முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரகாட்டக்காரன் செந்திலில் இருந்து “காணாமல்” போன அதிமுக எம்.எல்.ஏ வரை – பத்து நிமிட தெரிதா (5)


காணாமல் போனவர்கள் பற்றின சுவரொட்டிகள்


காணவில்லைசுவரொட்டிகள் என்னை எப்போதும் திடுக்கிட வைக்கும். ஏன்? இன்னாரைக் காணவில்லை என அந்த சுவரொட்டி கூறும் போது அதிலுள்ள புகைப்படத்தில் அன்னார் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார். “நான் இங்கே தான் இருக்கிறேன்என அவர் கூறுவது போலிருக்கும். அவரை நேரில் பார்த்தால் கூட நான் அந்தளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக மாட்டேன். இயல்பாக அவரிடம் சென்று பேசி விபரங்களை அறிய முயல்வேன். மறைமுகமாய் உறுதிப்படுத்திக் கொண்டு சுவரொட்டியில் உள்ள எண்ணுக்கு அழைப்பேன். இதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. எனக்கு இரு கேள்விகள் இது சம்மந்தமாய் உள்ளன:

1)   ஏன்காணவில்லைசுவரொட்டியில் உள்ளவர் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்? ஏன் என் பார்வை அவர் முகத்தில் சில நொடிகள் நிலைக்கிறது? அப்போது எனக்குள் நிகழ்வது என்ன? ஒரு வாசகனாக ஒரு செய்திப் பத்தியை, அறிக்கையை, கதையை, கவிதையைப் போல அந்த சுவரொட்டியை நான் பார்க்கிறேனா? எனில், அது எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?

2)   அந்த சுவரொட்டியில் காணாமல் போனவர் இருக்கிறாரா? அவர் இல்லாமல் அவரைப் பற்றி - அவர் இல்லாமல் ஆனதைப் பற்றி - அங்கு பேசவே முடியாதில்லையா? இந்த முரணை சுவரொட்டியை வாசிப்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள்.


இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன் சில சுவரொட்டிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.






காணாமல் போன ஆலிஸ் கிராஸைப் பற்றின சுவரொட்டியில் ஒரு விசயம் சுவாரஸ்யமானது:

ஆலிஸைக் கண்டால் நாம் அழைக்க வேண்டியது காவல்துறையை என முதல் வரியிலே குறிப்பிடுகிறார்கள். ஆனால் இரண்டு விசயங்களில் இந்த பிரதி ஒரு தனிப்பட்ட பிரதியாகிறது.

1)   ஆலிஸ் குறித்த தனிப்பட்ட தகவல்கள். அவரது வயது 14. ஹேன்வெல்லில் இருந்து ஆகஸ்ட் 28 வியாழன் அன்று மதியம் மூன்று மணிக்கு காணாமல் போயிருக்கிறார் என்பதில் உள்ள தகவல்கள் காவல்துறை இவ்வழக்கை விசாரித்து தெளிவுற உதவும். யாராவது மூன்றரை மணிக்கு இப்பெண்ணை இந்த படத்தில் பார்த்தேன் என்றால் அது அவரது அசைவுகளை, நகர்வை அறிந்து கொள்ள உதவும். அவர் அணிந்திருந்த ஆடைகளும் அவ்வாறே முக்கியமானவை. ஆனால் இத்தகவல்கள் அவர் அங்கு அப்படத்தில் நம்முடனே இருப்பதான ஒரு முரண் பிம்பத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. 14 வயதில் அந்த குறிப்பிட்ட நாளன்று மூன்று மணிக்கு ஜீன்ஸ் அணிந்த பெண்ணாக அவரை உறைய வைக்க அவை உதவுகின்றன. அவர் அப்படி உறைந்திருப்பதே நமக்கு ஆறுதலாகவும் பதற்றம் தருவதாகவும் ஒரே சமயம் உள்ளன. இதுவே இதன் மற்றொரு நோக்கம் - அவரை வலுவாய் பொருண்மையாய் அங்குஇருத்தி”, கூடவே அவரைஇல்லாமல்பண்ணி பார்ப்பவர்களை தேடலை பங்கெடுக்கத் தூண்டுவது.

2)   ஆலிஸ் எப்படி அப்பிராணியாய் உள்ளவர், பிறரால் சுலபத்தில் பாதிப்புள்ளாகும்படி மனதளவில் மென்மையானவர் / பலவீனமானவர் எனும் தகவலை எப்படிப் பார்ப்பது? அவரது வயது, தோற்றம் ஆகியவற்றுடன் சேர்ந்து இது முழுக்க ஒரு புது பரிமாணம் பெறுகிறது. இந்த தனிப்பட்ட அந்தரங்க தகவல் அடுத்துப்ளீஸ் சீக்கிரமே வீட்டுக்கு வா ஆலிஸ். நாங்க எல்லாரும் உன்னை நேசிக்கிறோம். பத்திரமா வீட்டுக்கு வா.” எனும் கோரலில் முழுக்க வேறொன்றாகிறது. முதலில் போலீஸின் அறிவிப்பாக இருந்த இந்த ஆவணம் இப்போது ஒரு குடும்ப உறுப்பினர் மீதான அன்பை அறிவிக்கும் ஆவணம் ஆகிறது. இதைச் சொல்கிறவரும் குடும்பத்துக்குள் ஆலிஸுக்கு இணக்கமான ஒருவர் ஆகிறார். யார் இந்த பிரதியை எழுதுகிறார் என்பது, அந்தஎழுத்தாளனின்இருப்பு சட்டென மற்றொன்றாகிறது - இறுக்கமான அரசு எந்திரத்தில் இருந்து நெகிழ்வான அக்கறையான அன்பான குடும்ப எந்திரமாகிறது. இந்த மாற்றமானது மிக நுணுக்கமாய் நாம் கவனிக்காதபடி வேகமாய் நிகழ்கிறது.

இப்போது இது போலீஸின் பிரதியா, குடும்ப உறுப்பினர் ஒருவர் எழுதும் பிரதியா? இதன் நோக்கம் தகவல் அறிவிப்பா அல்லது அப்பெண்ணை ஆறுதல்படுத்தி வீட்டுக்கு திரும்பும்படி கோருவதா? இதன் வாசகர் வழிப்போக்கரா அல்லது அப்பெண்ணே தானா? ஏனென்றால் முதலில் அப்பெண் மீதான அக்கறையான வாசகங்கள் இரண்டாவதில் அவளை ஒரு பலவீனமான பிரகிருதியாக்குகிறது; பொறுப்பற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறிய ஒருத்தியாக்குகிறது; இதை ஒரு குடும்பப் பிரச்சனை ஆக்குகிறது; ஒரு வழிப்போக்கன் தலையிட தேவையில்லாத ஒன்றாக்குகிறது. இந்த சுவரொட்டியை கட்டுடைக்கையில் இவ்வளவு முரண்களும் குழப்பங்களும் நம் முன் கொட்டுகின்றன. ரெண்டு பழங்களில் ஒன்று மற்றொன்றாகி, அந்தஇண்ணொண்ணுஇது தான் என அர்த்தமாகும் தருணங்கள் இந்த சுவரொட்டியிலும் உண்டு.






மேலே உள்ள படத்தில் தோன்றுபவர் நேட் பிஹ்ல்மெயர் எனும் ஹார்வர்ட் பல்கலைக்கழக எம்.பி.ஏ மாணவர். அவர் (7 வருடங்களுக்கு முன்பு) ஒரு இரவில் காணாமல் போனார்; பின்னர் அவரது உடல் ஒரு ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. குடிபோதையில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த சுவரொட்டியில் தனித்து தெரிவது அதன் மினிமலிச பாணி. வெறுமனே காணவில்லை என்பதுன் நேட்டின் புகைப்படமும் கண்டுகொண்டவர் அழைக்க வேண்டிய எண்ணும் மட்டுமே தரப்பட்டுள்ளன. இதில் நேட்டின்இன்மைஅவரது பிம்பத்தின்இருப்பால்இன்னும் வலுவாகிறது.

 அதைவிட முக்கியமாய் இங்கு காவல் துறையும் அரசமைப்புமே அவரதுகாணவில்லைசுவரொட்டியின்எழுத்தாளன்”. இந்த எழுத்தாளன் தான் பேசும் விசயத்தைப் பற்றி மிக சொற்பமான தகவல்களையே அளிப்பவன். அதாவது, பெயரைத் தவிர வேறெதையுமே அவன் நேட் பற்றி சொல்லவில்லை. இப்படி பேசுபொருளைப் பற்றி சொற்பமாய் பேசுவதன் வழி இந்த எழுத்தாளன் பேசுபொருளை (அதாவது காணாமல் போன நேட்டை) “இன்மையாக்குகிறான்”.

இந்த இன்மையை ஏற்படுத்தி தன்னைப் பற்றி, தனது திட்டங்கள், தனது பின்னணி, தனது இருப்பு குறித்து பூடகத்தை ஏற்படுத்துகிறான். இந்த பூடகம் அவனை ஒரு புதிர்மையான ஆளாக்குகிறது. இந்த புதிரான எழுத்தாளன் காவல் துறையும், காவல் துறையை ஒரு கருவியாக கையாளும் அரசமைப்பும் என்பதால் இப்புதிர்மை அச்சுறுத்தலை கொணர்கிறது. இப்படி இன்மையை உருவாக்கி புதிர்த்தன்மையை உண்டு பண்ணி ஒரு அரசமைப்பு தன் கீழுள்ள சமூகத்தை (வாசகரை) மறைமுகமாய் அச்சுறுத்த முடியும் எனக் காட்டுகிறது. அச்சுறுத்தல் இங்கு அரசதிகாரமாகிறது.

இவ்வாறு இந்த சுவரொட்டியை கட்டுடைத்தால் - அது முரண்பாடாய், பூடகமாய் செயல்படும் முறையை வெளிப்படுத்தினால் - நமக்கு அரசதிகாரம் செயல்படும் முறை தெரிய வருகிறது. அரசமைப்பு ஒரே நேரம் காணாமல் போகிறவர் குறித்து அக்கறைப்படுவதாகவும் காணாமல் போகிறவருக்கு இணையாக தன்னையும் காணாமல் மறைகிற, அவ்வாறே இருந்தே பின்னிருந்து இயங்கும் ஒரு ஆபத்தான அமைப்பாக காட்டிக் கொள்கிறது என புரிந்து கொள்கிறோம். இந்த அமைப்புக்கு உணர்வுகள் இல்லை, அது நேட்டின் வாழ்நிலையை, அவரது பிரச்சனைகளை, உணர்வுநிலையை பற்றி கவலைப்படாத ஒன்று, அதனாலேயே அது வலிமையும் அதிகாரமும் படைத்தது என இந்த சுவரொட்டி சித்தரிக்கிறது. நேட்டின் இன்மையும் இருப்பும் மாறி மாறி சுவரொட்டியில் தோன்றுவதே இத்தனை சேதிகளையும் நம் மனதுக்கு தெரிவிக்கிறது என்பதே சுவாரஸ்யம்.
                                                   
                                                  (தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...