதை பார்க்க மாட்டோம். ஆனால் இந்த  வாக்கியம் அப்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுகிறது.


ஸ்டுரோக் என்றால் என்ன?” என ஒரு கேள்வியை எழுப்பி விட்டு கீழே அதற்கு பதில் அளிக்காமல் பக்கவாதத் தாக்குதலை கண்டு கொள்வதற்கான அறிகுறிகளை பட்டியலிடுகிறது. விளக்கம் இதற்குக் கீழாக வருகிறது. ஏன் விளக்கம் உடனடியாய் மேலே தரப்படவில்லை? பொதுமக்களுக்கு விளக்கம்  மிகவும் தேவையில்லை. அவர்களுக்கு அது புரியாது; விளக்கம் மருத்துவர்களுக்கு உரியது என்பது இதை எழுதியவர்களுக்கும் இதை வாசிப்பவர்களுக்கும் புரிய வரும் ஒரு மறைமுக சேதி. ஆனாலும் அந்த கேள்வி ஏன் அங்கு வருகிறது என்றால் அப்போது தான் அது ஒரு மருத்து சேதிப் பலகை எனும் தொனி ஏற்படும். அடுத்து கீழே வரும் அறிகுறிகளில் எவை வேண்டுமெனிலும் ஒரு பக்கவாதத் தாக்குதலை குறிக்கலாம் என நான்கு படங்களை தருகிறார்கள். லேசாய் உதடு கோணிப் போன ஒரு அழகிய நங்கையின் முகம் (அதைப் பார்க்க ஏதோ கேலியில் உதட்டை சுழிப்பது போல இருக்கிறது), ஒருவரது தொங்கும் கை, அதன் அருகே கவிழ்ந்த காபி கோப்பை (கையை தொங்கப் போட்டு தூங்குகிறவராகவும் அது இருக்கலாம்), அடுத்து அதே பெண்ணின் உதடுகளின் குளோசப், கடைசியாய் ஒருவர் போன் செய்யும் படம் வருகிறது (போன் பண்ணுவது ஸ்டுரோக்கின் அறிகுறி என்றா? அடப்பாவிங்களா?) இந்த படங்களைக் கொண்டு பக்கவாதத் தாக்குதலைப் பற்றி நீங்கள் ஒரு மண்ணும் புரிந்து கொள்ள முடியாது. மாறாக, சும்மா திரிபவர்கள் கூட ஒரு பக்கம் கோணிக் கொண்டு கீழே விழலாம் எனும் பீதியை இந்த விளம்பரப் பலகை ஏற்படுத்துகிறது.

இப்படி அறிகுறிகளே எவை என சரியாய் சொல்லாமல்அந்த இன்னொரு பழம்பாணியில் குழப்பி விட்டு, இவ்வாறு அறிகுறிகள் உங்களுக்கோ பிறருக்கோ தோன்றினால் அவை மறையும் வரை காத்திருக்காமல் மருத்துவமனையை நாடுங்கள் என இந்த விளம்பரம் கோருகிறது. அதிலும்நம்பினால்எனும் சொல் இங்கு முக்கியம். “நீங்களோ உங்களுக்குத் தெரிந்த பிறரோ பக்கவாதத்தால் தாக்குண்டதாய் நீங்கள் நம்பினால் மருத்துமனையை நாடுங்கள்.” எனும் வாக்கியத்தில்சந்தேகப்பட்டால்என்பதற்குப் பதில்நம்பினால்என ஏன் வருகிறது? நம்புதல் என்பது உறுதியாக ஒன்றை ஏற்று செய்வது. மருத்துவர் அல்லாத சாமான்யரான நாம் எப்படி ஆதாரமின்றிநம்பமுடியும்? இங்கு தான் இந்த விளம்பரம் ஒரு மருத்துவ சேதி அறிவிப்பாகவும் வெறும் பீதியை கிளப்பும் விளம்பரமாகவும் ஒரே சமயம் இருக்கிறது. ஒரு போதுநல நோக்கிலான மக்கள் நல அறிக்கையாக தெரியும் ஒன்றை நாம் கட்டுடைக்கையில் அது நேர்மாறான ஒரு நோக்கைக் கொண்டிருப்பதை, ஒரே சமயம் அறிவியல் சேதியை பரப்பவும் குழப்பவும் பீதியை கிளப்பவும் செய்வதை அறிகிறோம். இப்போது அறிவியல் எழுத்து கூட பொதுவெளியில் வேடிக்கையாக ஒரு விளையாட்டாக, முரணாய் செயல்படுவதை நாம் புரிந்து கொள்கிறோம். இதை விட, இவ்வளவு குழப்பமான உள்முரணான ஒரு சேதி நமக்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்துவதில்லை, நமக்கு முரண்களே கண்ணில் படுவதில்லை என்பது இங்கு முக்கியம். நம் அன்றாட பரிவர்த்தனைகளில் கணிசமான வாக்கியங்கள் இவ்வாறே உள்ளன.

திரைப்பாடல்கள்

நமது திரைப்பாடல்களும் இவ்வாறானவையே. நீங்கள் அடுத்த முறை எந்த பிடித்தமான பாடல் வரிகளைக் கேட்கும் போதும் நுணுகி ஆராய்ந்து பார்த்தால் முரண்கள் பல தென்படும். அந்த முரண்களே அவற்றின் அழகு, அந்த முரண்களும் பூடகத்தன்மையையுமே அவை நம் இதயத்துடன் உரையாடக் காரணம் என நாம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாய், “புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று” (”மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு”) எனும் வரி. புழு துடிப்பது வேறு, மின்னல் வெட்டுவது வேறு. அவற்றை நீங்கள் இணைக்கவே முடியாதுபுழுவைப் போன்றே மின்னல் துடித்து வெட்டி இழுபட்டு மறைகிறது என்றாலும் கூட. ஆனால் இங்கு இந்த இரு சித்திரங்களும் அழகாய் இணைகின்றன. “தூண்டிற் புழுவினைப் போலஎனும் பாரதியின் வரியை நினைவுபடுத்தும்படியாய் அப்பெண் தான் புழுவாய் துடிப்பதாய் சொல்கிறாள். அவளது விரக தாப துன்பத்தை இது சுட்டுகிறது. ஆனால் அவள் ஒரு மின்னல் வெட்டாய் நம்மை தீண்டி இன்பத்தை மின்சாரமாய் நமக்குள் இறக்குபவளும் தான். இந்த விநோதக் கலவை உணர்வை, பொருந்தா முரண்பாட்டின் பொருத்தத்தை (விரக தாபம் + காமத் திளைப்பின் மின்சாரம்) இவ்வரியின் மூலம் நம் ஆழ்மனம் உணர்கிறது, நமது அறிவு அதை கவனிக்காமல் விட்டாலும் கூட.
                                          
                                               (தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...