முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் பள்ளிகள் எனும் மால்கள் (1)


சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நான் ஓசூர் அருகே என் நண்பன் பணிபுரியும் ஒரு தனியார் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அன்றே அவர்கள் நவீன வசதிகளுடன் பார்க்க வியப்பு தரும் வகையில் வகுப்பறைகளை வடிவமைத்திருந்தார்கள். (நிச்சயமாய்) வியந்தேன். ஏனென்றால் அன்று நான் வேலை செய்த கல்லூரிகளில் கூட அத்தகைய வசதிகள் இல்லை. அதன் பிறகு திருச்சியில் ஒரு பிரசித்தமான தனியார் பள்ளிக்கு சில முறைகள் சென்று நவீன கவிதை குறித்து பட்டறைகள் நடத்தினேன். அந்த பள்ளியின் கட்டமைப்பு, அது தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அறிவுத்துறைகள், கலைத்துறைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதை பாராட்டினேன். என் குழந்தைப் பருவத்தில் என் பள்ளியில் நான் ஒரு எழுத்தாளனையோ கலைஞனையோ கண்டதில்லை; நான் நவீன இலக்கியத்தை வெளியே தேடி அடைய வேண்டியிருந்தது. எனக்கு 12 வயதிருக்கும் போது மனுஷ்யபுத்திரன் என் வகுப்புக்கு வந்து நவீன கவிதையை பற்றி பேசினாலோ ஒரு நாட்டுப்புற கலைஞர் கூத்து வடிவம் பற்றி பயிற்சி வழங்கினாலோ அது ஒரு அபாரமான திருப்புமுனையாக எனக்கு இருந்திருக்கும் தானே

ஆனால் நான் அன்றே மற்றொரு சிக்கலையும் இத்தகைய பள்ளிகளில் கவனித்தேன் - அவர்கள் அறிவு, கலை ஆகியவற்றை ஒரு வியாபார பண்டமாக, வாழ்க்கை வெளியே இருக்கும் ஒரு வாங்கத்தக்க உறையிலிட்டு முத்திரை பதித்த பொருளாக (சாக்லேட், லேஸ் சிப்ஸ் போல) காண்கிறார்கள். அவர்கள் தம் வியாபார சூழ்ச்சிக்கு ஆளுமைகளை ஒரு விளம்பர கருவிகளாக பயன்படுத்துகிறார்கள் என்பது. இது எனக்குள் ஆழமான கசப்பை ஏற்படுத்தியது.
 மற்றொரு பக்கம் இந்த மாணவர்களை படிப்பின் பெயரில் சுயமாய் யோசிக்கவோ செயல்படவோ விடாமல் கிட்டத்தட்ட சிறைவைத்து அன்றாடம் தேர்வு எழுத வைத்து படிப்பை ஒரு வதை அனுபவமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அதாவது ஒருநாள் ஒரு அறிவுஜீவி வந்து வண்ணதாசனின் கதையைப் பற்றியோ ஒரு அறிஞர் வந்து சாக்ரடீஸ் பற்றியோ பேசுவார்கள்; இதன் அடுத்த கட்டம் இவர்கள் சொந்தமாய் சிந்திக்க, விவாதிக்க, படைக்க சந்தர்பங்களை உருவாக்கி அதன் வழி அவர்களின் அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இலக்கியமும் தத்துவமும் முன்னிறுத்துவது இத்தகைய சுதந்திரமான, சுய-வளர்ச்சி வாழ்க்கை முறையையே; ஆனால் இந்த பள்ளிகளிலோ நீங்கள் எந்த தத்துவத்தை அறிமுகப்படுத்துகிறீர்களோ அதற்கு நேர்மாறான வாழ்க்கைமுறையை குழந்தைகள் மீது திணிக்கிறீர்கள். நாளும் பொழுதும் அவர்கள் மனனம் செய்து, தேர்வை மட்டுமே இலக்காக வைத்து பயிற்சிகள் எடுத்து சம்பாதிக்கும் கருவிகளாக உருவாக்கப் படுகிறார்கள்; அவர்களின் அறிவும் படைப்பாளுமையும் இவ்வாறு மழுங்கடிக்கப்படுகின்றன. இந்த மேளாவின் நடுவே சித்தார் இசைக்கவும் ஆலாபனை பண்ணவும் பெயர்பெற்ற கலைஞர்களையும் படைப்பாளுமைகளையும் இந்த பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன என அப்போது நினைத்தேன்.

சமீபத்தில் நான் மற்றொரு பள்ளிக்கு சென்றேன் - இது மிகச்சிறிய தனியார் பள்ளி. ICSE பாடத்திட்டம். முன்பு நான் பார்த்தது போன்றே துலங்கும் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள். இயந்திர ஒழுங்குடன் மாணவர்கள் பாடங்களை, கலைகளை (தபலா, கீபோர்ட் என) பழகுகிறார்கள்; விளையாடுகிறார்கள்; கராத்தே பயில்கிறார்கள். இனிமையாக பேசும், மனதை துள்ள வைக்கும் இயல்பு போன்ற பட்டாம்பூச்சிகள் இந்த குழந்தைகள். இவர்களுடன் சில மணிநேரங்கள் இருந்தாலே சில மாதங்களுக்கான புத்தணர்ச்சியை பெறுவீர்கள். பள்ளி முடிந்ததும் அவர்கள் தம் ஆசிரியர்களுக்குபை மாஸ்டர்என தவறாமல் சொல்லி விடைபெறுகிறார்கள். பிள்ளைகள் தாறுமாறாய் ஓடுவதோ கத்தி கூப்பாடு இடுவதோ இல்லை - இந்த அம்சத்தை நான் ஆரம்பத்தில் ரசித்தாலும் இது சரியில்லையே என போகப்போக பிசிறு தட்டியது
பின்னர் இந்த குழந்தைகளில் சிலரிடம் பேசிய போது ஒன்றை கவனித்தேன் - நான் என் கிராமத்தில், சென்னையின் எளிய குடியிருப்புகளில், நான் வேலை செய்த அடித்தட்டு மக்கள் அதிகம் வரும் கல்லூரிகளில் கண்ட ஒரு தனித்துவம், சுயமான பார்வை, தன்னிச்சையாய் தன்னை வெளிப்படுத்தும் விளையாட்டுத்தனம் இவர்களிடம் இல்லை. இவர்கள் வெளியில் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஒரு பிரக்ஞையை சின்ன வயதிலேயே (ஐந்து வயதில் இருந்தே) பெற்று விடுகிறார்கள். இவர்கள் ஓடினால் ஒரு வரிசையிலேசீராகஓடுவார்கள்; இவர்கள் சிரித்தாலும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையிலே சிரிப்பார்கள். இவர்களிடம் ஒரு வெளிநபர் கேள்வி கேட்டால் சொல்லிக்கொடுத்தது போல கச்சிதமாக பதிலளிக்கிறார்கள். இவர்களுக்குள்ளும் ஒரு குறும்புத்தனம், தன் போக்கில் மனதைப் பாய விடுவது, வெளியுலகின் போக்குகளுக்கு தன்னை ஈடுகொடுக்கும் விருப்பு, ஒவ்வொரு நொடியும் தன்னை புதிதாக உருவாக்கிக் கொள்ளும் தன்மை இருக்கலாம். ஆனால் அப்படியே எப்போதும் இருக்க முடியாதபடி அவர்கள் 24 மணிநேரமும் ஒரு கண்காணிப்பு சிறையில் வைக்கப்படுகிறார்கள் (இவர்களின்ஸ்மார்ட்வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்திருக்கிறார்கள்). யோசிக்கவே முடியாதபடி ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி இவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் தரப்படுகிறது. ஒரே மைதானத்தில் சில நூறு குழந்தைகளை நிறுத்தி வைத்து ஒரே நேரத்தில் கராத்தேவும் ஆரோக்கியத்துக்கான சில பயிற்சிகளையும் வழங்குகிறார்கள். அது என்னவென்றே தெரியாமல் அவர்கள் கைகால்களை நீட்டி கத்துகிறார்கள்; அந்த நேரங்களில அவர்கள் தன்னிச்சையாக உலகை கவனிக்கவோ, சக குழந்தைகளிடம் சேட்டை பண்ண, சண்டை போட, பேசி பழகி புது சொற்கள், கற்பனையான உலகங்களை உருவாக்க முடியாமல் போகிறது. ஒருநாள் முடிந்ததும் இந்த குழந்தைகள் அடைகிற களைப்பானது இவர்களின் பெற்றோர்கள் தம் வேலையிடங்களில் அடைவதை விட அதிகமானது.
இதன் முடிவில் இவர்கள் வெளிவாழ்க்கைக்கான சில அடிப்படையான திறன்களைப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சுயமாய் சிந்திக்கும் தனித்துவமான ஆளுமைகளாக மலர்வது தடைபடும். இந்த மாதிரி பள்ளிகளில் படித்திருந்தால் நான் இந்த மாதிரி இப்போது ஆகியிருக்க மாட்டேன். மௌனியும் அசோகமித்திரனும் சு.ராவும் ஜெயமோகனின் சாருவும் மனுஷ்யபுத்திரனும், .மார்க்ஸும், ராஜ் கௌதனமனும், ராஜன்குறையும், ஸ்டாலின் ராஜாங்கமும் சற்றுக்கு பின்னுக்கு சென்றால் பெரியாரும் அயோத்திராஸ் பண்டிதரும் பாரதியும் முழுக்க வேறுமாதிரிஉருவாகிஇருப்பார்கள். இந்த தனியார் பள்ளிகளைப் பார்க்கையில் எனக்கு எதிர்கால சமூகம் குறித்த ஒரு கவலை வயிற்றில் பந்தாக திரள்கிறது; ஒரு பயம் என்னை முழுக்க ஆக்கிரமிக்கிறது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...