முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: கவின் வாங்கிய அறையும் நவ-தாராளவாத முதலீட்டிய உத்தியும் (2)


பிக்பாஸில் மக்களுக்கு கிடைக்கும் கிளர்ச்சி என்பது எந்த ஒரு பாசிச சமூகத்திலும் எளிய மக்கள் தாம் அனுபவிக்கும் வதையில், அனுதினமும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி துடிப்பதில் கிடைக்கும் ஒருவித விசித்திரமான அனுபூதி தான். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் இந்தியா முழுக்க மக்கள் அடைந்த பெரும் துன்பத்தை ஓரளவுக்கு இதனோடு ஒப்பிடலாம். இந்த துன்புறுத்தலை, தேசியவாத எழுச்சியின் உத்வேகத்தில், மக்கள் ஒருவித அதிகார கிளுகிளுப்பாக உணர்ந்தனர். ஆகையால் அடுத்து வந்த தேர்தலில் பாஜகவுக்கு பெருமளவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர். இதையடுத்து மோடி மேலும் பல நெருக்கடிகளை மக்களுக்கு கொடுக்க தொடங்கினார். நெருக்கடி அதிகமாக ஆக மக்களுக்கு சர்வாதிகார அரசின் மீதான மதிப்பும் அதிகமானது.

 மக்கள் தமக்கு அரசதிகாரம் தரும் துன்பத்தை மற்றமை எனும் வடிகால் வழி வெளியே அனுப்பினர் - அதற்கு பாகிஸ்தான், தீவிரவாதம், காஷ்மீர், இஸ்லாமியர், தேசதுரோகிகள் என பல்வேறு கதையாடல்கள் உதவின; தேசியவாத வெறி இந்த கதையாடல்களின் அஸ்திவாரம் ஆகியது. இப்போது மக்கள் அரசதிகாரத்தை துன்பமாக உணர்ந்து அத்துன்பத்துக்கு மற்றமையை காரணமாக்கி, அதிகார செயல்பாட்டை தம் உடலில் உணரும் இன்பமாக மட்டும் கண்டு, அதை பிரதமர் எனும் பிம்பத்துடன் இணைத்தார்கள். இதன் வழி அவர்கள் உச்சபட்ச அதிகாரத்துடன் தம்மை ஒன்றாக உணர்ந்து கொண்டார்கள்
அதாவது மக்கள் இரண்டாக பிரிந்தார்கள் - தம் உடல் என்பது இந்த ஒட்டுமொத்த தேசம் என்றும் (தேசத்தை எதிர்ப்போர் மீது அப்போது அவர்களுக்கு கோபம் எழுகிறது), தாம் பெரும் அதிகாரம் படைத்த ஒரு தலைவனின் சாட்டைக்குக் கீழ் துடிக்கும் ஒரு எளிய இருப்பு, அந்த சாட்டை நுனியே அதிகார உச்சம், ஒவ்வொரு அடியும் தம்மை அழிக்கும் போது தாம் பெருவலிமை, கிளர்ச்சி அடைவதாய் உள்ளுக்குள் உணர்ந்தனர் (தலைவனை எதிர்ப்பவர் தனிமனிதனாய் தம்மையே. தம் உடலையே எதிர்ப்பதாய் கருதினர்). அரச சாடிசத்துக்கும் குடிமக்களுக்குமான உறவு இப்படி மிக மிக சிக்கலானது.

பாஜக அரசுக்கு பிக்பாஸுக்குமான ஒரு அடிப்படையான ஒற்றுமை இரண்டுமே முதலாளித்துவ அமைப்புகளின் முகங்கள், கரங்கள், கால்கள் என்பது. மற்றொன்று இரண்டுமே மக்களை இரண்டாக உடைத்து தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்பது.
 முதலீட்டியம் தனக்கு கீழ் வாடிக்கையாளராகவும் பணியாளராகவும் இருப்பவர்களை அவர்களின் உடல் மீது அதிகாரத்தை செலுத்தி தன்னை எதிர்த்து யோசிக்கமால் இருக்க செய்கிறது. இந்த அதிகாரமே ஒருவித வதை. வதையின் துன்பம் அதிகமாக ஆக நாம் அதிகாரம் மிக்கவர்களாக நம்மை உணர்வோம். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் வேலை பறிபோகும் அச்சம் பணியாளர்கள் மத்தியில் பரவுகிறது. அவர்கள் பரஸ்பரம் இதைப் பற்றியே பேசி நெருக்கடியை தம்மீதே குவிப்பார்கள். நிர்வாகம் இதை தடுக்காது. இந்த பீதியும் பதற்றமும் வேலை மீதான அக்கறையை ஊக்குவிக்க உதவும் என நிர்வாகம் நம்பும். விசித்திரமாக இந்த வதையுணர்வு ஊழியர்களை ஒருவித அதிகாரத்தை உணர செய்யும். வேலை தனக்கல்ல அடுத்தவர்களுக்கே பறிபோகும், தாம் பத்திரமாக இருப்பதாகவே இருக்கிறோம் என அவர்கள் கற்பனை பண்ணுவார்கள். இப்படி நினைக்கும் வேளையிலே அவர்கள் அதற்கு முரணாகவும் (ஐயோ! ஒருவேளை என் வேலை தான் பறிபோகுமோ?) நினைப்பார்கள். இந்த முரண் எண்ணங்கள் அவர்களை வெறித்தனமாக தம்மை மறந்து வேலை செய்ய வைக்கும். முதலீட்டியம் இப்படித் தான் நம் உடல் மீது அதிகாரத்தை தக்க வைத்து அதை லாபமாக மாற்றுகிறது; அதையே நம்மை விரும்பவும் வைக்கிறது.

 இதே உத்தியை தான் மோடியின் அரசும் பிக்பாஸ் நிர்வாகமும் மக்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மீது பயன்படுத்துகிறார்கள்.  2013இல் சிலி நாட்டில் ஒரு உளவியல் ஆய்வரங்கம் நடத்தினார்கள். அதில் ஒரு பட்டறையில் நடந்த ஆய்வில் இன்றைய கார்ப்பரேட் வேலையிடங்களில் பணியாளர்கள் மீது செலுத்தப்படும் அழுத்தம் எப்படி உடல் மற்றும் மன நோய்க்குறிகளாக (இதயம் வேகமாய் துடிப்பது, வயிற்று வலி ஏற்படுவது, கடுமையான பதற்றம்) வெளிப்படுகின்றது என கண்டறிந்தார்கள். நிர்வாகம் ஒரு சுலபத்தில் அடைய சாத்தியமற்ற இலக்கை தம் ஊழியர்களுக்கு நிர்ணயித்து, அதில் தோற்றால் வேலை போய் விடும் என இடைவிடாமல் அச்சுறுத்தி, மெல்ல மெல்ல அந்த அச்சத்தையே இயல்பாக உணர வைக்கும். இது இன்றைய நவீன வேலையிடங்களில் வாடிக்கையாகி விட்டது (பிக்பாஸில் இதுவே வினோதமான டாஸ்குகள், போட்டிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இது டிவி பார்க்கும் மக்களை தம் கார்ப்பரேட் வேலையிடங்களில் இத்தகைய உளவியல் வதையை எதிர்கொள்ள தயாரிக்கின்றன எனலாம்). 
சில்வியா பெடெரிச்சி போன்ற பின்-மார்க்ஸிய பெண்ணிய ஆய்வாளர்கள் இது குறித்து ஆராயும் போது மக்களின் உடல்களை தமது அதிகாரத்தை பரிசீலிக்கும் தளங்களாக முதலீட்டியம் பயன்படுத்துவதாய், இதுவே இன்றைய சூழல் பல விநோத நோய்கள் தோன்ற காரணமாகிறது என்கிறார். ஹார்ட் மற்றும் நெக்ரி ஆகிய சிந்தனையாளர்கள் (Multitude மற்றும் Declaration ஆகிய நூல்களில்) இந்த போக்கைப் பற்றி விரிவாக பேசி இருக்கிறார்கள். நவோமி கிளெய்ன் எனும் நவீன சிந்தனையாளரின் Shock Doctrine எனும் புத்தகமும் இந்த சந்தர்பத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று - நவ-தாராளவாத முதலீட்டியம் நெருக்கடி, துன்பம், பீதி, போதாமை ஆகிய உணர்வுகள் மேலிடும் சூழல்களில் அதிகமாக புத்திசாலித்தனமான முதலீடு செய்து தொழிலில் லாபம் சம்பாதிக்கக் கூடியது எனக் கூறும் கிளெயின் 2005இல் அமெரிக்காவில் நிகழ்ந்த கேத்ரீனா புயல் தாக்குதல், 2004இல் இலங்கையில் சுனாமி, 2003இல் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் ஆகிய சந்தர்பங்களில், மக்கள் சமூகங்கள் உருக்குலைந்த போது, கார்ப்பரேட்டுகள் மட்டும் சமயோஜிதமாக மக்களை சுரண்டி அதிகமாக சம்பாதித்ததை சுட்டிக் காட்டி, இதை கார்ப்பரேட்டுகளின்அதிர்ச்சி சித்தாந்தம்என்கிறார். மோடி இதையே டீமானிடைசேஷன், பாகிஸ்தானுடனான மோதல், காஷ்மீரின் 370 சட்டப்பிரிவு நீக்கம் என பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் மூலம் தேர்தல் லாபமாக உருமாற்றினார். காரப்ப்ரேட்டுகள் இச்சூழல்களின் கடும் மன சமநிலைக்குலைவை பயன்படுத்தி வெற்றிகரமாக லாபம் ஈட்டுகின்றன. பிக்பாஸோ வாடிக்கையாளர்களை இன்றைய பாசிச அரசுகளும், நவ தாராளவாத உலக சந்தையும் நடத்தும் விதத்தை ஒரு கதையாடலாக, ஒரு நீதிக்கதையாக நம் முன்பு நிகழ்த்துகிறது. இன்று ஒரு வாடிக்கையாளர் உணரும் நடுக்கத்தை, பதற்றத்தை பிக்பாஸ் வீட்டின் பங்கேற்பாளரை (கவின், லோஸ்லியா, சேண்டி) உணர செய்து, வெளியில் இருந்து அதை ரசிக்க வைத்து அதை வைத்து லாபம் ஈட்டுகிறார் பிக்பாஸ்
நான் ஏற்கனவே சொன்னது போல வேலையிடத்தில் நாம் தலைபோய் விடும் பயத்தில் அடித்துப்பிடித்து வேலை செய்யும் போது நம்மை நிர்வாகத்தின் பிரதிநிதியாக, நீட்சியாக உணர்ந்து இரண்டாக பிரிந்து போகிறோம். ஒன்று தோற்று வேலையிழக்க போகும் நமது பக்கத்து இருக்கை ஆள், மற்றொன்று எப்படியாவது இலக்கை எட்டப் போகும் நாம் - இந்த இருவருமே நாம் தான் என சம்மந்தப்பட்ட நாம் உணர்வதில்லை. கார்ல் மார்க்ஸ் முந்தைய முதலீட்டிய சூழலில் ஒரு பணியாளன் தனது உழைப்பில் இருந்து அந்நியப்படுவதாக சொன்னார். இன்றைய முதலீட்டிய சூழலிலோ நாம் நமது உழைப்பில் இருந்து மட்டுமல்ல, நம்மில் இருந்தே அந்நியமாகி, இப்படி, இரண்டிரண்டாக பிரிகிறோம். நம்மை இப்படி பிரித்தாளும் முதலீட்டிய நிர்வாகம் இதனால் நாம் அவர்களை எதிர்க்காமல் பணிந்து வாழ்நாளெல்லாம் அடிமையாக இருப்போம் என உணர்ந்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் ஒரு பங்கேற்பாளர் கோபப்பட்டு கத்துவது, நிலையிழந்து பதறுவது, அடுத்தவர்களையும் தம்மையும் துன்புறுத்தி கலங்குவது, அங்கிருந்து தப்பிக்கும் பொருட்டு ஏங்கி தவிப்பது ஆகியவற்றை ஒரு பார்வையாளராக கண்டு ரசிக்கும் போது இரண்டாக பிரிந்து போகிறீர்கள் - அந்த பங்கேற்பாளர்கள் நீங்களே தான் என உங்களுக்கு அந்த கணத்தில் புரிவதில்லை; அது ஒருநாளும் சுலபத்தில் புரியப்போவதில்லை என்பதே பிக்பாஸின் வெற்றி!


மேற்சொன்ன விசயத்தின் உச்சம் போலத் தான் கவினின் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து மக்களின் சார்பில் அவருக்கு ஒரு அறை கொடுத்தார். அதுவும் தன் மீது கவின் கோபப்படக் கூடாது என சொல்லிக் கொண்டே அடித்தார். அந்த அறை பிற பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனென்றால் பிக்பாஸ் வீட்டின் அடிப்படையான விதிகளில் ஒன்று யாரும் யார் மீது வன்முறை பிரயோகிக்க கூடாது என்பது. அப்படி ஒருவர் தன்னையே துன்புறுத்தும் பட்சத்தில் கூட அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் (மதுமிதாவைப் போல). அப்படி இருக்க ஒரு வெளியாளை உள்ளே கொண்டு வந்து கவினை அறைய அனுமதிப்பது மட்டும் நியாயமாகுமா? பிக்பாஸ் நினைத்திருந்தால் ஒரே கட்டளையில் அதை தடுத்திருக்க முடியுமே!
 இல்லை இது பிக்பாஸ் நிர்வாகத்தின் தூண்டுதலில் பெயரில் நிகழ்த்தப்பட்ட வன்முறையா? எனில் இதன் நோக்கம் என்ன? கவினை அறைந்த அந்த நண்பர் யாருடைய பிரதிநிதி?
மக்களுக்கு கவின் மீது அந்தளவுக்கு தண்டிக்கும் வெறி ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் ஜூலி, வனிதா போன்றோர் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி நிச்சயமாக கவின் மீது இல்லை. அப்படி இருக்க ஏன் அவர் அறையப்பட்டார்? அந்த காட்சியை கண்ட பிறகு சில நாட்கள் என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஒருவர் அப்படி அறை வாங்கும் காட்சி, அதுவும் அனுமதி பெற்று முறையாக, அனைவர் முன்னிலையிலும் அறையப்படும் காட்சி, அதை வாங்கிக் கொண்டு கவின் அமைதியாக இருந்த விதம் என்னை மிகவும் தொந்தரவு பண்ணியது. இது ஒருவித மனித உரிமை மீறல் என்று தோன்றியதுடன், ஊடகங்கள் வழி நடத்தப்படும் யுத்தங்கள், மனித உரிமை மீறல்கள், சாதி மத வன்முறைகளையும் இது நினைவுபடுத்தியது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நமது மத்திய அரசு காட்சிப்படுத்தி தேசியவாதத்தை ஒரு பொழுதுபோக்காக மாற்றியதைப் போலத் தான் பிக்பாஸ் இப்படி தனது நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் ஒருவர் மீது வன்முறையை நிகழ்த்தியதாக நினைத்தேன்.

ஆனால் மெல்ல மெல்ல இந்த வன்முறையில் எந்த விசித்திரமும் இல்லை எனப் பட்டது. மற்ற அத்தியாயங்களில் பிக்பாஸ் மறைமுகமாக நிகழ்த்தி வதையை ஒரு பொழுதுபோக்காக்கி விட்டிருந்தார்இப்போது இதையே பிக்பாஸ் நேரடியாக முகம் சுளிக்கும்படி பண்ணியிருக்கிறார். அவ்வளவு தான் வித்தியாசம்


சரி, இந்த வன்முறையை மக்கள் எப்படி ஏற்கிறார்கள்? அது ஒரு குற்றம் என நமக்கு ஏன் தோன்றவில்லை? அதை ஒரு தமாஷாக கமலஹாசன் எடுத்துக் கொண்டு சிரித்தபடியேசேரன் இருந்த ரகசிய அறை, கவினுக்கு கிடைத்த அறைஎன இரட்டை வசனம் பேசிய போது அது ஏன் ஒரு ஆபாச உச்சமாக நமக்குப் படவில்லை? இங்கு தான் பிக்பாஸின் சாமர்த்தியத்தை நாம் கவனிக்க வேண்டும். கவினின் நண்பர் அடித்தது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் சார்பில். இந்தசமூகம்என்பது வெளியே இருப்பவர்கள் அல்ல; அவர்கள் டிவி முன்பும் ஹாட்ஸ்டார் முன்பும் இருக்கும்நாம்தான். நாம் விரும்பாவிடிலும் கூட கவினின் நண்பர்நாம்ஆகி விடுகிறோம் இங்கு. இப்போது கவினும் நாம் தாம், கவினின் நண்பரும் நாம் தாம். பிக்பாஸ் நம் கையை எடுத்து நம் கன்னத்திலே ஒரு அறை விடுகிறார். அது தான் கவின் வாங்கிய அறை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...