முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?


நேற்று Newsclick தளத்தில் வெளியான ஒரு முக்கியமான பேட்டியை பார்த்தேன்

 காஷ்மீரில் இன்று வாழும் மக்களில் 40% பேர் மனநோயால் (post-traumatic syndrome, மன அழுத்தம்) பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி உளவியலாளர் மற்றும் பேராசிரியரான ஷோபனா சோன்பர் பேசுகிறார். நான் இத்தனை நாள் கவனிக்காதிருந்த ஒரு விசயம் இது - காஷ்மீரின் தீவிரவாதம், பொருளாதாரம், தனிநாடு கோரிக்கை, சுதந்திரம், கருத்துரிமை, ராணுவ அத்துமீறல் பற்றி பேசுமளவுக்கு அங்குள்ள மக்களின் மனநலம் பற்றி நாம் யோசிப்பதில்லை.

 மனநோய் என்பது உடல் காயத்தை விட ஆபத்தானது, அதிக வலி ஏற்படுத்துவது, சமூகத்தையும் அடுத்த தலைமுறையையும் தீவிரமாக பாதிப்பது. அதுவும் ஒரு சமூகத்தின் சுமார் நேர்பாதி மக்கள் மன அழுத்தத்திலும் இன்னபிற மனப்பிரச்சனைகளிலும் இருக்கும் போது அவர்களின் நடவடிக்கை, சமூக எதிர்வினைகள் எப்படி இருக்கும் என பேட்டியாளர் ஷோபனாவிடம் கேட்கிறார். மக்கள் அப்படியே உறைந்து போயிருக்கிறார்கள் என அவர் பதிலளிக்கிறார். அவர்கள் தம்மைச் சுற்றி நிலவும் ஒடுக்குமுறை, அநியாயம், கொடுமைகள், அத்துமீறல், வன்முறை, கருத்துரிமை இன்மை ஆகியவற்றுக்கு எதிர்வினையாற்றுவதில்லை; அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள் போல, காதிருந்தும் செவிடர்கள் போல இருக்கிறார்கள்.

 நாம் காணும் தெருவில் நின்று கல்லெறியும் போராளிகள் அந்த சமூகத்து மக்களை முழுக்க பிரதிநுத்துவப்படுத்துவதில்லை; அவர்கள் ஒரு சிறுபகுதி மட்டுமே. பெரும்பகுதி மக்கள் நுண்னுணர்வு மங்கிப் போய் காய்கறிகளாக மாறிப் போயிருக்கிறார்கள். இதற்கான பொறுப்பு நமது ராணுவத்தையும் பொறுப்பற்ற அரசுகளையுமே சேரும். காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் இந்த உளச்சிதைவானது பல தலைமுறைகளாய் நீடிப்பது; போர்ச்சூழல்களில் இருக்கும் மக்கள், அங்கிருந்து தப்பி வாழும் அகதிகளிடம் நாம் காணும் வன்முறைத் தாக்கம், உளப்பிரச்சனைகளை நாம் இந்த மக்களிடமும் காண்கிறோம். அதாவது காஷ்மீர் என்பது இந்தியாவின் ஈழம்; காஷ்மீர் என்பது இந்தியாவின் அப்கானிஸ்தான்; காஷ்மீர் என்பது இந்தியாவின் பாலதீனம். நாம் இந்த மக்களை போர் அகதிகளாகக் காணாமல் சாதாரண குடிமக்களாக (அதுவும் தேசவிரோதிகளாக) காண்பது அபத்தம் மற்றும் அநியாயம்

திரும்பத் திரும்ப இந்த நிலைக்கு காரணம் இவர்களே தானே என பிற மாநில மக்கள், அதுவும் இந்துத்துவ ஆதரவாளர்களும் மோடியின் ரசிகர்களும், கூறுகிறார்களே, இது ஏன் என பேட்டியாளர் வினவுகிறார். இதற்கு ஷோபனா அளிக்கும் பதில் முக்கியமானது.
காஷ்மீரில் நடப்பது ஒரு பெரும் அநீதி என்பது பட்டவர்த்தமானது; ஆனால் பட்டவர்த்தமான அநீதியை எதிர்கொள்ளும் மன உறுதி பெரும்பாலான எளிய மக்களுக்கு இல்லை. அரசும் ஒரு பக்கம் காஷ்மீர் என்பதே இந்தியாவுக்குள் செயல்படும் ஒரு எதிரி தேசம் எனும் சித்திரத்தை கட்டி எழுப்பி விட்டது. நம் மக்கள் இப்போது இருகூறாக பிரிகிறார்கள் - ஒரு பக்கம் அவர்களின் மனம் கசிகிறது; மறுபக்கம் அவர்கள் இந்த அரசு மற்றும் தேசியவாத உணர்வுடன் ஒன்றிப் போகிறார்கள். எந்த பாசிச அரசும் மக்களும் சர்வாதிகார தலைமையும் தம்மை ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்திருப்பதான ஒரு நிலைமையை ஏற்படுத்தும். அதாவது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவர் ஒரு தலைவர், நாம் மக்கள்; ஆனால் இன்று மோடியின் கீழ் அப்படி அல்ல - மோடியே மக்கள்; மக்களே மோடி. ஏனப்படி? மோடி தன்னை ஒரு தனிமனிதராக அல்ல, இந்த தேசத்தின் ஒரு உருவகமாக கட்டமைத்திருக்கிறார் - இந்தியால், இந்து மதத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசிய அடையாளத்தின் ஒரே உருவகம் அவர்; அந்த அடையாளத்துக்குள் வர விரும்பும் ஒவ்வொருவரும் தம்மை மோடியாகவே உணர முடியும்.

மேலும் மோடி இன்று இந்த தேசம் முழுமையையும் தன் அதிரடி முடிவுகளால் பொருளாதார குழப்பங்களில் ஆழ்த்தி, தன் தேசியவாத கதையாடல்களால் சிறைவைத்திருக்கிறார் - ராணுவப்படைகள் காஷ்மீரை ஆக்கிரமித்தால் காவிப்படைகள் இந்தியா முழுமையையும் ஆக்கிரமிக்கின்றன. இப்படி சிறைவைக்கப்பட்ட மக்கள் சதா ஒரு பதற்றத்தில் இருப்பார்கள்; அச்சமே அவர்களே வழிநடத்தும் - வெளியில் இருந்து யாரோ தாக்கப் போகிறார்கள் எனும் அச்சம்; எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை எனும் அச்சம். இத்தகைய மக்கள் தம் பலவீனத்தை போக்க ஒரு பலமுள்ள தலைமையை, ஒரு சர்வாதிகாரியை, நாடுவார்கள் (இதை Stockholm syndrome என்பார்கள்). இப்படித் தான் மோடி ஒரு பீதியை கிளப்பி அதன் அடிப்படையில் தனக்கான ஆதரவு அலையை உருவாக்கி இருக்கிறார்.

இப்படி ஏற்கனவே கடும் அழுத்தத்தில் இருக்கும், பதற்றமான மக்கள் தொகை தனக்கு ஒரு உடனடி எதிரியை தேடும். இப்போதைக்கு அந்த எதிரி இஸ்லாமியர். காஷ்மீர் என்பது தேசவிரோத கும்பல் என இந்த அரசும் ஊடகங்களும் ஒரு சித்திரத்தை உருவாக்கிய நிலையில் பொது மக்களால் ஒரேயடியாய் காஷ்மீரை சாடவும் முடியாது - அங்கு நிகழ்வது அநீதி என மக்கள் உணர்கிறார்கள்; ஆனால் ஆதரிக்கவும் முடியாது; அதற்கான அக உறுதியும் துணிவும் மக்களுக்கு இல்லை; அது தம்மையே சாடுவதாக மாறி விடும் (மோடியே மக்கள், மக்களே மோடி) - மேலும் இந்த பொதுஜனங்களே கிட்டத்தட்ட (சமூக பொருளாதார) கைதிகள் தானே. கைதிகள் என்றைக்காவது பக்கத்து சிறை கைதிகள் பற்றி கவலைப்படுவார்கள் சொல்லுங்கள்?

ஆக, இந்தியர்கள் பூனையை போல கண்ணை மூடி தூங்க முயல்கிறார்கள்; அப்படி செய்தால் காஷ்மீர் பிரச்சனையும் அங்குள்ள அறவீழ்ச்சியும் மனித உரிமை மீறல்களும் மறைந்து விடும் என நினைக்கிறார்கள். பேஸ்புக், டி.வி, சினிமா, போதை, கொண்டாட்டம் என மூழ்கி கசப்பான விசயங்களை தவிர்க்க நினைக்கிறார்கள். ஏற்கனவே மோடியை ஆதரிப்பதாய் முடிவெடுத்துள்ளவர்களோ கண்ணை மூட முடியாமல் கண்மூடித்தனமாய் காஷ்மீரில் நடப்பது முழுக்க நியாயம் தான் என வாதிட முயல்கிறார்கள் இரண்டுமே தற்காப்பு நடவடிக்கைகளே என ஷோபனா சொல்கிறார்.

ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நோக்கிநீங்களாகவே உங்களுக்கு உண்டு பண்ணினது தானே இது?” என நாம் ஏன் கேட்பதில்லை என நான் அப்போது யோசித்தேன். ஏன்?
ஏனென்றால் ஈழப்போர் அல்லது வேறு எந்த போரையும் நாம் இரு தரப்பினருக்கு இடையிலான மோதல், அதில் பொதுமக்கள் இரையாகிறார்கள் எனப் பார்த்தோம். ஆகையால் உலகம் முழுக்க இருந்த ஆதரவுக்கரங்கள் இம்மக்களுக்கு நீண்டன. ஆனால் காஷ்மீரில் நடப்பது சகஜமாக்கப்பட்ட ஒரு அன்றாட யுத்தம் - சதா உங்களை பீதியில், கண்காணிப்பில் வைத்து கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும் யுத்தம்; அங்கு ராணுவ வன்முறை என்பது நேரடியாக அல்ல மறைமுகமாகவே நடக்கிறது; மறைமுக தாக்குதல் என்பது கூடுதலான பாதிப்பை, காயங்களை ஏற்படுத்துவது. ஒரு போர்க்களத்திலோ, நெருக்கடி சமயத்தில் ஒரு மாநிலத்திலோ ராணுவத்தை கொண்டு வந்து குவிக்கலாம். ஆனால் பல பத்தாண்டுகளாக காஷ்மீரின் தெருக்களில் ராணுவம் பொதுமக்களை விட அதிகமாய் தோன்றுகிறார்கள்; அவர்களே அந்த மண்ணை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கெங்கும் திரும்பினும் ராணுவம், துப்பாக்கி, தடுப்பரண் எனும் போது அங்குள்ள மக்களுக்கு தாம் சதா போர்முனையில் கைதிகளாய் வைக்கப்பட்டுள்ள உணர்வு ஏற்படும். மனித உடல் என்பது தனக்கான அந்தரங்க வெளியை, கண்காணிக்கப்படா சுதந்திரத்தை கோருவது. இதனாலே நீண்ட நேரம் போக்குவரத்து நெருக்கடியில் நின்றால் நமக்கு கடும் களைப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றன (டெஸ்மண்ட் மோரிஸ் தனது Human Zoo எனும் நூலில் இதைப் பற்றி விளக்குகிறார்). 

காஷ்மீர் மக்கள் 24 மணிநேரமும் வெளிவர முடியாத ஒரு போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கூடுதலாக ஒரு மாதத்துக்கு மேலாக அவர்கள் ஒட்டுமொத்தமாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் - தொலைதொடர்பு, இணையம் தடை செய்யப்பட்ட நிலையில் அடிப்படையான மருத்துவ வசதிகள் கூட இன்றி அவர்கள் கடும் ஒடுக்குமுறையின் கீழ் இருக்கிறார்கள். 40% மேற்பட்ட மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்குமளவுக்கு அங்கு உளவியலாளர்கள் உண்டா? மருத்துவ அமைப்புகள் உண்டா? இல்லை - பதிலுக்கு மோடி அந்த மொத்த மாநிலத்தையும் ஒரு மனநல விடுதியாக மாற்றி வைத்திருக்கிறார்

இப்போது காஷ்மீரியருக்கும் பிற இந்தியர்களுக்கும் முன்னுள்ள ஒரே தீர்வு இதை ஒரு (கலாச்சார) மனநலப் பிரச்சனையாக ஏற்பது, இந்த அரசு மொத்த தேசத்தையும் ஒரு மனநல மருத்துவமனையாக மாற்றி வருவதை ஒப்புக் கொள்வது. அப்போது மட்டுமே நாம் தப்பிக்க முடியும்!


காணொளியைப் பார்க்க: https://youtu.be/rzJo-3_8Seg

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...