முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தும் பித்தும் (1)

எழுத்தாளர்கள் உலகம் முழுக்க சற்றே கோணலாக, எதிர்பாராத கோணங்கி சுபாவங்கள் படைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய சித்தரிப்புகள் பிரசித்தமாகின. ஐரோப்பாவை பொறுத்தமட்டில் கற்பனாவாத கவிதை மரபுடன் (கூல்ரிட்ஜ், கீட்ஸ், ஷெல்லி) இது துவங்கியதாக சொல்கிறார்கள். படைப்பாளிகள் மையத்தை விடுத்து விளிம்பை விரும்புகிறவர்கள். எதையும் தலைகீழாக சிந்திப்பவர்கள் எனும் நம்பிக்கை தோன்றியது. சமூகம் எளிய சாமான்யர்களுக்கு அனுமதிக்காத காரியங்களை படைப்பாளிகள் தமதுரிமையாக கருதிக் கொள்வார்கள்; ஒரு கட்டத்தில் சமூகம் தனது அடக்கப்பட்ட விழைவுகளை வெளிப்படுத்தவும் சித்தரித்து பரிசீலிக்கவும் படைப்பு வெளியை பயன்படுத்துவதாக ஒரு நம்பிக்கை  தோன்றி ஆஸ்திரிய உளவியலாளர் சிக்மண்ட் பிராயிடின் ஆய்வுக்கருத்துக்களால் வலுப்பட்டது


இதன் பொருள் உலகமெங்கும் படைப்பாளிகள் பித்தர்களாக, பொருந்தா பிரகிருதிகளாக மட்டும் காணப்பட்டார்கள் என்றல்ல. பிரஞ்சு தத்துவ அறிஞரும் விமர்சகருமான ரொலாண்ட் பார்த் தனது 1957இல் வெளியான Mythologies நூலில் The Writer on Holiday எனும் கட்டுரையில் எழுத்தாளனை சாமான்யனாக காட்டுவதும் பிரசுர தொழிற்துறையின் நோக்கமாக இருந்தது என்கிறார். ஐரோப்பாவில் தொழில்மயமாக்கல் மும்முரமான பின்னரே எழுத்தாளனின் பிம்பமும் பிரசித்தமாகிறது; எழுத்தாளனும் எழுத்தும் ஒன்று எனும் நம்பிக்கை பிறக்கிறது; எழுத்தாளனை முன்னிறுத்தி புத்தகங்களை விளம்பரப்படுத்துகிறார்கள். இப்போது எழுத்தாளன் சமூகத்துடன் பொருந்தாத மற்றமையாக மட்டுமே இருக்க முடியாது என புரிந்து கொள்ளும் தொழிலதிபர்கள் அவனை சாமான்யனாகவும் காட்டும் நோக்கில் அவன் தட்டச்சு எந்திரத்தின் முன் அமர்ந்துவேலை பார்க்கும்”, அவன் தன் குமாஸ்தாக்களைப் போல விடுமுறை நாட்களில் ஊர்சுற்றும் படங்களை நாளிதழ்களில் பிரசுரித்து ஒருவித கலவையான பிம்பத்தை உண்டு பண்ணுகிறார்கள். இன்றும் பத்திரிகை பேட்டிகள், விமர்சன கட்டுரைகளில் (பஷீர் துவங்கி ஜெயமோகன் வரை) படைப்பாளிகளை முன்னிறுத்துகையில் ஊடகங்கள் இதே பாணியை பின்பற்றுவதைத் தான் பார்க்கிறோம். அதாவது இவர்கள் முழுக்க சமூக மையவாத போக்குகளுடன் பொருந்திப் போகாதவர்கள், அதே நேரம் எல்லாரையும் போல மத்திய வர்க்க வாழ்க்கைக்குள் இருப்பவர்கள் (ஆனால் சினிமா மாஸ் ஹீரோக்களுக்கு இத்தகைய பிம்பங்கள் கட்டமைக்கப்படுவதில்லை, அவர்களுக்குள் பல கோணல்கள் இருந்தாலும் - .தா., ரஜினியின் ஆன்மீக கிறுக்குகளை யாரும் பிறழ்வாக சித்தரிப்பதில்லை; கமலின் முன்பின்னான பேச்சுகளை உளவியல்பூர்வமாக அலசுவதில்லை). 


தமிழில் ஐம்பதுகள் துவங்கி சுமார் தொண்ணூறுகளின் முற்பகுதி வரை  சிறுபத்திரிகை மரபு எழுத்தாளனின் மீறலை ஒரு முக்கிய பண்பாக முன்னிறுத்தியது. புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், பிரமிள், ஆத்மாநாம் (கிணற்றுக்குள் குதித்து தற்கொலை) துவங்கி பிரேம்-ரமேஷ் ஜோடி, லஷ்மி மணிவண்ணன், ஜெயமோகன் வரை பல்வேறு சர்ச்சைகள், வாய்வழி மிகை சித்தரிப்புகள் மூலம் எழுத்தாளனை ஒரு பித்தனாக, முரண் பிம்பமாக கட்டமைப்பது தொடர்ந்தது. கோணங்கி தன் பெயரையே அவ்வாறு அமைத்துக் கொண்டார். எழுத்தாளர்கள் தமது இலக்கிய கூடுகைகளில் மிகுதியாக மது அருந்தி பரஸ்பரம் அடித்துக் கொள்வது குறித்த சில புரணிகளும் இதற்கு உதவின (அர்ப்பணிப்புடன் நடந்த பல தீவிரமான அறிவார்ந்த இலக்கிய விவாதங்கள் இங்கு கவனம் பெறவில்லை .தா., நிறப்பிரிகை விவாதங்கள், ஜெயமோகனின் ஊட்டி இலக்கிய முகாம்கள்). புதுமைப்பித்தன் பற்றி தொ.மு.சி ரகுநாதன் எழுதிய வாழ்க்கைக்கதை, சுந்தர ராமசாமி பிரமிள் குறித்து எழுதிய நூல், சாகித்ய அகாடெமியின் வெளியீடாக வந்த ஜி.நாகராஜன் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். எழுத்து இங்கு ஒரு வெற்றிகரமான வணிகம் ஆகாததால் பித்தனை சாமான்யனாகவும் காட்ட வேண்டிய அழுத்தம் தீவிர இலக்கிய பரப்பில் இங்கு தோன்றவில்லை. ஆனாலும் சுதந்திர தாகம் உச்சத்தில் இருந்த காலத்தில் தனது தேசபக்தி பாடல்களால் பிரசித்தம் பெற்ற பாரதியார் அவரது மறைவுக்குப் பின்னர் தேசிய கவியாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட போது அவரது பிறழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 2000இல் வெளியான படமானபாரதிகவிஞரை ஒரு முழுபித்தனாகவே சித்தரித்தது; ஆனாலும் அவரது தேசபக்தியின் லட்சியவாதமும் செல்லம்மா மற்றும் குழந்தைகள் மீதிருந்த அபாரமான பாசமும் அவரை சாமான்யனாக்க உதவின எனலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...