முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரான்ஸிஸ் கிருபா விவகாரம்: யாரை குற்றம் சாட்டுவது?


Image result for பிரான்ஸிஸ் கிருபா




பிரான்ஸிஸ் கிருபா தமிழின் சிறந்த நவீன கவிஞர்களில் ஒருவர். ஓரளவுக்கு நவீன கவிதை வாசிக்கும் யாருக்கும் அவரை தெரிந்திருக்கும். கிருபாவுக்கு மற்றொரு பிம்பமும் உண்டு - அவரது போதைப்பழக்கமும் ஒருவித விளிம்புநிலை வாழ்க்கையையும் அதை கட்டுவித்தன. அந்த பிம்பத்தையும் கடந்த ஒரு நல்ல மனிதர் அவர் அடிப்படையில் என்பதை கடந்த இரு நாட்களாய் சர்ச்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விவகாரம் சுட்டுகிறது.  


நேற்று முன் தினம் சென்னை கோயம்பேட்டில் பிரான்ஸிஸ் கிருபா தன் அருகே இருந்த நபர் ஒருவர் உடல் நலமற்று துடிப்பதைக் கண்டு ஆறுதல்படுத்துகிறார். இதைக் கண்டு சிலர் போலீசுக்கு தகவல் சொல்ல, போலீசாரும் தம் வழக்கப்படி உதவி பண்ணினவரையே கொலைகாரன் என முடிவு பண்ணி கைது செய்கிறார்கள். இதில் பெரிய கொடுமை நமது நாளிதழ்கள் செய்தியை தந்த விதமே - உதாரணமாய் தினமலர், முதலில், இரு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தமக்குள் மோதியதில் அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் கொலைகாரர் போலீஸ் வரும் வரை பிணத்தின் அருகே காத்திருந்ததாகவும், கொலைகாரர் திருநெல்வேலியை சேர்ந்த பிரான்ஸிஸ் கிருபா என்றும் கூறியது. கூடுதலாய் கொலையை நேரில் கண்ட ஒருவரே போலீசுக்கு தகவல் சொன்னதாய் குறிப்பிட்டது. இந்த செய்திக் குறிப்பில் தினமலர் பயன்படுத்திய மொழி மிக மலினமானது - ஊடகப் பயிற்சி பெற்ற ஒரு ஜூனியர் ரிப்போர்ட்டர் என்ன ஒரு கல்லூரி மாணவர் கூட இதை விட துல்லியமாய் குறிப்பெழுதுவார். செய்தி எழுத்தின் அடிப்படையே பார்ததாய் எழுதாமல் கேட்டதாய் எழுதுவது, புறவயமாய் தகவல்களை மட்டும் அளிப்பது. ஆனால் தினமலரோ காவல்துறையிடம் சில தகவல்களை வாங்கி தன் கற்பனை சரக்கை சேர்த்து ஏதோ நேரில் கண்டது போல எழுதுகிறது. உதாரணமாய், “நேற்று மாலை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அம்புஜம் குளியலறையில் உல்லாசமாய் குளித்துக் கொண்டிருந்த போது செபாஸ்டியன் கதவைத் தட்டினார், அவரது இடுப்பில் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருந்தது..” என எழுதாமல் இருப்பதே நல்ல நாளிதழின் லட்சணம்.


இந்த செய்தி பேஸ்புக்கில் பரவ பலரும் அதிர்ச்சி அடைந்தனர். செய்தி அறிக்கை அது நிஜமாகவே நடந்த தொனியை கொண்டிருக்க படித்த பலரும் (என்னையும் சேர்த்தே) உண்மையிலேயே கிருபா கடுமையாய் மனநலம் பாதிக்கப்பட்டு கொலை செய்ததாக நம்பினர். இரண்டு விதமாய் முகாம்கள் பிரிந்தன - ஒரு பக்கம் எழுத்தாளர்களே இப்படித் தான், அத்தனை பேரும் குடிகாரர்கள், கஞ்சா பயன்படுத்திக் கொண்டு சித்தம் கலங்கியோர் என புலம்புவோரும், லஷ்மி மணிவண்ணனைப் போல இந்த சமூகத்தின் பால் கவிஞனுக்குள்ள கோபமே மனநலக்கோளாறாகிறது, அது அனைவருக்குள்ளும் நொதித்துக் கொண்டிருக்கும் ஒன்றே என கூறியோருமாய்.

அடுத்து காவல் துறை சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டிவி கேமரா காணொளியை ஆய்வு செய்த போது ஆச்சரியம் காத்திருந்தது - இறந்தவர் கொல்லப்படவில்லை; அவர் மாரடைப்பு வந்து துடிப்பதையும் கிருபா சென்று அவருக்கு உதவ முயல்வதையும் காணொளி நிரூபிக்கிறது. அடுத்து, உடற்கூறியல் அறிக்கையும் இதை உறுதி செய்கிறது. இப்போது கிருபாவின் சொற்கள் அனைவர் செவிகளுக்கும் வந்து சேர்கின்றன - “நான் கொல்லவில்லை, உதவி செய்யவே முயன்றேன்!மொத்தமாய் பேஸ்புக் சமூகமே அவரை கொண்டாடுகிறது.

எவ்வளவு குழப்பம்! ஒரே நாளில் ஒருவர் சித்தம் கலங்கி கொலை செய்து விட்டு அடுத்து உடனே சாகும் தறுவாயில் துடிப்பவருக்கு உதவிய நல்ல மனம் படைத்தவர் ஆகிறார். இவ்விசயத்தில் காவல் துறையையும் நான் பழிக்க மாட்டேன். (பாம்பு கொத்துகிறது என நாம் புகார் சொல்வோமா? அதன் இயல்பு கொத்துவது, விடம் கக்குவது.) அவர்கள் சந்தேகப்படும் யாரையும் உள்ளே தள்ளுவார்கள்; சீக்கிரம் வழக்கை முடிக்க வேண்டும் என்பதே அவர்களின் காலாகாலமான கொள்கை. ஆனால் ஊடகம் இதை “கொலை செய்ததாய் சந்தேகத்துக்குள்ளான இன்ன நபர் கைதாகி இருக்கிறார்” என்றே கூற வேண்டும். ”கொலை செய்ததை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் தகவல் போலீசுக்கு சொல்லிட காவல்துறை அவரே உடனே கைது செய்து தன் கடமையை ஆற்றியது” எனும் கணக்கில் எழுதலாகாது. இது ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. பல கோடி பேர் இதைப் படித்திருப்பார்களே! சரி தினமலர் இப்போது திருத்தின அறிக்கையை வெளியிட்டிருப்பார்களே. ஆனால் அந்த கொடுமையைத் தான் பாருங்கள்:

சென்னை, கோயம்பேடு அருகில் நேற்று (மே.5) இரவு இரு நபர்களுக்கிடையில் போதையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது. அதில்,, கீழே விழுந்த நபர் இறந்துவிட்டார். இந்தக் கொலை சம்பந்தமாக கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முடிவில் அவரை விடுவித்தனர்.




இதில் சி.சி.டிவி கேமரா பதிவு பற்றியோ மாரடைப்பு பற்றியோ எந்த செய்தியும் இல்லை. பைத்தியக்காரர்கள் மோதியதாய் முதல் அறிக்கையில் எழுதிவர்கள் இப்போது குடிகாரர்கள் தள்ளுமுள்ளு செய்ததாய் சொல்கிறார். கழுத்தை நெரித்து கொன்றதாய் எழுதியவர்கள் கீழே தள்ளப்பட்டதில் இறந்ததாய் சொல்கிறார்கள். இப்போதும் என்ன காரணத்துக்காக கிருபா விடுவிக்கப்பட்டார் என்று சொல்லவில்லை. இந்த குறிப்பின் கடைசி வரி இது:  சம்பவத்தில் இறந்து போன நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றொரு தகவலையும் கோயம்பேட்டில் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.இதிலும் எனக்கு இப்போது ஐயம் ஏற்படுகிறது. குடிகாரர்கள் மோதியதாய் சொல்லும் தினமலர் இப்போது ஏன் கொல்லப்பட்ட நபரை மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யார்? அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியுமா? இவர்கள் தானே “கழுத்தை நெரித்து சம்மந்தப்பட்டவர் கொல்லப்பட்டதை பார்த்த சாட்சிகள்”? இத்தகையோர் மற்றும் இவர்கள் சொல்வதை சாட்சிமொழியாய் ஏற்று அப்படியே நடந்ததை பார்த்தது போல எழுதும் தினமலர் போன்ற பத்திரிகைகளுக்கு எதிராய் கிருபா நிச்சயம் வழக்கு தொடுக்க வேண்டும்.

தினமலர் ஆன்லைனில் இந்த செய்திக்குறிப்பின் கீழ் பிரசுரிக்கப்படும் பின்னூட்டங்கள் இன்னும் கேவலமாய் உள்ளன. “கொலைகாரனுகளையெல்லாம் எழுத்தாளர்ன்னு சொல்ல கூடாது.....என்று ஒருவர் சொல்கிறார். விகடன் விருது வாங்கினாலே அவன் குடிகார இடதுசாரி தானே, அவன் கொலைதானே செய்வான் என மேலும் பலர் எழுதுகிறார்கள்.

ஒன்று இத்தகைய குறிப்புகளை எழுதும் தினமலர் நிருபர்கள் அடிப்படை ஊடக அறம் கூட இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அடுத்து, இவர்களை மேய்ப்பவர்கள், இத்தகைய பின்னூட்டங்களை ரசித்து வெளியிடுபவர்கள் பெரிய சாடிஸ்டுகளாக இருக்க வேண்டும்.

நாம் ஏன் இந்த மாதிரியான சாடிஸ்டுகள் மத்தியில் வாழ்கிறோம்?


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Just like America has Fox news, tamilnadu has dinamalar. Both are experts in fake news.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...