முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீட்டர் ஹாண்ட்கெ - 2019 நோபல் பரிசு


இந்த ஆண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசை இவர் வெல்லும் வரை இவரைப் பற்றி தெரியாது; என் நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன், அவர்களும் கைவிரித்தார்கள். படித்து தெரிந்து கொண்டேன் - ஆஸ்திரிய எழுத்தாளர். சுமார் ஐம்பது புத்தக்ங்களை எழுதி இருக்கிறார். சரி பாதி போல ஆங்கிலத்தில் மொழியாக்கப்பட்டுள்ளன.


ஹாண்ட்கெ அவர் நாட்டில் இவர் பெரிய பிஸ்தா எழுத்தாளர். ஜெயமோகனைப் போல சதா சர்ச்சைகள் நடுவே வாழ்பவர். குறிப்பாக தனது நாட்டின் வலதுசாரி தீவிர தேசியவாத அரசியலுக்கு விழுந்து விழுந்து ஆதரவு காட்டுபவர்; அதன் பொருட்டு பலரும் ஏற்காத அரசியல் கருத்துக்களை எழுதுபவர்
1991இல் யுகோஸ்லோவியா உடைந்த நிலையில் போஸ்னிய மற்றும் ஹெர்ஸ்கோவின சோசியலிஸ்ட் ரிபப்ளிக் கட்சி தனிநாட்டுக்கான கோரிக்கையை வைத்தது. இதை வலதுசாரி செர்பிய பாரம்பரிய குழுக்கள் எதிர்த்தன. இதை ஒட்டி 1992-95 வரை போஸ்னிய யுத்தம் நடந்தது. செர்பிய படைவீரர்கள் செர்பியாவிலும் ஹெர்ஸ்கோவினாவிலும் குவிந்து ஆக்கிரமித்துக் கொண்டு அங்குள்ள எதிர்ப்பாளர்களை, குறிப்பாக இஸ்லாமியர்களை, வேட்டையாடத் தொடங்கினர். இந்த போரில், இரு தரப்பில் இருந்தும், அப்பாவி மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பலர் கடுமையாய் காயம்பட்டனர்; 12,000-20,000 பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானார்கள். செர்பிய படையினரால் 8000 இஸ்லாமிய ஆண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்; 25,000-30000 இஸ்லாமியர் இடம்பெயர்ந்து தப்பித்து சென்றனர்.
சர்வதேச அமைப்புகள் பல இந்த படுகொலைகளை இன அழித்தொழிப்பு என பரவலாக விசாரணையும் ஆய்வும் நடத்தி உறுதிப்படுத்தின; செர்பிய தேசியவாத படைகளை கண்டித்தனர்.
இந்த போர் குறித்த ஹாண்ட்கெயின் புரிதல் மாறுபட்டது - ‘இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிகமும் கொல்லப்பட்டதும் பாதிக்கப்பட்டதும் இந்துக்களே, தற்போதைய சூழலிலும் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், இந்து மதம் அவமதிக்கப்படுகிறதுஎன இங்கு வலதுசாரிகள் கோருகிறார்களே அவ்வாறு ஆஸ்திரியாவில் நம்புகிற ஒரு தரப்பை ஆதரிப்பவர் ஹாண்ட்கெ. அவர் இந்த போஸ்னிய யுத்த படுகொலைகளை சர்வதேச சமூகம் ஒருதலைபட்சமாக பார்க்கிறது, கண்மூடித்தனமாய் இஸ்லாமியர்களை ஆதரிக்கிறது என கூறுகிறார். குறிப்பாக இஸ்லாமியர்கள் தம்மைத் தாமே கொன்று கொண்டு அந்த பழியை செர்பிய படைவீரரக்ள் மீது போட்டார்கள் என அவர் 1996இல் Justice for Serbia எனும் ஒரு நீண்ட பத்திரிகை நடுப்பக்க கட்டுரையில் எழுத அது கடும் கண்டனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளானது. அவரது நண்பர்களே ஒரு பக்கம் அவரைத் தாக்க, அதற்கு ஹாண்ட்கெ பதிலடி கொடுக்க, ஹாண்ட்கெவுக்கு சிலர் ஆதரவு கொடுக்க பிரச்சனை ஒரு பூதாகர இலக்கிய-அரசியல் சூறாவளியாக மாறியது. சீண்டினால் புலி ஆகும் பூனை ஹாண்ட்கெ. ஆகையால் அவர் இந்த நீண்ட கட்டுரையை மேலும் வலுப்படுத்தி 136 பக்க புத்தகமாக உடனடியாக வெளியிட்டார். ஊர் ஊராகப் போய் தன் கட்டுரையை பொது மக்களுக்கு வாசித்து காண்பித்தார். இதன் பிறகு அவர் தொடர்ந்து இனப்படுகொலை விவாதங்களின் போது வலதுசாரி செர்பிய கட்சியினரை ஆதரிப்பதை வழக்கமாக்கினார்.
 உலகமே ஏற்றுக் கொண்ட, தெளிவாக ஆவணப்படுத்தப்பட்ட இனப்படுகொலைகளை கூட ஆதரிக்கிறாரே, இவர் ஒரு நுட்பமான எழுத்தாளராக ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அறவுணர்வு அற்ற கண்மூடித்தனமான அரசியல் பார்வையாளராக இருக்கிறார் என சல்மான் ரஷ்டி, ஸிஸெக் உட்பட பலர் கவலை தெரிவித்து கண்டித்திருக்கிறார்கள்இதற்கு முன்பும் ஏகப்பட்ட (காப்கா விருது) விருதுகள் அங்கீகாரங்களை பெற்றிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் காட்டமாக எதிர்ப்பு வரும். இம்முறை அவருக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசுக்கும் உடனடியாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

 ஆனால் ஹாண்ட்கெயின் இலக்கிய தகுதியை, ஆகிருதியை யாரும் மறுப்பதல்லை
(இவர் தனது வலதுசாரி தேசியவாத நோக்கில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகை கடுமையாய் சாடுபவர். இருந்தும் எப்படி நோபலை அள்ளிக் கொடுத்தார்கள், அதன் அரசியல் உள்குத்து என்ன என்பது விளங்கவில்லை. நண்பர்கள் அறிந்து தெளிவுபடுத்தினால் மகிழ்வேன்.)

ஹாண்ட்கெ பல படங்களுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். இவை கான்ஸ் போன்ற பெரும் விருதுகள் பெற்ற கலைப்படங்கள் (நம்மூர் போல எந்திரனுக்கு எல்லாம் எழுதுபவர் அல்ல). இவரது ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதிய பத்திரிகை ஒன்று "ஒரு ஆணும் பெண்ணும் பிரிகிறார்கள். அந்த ஆணும் பெண்ணும் தமக்கான பாதைகளில் பொறுமையாக போகிறார்கள். அதன் பிறகு மெதுவாக பல விசயங்கள் நகர்கின்றன. பார்வையாளர்கள் தூங்கப் போய் விடுகிறார்கள்." என கலாய்த்தது. அந்த மாதிரி பரபரப்பான அரசியல் சர்ச்சைகளுக்கு நேர் எதிரான படங்களை எழுதுபவர் போல
சரி இவரது நாவல் ஒன்றை தரவிறக்கி படிப்போமே என The Goalie's Anxiety at the Penalty Kick படிக்கத் தொடங்கினேன்.
நாவல் ஆல்பர்ட் காமுவின் 'அந்நியன்' ஸ்டைலில் உள்ளது - வாழ்க்கையின் எந்திரத்தனம், அர்த்தமின்மை என மெதுவாக ஆனால் சுவாரஸ்யமாக போகிறது. The Taxi Driver படத்தையும் அமெரிக்க மினிமலிச எழுத்தையும் நினைவுபடுத்துகிறது

சிக்கலற்ற எளிமையான சொற்றொடர்கள். இவரை மொழிபெயர்ப்பது சுலபம் எனத் தோன்றியது. முடிந்தால் முதல் அத்தியாயத்தை மட்டும் தமிழாக்கி என் பிளாகில் இடுகிறேன்.


பின்குறிப்பு: நான் ஓரிடத்தில் ஜெயமோகனை குறிப்பிட்டதை வைத்து நான் அவரை இனப்படுகொலையை ஆதரிப்பவர் என சொல்வதாய் யாரும் எண்ண வேண்டாம். இஸ்லாமியர் மீது வலதுசாரிகளால் நடத்தப்பட்ட படுகொலைகளை அவர் நேரடியாக என்றும் ஆதரித்ததில்லை. ஜெயமோகனை நீங்கள் தெளிவான ஒரு இந்து தேசியவாதி என்றும் கூற முடியாது. ஆனால் தமிழ் தேசியவாதத்துக்குப் பதிலாக ஒருமித்த இந்தியா எனும் அடையாளத்தை ஏற்பவர், இலக்கிய தத்துவ பண்பாட்டுத் தளங்களில் செயல்படும் ஒரு புது செவ்வியல்வாதி (neoclassicist) என்றே அவரைப் பார்க்கிறேன். ராஜன் குறை தன் கட்டுரை ஒன்றில் சொல்வதைப் போல ஜெயமோகனிடம் நவதாராளாவாத தேசிய அரசியல் சார்பும் இருக்கலாம். அவர் மிக சிக்கலானவர் என்பதால் எந்த அடைப்புக்குறிக்குள்ளும் அவரை வைத்துப் பார்க்காமல் இருப்பது இலக்கிய வாசிப்புக்கு நல்லது என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...