Skip to main content

தமிழ் சினிமாவில் “சின்ன வீடு”: தோன்றி மறைந்த மற்றமை (1)

தொண்ணூறுகள் வரையிலான தமிழ் சினிமாவின் சுவாரஸ்யங்களில் ஒன்று சின்ன வீடுஅடைய இயலாத அபூர்வமான காதலியும், காதல் தோல்வியின் துயரமும் மீள மீள பேசப்பட்ட அதே காலத்தில் தான் ரெண்டாவது பெண் (சின்ன வீடு) பற்றிய விவாதங்களும் நம் சினிமா வழி நடந்துள்ளது. ஒரு பெண் தன் இன்மையாலும் மற்றவள் தன் உபரி இருப்பாலும் ஆணின் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள். இந்த ஆணின் நெருக்கடியை பேசிய படங்களில் எல்லாம் இரண்டாவது பெண் முக்கியமானவள் ஆகிறாள்.
 அடுத்து, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்ற கவர்ச்சி கன்னிகள் வருகிறார்கள். இவர்கள் நாயகிக்கு ஒரு மற்றமையாக அமைந்திருந்தாலும் அவர்கள் தூய காதலை, கற்பான மனைவியியை கட்டமைக்க உதவினார்களே அன்ற பெரிய சிக்கல்களை உறவுகளிலோ குடும்பத்திலோ ஏற்படுத்தவில்லை. இந்த வகையில் தான் சின்ன வீட்டின் இருப்பு நம் சினிமாவின் கதையாடலில் முக்கியமாகிறது. நாம் ஏன் இத்தகைய பெண்களைப் பற்றி அக்கறை கொண்டோம் என வினவ வேண்டியதாகிறது.


பாலு மகேந்திரா:

பாலு மகேந்திரா பிறழ் குடும்ப உறவுகளை ஆய்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதை அறிவோம். உதாரணமாய், “அழியாத கோலங்கள்” (1979) மூத்த பெண் மீதான இச்சையை பேசியதென்றால், “மூன்றாம் பிறை” (1982) மனதளவில் குழந்தையாக இருக்கும் பெண் ஒருத்தியை ஒரு தகப்பனைப் போல் கவனித்துக் கொள்ளும் ஒரு இளைஞன் கொள்ளும் காதலைப் பேசியது. இதே வகையான உறவைமறுபடியும்படத்தில் இயக்குநர் முரளி கிருஷ்ணாவுக்கும் அவரை அப்பாவாகவும் காதலனாகவும் ஒரே சமயம் கண்டு குழம்பும் நடிகை கவிதாவுக்குமான உறவாக மீண்டும் சித்தரித்தார் பாலுமகேந்திரா. திருமணத்துக்கு பிறகான பிறழ் உறவுகளைப் பேசும் அவரது படங்களில்மறுபடியும்” (1993), “ரெட்டை வால் குருவி” (1987), மற்றும்சதி லீலாவதி” (1995) ஆகியவை முக்கியமானவை. இந்த வகைமையின் கீழ் நேரடியாய் வராது என்றாலும்நீங்கள் கேட்டவை” (1984) படத்தையும் அலசப் போகிறோம். அப்பாவின் சின்ன வீட்டின் (சித்தியின்) மீதுள்ள பழிவாங்கும் வெறியால் சைக்கோ கொலைகாரனாகும் நாயகனின் கதையை பேசியமூடுபனியும்” (1980) இந்த வரிசையில் வருவது தான். இப்படத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒரு சித்தி (சின்ன வீடு) தான்.
   
சின்ன வீடுமூன்றாவது பெண்

 எழுபது துவங்கி தொண்ணூறுகள் வரையிலான சினிமாவில் அடிக்கடி தாம்பத்ய உறவுகளில் நேரும் விரிசல், பிசிறுகள், “வைப்பாட்டிஉறவு, வழி தவறும் கணவன் இறுதியில் மனம் திருந்தி வீடு திரும்புவது ஆகிய கதைச்சரடுகள் பரிசீலிக்கப்பட்டன. ரெண்டாயிரத்தில் இது இது கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. இதன் பொருள் சமகாலத்தில் குடும்பங்களில் பிறழ்வுகள் இல்லையென்றோ விவாகரத்துகள் நேர்வதில்லையோ என்றல்ல. முன்பிருந்த அதிர்ச்சி இன்றில்லை. குடும்பம் எனும்பவித்திரமானஅமைப்பு சிதையும் போது என்னவாகும் என்பதை கற்பனையில் நிகழ்த்திப் பார்த்து கலங்கவும், பின்னர் சுமூகமாய் கதை முடியும் போது கண்களைத் துடைத்து புன்னகைக்கவுமான ஆர்வம் இன்றைய பார்வையாளனுக்கு அதிகம் இல்லை
ஒரு ஆணின் பாலியலைப் பொறுத்தமட்டில் பெண்ணுடல் மற்றும் சமூக அந்தஸ்தே (நிலவுடைமை சமூகம் என்றால் நிலமும், பண்ணையாட்களும்) அவனுக்கு ஸ்திரமான இடத்தை அளித்த காலகட்டம் அது. ஆக, தொடர்ந்து பெண்ணையும் அந்தஸ்தையும் தக்க வைப்பது குறித்த ஆவலாதியை, சிக்கல்களை, கவலைகளை அக்காலப் படங்களில் கண்டோம்.
 “சத்ரியன்” (1990) போன்ற ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் பெண்ணுக்குக் காவலனாய் தன்னைக் காட்டிக் கொண்டு தன் ஆண்மையை உறுதிப்படுத்தும் அக்கறை இதில் குறைவு, ஆனால் ஒரு காவலதிகாரியாய் தன் ஆண்மையை நிறுவும் தடுமாற்றங்களே அப்படத்தின் மையம். இதுவே, “காக்க காக்க” (2003), “சாமி” (2003) போன்ற படங்களில் அரசதிகாரத்தை விளிம்புநிலை சக்திகள் மீது பிரயோகிக்கும் உச்சபட்ச வன்முறை கொண்டாட்டமாக ஆண்மை அதிகாரம் மாறுகிறது. அதாவது, தன்னை முன்னிறுத்த வேண்டும், தன் நெருக்கடியை எதிர்கொண்டு தன்னை தக்க வைக்க வேண்டும் எனும் பதற்றம் ரெண்டாயிரத்துக்கு பிறகான சினிமாக்களில் அதிகமில்லை. மாறாக, கொன்றொழிப்பதும், கொன்றொழிப்பதை ஒரு கலாச்சார விளையாட்டாக, கேளிக்கையாக, விளிம்புநிலை மீதான பழிவாங்கலாய் மாற்றுவதே ஆண்மையின் இலக்காக, ஆண்மை கட்டமைப்பின் மாந்திரமாக, மாறியது. இந்த வகை படங்களில் தான் வன்முறைக்கு என்றே சிலாகிப்பான மாஸ் பாடல்கள் தோன்றின.
ரெண்டாயிரத்துக்கு முன்பு வரையிலான படங்களில் பெண்ணுடல் மீதான பதற்றம் காதலனுக்கு ஒருவகையாகவும் கணவனுக்கு மற்றொரு வகையாகவும் அமைந்தது. காதலனுக்கு பெண் எட்டாக்கனி. அவன் தொடர்ந்து ஏங்கி அழுது புலம்பி கற்பூரமாய் கரைந்து போகிறவனாய் இருந்தான். இன்னொரு பக்கம், திருமணமான ஆணின் வாழ்வில் மற்றொரு பெண் வர, அப்போது அவன் எதிர்கொள்ளும் குழப்பமும் நெருக்கடியும்சின்ன வீடுபடங்களில் பேசப்பட்டது. ஆனால் ரெண்டாயிரத்துப் பிறகோ மெல்ல மெல்ல இந்த இரு அம்சங்கள் குறித்த ஆணின் கவலைகள் மட்டுப்பட்டன; சாதி மற்றும் சமூக இடம் குறித்த அலைபாய்ச்சல்களில் தொடர்ந்து இக்கவலைகள் இடம்பெற்றாலும் ஆணின் தனித்த சவாலாக அவை மாறிப் போயின.
 உதாரணமாய், “சேது” (1999இல் வந்தாலும்), “பிதாமகன்போன்ற படங்களில் பெண்ணுடலை கட்டுப்படுத்துவதோ பாதுகாப்பதோ அல்ல இலக்கு. ஆண் தனக்காகவே தானே அழிவதே இப்படங்களின் கதையாடல்பெண்ணுடல் இந்த போக்கின் ஒரு பொருட்டு மட்டுமே அன்றி காரணம் அல்ல. “சேதுவில்காதலியால் இருமுறை ஏமாற்றப்பட்ட பின் (முதல் முறை காதலை மறுத்தும் இரண்டாம் முறை அவனை காதலித்த நிலையில் தற்கொலை பண்ணியும்நாயகன் மனநல மருத்துவமனையில் அடைக்கலம் கொள்கிறான் (“இத்தகைய பெண் முடிவுகள் கொண்ட உலகை விட பைத்தியங்களின் உலகே மேல்”). பெண்ணுடல் அபத்தமானது, அதன் பின்னால் ஆண் மனம் அலைந்து அழிவது தேவையில்லை எனும் ஒரு சித்தர் பார்வை இதில் ஒளிந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தான் ரெட்டை பெண்டாட்டி கதை, தொடர்ந்து எட்டாக்கனியாய் உள்ள பெண்ணின் கதை தமிழ் சினிமா திரைகளில் இருந்து நழுவி மறைகின்றன.

குடும்ப உறவின் புனிதமும் உறுதியும் பெண்ணுடல் மீது கட்டமைக்கப்பட்டவை. ஆரம்ப காலம் தொட்டே தமிழ் சினிமாவில் பத்தினியும் இரண்டாம் மனைவி்யும் வைப்பாட்டியும் சித்தியும் தொடர்ந்து வீட்டுக்குள் இருக்கும், வீட்டை உதவி வெளிவரும் பெண்களுக்கான உருவகங்களாய் சித்தரிக்கப்பட்டு வந்தன. குறிப்பாய், அன்று பத்தினிப்பெண் × கற்பில்லாத பெண் எனும் எதிரிடை துல்லியமாய் இருந்தது (.தாபராசக்தி”). ஆனால் எழுபதுகளில் துவங்கி தொண்ணூறுகளில் பாக்யராஜின்சின்ன வீடுபோன்ற படங்கள் வரையில் இந்த எதிரிடை தக்க வைக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் பாலசந்தர் மற்றும் பாலு மகேந்திராவின் படங்களில் வீட்டை விட்டு வெளியேறும் பத்தினிப் பெண் எனும் பெண் பிம்பம் வலுவாக கட்டமைக்கப்பட்டது. இதன் மூலம் மேற்சொன்ன எதிரிடை கலைக்கப்பட்டது

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...