முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: ஷெரினும் அப்பாவும்


பெண்களின் அபாரமான சாமர்த்தியம் என சில சொற்களில் அவர்கள் பல சங்கதிகளை உணர்த்தி விடும் பாங்கை சொல்வேன். ஒரு விசயத்தை ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் சொன்னால் அதன் பொருளே முழுக்க மாறி விடும் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள். வாழைப்பழத்தில் ஊசி போல நைசாக ஒரு சேதியை உணர்த்தி விட்டு கடந்து போய் விடுவார்கள். பார்க்க ரொம்ப தத்தியாக தெரியும் பெண்கள் கூட, சில நேரம், அவர்களே இந்த மொழித்திறனும் சமயோஜிதமும் அதிகம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஆமாம், நான் சொல்வது பிக்பாஸில் ஷெரினைப் பற்றியே தான்

அப்பெண் சிலநேரம் வெள்ளாந்தியாக தெரிவார்; மனத்தில் பட்டதை தயங்காமல் போட்டுடைப்பார். உணர்ச்சிவசப்படுவார், ஆனால் எப்போது ஒதுங்கிப் போக வேண்டும், எதை உதாசீனிக்க வேண்டும் என அறிந்திருப்பார். அடுத்தவர்கள் துன்பப்படும் போது அவர் சொல்லுகிற சிறிய அறிவுரைகள் கூர்மையாக இருக்கும். இந்த வாரம் குடும்ப உறுப்பினர்கள் தொகுதி தொகுதியாக, தனியாக கூட, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து, ரகசியமாகவும் வெளிப்படையாகவும், பிக்பாஸின் தரப்பில் இருந்து, அவர்கள் சொல்லிக் கொடுத்த வசனங்களை தயங்காமல் ஒப்பித்து விட்டு போகிறார்கள். எல்லாரும் ஒன்றே போலஅடுத்தவங்களைப் பற்றி கவலைப்படாதீங்க”, “நன்றாக அடித்தாடுங்க”, “யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க”, “குடும்பத்தை மறந்து உங்க பெயரை கெடுத்துக்காதீங்கஎன்பதான அறிவுரைகளை வழங்கினர். பிக்பாஸ் இவர்களுக்கு வசனங்களை சற்றே மாற்றி மாற்றி எனும் கொடுத்திருக்கலாம். இந்த ஆபாசங்களுக்கு இடையில் (கவினை அவரது நண்பர் வந்து அறைந்தது தான் இருப்பதிலேயே ஆக ஆபாசமானது) சில சுவாரஸ்யமான விசயங்களும் தாம் நடந்தன. அவற்றில் ஒன்று ஷெரின் தன்னைப் பார்க்க வந்திருந்த அம்மாவிடம் தன் அப்பாவைப் பற்றி பேசிய விதம்.

ஷெரின் உடைந்த குடும்பத்தில் இருந்து வருகிறார். அப்பா பிரிந்து போய் விட்டார். தாயிடம் வளர்ந்திருக்கிறார். ஆக அவர் தன் அம்மாவிடம் பேசும் போது சேரனைப் பார்க்கும் போது தனக்கு தன் அப்பாவின் நினைவு வந்ததாக சொன்னார். அம்மாவின் முகம் உடனே சற்றே வெளுத்து விடுகிறது. அவருக்கு அது பிடிக்கவில்லை எனத் தெரிந்தது. ஷெரினின் அம்மா அந்த வீட்டில் இருந்த சில நிமிடங்களில் அவர் நிலையற்ற பரபரப்பான மனம் கொண்டவர் என தெரிந்தது. ஆக, ஷெரினால் சுலபத்தில் தன் அப்பாவைப் பற்றி அம்மாவிடம் வழக்கமான சந்தர்பங்களில் பேசியிருக்க முடியாது. ஆனால் ஒரு பொதுவெளியில் இது சாத்தியமாகும். லட்சம் பேர் பார்க்கிற ஒரு இடத்தில் அவரது அம்மா நிதானம் பாராட்டியே ஆக வேண்டும். ஆகையால் அவர் அம்மாவிடம் வீடு எனும் வீடற்ற அந்த வெளியில் வைத்து அப்பாவைப் பற்றி பேசுகிறார். அதற்கு சேரனுடன் பழகியதை ஒரு முகாந்திரமாக்குகிறார். இது கேட்க நம்பும்படியாக ஆரம்பத்தில் தெரிந்தாலும் ஒரு சரியான காரணம் அல்ல. ஏனென்று சொல்கிறேன்.

அப்பாவைப் போன்ற ஒருவருடன் நீங்கள் பழக நேர்ந்தால், அவர் father figure (தந்தை படிமம்), ஆகும் பட்சத்தில் நீங்கள் உங்கள் அப்பாவை நினைவுகொள்ள மாட்டீர்கள். இன்மை தான் ஒருவரது நினைவை உக்கிரமாக்கி எங்க வைக்கும். அப்பாவுக்கு தற்காலிக மாற்றாக ஒருவர் தோன்றும் பட்சத்தில் பெரும்பாலானவர்கள் அப்பாவை மிஸ் பண்ண மாட்டார்கள். உளவியலாளர் லக்கான் குழந்தைகளின் மனவளர்ச்சியின் போக்கைப் பற்றி சொல்கையில் நான்கு, ஐந்து வயதுக்குப் பிறகு நாம் கணிசமான தந்தை படிமங்களை, நம்மையறியாமலே, நாடி அடைவதாக சொல்கிறார். நாம் மதிக்கும் மூத்தவர்கள், அண்ணன்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நாம் ரசிக்கும் கருத்தாளர்கள், முன்மாதிரிகள் என பலர். வாழ்நாள் முழுக்க நாம் தந்தை படிமங்களை நாடியபடியே இருக்கிறோம் - இதற்கு ஒரு எல்லை இல்லை. அப்பாவே இல்லாமல் போகும் போதும் கூட இந்த தேடல் அப்படியே தான் தொடர்கிறது. அப்பா மாதிரிகளை நாம் தேடுவது அப்பா இல்லாததால் அல்ல. அப்பாவின் இருப்பை உலகம் முழுக்க உணர்வதற்காகவே. இதனாலே, ஷெரினின் கூற்று நிஜமல்ல என தோன்றுகிறது

ஆனால் ஷெரினின் அம்மாவும் ஒன்றும் சளைத்தவர் அல்ல. அவர் நீ விரும்பி இருந்தால் உன் அப்பாவை இங்கே பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கலாமே என்கிறார். அதாவது, தன்வாழ்வில்”, தன்குடும்பத்துள்அல்ல, அந்த பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டும் என் முன்னாள் கணவரை நீ அழைத்துக் கொள்ளலாம் என்கிறார். மேலும் ஒரு வினாடியில் அவர் தான் பிரிந்து விட்ட முன்னாள் கணவரின் இடத்தை ஒரு பொதுவயமான, அதிகாரபூர்வ விசயமாக மாற்றி விடுகிறார் - அதில் தனக்கு எந்த பொறுப்பும் இல்லை, எந்த கருத்தும் இல்லை, அவர்உனக்கு அப்பா, ஆனால் எனக்கு யாருமில்லைஎன்பது போல. இந்த விசயங்களை அவர் சில மைக்ரோ நொடிகளில் உணர்த்தி விடுகிறார். உடனே ஷெரின் சுதாரித்து தனக்கு அப்படி அப்பாவை அழைக்க வேண்டிய தேவையில்லை என சொல்கிறார். அப்பாவை தான் மிஸ் பண்ணியதை மட்டுமே குறிப்பிட்டதாக சொல்கிறார். இப்படி சட்டென அம்மாவுடன் சமரசம் பண்ணியும் கொள்கிறார்.

இதில் இன்னொரு சங்கதியையும் கவனியுங்கள். இந்த சம்பாஷணையின் சில நொடிகளே வரும் பகுதியை உலகம் முழுக்க இருந்து மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என ஷெரின் அறிவார். அவரது அப்பா கூட கவனித்துக் கொண்டிருக்கலாம். ஷெரினுக்கு தன் அப்பா மீது சற்றே கோபமும் ஏமாற்றமும் இருந்தால், அதனாலே அவர் அவரிடம் நேரடியாக உரையாட, அழைப்பு விடுக்க தயங்கினால், இப்போது மிக சுலபமாக, வலுவாக, தன் அப்பாவுக்கு ஒரு இதயபூர்வ அழைப்பை, பிக்பாஸ் வழி, விடுத்து விட்டார்.

இது முடிந்து அவரது அம்மா வழக்கம் போல பிக்பாஸ் சொல்லிக் கொடுத்த அறிவுரை வசனத்தை ஒப்பிக்க தொடங்குகிறார். ஷெரின் அவரிடம்வாயை மூடுஎன சொல்லாமல் அப்படியே அணைத்துக் கொண்டு கொஞ்சி வாயை மூடி விடுகிறார். அப்படியே பொத்தி கொண்டு போய், சிரித்து, மனநிலையை மாற்றி, அம்மா தான் சொல்ல வந்ததை மறக்க செய்து, வெளியே அழைத்து போய் விடுகிறார்.


இதையே நீங்கள் முகினும் சேரனும் தம் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த போது நடந்து கொண்டதுடன் ஒப்பிட்டு பாருங்கள் - இந்த ஆண்கள் மகிழ்ச்சியாக சற்று நேரம் இருந்தார்கள், ஆனால் தாம் நினைப்பதை இப்படி நுணுக்கமாக, மறைமுகமாக உணர்த்த அவர்களுக்குத் தெரியவில்லை. பொதுமைப்படுத்தும் ஆபத்தை உணர்ந்தே இதை சொல்கிறேன் - பெரும்பாலான ஆண்களுக்கு மொழியை பயன்படுத்த தெரியாது. அவர்களின் மனம் முழுக்க காரியத்திலேயே இருக்கிறது என்பதால் எதை சொல்வது எப்படி செய்வது என புரியாமல், உணர்ச்சிகரமான மனநிலையில், விக்கித்து உட்கார்ந்து விடுகிறார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...