முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் சினிமாவில் “சின்ன வீடு”: தோன்றி மறைந்த மற்றமை (4)

ஒரு வீடு இரு வாசல் (1990): என்ன யமுனா நிழலைத் துரத்திக்கிட்டு இருக்கே?

இரண்டு மாற்று மனைவிக் கதைகளின் தொகுப்பு இப்படம். முதல் கதையில் சுகுமார் தன் வீட்டுக்கு வேலைக்கு வரும் செண்பகம் எனும் ஒரு ஏழைப் பெண்ணுடன் உறவு கொண்டு அவளை தன் வைப்பாட்டி போல நடத்துகிறார். அவளுக்கு அவர் மூலம் குழந்தை பிறக்கிறது. அடுத்து சுகுமார் மற்றொரு பெண்ணை (யமுனா) மணக்கிறார். அப்பெண் துணிச்சலானவள்; சுகுமாரின் ஆணாதிக்கம் பிடிக்காமல் பிரிந்து செல்கிறாள். இப்போது சுகுமார் செண்பகத்தை வீட்டுக்கு அழைத்து வந்து தன் மனைவியாக வைத்துக் கொள்கிறார். மனைவியின் புடவையை அவளுக்கு அணியக் கொடுக்கிறார். இந்நிலையில் ஒருநாள் மனைவி மனம் மாறி கணவனைத் தேடி வருகிறார். சுகுமார் தவிக்கிறார். செண்பகத்திடம் வீட்டை விட்டு சென்று விடும்படியாய் கேட்கிறார். செண்பகம் சென்ற பின்னும் அவள் விட்டுப் போன தடயங்கள் வீட்டில் கிடைக்க மனைவிக்கு சந்தேகம் வருகிறது. தன் கணவனின் கள்ளக்காதலி யார் எனத் தேடுகிறார்.

இதைப் பற்றி அவள் யோசித்தபடி வீட்டுக்குள் குறுக்குமறுக்காய் நடக்கும் ஒரு காட்சி வருகிறது. அப்போது பாலசந்தர் சுகுமாரின் பக்கவாட்டு முகத்தை சட்டகத்தின் ஒரு பாதியிலும் மனைவியின் நடக்கும் நிழலை இன்னொரு பாதியிலும் காட்டுகிறார். அப்போது தான் சுகுமார் இவ்வசனத்தை பேசுகிறான்: “என்ன யமுனா நிழலைத் துரத்திக்கிட்டு இருக்கே?”
இந்த இடத்தில் தோன்றும் நகைமுரண் கவனிக்கத்தக்கது. நிழலைத் துரத்தும் யமுனாவே ஒரு நிழல் தானே? அவள் எப்படி நிழலானாள்?
படத்தின் துவக்கத்தில் வரும் காட்சிகளில் ஒன்றில் செண்பகம் வீட்டு வேலைகள் செய்வதை சுகுமார் இச்சையுடன் கவனிக்கிறான். அப்போது சட்டகத்தின் இடதுபாதியில் பாலசந்தர் செண்பகத்தை அல்ல அவளது நிழலையே காட்டுகிறார். ஏனென்றால், சுகுமார் விரும்புவது நிஜமான செண்பகத்தை அல்ல அவளது சாயையை தான். (சின்ன வீடே ஒரு நிழல் தானே எனும் தொனியும் இதற்குள் வருகிறது.) அடுத்து, மனைவி யமுனா வீட்டை விட்டு வெளியேறிய பின் அவளிடத்தில் செண்பகம் திரும்பிட யார் நிஜ மனைவி எனும் குழப்பம் ஏற்படுகிறது. குறிப்பாய், வீட்டுக்கு திரும்பி வரும் யமுனா தன் புடவையை செண்பகம் அணிந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடையும் போது இந்த குழப்படி இன்னும் தெளிவாகிறது. சட்டப்படி செண்பகம் மனைவி அல்ல தான். ஆனால் சுகுமாரைப் பொறுத்தமட்டில் அவள் சற்று காலம் மனைவியாக இருக்கிறாள். மனைவியின் எல்லா பணிகளையும் செய்கிறாள். அவள் வழி குழந்தையும் அவனுக்குக் கிடைக்கிறது. யமுனாவோ மனைவியின் கடமையை முழுமையாய் ஏற்பவள் அல்ல; அவளுக்கு குழந்தையும் இல்லை. இந்த விதத்தில் செண்பகம் அவளை விட கூடுதலான தகுதி பெறுகிறாள். அவள் தற்காலிகமாய் யமுனாவின் இடத்துக்கு வந்து விடும் போது யமுனாசின்ன வீடாகிறாள்”. இது தான் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியின் உச்சம். அவள் ஒரு மனுஷி எனும் இடத்தில் இருந்து நிழலாக பாவிக்கப்படுகிறாள், நிழலை திடீரென நிஜமாய் பாவித்து விட்டு நிஜத்தை நிழலாக்குகிறான் சுகுமார். இந்த ஒருவள் (மனைவி) மற்றொருவளாகி (சின்ன வீடு), மற்றொருவள் மற்றொன்றாகி (நிழல்), மற்றமையே தான் என இறுதியில் அந்த மனைவி உணரும் இடம் இப்படத்தின் தனித்துவம் எனலாம்.

 காட்சி மொழியை பொறுத்தமட்டில் பாலசந்தர் இப்படத்தில் விளையாடி இருக்கிறார். வசனத்தில் அவர் வழக்கமாய் சொல்ல முயலும் பல விசயங்களை காட்சிகள் வழி கடத்தி இருக்கிறார்.
சின்ன வீடுசின்ன வீடாய்இருப்பது மட்டுமேபெரிய வீட்டுக்குஆறுதல் என்பதை இப்படம் உணர்த்துகிறது. இரண்டு வீடுகளுமே ஒரே போல் தோன்றும் போது அது பெரிய சிக்கல்களை குடும்ப அமைப்புக்கு, சமூகத்துக்கு ஏற்படுத்தும் என சொல்கிறது. இதனால் தான் சுகுமாரின் தகாத உறவை அறிந்ததும் யமுனா செண்பகத்துக்கு ஒருகடைக்கண்ணிவைத்துக் கொடுத்து அவளைக் காப்பாற்ற விரும்புகிறாள். அதற்காக 25,000 தரும் படி சுகுமாரிடம் கேட்கிறாள். இந்த இடத்தில் அவள் விரும்புவது நிழலை நிஜமாக்க. செண்பகத்துக்கு வாழ வழி அமைத்து வீடும் கட்டிக் கொடுத்தால் அவள் சுகுமாரின் சின்ன வீடாக வெளிப்படையாகவே மாற நேரிடும். இதை மனைவியே முன்னின்று செய்திட, தனக்கான மற்றமையை அவள் உருவாக்குகிறாள் என பொருள் வரும். ஏனென்றால் செண்பகம்சின்ன வீடாகஇருப்பதே யமுனா தான் நிழல் எனும் நிலையில் இருந்து நிஜமாக ஒரே வழி. ஆனால் யமுனா எதிர்பாராத படி செண்பகம் தற்கொலை செய்து கொள்கிறாள். நிழலில் இருந்து நிஜமாகி மீண்டும் நிழலாகி உடலற்று மாயமாகிறாள் செண்பகம். திகைத்துப் போகும் யமுனா அவளது குழந்தையை எடுத்து வளர்க்கிறாள். ஏனென்றால் இப்போது கணவனின் தகாத உறவின் ஒரே எச்சம், ஒரே ஆதாரம் அந்த குழந்தை தான். அதை வளர்ப்பதன் மூலம் தன் இடத்தை உறுதிப்படுத்தவும் செண்பகத்தின் மற்றமை எனும் அடையாளத்தை நினைவுபடுத்தவும் அவளுக்கு சாத்தியமாகும்.

நிழல் நிஜமாகும் எத்தனங்கள்: வினோதினியின் தேடல்

ஒரு வீடு இரு வாசலின்இரண்டாம் கதை இன்னும் தீவிரமானதுநிறைய சிடுக்குகள் கொண்டது. வீனோதினி எனும் துணை நடிகை ஒருத்தி ஒரு எழுத்தாளனை மணம் புரிந்து கொள்கிறாள். சின்ன கருத்து மாறுபாடுகள், கணவனின் தடித்தனம் ஆகியவை அவளை காயப்படுத்த பெற்ற குழந்தையுடன் பிரிந்து வந்து விடுகிறாள். ஆனால் பிரிவுக்கு ஒரு காத்திரமான காரணம் இல்லை என்பது தான் கவனிக்கத்தக்கது. திருமணத்துக்கு முன்னர் அவள் தனக்கு நடிக்க ஏன் பிடிக்கும் என சொல்கிறாள். நடிகையாக அவளால் யாராகவும் ஆக முடிகிறது; அப்படி வேடமணிவதில் ஒரு சுதந்திரம், ஒரு கிளர்ச்சி உள்ளது. அதுவும் அவள் துணை-நடிகைவேடத்தின் வேடம். நிழலின் நிழல். ஒரு நடிகையிடம் புலப்படுவது அவளது பாத்திரத்தின் இயல்புகள்; ஆனால் துணை-நடிகை அந்த பாத்திரத்தின் ஒரு புலப்படாத உடல். இப்படி இருந்து பழகுவது ஒரு அபூர்வ மனநிலை. இப்படியான ஒருவள் ஒரு பணக்கார ஆளை மணம் புரியும் போது என்னவாகும்? அவளால் துணை-நிலையில் இருந்து மையநீரோட்ட அடையாளத்துக்கு மீள முடியுமா? அவளால் மனைவியாக முடியுமா? அவளது கணவன் திருமணத்துக்குப் பிறகு அவளுக்கு துரோகம் செய்வதில்லை என்றாலும் அவளுக்கு நிம்மதி இருப்பதில்லை. அவளால்அவளாகஇருக்க முடிவதில்லை.
 மனைவியாக ஒரு உறுதிப்பட்ட அடையாளத்தில் இருப்பதே அவளுக்கு மூச்சுத்திணறல் ஆகிறது. அவள் நிழல் ஆகிறாள். கணவனைப் பிரிந்து மீண்டும் துணை நடிகை ஆகிறாள். கணவனைப் பிரியும் முன்பான காட்சி ஒன்றில் அவள் அவனை கடிந்து கொள்ளும் போது துணிமணிகளை கழற்றி ஆடை மாற்றுவதை மறைமுகமாய் காட்டுவார் இயக்குநர்கணவன் பார்த்திருக்க சட்டகத்துக்குள் ஒவ்வொரு துணியாக வந்து விழும். இது ஒரு உருவகக் காட்சி. அவள் தன் மீது சுமத்தப்பட்ட நிரந்தர அடையாளத்தை துயிலுரிந்து விட்ட சுதந்திரமாகிறாள். அது அவளை நிரந்தர இருப்பற்றவளாய், அரூபமாய், சாயையின் சாயையாய் மாற்றலாம். ஆனாலும் அவள் அதையே விரும்புகிறாள்.
இந்த இடத்தில் வினோதினியின் குழந்தை அவளுக்கு ஒரு பற்றுகோலாகிறது. அது அவளது நிழல் வாழ்வுக்கு ஒரு பருவுடலை அளிக்கிறது. அவள் அதை கெட்டியாக பிடித்துக் கொள்கிறாள். அவள் தன் கணவனுக்கு முன்னாள் மனைவி, ஆனால் தாய் எனும் அடையாளத்துக்கு அப்படி முன்னாள், இன்னாள் கிடையாதல்லவா? ஆக, குழந்தை சட்டப்படி கணவனிடம் இருக்க நேரும் வேளைகளில் அவள் கடும் பதற்றத்துக்கு உள்ளாகிறாள். அது பாசப் போராட்டம் மட்டுமல்ல, அவளது இன்மை அளிக்கும் நெருக்கடியின் போராட்டம்.
இறுதிக் காட்சியில் இரவில் தன் குழந்தையைக் காண கணவன் வீட்டுக்கு சென்று அங்கு ஒரு நாய் துரத்த அவள் அரக்கப்பரக்க ஓடுகிறாள்; பிறகு இனிமேல் ஓட முடியாது எனும் நிலையில் துணிச்சலாய் நாயை எதிர்கொள்ள அது திரும்ப ஓடுகிறது. இந்த காட்சி சற்றே குழந்தைத்தனமானது என்றாலும், நிழலில் இருந்து நிஜத்துக்கு திரும்பும் அவளது எத்தனத்துக்கு ஒரு நல்ல உருவகமாகிறது.
இக்கதையில் நேரடியாய் சின்ன வீடு தோன்றவில்லை; ஆனால் ஒரு குறியீடாக சின்ன வீடு வருகிறது. ஒரு மனைவி எந்த நேரமும் சின்ன வீடாக, உள்ளீடற்றவளாய் ஆகக் கூடும் எனும் அவலத்தை இப்படம் சித்தரிக்கிறது. ஒரு மனைவியின் அந்தஸ்தும் சின்ன வீடு எனும் அந்தஸ்தும் இரு வேறு நிலைகள் அல்ல; சின்ன வீட்டின் மீது அணிந்திருக்கும் அரிதாரம் மட்டுமேபெரிய வீடுஎன்கிறது இப்படம். இதை உணர்ந்த பின் சின்ன வீடாகவே வாழவும் முடியாமல் தன் சொந்த இடத்துக்கும் மீள முடியாமல் ஒரு பெண் தவிப்பதை இது பேசுகிறது.

சின்ன வீடு என்பதை ஒரு உள்ளார்ந்த அடையாளச் சிக்கலாய் கையாளும் தனித்துவமான படம்ஒரு வீடு இரு வாசல்”.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...