முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று வாசிப்பு குறைந்துள்ளதா?


தடம் இதழ் நிறுத்தப்பட்டதைப் பற்றின தனது பிளாக் பதிவில் வா. மணிகண்டன் இது இன்று வாசிப்பு குறைந்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத விளைவு என சொல்லி உள்ளார். இன்று யாரும் வாசிப்பதில்லை, அதிக நேரம் மொபைலில் எதையாவது பார்த்தபடி இருக்கிறார்கள், காணொளிகள் அதிகம் மக்களை போய் சேருகின்றன, அச்சுப்பத்திரிகைகள், புத்தகங்களுக்கு இனி எதிர்காலம் உண்டா என்பது ஐயமே என்கிறார். எனக்கு இது மிகைக்கூற்றாக படுகிறது.

இன்று நாம் அதிக நேரம் டிஜிட்டல் ஊடகங்களில் இருக்கிறோம் என்பது நிதர்சனம். ஆனால் அந்தநேரம்எதற்கான யாருக்கான நேரம் என நாம் கேட்க வேண்டும். அது வாசிப்புக்காக நான் இத்தனைக் காலமும் ஒதுக்கி வைத்திருந்த நேரமா? இல்லை.


அது நாம் வெளியே சுற்றுவதற்கு, நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிப்பதற்கு, டி.வி பார்ப்பதற்கு, திரையங்கில் ஒரு மணிநேரம் காத்திருந்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதற்கு வீணடித்த நேரம் அது; காதலியை ஒரு கணம் பார்ப்பதற்காக மணிக்காய் பைக்கில் அலைந்த, வெட்டியாய் பேருந்தில் ஏறி திரிந்த காலம் அது. அது தெருமுனையில் நின்று வருவோர் போவோரை எல்லாம் காரணமின்றி பார்த்து காரணமின்றி அவரக்ளைப் பற்றி யோசித்து காரணமின்றி அவர்களைப் பற்றி வம்பு பேசிக் கழிக்க நேரம். அது அரசியல் கூட்டங்களில் கால்கடுக்க நின்று புரிந்தும் புரியாமலும் கேட்ட நேரம். அது உறவினர் வீடுகளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படையெடுத்து தொந்தரவு செய்த, ஒவ்வொரு விழாவுக்கும், சடங்குக்கும் தவறாது போய்கை நனைத்தநேரம். இந்த நேரத்தை தான் நாம் இப்போது டிஜிட்டல் காலவெளியில் தொலைக்கிறோம்.

ஏன் நாம் பேசும் நேரம் குறைந்து போய் அந்த நேரத்தை டிஜிட்டல் ஊடகங்கள் அபகரித்து விட்டதைப் பற்றி பேச மாட்டோம் என்கிறோம்

நான் என் பிளாகை தொடங்கி சுமார் பத்து வருடங்கள் ஆகின்றன. ஒரு மாதம் என் பிளாகை படிக்க வருகிறவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக நான் கருதவில்லை. அது நிலையாகவே இருக்கிறது. ஒரு பரபரப்பான விசயத்தைப் பற்றி நான் எழுதினால் அதைப் படிக்க வருபவரின் எண்ணிக்கை என்ன, இலக்கியத்தனமான எழுத்துக்கான வாசகரக்ளின் எண்ணிக்கை என என நன்றாக அறிவேன். இதுவும் மாறவில்லை.

டிஜிட்டல் ஊடகங்களால் வாசிப்பு கூடியிருக்கிறது என்பதே நிஜம். ஆனால் இதுஇலக்கிய தத்துவ தீவிரவாசிப்பு அல்ல. அது கேளிக்கை வாசிப்பு. தகவல் அறிவதற்கான வாசிப்பு. இந்த டிஜிட்டல் ஊடகங்களால் அச்சு நாளிதழ்களின் இருப்பும் ஒரேயடியாக காலியானதாக தெரியவில்லை. இன்றும் ஒரு நாளைய செய்திகளை ஒருமித்து படிக்க, அறிவார்ந்த விவாதங்களை அறிய விரும்புவோர் நாளிதழ்களை வாங்கியே ஆக வேண்டும். அதுவே படிக்க எளிதாக வசதியாக உள்ளது. ஹிந்து நாளிதழை புரட்டி படிப்பதை விட அதன் இணையதளத்தில் ஒவ்வொரு செய்தியாக கிளிக்கி வாசிப்பது சிரமமாக இருக்கிறது. இந்த நாளிதழ்கள் கூடுதலாக டிஜிட்டல் தளங்களை உண்டுபண்ணி தம் வருமானத்தை பெருக்கி இருக்கின்றன. இன்று நாம் தகவலறிய, பொழுதுப்போக்கிற்காக கூடுதல் நேரத்தை, முன்பை விட பல மடங்கு அதிகமான நேரத்தை, செலவழிக்கிறோம். இது நம் நடைமுறை வாழ்க்கையையே இலக்கியத்தை விட அதிகமாக பாதிக்கிறது. உதாரணமாக, இரவு படுக்கையில் முகநூலில் உலவும் தம்பதியினர் செக்ஸ் வைத்துக் கொள்வது குறையும். பேசுவது அறவே நின்று போகும். குழந்தைகள் சதா யுடியூபிலும் செயலிகளிலும் பொழுதுபோக்கை நாடும் போது அவர்கள் விளையாடுவது குறையும், பிறருடன் பேசுவது குறையும். அவர்களின் உடல் / மன ஆரோக்கியமும் பேச்சுத்திறனும் பாதிக்கப்படும். இது இலக்கியவாதிகளுக்கான அபாயம் அல்ல உண்மையில்.

புத்தக விற்பனை குறைந்துள்ளதா? நீங்கள் தொண்னூறுகளுடன் ஒப்பிட்டால் கடந்த இரு பத்தாண்டுகளில் புத்தக விற்பனை பெருகி உள்ளது. ஆனால் லாபம் பெரிதாக இல்லை. அதற்கு நமது பொருளாதார வீக்கம், தாளின் விலை, புத்தகங்களை குடௌனில் வைத்திருக்கும் செலவு, போக்குரவத்து மற்றும் ஊழியர்களின் சம்பள செலவு ஆகியவை அதிகரித்து விட்டது தாம் காரணம். இதுவே எதிர்காலத்தில் டிஜிட்டல் வாசிப்பை லாபகரமாக்கும் என நினைக்கிறேன். (இனிமேல், பதிப்பகங்கள் தமக்கான செயலிகள் மூலம் புத்தகங்களை நேரடியாக டிஜிட்டலில் வெளியிடும்.) 

அதாவது வாசிப்பு பெரிதாக கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அது ஒரு பண்பாட்டு சிக்கல். இங்கு என்றைக்குமே பெரிதாக வாசிக்கும் சூழல் இருந்ததில்லை. ஆனால் கேரளாவில் நிலைமை எப்படி என நாம் விசாரித்து பார்க்கலாம். அங்கு புத்தக விறபனை பெரிதாக சரிந்துள்ளதா என கேட்கலாம். தாமஸ் ஜோசப் எனும் நோயினால் நலிவுற்ற மலையாள படைப்பாளியைப் பற்றி குறிப்பொன்றில் ஷாஜி இந்த படைப்பாளியின் நூல் ஒன்றை அவரது நண்பர்கள் வெளியிட்டு அதிலிருந்து வரும் பணத்தினால் அவருக்கு உதவப் போவதாக சொல்லுகிறார். இதை நீங்கள் தமிழில் பண்ண முடியாது. இங்கு ஒரு எழுத்தாளனின் புத்தகங்களை பிரசுரிப்பதே பெரிய சேவை. அதில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டு அவனுக்கு ஒரு வேளை சோறு மட்டுமே வாங்கித் தர முடியும். மருத்துவ சிகிச்சை எல்லாம் சாத்தியமில்லை. ஆக, கேரளாவின் வாசிப்பு சூழலும் ஒரேயடியாக மண்ணோட மண்ணாகவில்லை என தெரிகிறது. (நண்பர்கள் அமெரிக்காவிலும் பிரான்சிலும் நிலைமை என்ன எனவும் விசாரிக்கலாம்.)

காணொளிகளின் தாக்கம் பற்றியும் இறுதியாக பேச வேண்டும். ஒரு கருத்தை எழுதி பிரசுரிக்கும் அளவுக்கு அதை காணொளியாக பதிவு பண்ணி பதிவேற்றுவது சுலபமாக இல்லை. மேலும் எழுத்தில் உள்ள ஒரு anonymity காணொளியில் இல்லை. காணொளி இன்று ஒரு நல்ல பாதை. அதிக பேரை போய் சேர முடிகிற பாதை. ஆனால் அது எழுத்தை முழுக்க அழித்து விடும் என நான் நம்பவில்லை. .தா., நீங்கள் ஒரு கவிதையை பற்றி ஒரு காணொளி வெளியிட்டால் அதை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை வெகுவாக கூடி விடாது. ஆனால் பாஜகவின் சங்கியாக மாறி (மாரிதாஸ் போல) பரபரப்பான விசயங்களை பேசி காணொளி வெளியிட்டால் அது அதிக பேர்களை போய் சேரும். ஏனென்றால் அதுவே அதற்கு சரியாக ஊடகம். முன்பு முச்சந்தி கட்சி பிரசங்கிகள் எடுத்தும் கொண்டிருந்த இடத்தை (எழுத்தை விட) காணொளியே சரியாக அளிக்க முடியும் இல்லையா? அந்த இடம் இலக்கியத்துக்கான இடம் அல்ல. அந்த நேரமும் இலக்கியத்தின் நேரம் அல்ல.

இறுதிக்கும்இறுதியாகஒரு விசயத்தை ஏற்கத் தான் வேண்டும். நீண்ட தீவிர உரையாடல்களுக்கு எதிரான ஒரு சிதறல் மனநிலையை இன்று ஊடகங்கள் கட்டமைக்கின்றன. இது நமது பண்பாட்டை பலவிதங்களில் பாதிக்கும். ஒருவேளை பல லட்சம் பேர் இலக்கியமும் தத்துவமும் படிக்கிற ஒரு ஆரோக்கியமான நிலையை எதிர்காலத்தில் தமிழகம் அடையாமல் இந்த சூழல் தடுக்கலாம். உலகம் முழுக்க இதன் தாக்கம் இருக்கும். ஆனால் இதையும் நாம் அறுதியாக கூறி விட முடியாது. தத்துவஞானி ஸிஸெக் அமெரிக்காவில் ஒரு அரங்கில் உரையாற்றினால் அதைக் காண அங்கும் ஆயிரக்கணானோர் காசு கொடுத்து திரள்கிறார்கள். அது பற்றி செய்தி வரவும் செய்கிறது


பொழுதுபோக்கும் அறிவுச்செயல்பாடுகளும் இன்று தழைக்கின்றன. “வாழத்தான் யாருக்கும் நேரமில்லாமல் போகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.