முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (2)

மிஷிமாவின் எழுத்துக்கள் தமிழில் பரவலாய் மொழியாக்கம் வழி அறிமுகமாகவில்லை. எஸ்.ரா சில கட்டுரைகளில் மிஷிமாவின் வாழ்க்கையை சுருக்கமாய் சித்தரித்திருக்கிறார். குறிப்பாய், மிஷிமா ராணுவ முகாம் ஒன்றை கைப்பற்றி ஜப்பானிய சாமுராய் முறையில் தன் வயிற்றை வாளால் கிழித்து உயிரை விட்ட சம்பவம். நினைக்க நினைக்க ஏற்க முடியாத, தர்க்க ரீதியில் புரிந்து கொள்ள சிரமமான முடிவு மிஷிமாவுடையது. டேமியன் பிளானகனின் சிறப்பு அவர் மிஷிமாவை ஒரு உளவியல் நோயாளி ஆக்காமல், அவரது அகச்சிக்கலை இலக்கிய மற்றும் உளவியல் கோணத்தில் வெற்றிகரமாய் விளக்கி விடுகிறார் என்பது. இது மிக மிக சிரமமான காரியம். அகத்தூண்டுதலினால் நடத்தப்படும் எழுத்தே இதை சாதிக்கும்.  

பிளானகன் மேலும் ஜப்பானின் சமூக வரலாற்று பின்னணியையும் அலசுகிறார் - இரண்டாம் உலகப்போரிலும் அதன் பின்னரும் ஜப்பானிய சமூகத்தில், அரசியலில் நிகழ்ந்த பெரிய மாற்றங்களை விவரிக்கிறார். இவற்றை ஜப்பானிய சமூக மனம் எதிர்கொண்ட விதத்தின் இலக்கிய தூல வடிவமே மிஷிமாவின் வாழ்க்கை என்கிறார். விக்டர் பிராங்கிள் ஹிட்லரின் யூத முகாமில் மனிதர்களின் உளவியல் வெளிப்பட்ட விதம் பற்றி எழுதியவை, எரிக் புரோமின் Fear of Freedom, மற்றும் ஹைடெக்கர் மரணம் குறித்து கூறியவை எனக்கு நினைவுக்கு வந்தன. பிளானகன் இந்த கோட்பாடுகளை மனதில் வைத்தபடி, ஆனால் வெளிப்படையாய் குறிப்பிட்டு எழுத்தின் பாய்ச்சலை தடை படுத்தாமல், நடையை எளிமையாய் அமைத்திருக்கிறார்

Yukon Mishima நூலின் முதல் அத்தியாயமே நம்மை பதற வைக்கக் கூடியது. 1970ஆம் ஆண்டில் நவம்பர் 25 அன்று மிஷிமா தான் உருவாக்கிய தனியார் ராணுவப் படையினர் சிலருடன் சாமுராய் வாட்கள் ஏந்தி டோக்யோ ராணுவத் தளத்துக்கு செல்கிறார். அங்கு அவர் ராணுவ தளபதியை சிறைபிடித்து அவரை விட வேண்டுமானால் ராணுவ வீரர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி தன் கருத்துக்களை கேட்க வேண்டும் எனக் கோருகிறார். இதன்படி ராணுவ வீரர்கள் கீழ்த்தளத்தில் கூடுகின்றனர். மேல்தளத்தில் நின்று மிஷிமா தன் அமைப்பின் கொள்கைகளையும் அறிக்கையை வெளியிட்டு பேசுகிறார். தேசத்தையும் தேசத்தின் ஆன்மாவான மன்னரையும் காப்பாற்றுவதற்காக ராணுவம் மேற்கத்திய (அமெரிக்க சார்பு) உலக அரசியலை எதிர்த்து நிற்க வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும், ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், நாட்டில் மன்னரின் அதிகாரத்துக்கு சவாலாய் கலகங்கள் நடைபெறக் கூடாது என்பவை அவரது கோரிக்கைகள். வீரர்களில் பலருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். மிஷிமாவை பரிகசித்தனர். மிஷிமா இதை ஏற்கனவே எதிர்பார்த்து தயாராக வந்திருந்தார். அவர் தளபதியை விடுவித்து விட்டு சாமுராய் முறையில் தன் சகா ஒருவரின் உதவியுடன் சாமுராய் முறையில் செப்புக்கு எனும் தற்கொலை பண்ணிக் கொள்கிறார். இது ஒருவர் மண்டியிட்டு அமர்ந்து வாளால் தன் அடிவயிற்றைக் கிழிப்பதாகும். குடல் வெளிவந்து ரத்தம் வெளிப்பாய அவர் மெல்ல மெல்ல கடும் துன்பத்தை அனுபவித்து இறக்க நேரிடும். வேதனையை முடித்திட (இதற்காகவே நியமிக்கப்பட்ட) உதவியாளர் ஒருவர் அப்போது தனது வாளால் சாமுராயின் தலையை சீவி விட வேண்டும். இதுவே சாமுராய் நடைமுறை. ஆனால் மிஷிமா தேர்ந்தெடுத்த உதவியாளரால் முதல் வெட்டில் துல்லியமாய் சீவ முடியவில்லை. ஆகையால் இன்னொரு உதவியாளர் தன் வாளால் அக்காரியத்தை முடித்தார். மிஷிமாவின் இந்த முடிவு பல கேள்விகளை எழுப்புகிறது:
ஒரு எழுத்தாளன், அதுவும் நவீன எழுத்தாளன், ஏன் மன்னருக்காய் உயிர் துறக்க வேண்டும்?
தன் எழுத்து வாழ்வின் உச்சத்தில் இருக்கிற ஒரு நட்சத்திரம் ஏன் இவ்வளவு அபத்தமாய் தொனிக்கும் ஒன்றை செய்ய வேண்டும்?
தேசத்தை காப்பாற்ற உத்தேசித்திருந்தால் அவர் அரசியலில் புகுந்து போராடி இருக்கலாமே! அப்போதைய ஜப்பானிய பிரதமர் மிஷிமாவை தேர்தலில் போட்டியிட்டு மந்திரி சபையில் போட்டியிடும்படி கேட்டுக் கொள்கிறார். ஆனால் மிஷிமா அதை ஏற்கவில்லை. ஏன்?
மரணத்தின் அழகியலை, செக்ஸுடனும் வாழ்வின் பூரணத்தன்மையுடனும் மிஷிமா தன் எழுத்தில் இணைக்கிறார். இதுவே அவரது இலக்கிய பிரதிகளின் பெரிய சுவாரஸ்யம். இதே மரண அழகியலை நேர் வாழ்வில் அவர் ஏன் நிகழ்த்திப் பார்த்தார்?


மிஷிமாவின்செப்புக்குவின் பிரதான இலக்கு ஜப்பானின் வெளியுறவு அரசியலில் மாற்றம் மற்றும் அரசியலமைப்பின் திருத்தத்தை கோருவது மட்டுமல்ல எனக் காட்டுகிறது. இதற்கு முன்னர் மிஷிமா பெரிய சமூக அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டவர் அல்ல. அறுபது, எழுபதுகளில் ஜப்பான் தன் சம்பிரதாயமான மரபார்ந்த கலாச்சார விழுமியங்களை விடுத்து அமெரிக்க தாராளவாத எந்திரமயமாக்கல் போக்கை ஆவேசமாய் தழுவுகிறது. இரண்டாம் உலகப்போரின் போதான பெரிய சேதங்களும் வீழ்ச்சியும் இதற்கு ஒரு பிரதான காரணம். இந்த மேற்குடனான உறவால் ஜப்பான் செழிக்கிறது; புதிய பொருளாதார அலையினால் மிஷிமா போன்ற எழுத்தாளர்களும் பலனடைகிறார்கள். மிஷிமா தான் எழுத்தின் வருமானத்தினால் மட்டுமே கோடீஸ்வரர் ஆகிறார். நிறைய நாடகங்களை எழுதுகிறார். அவரது நாவல்கள் படமாக்கப்படுகின்றன. இவை பெரும் வெற்றி பெறுகின்றன. அவர் நடிகராகிறார். பாடி பில்டிங் செய்து மாடல் ஆகிறார். உலகெங்கும் அவரது புகழ் பரவுகிறது. நோபல் பரிசு வாய்ப்பு அவரது வீட்டு அழைப்பு மணியை அடித்து நிற்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தான் ஜப்பானிய சமூகம் மிகப்பெரிய பண்பாட்டு உளவியல் வறட்சியை அனுபவிக்கிறது. வாழ்வில் பிடிப்பிழந்து, அர்த்தத்தை எதிலும் காண முடியாது எந்திரம் போல வாழ்ந்து, கேளிக்கைகளின் பின்னால் அலைந்து ஒரு தலைமுறை சீரழிகிறது. இந்த உணர்வுகளை மிஷிமாவும் தன் ஆன்மாவில் உணர்கிறார். தான் வாழ்வின் மீது கட்டுப்பாட்டை இழந்து சருகு போல் மாறுவதை அறிகிறார். இலக்கியம் கூட இனி பெரிய சவால் அல்ல என அவருக்குத் தோன்றுகிறது. அல்லது இலக்கியம் எதனால் தன்னை ஈர்த்ததோ அதை மேலும் உக்கிரமாய் தான் தேடி அடைய வேண்டிய காலம் கனிந்து விட்டது என உணர்கிறார். இதை ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உணர்த்தி தன் முடிவை தேடிக் கொள்வது அவசியம் என முடிவெடுக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...